இயல் 4: பா நயம் பாராட்டல்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ?
மனத்தை வாழ்த்துதல்
திரண்ட கருத்து
நிலாவையும் விண்மீனையும் காற்றையும் சமமாகக் கருதி, அவற்றின் அமுதைப் பருகி, அவற்றிலே நிலைகொண்டோம். மனப்பறவையை எங்கும் ஓட்டி மகிழ்ந்திடுவோம். பழவண்டியில் பலாச்சுளையை வட்டமிட்டு வண்டு பாடுவதில் ஒன்றும் வியப்பில்லையே.
மையக்கருத்து
இக்கவிதை மனத்தை வாழ்த்துதலை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது.
சொல் நயம்
பாரதியார் தம் கவிதையில், 'அமுதக்குழம்பு', 'கோலவெறி', 'மனச்சிறுபுள்' ஆகிய அழகான சொற்களைக் கையாண்டுள்ளார்.
பொருள் நயம்
'பாலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ' என்ற கவிதைவரி 'கவிஞர்கள், இயற்கை அழகில் மயங்கிக் கவிபாடுவதில் வியப்பில்லை' என்னும் உள்ளுறை கருத்தை வெளிப்படுத்துகின்றது. இது, உள்ளுறை உவமமாக அமைந்து கவிதைக்குச் சுவை கூட்டுகிறது.
சந்த நயம்
'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.
"குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்"
என்ற வரிகளில் சந்தநயம் பயின்று வந்துள்ளது.
தொடை நயம்
"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.
மோனை நயம்
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.
"படைக்கு அழகு யானை
பாடலுக்கு அழகு மோனை" என்பதற்கு ஏற்ப,
- வானத்து
- வைத்தாங்கே
- குழம்பை
- குடித்தொரு
- கோலவெறி
- பலாவின்
- பாடுவதும்
என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.
எதுகை நயம்
முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.
- நிலாவையும்
- குலாவும்
- உலாவும்
- பலாவின்
என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.
இயைபு நயம்
பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.
- படைத்தோம்
- மகிழ்ந்திடுவோம்
என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.
அணி நயம்
அமுதைக் குழம்பாகவும், மனத்தைச் சிறுபறவையாகவும் கவிஞர் உருவகம் செய்துள்ளார். எனவே, இது 'உருவக அணி' ஆகும்.
பா வகை
இப்பாடல், 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும்.