Showing posts with label Class 10 Tamil. Show all posts
Showing posts with label Class 10 Tamil. Show all posts

பாய்ச்சல் - சா. கந்தசாமி சிறுகதை கட்டுரை (Paaychal Short Story Essay)

குறிப்புச் சட்டகம்


​முன்னுரை

​வேடிக்கை

​அனுமன் ஆட்டம்

​அழகின் ஆர்வம்

​புதுக்கலைஞன்

​முடிவுரை



​முன்னுரை


​உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டித் தனித்தன்மையுடன் விளங்குவான். தன் கலையைப் பின்பற்ற ஒரு தகுந்த வாரிசு உருவாகும்போது அவன் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறான். இதனைச் சா. கந்தசாமி 'பாய்ச்சல்' கதையின் மூலம் விளக்குகிறார்.



​வேடிக்கை


​நாதசுரமும் மேளமும் கொட்டும் ஒலியைக் கேட்டவுடன் சிறுவர்கள் அங்கே ஓடினர். அழகும் அவர்களுடன் ஓடினான். அங்கே மரத்திலிருந்து ஒரு குரங்கு இறங்குவதைக் கண்டான். அனுமன் வேடமிட்ட கலைஞர் தன் வாலைச் சுழற்றி ஆடியபோது எங்கும் புழுதி பறந்தது. மக்கள் கூட்டமே அங்கே திரண்டிருந்தது.


​அனுமன் ஆட்டம்


​அனுமன் வேடமிட்டவர் 'கீச் கீச்' என்று கத்திக்கொண்டே பந்தல் காலைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி மறைந்தார். பின்னர் எரியும் வாலோடு கீழே குதித்து கரணமடித்து ஆடினார். தீயின் வெப்பம் தணிந்ததும், அழகு அவரிடம் சென்றான். அனுமன் ஆட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மேளக்காரர்களே திணறினர். இறுதியில் ஆட்டம் ஓய்ந்தது.


​அழகின் ஆர்வம்


​ஆட்டம் முடிந்ததும் அழகு கலைஞரைப் பின்தொடர்ந்து கோவிலுக்குச் சென்றார். கலைஞர் தன் அலங்காரங்களை நீக்கினார். அழகு அவரிடம் சென்று, "எனக்கும் உங்களைப் போல் ஆட வேண்டும்" என்று தன் விருப்பத்தைக் கூறினான். கலைஞர் சம்மதிக்க, அழகு அங்கிருந்த அனுமன் வாலைக் கட்டிக்கொண்டு, முகமூடியை மாட்டிக்கொண்டு தனக்குத் தெரிந்தபடி ஆடிப் பார்த்தான்.


​புதுக்கலைஞன்


​அழகு ஆடுவதைக் கண்ட அந்தப் பழைய கலைஞர், உற்சாகமடைந்து அவனுக்கு மீண்டும் ஆடிக் காட்டினார். அழகும் அவரைப் போலவே துள்ளிக் குதித்து (பாய்ச்சல்) ஆடினான். இதைப் பார்த்த கலைஞர், "தனக்குப் பின் இக்கலை அழிந்துவிடாது, வளர்க்க ஆள் கிடைத்துவிட்டான்" என்ற பெருமிதத்தில் நெகிழ்ந்து போனார்.


​முடிவுரை


​கலை என்பது ஒருவருடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் போதே அதன் பெருமை நிலைக்கும். அழகு எனும் புதுக்கலைஞனின் பாய்ச்சல், அத்தெருக்கூத்துக் கலை வாழும் என்பதை உறுதிப்படுத்தியது.


Comparing Modern Poetry (Puthukkavithai) and Thirukkural | Iyal 6 | Class 10 Tamil

இயல் 6, கற்பவை கற்றபின்

புதுக்கவிதையையும் குறளையும் ஒப்பிட்டுப் பேசுக.

புதுக்கவிதை

தக்காளியையும் வெண்டைக்காயும் 

தள்ளுவண்டிக்காரர் தராசில் நிறுக்கையில் 

தள்ளி நிற்கும் பிள்ளை 

அவசியமாகக் கேட்கும் ஆயிரம் ரூபாயை 

எப்படிக் கொடுக்க என்றே அவர் மனம் யோசிக்கும் 

"அத்தனை காய்களையும் விற்றால்தான் 

மீதி ஐநூறாவது மிஞ்சும்; என்ன செய்ய? "

காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாக கொடுத்த 

இரண்டாயிரம் ரூபாயைக்

கூப்பிட்டுத் தந்துவிட்டு

பிள்ளைக்கு உதவ யாரிடம் கேட்கலாம் 

என்பதை அடுத்த படி யோசிக்கும் அவர் மனம்!

குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 

புல்லார் புரள விடல்.

பொருள்செயல்வகை

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் முதற்பாவலரின் குறள்கருத்து புதுக்கவிதையில் மிளிர்கிறது. அருளும் அன்பும் கலவாத, நேர்மையற்ற வழியில் வரும் செல்வத்தை நல்லோர் மருத்துவிடுவர் என்ற குறளின் கருத்தைத் தள்ளுவண்டிக்காரர் பிரதிபலிக்கிறார். 

ஏழ்மைச் சூழலிலும், தன் குழந்தைக்கு அவசியமாய் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் சூழலிலும், யாரிடம் உதவி கேட்கலாம் என்று சிந்திக்கும் நல்ல மனிதராகத் திகழ்கிறார்; காய்கறி வாங்கியவர் கவனக்குறைவாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயைக் கூப்பிட்டுத் தருகிறார்.  திருக்குறளில் அறிவுரையாக வழங்கப்பட்ட கருத்து, புதுக்கவிதையில் அனுபவமாக வழங்கப்பட்டுள்ளது.

Karpavai Katrapin: Speech on the Greatness of Tamil Language | Class 10 Tamil | Iyal 1

இயல் 1, கற்பவை கற்றபின்

'எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற பாடல் அடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.

எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்

தமிழன்னையின் தூதுவரான தமிழ் ஆசிரியருக்கும், மனவானில் என்னுடன் சிறகசைத்துப் பறக்கும் அருமை நண்பர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் முன்னால், 'எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி, தமிழ் மொழி. எத்துணை கால மாற்றத்திற்குப் பிறகும் தன் இயல்பு மாறாமல் என்றும் இளமையாய்த் திகழும் மொழி, தமிழ் மொழி. வளமான இலக்கியங்களும் வழுவாத இலக்கணங்களும் நிறைந்த மொழி; பாவாணர் சுட்டும் பதினாறு செவ்வியல் தன்மைகளும் வாய்ந்த நன்மொழி; அயல் நாட்டவரும் எளிதில் கற்கும் வகையில் அமைந்த தேன்மொழி; ஏராளமான வேர்ச் சொற்களைக் கொண்ட மொழி; பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தனித்தியங்கும் வல்லமை உடைய மொழி; திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி;

மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழி; முத்தமிழாய் வளர்ந்த மொழி; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக அணிந்த மொழி; உயர்ந்த பண்பாட்டைப் பறைசாற்றும் இலக்கியங்களை ஆட்கொண்ட மொழி; உலகப் பொதுமறையான திருக்குறளையும் அறிவியல் முறையில் அமைந்த தொல்காப்பியத்தையும் மணிமுடியாய்த் தரித்த மொழி; தமிழரின் வாழ்வியல் அறங்களைப் பாடும் மொழி; வாழ்க்கை நெறிகளைப் பாடும் மொழி; நீதி நெறிகளை நோக்கி நெறிப்படுத்தும் மொழி; பக்திப் பரவசமூட்டும் தெய்வ மொழி; இன்னிசைச் சந்தமொழி; பாமரரின் வாய்ப்பாட்டு மொழி;

புதுவழி இலக்கிய வடிவங்களை ஏற்றுப் புத்தெழுச்சி பெற்ற மொழி; கணினி மொழி; கன்னி மொழி; எதிர்கால உலகை ஆளும் உலக மொழி, தமிழ் மொழி. உனது பெருமையை உரைவிரித்திட ஒருவராலும் இயலாது. ஓதியுணர்ந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைத் தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு. ஆகவே, உன்னை வாழ்த்தி வணங்குகிறோம், தாயே! தமிழே!

இதுவரை என்னுடைய பேச்சைக் கேட்டு மகிழ்ந்த என் நண்பர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!

Pa Nayam Parattal (Poem Appreciation) - Class 10 Tamil | Iyal 4

இயல் 4: பா நயம் பாராட்டல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ?

மனத்தை வாழ்த்துதல்

திரண்ட கருத்து

நிலாவையும் விண்மீனையும் காற்றையும் சமமாகக் கருதி, அவற்றின் அமுதைப் பருகி, அவற்றிலே நிலைகொண்டோம். மனப்பறவையை எங்கும் ஓட்டி மகிழ்ந்திடுவோம். பழவண்டியில் பலாச்சுளையை வட்டமிட்டு வண்டு பாடுவதில் ஒன்றும் வியப்பில்லையே.

மையக்கருத்து

இக்கவிதை மனத்தை வாழ்த்துதலை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது.

சொல் நயம்

பாரதியார் தம் கவிதையில், 'அமுதக்குழம்பு', 'கோலவெறி', 'மனச்சிறுபுள்' ஆகிய அழகான சொற்களைக் கையாண்டுள்ளார்.

பொருள் நயம்

'பாலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ' என்ற கவிதைவரி 'கவிஞர்கள், இயற்கை அழகில் மயங்கிக் கவிபாடுவதில் வியப்பில்லை' என்னும் உள்ளுறை கருத்தை வெளிப்படுத்துகின்றது. இது, உள்ளுறை உவமமாக அமைந்து கவிதைக்குச் சுவை கூட்டுகிறது.

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.

"குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்"

என்ற வரிகளில் சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

"படைக்கு அழகு யானை
பாடலுக்கு அழகு மோனை" என்பதற்கு ஏற்ப,

  • வானத்து
  • வைத்தாங்கே
  • குழம்பை
  • குடித்தொரு
  • கோலவெறி
  • லாவின்
  • பாடுவதும்

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

  • நிலாவையும்
  • குலாவும்
  • லாவும்
  • லாவின்

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

  • படைத்தோம்
  • மகிழ்ந்திடுவோம்

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணி நயம்

அமுதைக் குழம்பாகவும், மனத்தைச் சிறுபறவையாகவும் கவிஞர் உருவகம் செய்துள்ளார். எனவே, இது 'உருவக அணி' ஆகும்.

பா வகை

இப்பாடல், 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும்.

Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga for Class 10 Tamil | Iyal 7 Uzhavan Poem

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 7

உழவன் வயலில் ஏர் உழும் காட்சி

தலைப்பு : உழவன்

ஏர்பிடித்து உழுபவன்...

ஏற்றம்கட்டி இறைப்பவன்...

இறைவனுக்கு அடுத்தவன்...

இருதொழிலே தெரிந்தவன்...

வள்ளலாரின் மூத்தவன்...

வழுவாமல் காப்பவன்...

பசிப்பிணி அறிந்தவன்...

பயிர்களை ஆள்பவன்...

பேரிடரைப் பொறுப்பவன்...

பெருமைதான் சொல்லிடவோ..!

விளக்கம்

ஏர்பிடித்து உழுபவன்

தனது வலிமையான கரங்களால் ஏர் பிடித்து உழுபவன்.

ஏற்றம்கட்டி இறைப்பவன்

கமலத்தில் காளையைப் பூட்டி கிணற்றிலிருந்து நீர் இறைப்பர்.

இறைவனுக்கு அடுத்தவன்

(உணவளித்து) மக்களைக் காப்பதில் இறைவனுக்கு அடுத்தவன்.

