9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 5: கசடற மொழிதல்
உரைநடை உலகம்
இயல் ஐந்து: கல்வியில் சிறந்த பெண்கள்
குறுவினா
1. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறுவினா
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
- ஒளவையார்
- நக்கண்ணையார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- காக்கைப்பாடினியார்
- ஆதிமந்தியார்
- வெள்ளிவீதியார்
- வெண்ணிக்குயத்தியார்
- நப்பசலையார்
- பொன்முடியார்
- காவற்பெண்டு
- அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.
2. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக?
குழுத்தலைவர்: ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே...
மற்றோர்: ஆமா கையிலே.....
குழுத்தலைவர்: ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே, ஏடெடுத்து நீ போகணும்.....
மற்றோர்: ஆமா .... போகணும்.
குழுத்தலைவர்: சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும். அம்மா.... நீ நிந்தையைப் பொறுத்துக்கோ அம்மா... நீ உன் திறமையைக் காட்டு அம்மா...
மற்றோர்: ஆமா... திறமையைக் காட்டு அம்மா...
குழுத்தலைவர்: முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு அம்மா நீ ... முடித்துக் காட்டு அம்மா ....
மற்றோர்: ஆமா... முடித்துக் காட்டு...
குழுத்தலைவர்: செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு... பட்டம் பெறு அம்மா சட்டம் செய் அம்மா... நாடே உன்னை வணங்கட்டும் அம்மா....
மற்றோர்: ஆமா... நாடே உன்னை வணங்கட்டும் அம்மா...
3. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
- 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
- அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
- தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.
4. நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
- நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
- இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் - தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதித் தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
- மேலும், இவருடைய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
நெடுவினா
1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
முன்னுரை:
நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
பண்டித ரமாபாய்:
1858 - ஆம் ஆண்டு முதல் 1922 - ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், "பெண்மை என்றால் உயர்வு" என்பதற்குச் சான்றாவார்.
ஐடாஸ் சோபியா:
1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.
மூவலூர் இராமாமிர்தம்:
1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.
சாவித்திரிபாய் பூலே:
1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
மலாலா:
பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.
முடிவுரை:
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே.
"புவி வளம் பெறவே
புதிய உலகம் நலம் பெறவே
வாழியவே பெண்மை வாழியவே"
கற்பவை கற்றபின் 
1. இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள்.
இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. நாட்டின் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.
அன்னை தெரசா:
கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே "அன்னை" எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.
எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ. நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரை பதித்த கலைமாமணி இவர்.
இந்திரா நூயி:
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான, “பெப்சிகோ”வின் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சார்ந்த தமிழ்ப் பெண்.
ப்ரித்தி பட்டேல்:
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான இவர் இங்கிலாந்து அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
கியாரா நர்கின்:
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி. 16 வயதே ஆனவர். ஆரஞ்சுப் பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவது மூலம் நிலத்தில் நீரைத் தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெறலாம் எனக் கண்டறிந்தார். இவர் சமர்ப்பித்த "தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை ” என்ற ஆய்வுக்கு 50,000 டாலர் பரிசாகப் பெற்றார்.
ஸ்டெஃபி கிராஃப்:
டென்னிஸ் வீராங்கனை, உலகெங்கும் உள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர், 22 கிராண்ட்ஸ்லாம், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், கிராண்ட் பிரீ பட்டங்கள் பல பெற்றவர். தற்போது போர்களால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து காத்து வருகிறார்.
செரீனா வில்லியம்ஸ்:
அதிரடியாக ஆடும் டென்னிஸ் வீராங்கனை. நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஸ்டெஃபிகிராஃபின் சாதனையை முறியடித்தவர். ஜே.கே. ரவுலிங் : வறுமைச்சூழல், சமூகத்தின் நிராகரிப்புகள் இவைகளையெல்லாம் தாண்டி, "ஹாரி பாட்டர்'' கதை எழுதி வெற்றி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பெண்மணி.
மாணவர்களே, இச்சாதனைப் பெண்மணிகளின் புகைப்படங்களையும் திரட்டி, இத்தகவல்களுடன் தொகுப்பேடு தயாரித்துக் கொள்ளுங்கள்.
மேலும், கல்பனா சாவ்லா, மேரிகோம், சானியா மிர்சா , ஸ்குவாஷ் தீபிகா, டாக்டர் சாந்தா என பல சாதனையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
2. கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள், பொன் மொழிகளைத் திரட்டிக் கட்டுரை வரைக.
- கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
- கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி கல்வி கரையில் கற்பவர் நாள் சில
- கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
- கல்வியழகே அழகு
- கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு வரை பிறருக்குக் கொடுக்கத்தான்.
- எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
- கல்வி ஓர் அணிகலன், அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும்.
கல்வியின் சிறப்பு
முன்னுரை:
"வெள்ளத்தால் அழியாது
வெந்தழலால் வேகாது”
எதனாலும் அழிக்க முடியாத விழுச்செல்வமாம் கல்வியின் சிறப்புகளாவன.
சென்ற இடமெல்லாம் சிறப்பு:
கல்வியெனும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றவன் எங்கு, எவ்விடம் சென்றாலும் சமூகத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே, எல்லா நாடும் சொந்த நாடேயாகும். இதனையே பொய்யாப் புலவனும்,
"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” என்றார்.
மெய்ப்பொருள் கல்வி:
உலகப் பொருள்களாகிய வீடு, செல்வம், பொன், நிலம் இவையாவும் பருப்பொருள்கள். கள்வனால் களவாடப்படும், வெள்ளத்தால் நெருப்பால் அழியும். ஆனால் கல்வி நுண் பொருளாம் மெய்ப்பொருள் ஆகும். கள்வனால், பகைவனால் கொள்ளப்படாது. கொடுக்க கொடுக்க வளருமேயன்றி குறைவுபடாது. எனவே கல்வி மெய்ப் பொருளாகும்.
நிற்க அதற்குத் தக:
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். கற்ற கல்வியின் வழி நடக்கவில்லையெனில் பயன் இல்லை என்பதை.
"கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக'' என்ற வள்ளுவன் வழி விளங்கிக் கொள்ளலாம்.
கண்ணுடையோர் கற்றோர்:
முகத்தின் கண்ணானது கற்றவருக்குரிய அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்வியறிவைப் பெற்றவனே கண்ணுடையவன். அதனைப் பெறாதவனின் கண்கள் கண் எனப்படுவதில்லை. அவை முகத்தின் புண்களே ஆகும்.
"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்''
கற்பவனே வாழ்பவன்:
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்". கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை. அதாவது கற்பவர் நாள் சிலவாக இருந்து அவர்கள் உடல் அழியலாம். ஆனால் அவர் கற்ற, கற்றுக் கொடுத்த கல்வி உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். எனவே கற்பவன், கல்விக்காக உயிர் கொடுப்பவன் என்றும் வாழ்கிறான்.
முடிவுரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் உடன் இருந்து வாழ வைக்கும்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து''.
கவிதைப் பேழை
இயல் ஐந்து: குடும்ப விளக்கு
பலவுள் தெரிக
1. பொருத்தமான விடையைத் தேர்க.
க) அ - 3, ஆ - 4, இ - 1, ஈ - 2
உ) அ - 2, ஆ - 3, இ - 1, ஈ - 4
ங) அ - 3, ஆ - 1, இ - 4, ஈ - 2
ச) அ - 4, ஆ - 1, இ - 2, ஈ - 3
விடை : க) அ - 3, ஆ - 4, இ - 1, ஈ - 2
குறுவினா
1. தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
- குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
- பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
- பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
- நாட்டின் வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில் கல்வி வேண்டும் என்று “பெண்கல்வி வேண்டும்” என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.
சிறுவினா
1. சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
அ) இன்பம் சமைப்பவர்:
உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் படைப்பது மூலம் (பரிமாறுவது மூலம்) இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.
ஆ) சமைப்பது தாழ்வா:
உணவைச் சமைத்துத் தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும். எனவே பாவேந்தர் கூற்றுப்படி சமையல் தாழ்வாகாது.
நெடுவினா
1. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
முன்னுரை:
பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெண்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளையும், இன்றைய சூழலையும் பார்ப்போம்.
தலைவியின் பேச்சு:
கல்வி இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்; அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை. கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட நன்செய் நிலம் போன்றவர்கள். அவர்கள் மூலமே சிறந்த அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர்.
பெண்கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது.
கல்வியறிவு இல்லாத பெண், மின்னல் போல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவள் வாழ்வு ஒளிர்வதில்லை.
"கல்வி இல்லா மின்னாள்
வாழ்வில் என்றும் மின்னாள்”
சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
இன்றைய சூழல்:
கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கட்பேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.
துறைதோறும்:
வானூர்தியைச் செலுத்துதல் விண்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும், ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறன் உடையவளாய் இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.
"வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது.
சமையல்பணி:
சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது. ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது எனில் மிகையாகாது.
