1. இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.
சாதனைப் பெண்மணிகள்:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள்.
இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. நாட்டின் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.
அன்னை தெரசா:
கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே "அன்னை" எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.
எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ. நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரை பதித்த கலைமாமணி இவர்.
இந்திரா நூயி:
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான, “பெப்சிகோ”வின் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சார்ந்த தமிழ்ப் பெண்.
ப்ரித்தி பட்டேல்:
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான இவர் இங்கிலாந்து அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கியாரா நர்கின்:
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி. 16 வயதே ஆனவர். ஆரஞ்சுப் பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவது மூலம் நிலத்தில் நீரைத் தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெறலாம் எனக் கண்டறிந்தார். இவர் சமர்ப்பித்த "தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை ” என்ற ஆய்வுக்கு 50,000 டாலர் பரிசாகப் பெற்றார்.
ஸ்டெஃபி கிராஃப்:
டென்னிஸ் வீராங்கனை, உலகெங்கும் உள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர், 22 கிராண்ட்ஸ்லாம், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், கிராண்ட் பிரீ பட்டங்கள் பல பெற்றவர். தற்போது போர்களால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து காத்து வருகிறார்.
செரீனா வில்லியம்ஸ்:
அதிரடியாக ஆடும் டென்னிஸ் வீராங்கனை. நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஸ்டெஃபிகிராஃபின் சாதனையை முறியடித்தவர். ஜே.கே. ரவுலிங் : வறுமைச்சூழல், சமூகத்தின் நிராகரிப்புகள் இவைகளையெல்லாம் தாண்டி, "ஹாரி பாட்டர்'' கதை எழுதி வெற்றி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பெண்மணி.
மாணவர்களே, இச்சாதனைப் பெண்மணிகளின் புகைப்படங்களையும் திரட்டி, இத்தகவல்களுடன் தொகுப்பேடு தயாரித்துக் கொள்ளுங்கள்.
மேலும், கல்பனா சாவ்லா, மேரிகோம், சானியா மிர்சா , ஸ்குவாஷ் தீபிகா, டாக்டர் சாந்தா என பல சாதனையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.