இருதொழிலே தெரிந்தவன்

இறைவன் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கின்றான். ஆனால், உழவரோ பயிரினை ஆக்கல், காத்தல் ஆகிய இரு தொழிலினை மட்டுமே செய்கின்றார். ஒருபோதும் 'அழித்தல்' என்ற தொழிலை செய்வது இல்லை. அந்தவகையில் உழவன், இறைவனை விட ஒருபடி மேலானவன்.

இங்கு, இறைவன் மூன்று தொழில்கள் செய்வதாகவும் உழவன் இரண்டு தொழில்களை மட்டுமே செய்வதாகவும் உழவனைப் பழித்துக் கூறி, பின்பு இறைவனைப் போல் 'அழித்தல்' தொழிலை உழவன் செய்யாமையால் உழவனைப் புகழ்ந்து கூறினார். எனவே, இது 'வஞ்சப்புகழ்ச்சி அணி' ஆயிற்று.

வள்ளலாரின் மூத்தவன்

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார். பயிர் எப்போதெல்லாம் வாடிப் போகிறதோ, அப்போதெல்லாம் வாடக்கூடிய இயல்புடையவர் 'உழவர்'. அந்த வகையில் முதலில் தோன்றிய தொழில், உழவுத் தொழில். அதனால், வள்ளலாரை விட உழவரின் முகமே முதலில் வாடி இருந்திருக்கும். அதனால் வள்ளலாரை விட மூத்தவன் 'உழவன்' எனப்பட்டது.

வழுவாமல் காப்பவன்

எத்தகைய சூழ்நிலையிலும், (வறட்சிக் காலமாக இருந்தாலும், புயல் காலமாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும், நோய் வந்து தாக்கினாலும், பூச்சிகள் அழித்தாலும், தாவர உண்ணிகளிடமிருந்தும் ஒரு சிறு குறையும் இல்லாமல்) பயிர்களைக் காப்பவன்.

பசிப்பிணி அறிந்தவன்

வயலில் பகல் முழுவதும் பசியோடு இருந்து பயிர்களைக் காக்கும் உழவனுக்கு பசியின் கொடுமை நன்கு தெரியும்.

பயிர்களை ஆள்பவன்

எப்போது மழை வரும்? எப்போது விதை விதைக்க வேண்டும்? எப்போது களை எடுக்க வேண்டும்? எப்போது, எவ்வளவு நீர் பாய்ச்ச வேண்டும்?

எப்படி விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்படி பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பது? எப்படி நோயிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்போது பயிர் விளையும்? எப்போது அறுவடை செய்யலாம்? என்றெல்லாம் அறிந்து பயிர்களை ஆட்சி செய்பவன்.

பேரிடரைப் பொறுப்பவன்

உழவும் பேரிடரும் 'ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்' என்பதை நாம் அறிவோம். வறட்சி, வெள்ளம், புயல் என்று அத்தனை பேரிடர்களையும் பொறுத்துக் கொள்பவன்.

பெருமைதான் சொல்லிடவோ

உழவனின் பெருமைகள் ஓராயிரம் இருக்க, அத்தனையும் சொல்வது எளிதன்று.

Kaatchiyai Kandu Kavinura Ezhuthuga: Eegai Poem with Explanation | Class 10 Tamil Iyal 8

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 8

ஈகை - பிறருக்குக் கொடுத்து உதவும் காட்சி

தலைப்பு : ஈகை

அன்பே அகிலம் ஆள வேண்டும்

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்

இன்பம் கடலாய்ப் பெருக வேண்டும்

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்

உழைப்பை யாவரும் மதிக்க வேண்டும்

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்

தானம், தருமம் வளர வேண்டும்

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.

விளக்கம்:

அன்பே அகிலம் ஆள வேண்டும்: இந்த உலகம் முழுவதும் அன்பால் நிறைந்திருக்க வேண்டும். அனைவரும் ஒருவர் பால் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். அப்போதுதான் இல்லாதவர்க்கு இல்லாமை உண்டாகும்.

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்: ஆசையுள்ள மனிதர்கள் பிறருக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள். பொருளீட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள். அப்படிப்பட்ட ஆசைகள் தேய்பிறை போலத் தேய வேண்டும்.

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்: பிறருக்கு கொடுத்தலாகிய ஈகைப்பண்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும். அதற்காக பிறரிடம் எப்போதும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல... பிறருக்கு கொடுக்கும் குணம் உள்ளவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்: மக்கள் அனைவரும் எப்போதும் ஊக்கத்துடனே உழைப்பில் ஈடுபட வேண்டும். அவ்வாறு உழைப்பை மதித்து ஊக்கத்துடன் உழைக்கும் போது நிறைய பொருள் ஈட்ட முடியும். இல்லாதவருக்கு, இயலாதவருக்குக் கொடுத்து உதவ முடியும்.

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்: ஊரின் நடுவே உள்ள குளம் ஊரார் அனைவரும் பயன்படும். அத்தகைய குளம்போல கொடுப்பவர் உள்ளம் இருக்க வேண்டும்.

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்: கொடை கொடுப்பவர்களுடைய கைகள் கொடுத்துக் கொண்டிருப்பதால் கைகள் சிவந்து விடும்.

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்: ஈகை, கொடை கொடுப்போரைத் தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.