குடும்ப விளக்கு தலைவிபேசும், கால கட்டத்தை விட பெண்கல்வி ' இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.
முடிவுரை:
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு வரிகள் நனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
கற்பவை கற்றபின் 
1. இவை போன்ற பெண்மையைப் போற்றும் கவிதை அடிகளைத் திரட்டுக.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - பாரதி
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா....... - கவிமணி
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது - பாவேந்தர்
- அன்பென்னும் ஊஞ்சலில்
அழகாக அசைந்திடும்
ஆனந்தப் பெண்மை - நீராக நிலமாக விண்ணாக
காற்றாக யாதுமாக
உயிராக உறவாக
ஒளிர்கின்ற சக்தி நீயே! - காந்தம் நீ
கருணை நீ
எரிமலை நீ
நெருப்பும் நீ
பனி உருவச் சிற்பமும் நீயே. - பெண்மையே மனிதனை ஆக்கும் தெய்வம்
பெண்மையே மானுடரில் வாழும் தெய்வம்
பெண்மையே மனிதனை ஆளும் தெய்வம் - பெண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டு - எல்லாம் கடவுள் செயல் என்று
தொடை நடுங்கும் பொல்லாங்கு
தீர்த்துப் புதுமை செய்ய வந்தவளே பெண் - நாய்என்று நவில்வார்க்கும் - இப்புவிக்கு
தாய் என்று காட்டத்தமிழர்க்கு வாய்த்தவள் - பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டின்
மண்ணடிமை நீங்குதல் முயற்கொம்பே....
2. ஆணுக்கும் சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி அதன் கருத்துகளைத் தொகுக்க.
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: (நாதன், அமுதா, இனியா, முகிலன்)
அமுதா: நாதா! இப்போது தான் பள்ளிக்கு வருகிறாயா? ஏன் தாமதம்...
நாதன்: அவசர வேலையின் நிமித்தமாக என் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்கள். கடையில் உணவு வாங்கி வரத் தாமதமாகி விட்டது.
இனியா: என்ன? உன் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்களா? கடையிலா உணவு வாங்கினாய்.
நாதன்: 'ஆமாம் இனியா! நான், என் தந்தை, என் அண்ணன் மூவருமே ஆண்கள் அல்லவா! அதனால் வீட்டில் சமையல் இல்லை.
முகிலன்: என்னடா இது! மூவருக்கும் ஒன்றுமே தெரியாதா?
நாதன்: தெரியாது முகிலா; தேநீர் முதல் உணவு வரை கடையில் தான்!
முகிலன்: இதோ! பார் என் அம்மாவுக்கும் இன்று உடல் நிலை சரியில்லை. காலையிலே மருத்துவமனை சென்று விட்டார். நானும் என் தந்தையும் தான் சமையல் செய்தோம்.
இனியா: அப்படியா! முகிலா
முகிலன்: ஆமாம் இனியா! வேலை செய்தே என் அம்மா மிகவும் சோர்ந்து உடல் நலம் குன்றிவிட்டார்கள். அதனால் என் தந்தை, முகிலா! நீயும் நானும் அம்மாவுக்கு சற்று ஓய்வு கொடுப்போம். அவர்கள் நிதானமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வரட்டும் என்றார்.
அமுதா: எப்படி சமைத்தீர்கள்?
முகிலன்: காலையிலே அப்பா கடைக்குச் சென்று கீரை வாங்கி வந்தார். அவர் சோறு சமைக்கும் முன் நான் கீரையைச் சுத்தம் செய்து, அதனைச் சமைப்பதற்குத் தேவையான வெங்காயம் போன்றவற்றை உரித்துக் கொடுத்து நான் பள்ளிக்குப் புறப்படச் சென்றேன். அப்பா அம்மாவைவிட வேகமாகச் சமைத்து விட்டார். சத்துள்ள உணவும் கிடைத்தது. கடைக்குச் செல்லும் அலைச்சல், பணம், நேரம் எல்லாம் மிச்சம்.
நாதன்: நானும் ஒரு காணொளியில் பார்த்தேன். சமையல் தெரியும் ஆண்களுக்குக்கலையுணர்வும், தன்னம்பிக்கையும் அதிகம் என்றும்; ஆண்கள் சமையல் கற்றுக் கொள்வதால் வீட்டில் சமத்துவம் வளரும்; எல்லோருக்கும் ஒருவர் மேல் ஒருவர்க்கு அக்கறை கூடும்; வீணான செலவுகள் தவிர்க்கப்படும்; கடையில் உணவை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்தக் காணொளி விளக்கியது. முகிலா...
