Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Kalpana Chawla Essay: Life, Education, and Achievements in Space

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

கல்பனா சாவ்லா நாசா விண்வெளி வீரர்

முன்னுரை

                "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

                 பேணி வளர்த்திடும் ஈசன் "

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து  உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா.  வானில் நட்சத்திரங்களை எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!

குழந்தைப் பருவம்

             அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா.   கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள்.  கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

        கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.

பணி

           நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றிக்  திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார்.  விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.

          1995ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.  

சாதனைகள்

            1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார்.  பின்னர், தொழில் நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.

             ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார்.  கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'மைக்ரோ ஈர்ப்பு' (கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.

விபத்து

         பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள்.  இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

விருதுகள்

            அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது.  இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது.  இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.  

முடிவுரை

             விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!

How to Write a Book Review (Katturai) in Tamil: Manimekalai Example

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

மதிப்புரை

நூலின் தலைப்பு

மணிமேகலை

நூலின் மையப் பொருள்

மணிமேகலை மேற்கொண்ட துறவு

மொழிநடை

நாவல்

வெளிப்படுத்தும் கருத்து

     நாம் போன பிறவியில் செய்த பாவத்தின் பயனாகத்தான் இந்த உடம்பு வாய்த்திருக்கிறது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு நல்லது செய்வதும் கெட்டது செய்வதும் முழுக்க முழுக்க நம்முடைய கையில் தான் இருக்கிறது. இந்த உடம்பு அழகானது என்று நினைத்தால் அந்த கருத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அழகு நிலை இல்லாதது. இளமை போய் முதுமை வந்து விட்டால் அத்தனை அழகும் மறைந்து போகும். இந்த நிலை இல்லாத உடம்பைப் பராமரிக்கத் தான் எத்தனை அலங்காரங்கள்? அழகு சாதனங்கள், நறுமணப் பூச்சுகள். இதை எல்லாம் நீக்கி விட்டால் இந்த உடம்பு எத்தனை கேவலமான நாற்றம் கொண்டது என்று புரியும். புற்றுக்குள் பாம்பு புகுந்தது போல கோபம், வருத்தம், கவலை, துன்பம் எல்லாம் உள்ளே பூட்டி வைக்கிறோம்.

நூலின் நயம்

தீவதிலகையின் கூற்று:

     இந்த உலகத்தையே பெரும் துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு மிகப்பெரிய நோய் பசி. அந்தப் பசியைப் போக்கும் அற்புத மருந்து அந்த அமுதசுரபி. நீ அதை ஏற்றுக்கொண்டு, இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்து மகிழச் செய்ய வேண்டும். உன் மூலம் இந்த பூமி மொத்தமும் நலம் பெறவேண்டும்.

அறவண அடிகளின் கூற்று:

     இங்கிருந்து சூரிய மண்டலம் தொலைவில் உள்ளது என்பதை நாம் உணர முடியும். ஆனால், அதைக் கண்ணால் பார்த்து அறிவது சாத்தியமில்லை. அதுபோலத்தான், நல்ல அறநெறிகளை நாம் நேரில் பார்த்தால் தான் நம்புவோம் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. மற்றவர்கள் உணர்த்துவதை உள்ளத்தால் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிரையின் கணவன் சாதுவன் கூற்று:

     கள் நம்முடைய அறிவை மயக்குகிறது. மாமிசம், மற்ற உயிர்களைக் கொன்று பிழைக்கச் சொல்கிறது. பல பெண்களின் பின்னே அலைவதும் மிருகக் குணம் தான்.

நூலின் கட்டமைப்பு

     மணிமேகலைக் காப்பியத்தை, இவள் பெயர் மணிமேகலைமுதல் குற்றம்தவிர்த்த வாழ்க்கை ஈறாக 66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.

சிறப்புக் கூறு

     மூல நூலான மணிமேகலையை விட, நாவல் வடிவிலமைந்த இந்த நூல் எளிய நடையில் கதை சொல்கிறது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

     நாடகக் காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, மணிமேகலை வாழ்ந்த உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

     புத்தர் அறிவித்த நன்னெறிகள், நூல் முழுவதும் தொடர்கின்றன. இக்கால சமுதாயம் சீர்பெற மிகவும் அவசியமான நூலாகும்.

     மிகுந்த சுவையோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

நூலின் ஆசிரியர்: என். சொக்கன்

An Essay on a Visit to the Government Exhibition

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

அரசுப்பொருட்காட்சி

முன்னுரை

கண்ணால் காண்பவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, நெடுங்காலம் நிலைத்திருக்கும். அதனால்தான், பள்ளிகளில் சில இடங்களைக் குறிப்பிட்டு சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் பொருட்காட்சிகள் கூட மக்கள் அறிவை வளர்க்க பெருந்துணை புரிகின்றன. நான் அண்மையில் என் நண்பர்களுடன் மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அது குறித்துச் சில செய்திகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தமுக்கம் மைதானம்

தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைதானமாக பதினான்காம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்கர் வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டு சண்டைகள் போன்ற விளையாட்டுகளும் சிலம்பு சண்டை, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பட்டன.

