Essay on Visiting a Kalai Thiruvizha (Art Festival) in Tamil

Essay on Visiting a Kalai Thiruvizha (Art Festival) in Tamil

கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக

கட்டுரை -கலைத்திருவிழா

முன்னுரை

மனிதன் கொண்ட விழைவின் வெளிப்பாடே விழா. இவ்விழாவில் அவரவர் சார்ந்த சமூகத்தின் விழுமியங்கள் கலைகள் வடிவில் பொதுவில் நிகழ்த்தப்படும். சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலைகள் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருவதோடு வாழ்க்கை நெறிகளையும் வகுத்துக் கூறும். இத்தன்மை வாய்ந்த கலைத் திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று வந்தேன். அதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.

கண்கவர் கலைத் திருவிழா

மதுரை அரசுக் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்" என்பதை மனத்தில் கொண்டு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர். "ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" என்ற சிலப்பதிகார அரங்கம் போல் இக்கலைத் திருவிழா அரங்கம் விளங்கிற்று. வண்ணவண்ணத் தோரணங்களும் வரவேற்புப் பதாகைகளும் சிவப்புக்கம்பள விரிப்பும் விசாலமான பார்வையாளர் அரங்கும் கண்களைக் கவர்ந்தன!

நிகழ்ச்சித் தொடக்கம்

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

நோக்கம் மற்றும் குறிக்கோள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த கலைத் திறன்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலைத் திருவிழா 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற குறிக்கோளில் நடத்தப்பட்டது.

பல்வேறு போட்டிகள்

வகுப்புகள் 1-2, 3-5, 6-8, 9-10, 11-12 என ஐந்து பிரிவுகளில் கவின்கலை, இசை, நாடகம், நடனம் என்னும் வகைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு செதுக்குச் சிற்பங்களிலும் வண்ண ஓவியங்களிலும் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை வெளிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறந்த சிற்பக் கலைஞர்களையும் ஓவியக் கலைஞர்களையும் அடையாளம் காண முடிந்தது.

கருவி இசையும் வாய்ப்பாட்டும்

கருவி இசைக்கென்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கருவி இசையில் தோற்கருவி, துளைக்கருவி, தந்திக்கருவிஎனப் பலவகை இசைக்கருவிகளை இசைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" என்று ஆண்டாள் பாடியது போன்று மாணவர்கள் பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், கிட்டார் ஆகியவற்றை இசைத்தனர்; பார்வையாளர்கள் மயங்கினர். மற்றொருபுறம் வாய்ப்பாட்டு இசையில் பங்கேற்ற மாணவர்கள் நாட்டுப்புறப் பாடல்களையும் செவ்வியல் இசைப் பாடல்களையும் பாடி அசத்தினர்.

நடனமும் நாடகமும்

தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம் என்னும் இரண்டு பிரிவுகளாக நடனப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பாடல்களுக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பலவகை நடனங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, நகைச்சுவை வழங்குதல், குழுநாடகம் என்னும் பிரிவுகளில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் பார்வையாளர்கள் மனத்தில் பதிந்தன. மாணவர்களின் நடனமும் நடிப்பும் தேர்ந்த திரைக் கலைஞர்களைப் போலவே இருந்தது. இக்கலைத் திருவிழாக் காட்சிகளையெல்லாம்,"அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறை விரித்தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்பது போல நாங்கள் நோக்கினோம்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்கள் முகத்திலே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டுச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்த்துரையுடன் கலைத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. ஆயினும், கலைத்திருவிழாக்காட்சிகள் என் கண்களைவிட்டு அகலவே இல்லை!

முடிவுரை

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் கலைத் திருவிழாவே குடிகொண்டிருந்தது. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாய்" மாணவர்கள் ஒவ்வொருவரும் கலைஞர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இக்கலைத் திருவிழா நிச்சயம் தூண்டுகோலாக அமையும் என உறுதியாக நம்பலாம்.