முகிலன்: நாதன் ; இனி நம் வீட்டில் நம் அன்னை உடல் நலக் குறைவுற்றாலோ, ஊருக்குச் சென்றாலோ நம் தேவைக்கு நம் தந்தை, நம் சகோதரர்கள் இணைந்து சமைக்க முயற்சிப்போம்..... |
அமுதா, இனியா.. : நல்ல முடிவு நண்பர்களே வீடும், நாடும் நலம் பெற சமையல் உட்பட எல்லாப் பணிகளையும் இரு பாலரும் இணைந்தே செய்வோம்....
கவிதைப் பேழை
இயல் ஐந்து: சிறுபஞ்சமூலம்
பலவுள் தெரிக
1. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
விடை : இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
2. பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
விடை : ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை.
குறுவினா
1. மூவாது மூத்தவர் - நூல் வல்லார் - இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.
சிறுவினா
1. விதைக்காமலே முளைக்கும் விதைகள் - இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
- கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
- தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
- அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
“விதையாமை நாறுவ வித்துள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.''
கற்பவை கற்றபின் 
1. பூக்காமலே காய்க்கும் மரங்கள், விதைக்காமலே முளைக்கும் விதைகள் எவையெனக் கேட்டறிந்து வகுப்பறையில் கூறுக.
- ஆலமரம்
- அத்திமரம்
- அரசமரம்
- பலாமரம்
- அசோக மரம் போன்றவை.
- வேப்ப விதை (வேம்பு)
- அரசன்
- புங்கன்
- ஆல் - போன்றவை விதைக்காமலே தாமாய் எங்கெல்லாம் விழுகின்றனவோ அங்கெல்லாம் முளைப்பன.
2. மூவாது மூத்தவர், காணாது கண்டவர் இவை போல நயம் அமைந்த தொடர்களை உருவாக்குக.
- மூவாது மூத்தவர்
- காணாது கண்டவர்
- வாராது வந்தவர்
- பெறாஅது பெற்றவர்
- தேடாது கிடைத்தவர்
- சூடாது சூடியவள்
விரிவானம்
இயல் ஐந்து: வீட்டிற்கோர் புத்தகசாலை
பலவுள் தெரிக
1. சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
விடை : 3) மூன்றும் சரி
குறுவினா
1. நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
- உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
- அறநூலாம் திருக்குறள்.
- விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
- வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.
நெடுவினா
1. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.
நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே.
"வீட்டிற்கோர் புத்தகசாலை" என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.
வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.
நூல்கள்:
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூல்களையாவது கற்க முனையுங்கள்.
பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.
- நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
- மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
- தொலைதேசங்களைக் கண்டவர்கள்
- வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை
ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .
முடிவுரை:
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.
"புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”
என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.
கற்பவை கற்றபின் 
1. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் - அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! - கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
- தொட்டுப் பார்த்தால் காகிதம்
படித்துப் பார்த்தால் ஆயுதம் - புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.
- உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் - டெஸ்கார்ட்ஸ்
- கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்
- உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் ஃபிராய்ட்
- புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் - இங்கர்சால்
- நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். - ஆபிரகாம் லிங்கன்
- எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்
2. சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக்கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
- இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா. அரங்கநாதன்) 09.08.1892 -ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
- இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
- நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
- இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
- நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய நூலகவியல் பள்ளியில்" பணியாற்றினார்.
- வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.
- ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
- 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை "தேசிய நூலக தினமாக' கொண்டாடுவதற்கான காரணங்கள் ஆகும்.
3. நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
- அகரவரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
- நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.
கற்கண்டு
இயல் ஐந்து: இடைச்சொல் - உரிச்சொல்
பலவுள் தெரிக
1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக.
விடை : ஈ) இன், கூட, கிறு, அம்பு
கற்பவை கற்றபின் 
1. பத்திகளில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ) பெண்ணடிமை போகவேண்டும்; பெண், கல்வி பெற வேண்டும். பெண்கள் படித்தால் தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்து வந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
இடைச்சொற்கள்:
பத்தி (அ):
- படித்தால் தான் [தான்]
- வீடும் நாடும் [உம்]
- சமுதாயத்தின் [இன்]
- பெண்களுக்கும் [உம்]
- உரிமைகளும் [உம்]
பத்தி (ஆ):
- இருந்ததைவிட [விட]
- வசதிகள் [கள்]
- அவர்களின் [இன்]
- பர்ணசாலைக்கு [கு]
- வீட்டுக்கு [கு]
- அடவியில், ஆற்றோரத்தில் [இல்]
2. உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை உருவாக்குக.