Class 10 Tamil, Quarterly Exam, Question Paper, Tirunelveli District, Official Original Question Paper, TNPSC, Tamil Nadu Board

திருநெல்வேலி மாவட்டம்

காலாண்டுப் பொதுத் தேர்வு - 2024

வகுப்பு: 10 தமிழ் மதிப்பெண்கள்: 100

கால அளவு: 3.00 மணி

குறிப்பு:
  • 1) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
  • 2) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - I (மதிப்பெண்கள்: 15)

குறிப்பு:
  1. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (15×1=15)
  2. கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
    அ) குலை வகை ஆ) மணி வகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை
  2. 'அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை' - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
    அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கி
  3. 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார் கூறியது?
    அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
  4. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
    அ) எழுவாய் ஆ) உவம உருபு இ) வேற்றுமை உருபு ஈ) உரிச்சொல்
  5. பெரிய மீசை சிரித்தார் - அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை யாது?
    அ) பண்புத் தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
  6. காசிக்காண்டம் என்பது
    அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர் இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
  7. எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
    அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள் இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
  8. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
    அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
  9. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
    அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஆ) காப்பியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது இ) பக்தி இலக்கியம் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  10. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. -இத்தொடருக்கான வினா எது?
    அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்? ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது ? இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா? ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?
  11. ‘அல்லில் ஆயினும் - விருந்து வரின் உவக்கும்' என்று குறிப்பிடும் நூல்
    அ) குறுந்தொகை ஆ) புறநானூறு இ) நற்றிணை ஈ) பொருநராற்றுப்படை

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடை தருக.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு

  1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
    அ) பரிபாடல் ஆ) முல்லைப்பாட்டு இ) காசிக்காண்டம் ஈ) மலைபடுகடாம்
  2. இப்பாடலின் ஆசிரியர் யார்?
    அ) கீரந்தையார் ஆ) அதிவீரராமபாண்டியன் இ) பெருங்கௌசிகனார் ஈ) நப்பூதனார்
  3. நனந்தலை உலகம் - பொருள் கூறுக.
    அ) நேரான உலகம் ஆ) வளைந்த உலகம் இ) அகன்ற உலகம் ஈ) குளிர்ந்த உலகம்
  4. தடக்கை - இலக்கணக் குறிப்பு தருக.
    அ) பண்புத் தொகை ஆ) உரிச்சொல் தொடர் இ) வினைத்தொகை ஈ) வினையாலணையும் பெயர்

பகுதி - II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

குறிப்பு: எவையேனும் 4 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21-ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.

  1. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க

    அ) இரா.இளங்குமரனார் பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

    ஆ) காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

  2. மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
  3. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் - இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
  4. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
  5. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
  6. ‘கண்’ என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு - 2

குறிப்பு: எவையேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

  1. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

    அ) தொடு - தோடு ஆ) விடு - வீடு

  2. பகுபத உறுப்பிலக்கணம் தருக.

    அமர்ந்தான்

  3. தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க

    அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

    ஆ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

  4. கலைச்சொற்கள் தருக.

    அ) Storyteller ஆ) Tempest

  5. எதிர்மறையாக மாற்றுக

    அ) எழுதாக் கவிதை ஆ) மீளாத்துயர்

  6. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
  7. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.

பகுதி - III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.

  1. உரையைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

    பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவைபோன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச்சிறப்புடையதாக இருக்கிறபோது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. ஒரு நாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

    அ) இலக்கியம் எப்போது பொதுநிலை பெறுகிறது?

    ஆ) மொழிபெயர்ப்பின் பயன் யாது ?

    இ) ஒரு நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் எதனைக் கொண்டு மதிப்பிடுவார்கள்?

  2. ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  3. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்ற சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

பிரிவு - 2

குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.

  1. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
  2. ‘மாளாத காதல் நோயாளன் போல்' என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
  3. அ) விருந்தினனாக எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.

    (அல்லது)

    ஆ) ‘அன்னை மொழியே' எனத் தொடங்கி, 'பேரரசே' என முடியும் பெருஞ்சித்திரனாரின் பாடலை எழுதுக.

பிரிவு - 3

குறிப்பு: எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.

  1. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
  2. ‘கண்ணே கண்ணுறங்கு!
    காலையில் நீயெழும்பு!
    மாமழை பெய்கையிலே!
    மாம்பூவே கண்ணுறங்கு!
    பாடினேன் தாலாட்டு!
    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!

    இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர்வகைகளை எழுதுக.

  3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும் - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  1. அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

    (அல்லது)

    ஆ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

  2. அ) மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

    (அல்லது)

    ஆ) உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும் பழுது அடைந்த சாலைகளைச் சீரமைத்தும் மின்கம்பங்களைச் சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

  3. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

    கிராமத்துப் பெண் ஒருவர் தலையில் கூடை சுமந்து செல்லும் காட்சி.
  4. எழிலன் தன் தந்தை இனியன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். இனியன் எழிலனிடம் 500 ரூபாயும், 17 பாரதிநகர், வள்ளுவன் தெரு, திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். தேர்வர் தன்னை எழிலனாகக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
  5. அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி. திறன்பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை சமூக ஊடகங்களிலேயே மூழ்கியிருக்கும் தோழன் இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.

    (அல்லது)

    ஆ) மொழிபெயர்க்கவும்.

    Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.

பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  1. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

    (அல்லது)

    ஆ) போராட்டக் கலைஞர்- பேச்சுக்கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக்கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

  2. அ) ‘அன்னமய்யா' என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘கோபல்லபுரத்து மக்கள்' கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

    (அல்லது)

    ஆ) ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

  3. அ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்' என்ற தலைப்பில் கட்டுரை வரைக.

    (அல்லது)

    ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

10 ஆம் வகுப்பு தமிழ் - மாதிரி வினாத்தாள் விடைகள்

விடைகள்

  1. ஆ. மணிவகை.
  2. இ. கல்லா
  3. ஆ. இறைவாரிடம் குலசேகராழ்வார்
  4. இ. வேற்றுமை உருபு.
  5. இ. அன்மொழித் தொகை.
  6. இ. காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்.
  7. அ. கூவிளம் - தேமா - மலர்.
  8. இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி.
  9. அ. சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
  10. ஆ. கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
  11. இ. நற்றிணை.
  12. ஆ. முல்லைப்பாட்டு.
  13. எ. நப்பூதனார்.
  14. இ. அகன்ற உலகம்.
  15. ஆ. உரிச்சொல் தொடர்.