அரசுப் பொருட்காட்சி

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரைத் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெறும். மாலை வேளையில் பல வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலிக்கும். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

பல்துறை அரங்குகள்

அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சி ஆதலால், உள்ளே நுழைந்ததும் அரசு சார்புடைய காவல்துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, அற நிலையத் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, விளம்பரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்துறை, அறிவியல் துறை எனப் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயம், கைத்தறி, மீன் வளர்ப்பு முதலான துறை சார்ந்த அரங்குகளும் இருந்தன. அவற்றில் நமக்குத் தேவையான விளக்கமளிக்கப் பொறுப்புடைய பலர் காத்திருந்தது சிறப்பாக இருந்தது. நான் பல வினாக்களை வினவி, என் ஐயங்களைப் போக்கிக் கொண்டேன்.

பல்வேறு கடைகள்

சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல்வேறு கடைகள் அங்கே காணப்பட்டன.

கேளிக்கை அரங்குகள்

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மீன் கண்காட்சிக் கூடம் கண்களைக் கவர்வதாக இருந்தது. பல்வேறு வகையான இராட்டினங்களில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைவரும் சுற்றி மகிழ்ந்தனர்.

உணவு அரங்குகள்

குடும்பம் குடும்பமாக வந்திருந்த சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உணவு அரங்கங்களில் கூடிநின்று, பல்வேறு வகையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குக் குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. 'ஆவின்' பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்.

முடிவுரை

பொருட்காட்சி என்பது வெறும் பொருள்களை மட்டும் காண உதவவில்லை. அது பல்வேறு துறை அறிவையும் பெற உதவுவதாக அமைந்துள்ளது. எனவே, அடுத்த முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.

Essay on Visiting a Kalai Thiruvizha (Art Festival) in Tamil

கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக

கட்டுரை -கலைத்திருவிழா

முன்னுரை

மனிதன் கொண்ட விழைவின் வெளிப்பாடே விழா. இவ்விழாவில் அவரவர் சார்ந்த சமூகத்தின் விழுமியங்கள் கலைகள் வடிவில் பொதுவில் நிகழ்த்தப்படும். சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலைகள் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருவதோடு வாழ்க்கை நெறிகளையும் வகுத்துக் கூறும். இத்தன்மை வாய்ந்த கலைத் திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று வந்தேன். அதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.

கண்கவர் கலைத் திருவிழா

மதுரை அரசுக் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்" என்பதை மனத்தில் கொண்டு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர். "ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" என்ற சிலப்பதிகார அரங்கம் போல் இக்கலைத் திருவிழா அரங்கம் விளங்கிற்று. வண்ணவண்ணத் தோரணங்களும் வரவேற்புப் பதாகைகளும் சிவப்புக்கம்பள விரிப்பும் விசாலமான பார்வையாளர் அரங்கும் கண்களைக் கவர்ந்தன!

நிகழ்ச்சித் தொடக்கம்

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

நோக்கம் மற்றும் குறிக்கோள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த கலைத் திறன்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலைத் திருவிழா 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற குறிக்கோளில் நடத்தப்பட்டது.

பல்வேறு போட்டிகள்

வகுப்புகள் 1-2, 3-5, 6-8, 9-10, 11-12 என ஐந்து பிரிவுகளில் கவின்கலை, இசை, நாடகம், நடனம் என்னும் வகைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு செதுக்குச் சிற்பங்களிலும் வண்ண ஓவியங்களிலும் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை வெளிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறந்த சிற்பக் கலைஞர்களையும் ஓவியக் கலைஞர்களையும் அடையாளம் காண முடிந்தது.

கருவி இசையும் வாய்ப்பாட்டும்

கருவி இசைக்கென்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கருவி இசையில் தோற்கருவி, துளைக்கருவி, தந்திக்கருவிஎனப் பலவகை இசைக்கருவிகளை இசைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" என்று ஆண்டாள் பாடியது போன்று மாணவர்கள் பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், கிட்டார் ஆகியவற்றை இசைத்தனர்; பார்வையாளர்கள் மயங்கினர். மற்றொருபுறம் வாய்ப்பாட்டு இசையில் பங்கேற்ற மாணவர்கள் நாட்டுப்புறப் பாடல்களையும் செவ்வியல் இசைப் பாடல்களையும் பாடி அசத்தினர்.

நடனமும் நாடகமும்

தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம் என்னும் இரண்டு பிரிவுகளாக நடனப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பாடல்களுக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பலவகை நடனங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, நகைச்சுவை வழங்குதல், குழுநாடகம் என்னும் பிரிவுகளில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் பார்வையாளர்கள் மனத்தில் பதிந்தன. மாணவர்களின் நடனமும் நடிப்பும் தேர்ந்த திரைக் கலைஞர்களைப் போலவே இருந்தது. இக்கலைத் திருவிழாக் காட்சிகளையெல்லாம்,"அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறை விரித்தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்பது போல நாங்கள் நோக்கினோம்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்கள் முகத்திலே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டுச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்த்துரையுடன் கலைத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. ஆயினும், கலைத்திருவிழாக்காட்சிகள் என் கண்களைவிட்டு அகலவே இல்லை!

முடிவுரை

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் கலைத் திருவிழாவே குடிகொண்டிருந்தது. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாய்" மாணவர்கள் ஒவ்வொருவரும் கலைஞர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இக்கலைத் திருவிழா நிச்சயம் தூண்டுகோலாக அமையும் என உறுதியாக நம்பலாம்.