- உம் : வீரர்களும் போற்றும் வீரன்.
- ஓ : பூங்கொடியோ மலர்க்கொடியோ இப்படத்தை வரையுங்கள்.
- ஏ : தேவி நடந்தே வீட்டுக்கு வந்தாள்.
- தான் : இனியா நான்தான் ஆடுவேன் என்றாள்
- மட்டும் : உங்களில் ஒருவர் மட்டும் முன்னால் வாருங்கள்.
- ஆவது : இன்றாவது மழை வருமா ?
- கூட : தெருவில் ஒருவர் கூட நடமாடவில்லை .
- ஆ : புகழேந்தி பாடினானா?
- ஆம் : தலைமை ஆசிரியர் உள்ளே வரலாம் என்றார்.
- ஆகிய : "ஆகிய” என்னும் இடைச்சொல் தற்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.
3. பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.
அ) மணற்கேணி____ போல் விளங்கும். நூல்கள்___ உறுதுணையாக இருக்கிறது.
ஆ) பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்___ பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
அ) மணற்கேணியைப் போல் விளங்கும். நூல்கள் உறுதுணையாக இருக்கிறது.
ஆ) பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்தான் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் படிக்கு நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.
இ) மக்களின் மனங்களில் உலக அறிவு புக வழி செய்ய வேண்டும்.
4. இணைத்து எழுதிப் பாருங்கள் :
1. அவன்தான் மனிதன்
அவனும் மனிதன்
அவனே மனிதன்
அவனா மனிதன்
2. இயற்கை தான் அழகு
இயற்கையும் அழகு
இயற்கையே அழகு
இயற்கையா அழகு
3. உனக்கு மட்டும் தெரியுமா?
உனக்குக் கூட தெரியுமா?
உனக்காவது தெரியுமா?
4. உனக்கு மட்டும் தெரியும்
உனக்குக் கூட தெரியும்
உனக்காவது தெரியும்
5. வீடும் நாடும் நமதே.
வீடோ நாடோ நமதே.
காற்றும் வெளிச்சமும் தேவை.
காற்றோ வெளிச்சமோ தேவை.
6. அன்பும் அமைதியும் வேண்டும்
அன்போ அமைதியோ வேண்டும்
வான்மதியும் பானுவும் வாருங்கள்
வான்மதியோ பானுவோ வாருங்கள்
5. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.
அ) மா பெரும் பொதுக்கூட்டம் [கடி / மா]
ஆ) கடி விடுதும் (உறு/கடி]
இ) வாள் நுதல் [வாள்/தவ]
ஈ) சால சிறந்தது [சால/மழ]
உ) கடி மனை [கடி/தட]
சிந்தனை வினா
1. 'தான்' என்னும் இடைச் சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- 'தான்' என்னும் இடைச்சொல்லை அழுத்தப் பொருளில் பயன்படுத்தலாம்.
- எந்தச் சொல்லுடன் வருகின்றதோ, அச்சொல்லை முதன்மைப்படுத்தும் வகையில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தலாம்.
- சான்று: நிர்மலாதான் பாடினாள்.
2. 'அவர்களுக்குப் பரிசு தருவேன்' - இத்தொடரில் ‘ஆ’ என்னும் இடைச் சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.
- அவர்களுக்கா பரிசு தருவேன்?
- அவர்களுக்குப் பரிசு தருவேனா?
3. செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம் பெறுகின்றன?
- உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்றும் அவை,
- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது.
- பல சொல் ஒரு பொருளுக்கு உரியது என இடம் பெறும்.
4. தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்களை எழுதுக.
- மா, உறு, தவ, நனி, கடி, கூர், கழி - முதலியவை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச் சொற்கள்.
- மேலும் மழ, குழ , விழுமுதல், என்பனவும் பயன்பாட்டில் உள்ளன.
5. 'ஆ' என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக.
- 'ஆ' என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் “ஐயம்” தோன்ற வரும்.
- சான்று: அவனா பேசினான்
6. இடைச்சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.
அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?
விடை: வீட்டிற்குச் செல்வதற்குத்தான் இவ்வளவு பீடிகையாம்.
ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
விடை: இந்தச் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும்.
இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
விடை: வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆகிய செயல்கள் கூட ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாம்.
ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?
விடை: சமைப்பது மட்டும் தாழ்வென எண்ணலாமா?
உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.
விடை: பூக்காமலும் சில மரங்கள் காய்க்கும்.
ஊ) வாளால் வெட்டினான்.
விடை: வாளால்தான் வெட்டினான்.