பகுதிர் - பிரிவு-1

  1. அ. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
  2. ஆ. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் எத்தனையாவது இடம் வகிக்கிறது?

பக்கம்-2

    • சீவக சிந்தாமணி
    • வளையாபதி
    • குண்டலகேசி.
  1. அழகிய அகன்ற உலகத்தைப் பெண் சுமக்கின்றாள்.
    • செயற்கை நுண்ணறிவு பொதிந்த விவசாயக் கருவிகள்.
    • செயற்கை நுண்ணறிவு பொதிந்த மருத்துவக் கருவிகள்.
  2. முகமன் சொற்கள்

    • வாருங்கள் * நலமா.
    • அமருங்கள் * குடும்பத்தினர் நலமா.
    • நீர் அருந்துங்கள் * இளைப்பாறுங்கள்.
    • உணவருந்துங்கள் * அமர்ந்து பேசுதல்
    • விடை கொடுத்தல்.
  3. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்

பகுதி - பிரிவு-2

  1. அ. தொடுத்தப் பூவைச்சூடி, காதில் தோடும் அணிந்தாள்
  2. அ. கோபத்தை விடும் போது வீடு இன்பமாகும்.

பக்கம் 3

  1. அமர்ந்தான் -> அமர் + த் (ந்) + த் + ஆன்

    • அமர் - பகுதி
    • த் - சந்தி
    • ந் ஆனது விகாரம்
    • த் - இறந்தகால இடைநிலை
    • ஆன் - ஆண்பால் விகுதி
  2. அ. பயன்தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

    ஆ. அழியாத கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

  3. அ. Story teller - கதை சொல்லி.

    ஆ. Tempest - பெருங்காற்று.

  4. அ. எழுதாக்கவிதை - எழுதியக் கவிதை. (எழுதிய உரை)

    ஆ. மீளாத்துயர் - மீண்ட இன்பம்.

  5. அ. பாரதியார் கவிஞர் → பெயர்ப் பயனிலை

    ஆ. நூலகம் சென்றார் → வினைப்பயனிலை

    இ. அவர் யார்? → வினாப் பயனிலை

  6. வேங்கை - மரம் / புலி - தனிமொழி.

    வேம் + கை - வேகின்றகை - தொடர் மொழி.

    தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி ஆகும்.

பக்கம் 4

பகுதி III - பிரிவு-1

  1. (அ) ஒரு இலக்கியம் கலைச்சிறப்புடையதாக இருக்கிற போது அனைவரது அனுபவமாகவும் பொது நிலை பெறுகிறது.

    (ஆ) பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

    (இ) ஒருநாட்டின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.

  2. புளியங்கன்று ஆடிமாதம் நடப்பட்டுள்ளது.

    மாங்கன்று நன்றாக வளர்கிறது.

    தென்னம்பிள்ளை வாங்கி வந்தேன்.

    வாழைக்கன்று வளர்கிறது.

    கொய்யாக்கன்று நட்டு வைத்தேன்.

    கத்தரி நாற்று வாங்கி வந்தேன்.

    • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றன.
    • கடின வேலைகளை எளிதாக்குகின்றன.
    • உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், தொலைத்தொடர்பு போன்றவற்றில் மனிதனை மேம்படுத்தி உள்ளது.
    • காலை முதல் இரவு வரையிலும் அறிவியல்...

சாதனங்கள் இன்றி மனிதன் இல்லை.

பகுதி - பிரிவு-2

  1. அடிச்சொல் தமிழ் கடல்
    முத்தமிழ் இயல், இசை, நாடகம் முத்தினை அமிழ்ந்து எடுத்தல்
    முச்சங்கம் முதல், இடை, கடைச் சங்கங்கள் மூன்று வகையான சங்குகள்
    மெத்தவணிகலன் ஐம்பெருங் காப்பியங்கள் மிகுதியான வணிகக்கப்பல்கள்
    சங்கத்தவர் காக்க சங்கப்புலவர்கள் காத்தனர் சங்கினைத் தடுத்துக் காத்தல்
  2. உவமை: மருத்துவர் உடலைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் நோயாளி அவரை நேசிப்பார்.

    உவம உருபு: அதுபோல

    செய்தி: இறைவன் நீங்கா இன்பத்தைத் தந்தாலும் அந்த இறைவனிடம் நீங்காத அன்பு வைத்திருக்கிறேன் என்று குலசேகரர் கூறுகிறார்.

  3. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
    திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
    எழுதல் முன் மகிழ்வன செப்பல்
    பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
    போமெனின் பின் செல்வதாதல்
    பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே.
  1. (ஆ)

    அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
    முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
    கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
    மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

பிரிவு-3

  1. அணி: உவமை அணி.

    விளக்கம்: உவமை, உவமேயம், உவம உருபு இவை மூன்றும் வெளிப்படையாக அமையும்.

    அணிப் பொருத்தம்:

    • உவமை: வேலொடு நின்றான் இடு
    • உவமேயம்: கோலொடு நின்றான் இரவு.
    • உவம உருபு: போலும்
    • கண்ணே கண்ணுறங்கு! → விளித் தொடர்
    • காலையில் நீயெழும்பு! → வேற்றுமைத் தொடர்
    • மாமழை பெய்கையிலே. → உரிச்சொல் தொடர்
    • மாம்பூவே கண்ணுறங்கு! → விளித் தொடர்
    • பாடினேன் தாலாட்டு? → வினைமுற்றுத் தொடர்
    • ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! → அடுக்குத் தொடர்
  2. சீர்கள் அசை வாய்பாடு
    நாள்தொறும் நேர் - நிரை கூவிளம்
    நாடி நேர் - நேர் தேமா
    முறைசெய்யா நிரை - நேர் - நேர் புளிமாங்காய்
    மன்னவன் நேர் - நிரை கூவிளம்
    நாள்தொறும் நேர் - நிரை கூவிளம்
    நாடு நேர் - நேர் தேமா
    கெடும் நிரை மலர்

