Karpavai Katrapin: Speech on the Greatness of Tamil Language | Class 10 Tamil | Iyal 1

Karpavai Katrapin: Speech on the Greatness of Tamil Language | Class 10 Tamil | Iyal 1

இயல் 1, கற்பவை கற்றபின்

'எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற பாடல் அடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.

எந்தமிழ்நா நின்பெருமை எடுத்தே உரைவிரிக்கும்

தமிழன்னையின் தூதுவரான தமிழ் ஆசிரியருக்கும், மனவானில் என்னுடன் சிறகசைத்துப் பறக்கும் அருமை நண்பர்களுக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது உங்கள் முன்னால், 'எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்' என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி, தமிழ் மொழி. எத்துணை கால மாற்றத்திற்குப் பிறகும் தன் இயல்பு மாறாமல் என்றும் இளமையாய்த் திகழும் மொழி, தமிழ் மொழி. வளமான இலக்கியங்களும் வழுவாத இலக்கணங்களும் நிறைந்த மொழி; பாவாணர் சுட்டும் பதினாறு செவ்வியல் தன்மைகளும் வாய்ந்த நன்மொழி; அயல் நாட்டவரும் எளிதில் கற்கும் வகையில் அமைந்த தேன்மொழி; ஏராளமான வேர்ச் சொற்களைக் கொண்ட மொழி; பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தனித்தியங்கும் வல்லமை உடைய மொழி; திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி;

மக்களின் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த மொழி; முத்தமிழாய் வளர்ந்த மொழி; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாக அணிந்த மொழி; உயர்ந்த பண்பாட்டைப் பறைசாற்றும் இலக்கியங்களை ஆட்கொண்ட மொழி; உலகப் பொதுமறையான திருக்குறளையும் அறிவியல் முறையில் அமைந்த தொல்காப்பியத்தையும் மணிமுடியாய்த் தரித்த மொழி; தமிழரின் வாழ்வியல் அறங்களைப் பாடும் மொழி; வாழ்க்கை நெறிகளைப் பாடும் மொழி; நீதி நெறிகளை நோக்கி நெறிப்படுத்தும் மொழி; பக்திப் பரவசமூட்டும் தெய்வ மொழி; இன்னிசைச் சந்தமொழி; பாமரரின் வாய்ப்பாட்டு மொழி;

புதுவழி இலக்கிய வடிவங்களை ஏற்றுப் புத்தெழுச்சி பெற்ற மொழி; கணினி மொழி; கன்னி மொழி; எதிர்கால உலகை ஆளும் உலக மொழி, தமிழ் மொழி. உனது பெருமையை உரைவிரித்திட ஒருவராலும் இயலாது. ஓதியுணர்ந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்துவதைத் தவிர வேறு வழி இல்லை எங்களுக்கு. ஆகவே, உன்னை வாழ்த்தி வணங்குகிறோம், தாயே! தமிழே!

இதுவரை என்னுடைய பேச்சைக் கேட்டு மகிழ்ந்த என் நண்பர்களுக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!