பகுதி V

  1. (அ)

    • அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.
    • முதியபெண்கள் காவலுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.
    • வண்டுகள் ஆரவாரிக்கும் நறுமண மலர்கள்.
    • நாழியில் நெல்லையும், நறுமண மலர்களையும் தெய்வத்தின் முன் தூவினர்.
    • தலைவிக்காகத் தொழுது நின்றனர்.
    • இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது.
    • அதனை ஓர் இடைமகள் கண்டாள்.
    • உன்தாய்மார், எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள்.
    • இந்த சொல் நல்ல சொல் எனக் கொண்டு தலைவியிடம் "நாங்கள் நற்சொல் கேட்டோம்" என்றனர்.
    • "தலைவன் வருவான், வருந்தாதே" என்றனர்.
  2. (ஆ)

    இலக்கிய மன்றத் தலைவர் அவர்களே! ஆன்றோர்களே! சான்றோர்களே! வணக்கம்!

    "தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக்
    கொண்டல்கள் முழவினேங்கக் குவளைக்கண் விழித்து நோக்கத்
    தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
    வண்டுக ளினிதுபாட மருதம்வீற் றிருக்கு மாதோ"

    என்று மருத நிலக் காட்சியை நம் கண்முன்னே காட்டுகிறார். பாடலில் மோனை, எதுகை, இயைபு...

...நயங்கள் சேர்ந்து பாடலுக்கு அழகான சந்த நயங்களைக் கொடுத்துள்ளது.

"வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்"

இப்பாடலிலும் மோனை, எதுகை, இயைபு நயங்கள் சேர்ந்து சந்த நயங்களைக் கூட்டுகின்றன. கம்பனின் அனைத்துப் பாடல்களுமே இவ்வாறு சந்த நயங்களுடன் அமைந்துள்ளன.

  1. (அ) வாழ்த்து மடல்

    வடக்குத் தெரு,
    அஅஅஅ,
    20.09.2024.

    அன்புள்ள தோழனே, ராகவா!

    நான் இங்கு நலம். அங்கு உன் நலம் மற்றும் அனைவர் நலனும் அறிய ஆவல்.

    மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்று முதல்பரிசு பெற்றதை அறிந்தேன்; மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துகள். நீ மேலும் வளர வாழ்த்துகள்.

    இப்படிக்கு
    என்றும் அன்புடன்,
    ஆஆஆ.

    அஅஅஅ.
    20.09.2024.


    உறைமேல் முகவரி

    கா. ராகவன்,
    வடக்கு ரத வீதி,
    மதுரை - 21.

  1. (ஆ) விண்ணப்பம்

    அனுப்புநர்:
    அஅஅ,
    20, ஆஆ ஊர்,
    இஇஇ மாவட்டம்.

    பெறுநர்:
    மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
    மாநகராட்சி ஆணையம்,
    இஇஇ மாநகராட்சி.

    ஐயா,

    பொருள்: புயலில் சாய்ந்துவிட்ட மரங்கள், பழுதடைந்த சாலைகள், மற்றும் மின்கம்பங்கள் - இவற்றைச் சரிசெய்ய வேண்டுதல்.

    நாங்கள் இஇஇ மாநகராட்சிக்குட்பட்ட ஆஆ ஊரில் வசித்து வருகிறோம். நேற்று ஏற்பட்ட கடும் புயலில் நிறைய மரங்கள் சாய்ந்து விட்டன. சாலைகளும் பழுதடைந்து விட்டன. மின்கம்பங்களும் சாய்ந்து விட்டன. எனவே அவற்றைச் சரிசெய்து தரும்படி பணிந்து வேண்டுகிறேன்.

    நன்றி!

    இப்படிக்கு,
    தங்கள் உண்மையுள்ள,
    அஅஅஅ.

    ஆஆ ஊர்,
    20.01.2024.


    உறைமேல் முகவரி

    பெறுநர்:
    மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
    மாநகராட்சி ஆணையம்,
    இஇஇ, மாநகராட்சி.

  1. கவினுற எழுதுதல்

    மரங்களை நடுவோம்!
    மாசற்ற காற்றைப் பெறுவோம்!
    காற்று மாசைத் தடுப்போம்!
    நோயற்ற வாழ்வைப் பெறுவோம்!
    இயற்கை வளத்தைக் காப்போம்!
    நல்ல காற்றை சுவாசிப்போம்.
  1. (அ)

    தம்பி, தொலைக்காட்சியைத் தவிர். பாடம் படி.

    தங்கையே, திறன்பேசியைத் தவிர். நன்றாகப்படி.

    தோழனே, காணொலி விளையாட்டைத் தவிர், நண்பர்களுடன் விளையாடு.

    தோழியே, சமூக ஊடகங்களைத் தவிர். வீட்டு வேலைகளைச் செய்.

  2. (ஆ) மொழி பெயர்ப்பு

    மதிப்பிற்குரிய தாய்மார்களே! பெரியோர்களே!

    என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நம் தமிழ் பண்பாட்டைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற இங்கு நான் வந்துள்ளேன். சங்க இலக்கியங்கள், தமிழர்கள் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்திருந்தவர்கள் எனக் காட்டுகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள், வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறைகளில், தமிழ்க் கலாச்சாரம் வேர் ஊன்றியுள்ளது. நம் தமிழ்ப் பண்பாடு பழமையானதாக இருந்தாலும், தொடர்ந்து மேம்படுத்தப் படுகிறது. நம் பண்பாட்டை எண்ணி, நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

பகுதி V

  1. (அ) சொல்வளம்

    சொல்வளம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானாலும் அவற்றுள் தமிழ் மட்டும் தலைசிறந்ததாகும். தமிழ்ச்சொல் வளத்தைப் பல துறைகளில் காணலாம். ஆனாலும் இங்கு பயிர் வகைச் சொற்கள் மட்டும் காணலாம். குறிப்பாக அடிவகை, கிளைப் பிரிவுகள், இலைவகைகள், கொழுந்துவகை, பூவின் நிலைகள், குலைவகை, கெட்டுப்போன காய்கனி வகை, மணிவகை, இளம்பயிர் வகை, என இவற்றை நோக்கும் போது தமிழ் சொல்வளம் உடையது என்பது விளங்கும்.

    புதிய சொல்லாக்கத்திற்கான தேவை

    "நாடும் மொழியும் நமதிரு கண்கள்"

    கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். திருந்திய மக்களைப் பிற உயிர்களினின்றும் பிரித்துக் காட்டுவது மொழியே. ஒரு நாட்டாரின் அல்லது ஒரு இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிய சிறந்தவழி மொழியே ஆகும். ஆகையால் நாம் இன்னும் பெருமை பெற்றுத் திகழ நுண்பாகுபாடு சொற்களையும், புதிய அறிவியல் சொற்களுக்கான கலைச்சொல் வளத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

  2. (ஆ) கலைஞர் கருணாநிதி

    முன்னுரை

    திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் ஊரில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக 1924 ஆம் ஆண்டு சூன் திங்கள் 3ம் நாள் பிறந்தார்.

    போராட்டக் கலைஞர்

    பள்ளி முடிந்த மாலை வேளைகளில் "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்" என்று முழங்கிய படி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார்.

பேச்சுக் கலைஞர்

'நட்பு' என்னும் தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப் பட்டது. சிறுவர் சீர்திருத்தச் சங்கம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ஆகியவற்றைத் தொடங்கினார்.

நாடகக் கலைஞர்

சாம்ராட் அசோகன், மணிமகுடம் எனப் பல நாடகங்கள் எழுதியுள்ளார். 'தூக்குமேடை' என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

திரைக் கலைஞர்

ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, நாம், பராசக்தி, திரும்பிப் பார், மனோகரா, ராஜாராணி, ரங்கூன் ராதா, மறக்க முடியுமா, பூம்புகார் உட்பட பல திரைக்கதை வசனங்களை அனைவரையும் வசீகரிக்கும் வகையில் எழுதியுள்ளார்.

இயற்றமிழ்க் கலைஞர்

கயிற்றில் தொங்கிய கணபதி, குறளோவியம், சித்தார்த்தன் கதை, சந்தனக் கிண்ணம், தாய்மை, பூக்குழந்தை, ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே இரத்தம், நெஞ்சுக்கு நீதி, சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, போன்ற பல படைப்புகளையும் இயற்றியுள்ளார்.

முடிவுரை

கலைஞர் 2018 ஆம் ஆண்டு சூலைமாதம் 7ம் நாள் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் களவியமானார்.

  1. (அ) அன்னமய்யா கதை

    • ஒரு சன்னியாசியைக் கூட்டிக் கொண்டு அன்னமய்யா வந்தாள்.
    • கிட்டே வந்து பார்த்தால் அவன் ஒரு வாலிபன்.
    • தண்ணீர் வேண்டுமென்றான்.
    • ஒரு வேப்பமரத்தின் அடியில் மண்கலயங்கள்.
    • அன்னமய்யா கலயத்தின் மேலுள்ள சிரட்டையை எடுத்துச் சுத்தப்படுத்தினாள்.
  • அதில் நீத்துப் பாகத்தை ஊற்றி அவனிடம் கொடுத்தான்.
  • அதை அவன் உறிஞ்சும் போதே கண்கள் செருகின.
  • சோற்றின் மகுளியையும் வார்த்துக் கொடுத்தான்.
  • அனுபவிப்பின் குரல் அவனிடமிருந்து வந்தது.
  • வேப்ப மரத்தின் அடியில் அயர்ந்து தூங்கினான்.
  • வந்தவளுக்கு ஒரு நிறைவு.
  • கொடுத்தவனுக்கும் ஒரு நிறைவு.

(ஆ) மேரி

  • அந்த மாளிகை பென் வில்ஸனுடையது.
  • மற்றொரு சிறிய வீட்டிற்குள் மேரி நுழைந்திருந்தாள்.
  • அங்கு ஒரு புத்தகத்தை மேரி எடுத்தாள்.
  • 'புத்தகத்தை என்னிடம் கொடு, நீ இதை எடுக்கக் கூடாது', 'உன்னால் படிக்க முடியாது' என்று வெடுக்கென்று பிடுங்கினாள் ஒரு சிறுமி.
  • மேரி மனம் கசந்தாள், படிக்கவும் நினைத்தாள்.
  • ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
  • மிஸ் வில்ஸன் மூலம் பட்டப் படிப்பு முடித்தாள்.
  • மேல் படிப்பிற்காக டவுனுக்கும் போனாள்.
  • அவளுடன் பெரிய கூட்டமே பின்தொடர்ந்தது.
  • வாழ்த்தொலிகள் பெருகின.
  • இரயில் வேகமெடுத்தது.
  1. (அ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

    முன்னுரை

    "அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
    அழகிய பாரதநாட்டின் இரு கண்கள்,"

    விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். உலகமும் போற்றும் அளவுக்கு விண்வெளியில் மிகச்சிறந்த சாதனை செய்துள்ளார்.

பிறப்பு

"மங்கையராய்ப் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமம்மா"

இந்தியாவின் ஹரியானாவில் கர்னலில் சூலை 1, 1961 ஆம் ஆண்டு பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி இவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

கல்வி

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"

விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.

விண்வெளிப் பயணம்!

"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலம் முழுதும் கண்டு தெளிவோம்"

இந்திய கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87ல் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்தார். வெற்றிகரமாகப் பூமி திரும்பினர்.

மரணம்

சனவரி 16, 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் 107 விண்வெளி சென்றது. பணியை முடித்துப் பூமிக்குத் திரும்பும் போது விண்கலம் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உட்பட அனைவரும் பலியாகினர்.

முடிவுரை

நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் நாள் இவரின் நினைவு தினமாகக் கொண்டாடப் படுகிறது. சாதனைப் பெண்களுக்கு தமிழக அரசின் "கல்பனா சாவ்லா" விருது வழங்கப் படுகிறது.

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று."
  1. (ஆ) கலைத்திருவிழா சென்று வந்த நிகழ்வு

    முன்னுரை

    கலை நிகழ்ச்சிகள் கண்ணுக்குக் குளுமையும் மனதிற்கு மகிழ்ச்சியும் தரக்கூடியது. அத்தகைய கலைத் திருவிழா பற்றி இங்கு காணலாம்.

    அறிவிப்பு

    கலைத்திருவிழா அறிவிப்பு வந்ததும் பள்ளி முழுவதும் விழாக்கோலம் கொண்டது, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட போட்டிகள். ஆளாளுக்கு ஒவ்வொரு போட்டியில் சேர்ந்தோம். ஆடல், பாடல், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பரதநாட்டியம், தனி நடனம், குழு நடனம், எனப்பல வித நடனப் போட்டிகள்.

    போட்டிகள்

    பள்ளி அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொண்டோம். நான்கு சீருந்து வாகனம் அமர்த்தி எங்கள் தலைமையாசிரியர் எங்களை தலைநகருக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டிக்குத் தயாரானோம். நான் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றேன்.

    எனது அணுபவம்

    அனைத்துப் பள்ளிகளில் மாநிலப் போட்டிக்குத் தேர்வான பிற மாணவர்களுடன் நானும் சென்றேன். சென்னைக்கு இரயில் பயணம் செய்தோம். புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சென்னை பிரம்மாண்டமாக இருந்தது. போட்டியில் நான் வெற்றி பெற்றேன். பரிசுகளும், சான்றிதழும், வெளிநாடு சுற்றுலா வாய்ப்பும் பெற்றேன்.

    முடிவுரை

    கலைத்திருவிழா, அடையாளம் தெரியாத எம்போன்ற மாணவர்களை அடையாளம் காட்டியது.

4D. நூலக உறுப்பினர் படிவம்

திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம்: பாரதிநகர்


உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண்: 189 உறுப்பினர் எண்: 483
1. பெயர்: இ. எழிலன்
2. தந்தை பெயர்: இனியன்
3. பிறந்த தேதி: 18.09.2009
4. வயது: 15
5. படிப்பு: பத்தாம் வகுப்பு
6. தொலைபேசி எண்: 7618638417
7. முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்): 17, பாரதிநகர், வள்ளுவன் தெரு, திருநெல்வேலி மாவட்டம் - 627354

நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ.50, சந்தா தொகை ரூ.50 ஆக மொத்தம் ரூ.100 ரொக்கமாகச் செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம்: பாரதிநகர் தங்கள் உண்மையுள்ள,
நாள்: 20.09.2024 இ. எழிலன்

O En Samakala Tholargale! - Vairamuthu | Class 10 Tamil Kavithai Pizhai | TN Samacheer Kalvi

கவிதைப்பேழை

ஓ, என் சமகாலத் தோழர்களே!

- வைரமுத்து

ஓ, என் சமகாலத் தோழர்களே! - தலைப்பு

நுழையும்முன்

அறவியலும் அறிவியலும் இணைந்து வளர்ந்ததே தமிழ்ச் சமூகம். எனவே அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர்க்கப்பட வேண்டும் என்பதைத் தற்காலப் படைப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற தம் விழைவை இப்பாடல் மூலம் கவிஞரும் வெளிப்படுத்துகின்றார்.

வைரமுத்து

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்

கிழக்கு வானம் தூரமில்லை

முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்

பூமி ஒன்றும் பாரமில்லை

பாய்ந்து பரவும் இளைய நதிகளே

பள்ளம் நிரப்ப வாருங்கள்

காய்ந்து கிடக்கும் கழனிகள் எங்கும்

கதிர்கள் சுமந்து தாருங்கள்

முன்னோர் சொன்ன முதுமொழி எல்லாம்

முதுகில் சுமந்தால் போதாது

சொன்னோர் கருத்தை வாழ்க்கைப் படுத்த

துணிந்தால் துன்பம் வாராது

காட்டும் பொறுமை அடக்கம் என்னும்

கட்டுப் பாட்டைக் கடவாதீர்

கூட்டுப் புழுதான் பட்டுப் பூச்சியாய்க்

கோலம் கொள்ளும் மறவாதீர்

அறிவை மறந்த உணர்ச்சி என்பது

திரியை மறந்த தீயாகும்

எரியும் தீயை இழந்த திரிதான்

உணர்ச்சி தொலைந்த அறிவாகும்

பழையவை எல்லாம் பழமை அல்ல

பண்பும் அன்பும் பழையவைதாம்

இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க

இனமும் மொழியும் புதியவைதாம்

அறிவியல் என்னும் வாகனம் மீதில்

ஆளும் தமிழை நிறுத்துங்கள்

கரிகா லன்தன் பெருமை எல்லாம்

கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்*

ஏவும் திசையில் அம்பைப் போல

இருந்த இனத்தை மாற்றுங்கள்

ஏவு கணையிலும் தமிழை எழுதி

எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.*

இலக்கணக்குறிப்பு

பண்பும் அன்பும், இனமும் மொழியும் - எண்ணும்மைகள்.

சொன்னோர் - வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம்

பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

பொருத்து - பகுதி

உம் - முன்னிலைப் பன்மை விகுதி

கள் - விகுதி மேல் விகுதி

நூல் வெளி

கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர். கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர். இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இலக்கியங்களில் அறிவியல்

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

புறநானூறு (பாடல் 27, அடி 7-8)

அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்

தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்

வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,"ஓர்

எந்திர வூர்திஇ யற்றுமின்" என்றான்.

- சீவக சிந்தாமணி (நாமகள் இலம்பகம் 50)