An Essay on a Visit to the Government Exhibition

An Essay on a Visit to the Government Exhibition

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

அரசுப்பொருட்காட்சி

முன்னுரை

கண்ணால் காண்பவை மனத்தில் ஆழமாகப் பதிந்து, நெடுங்காலம் நிலைத்திருக்கும். அதனால்தான், பள்ளிகளில் சில இடங்களைக் குறிப்பிட்டு சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வகையில் பொருட்காட்சிகள் கூட மக்கள் அறிவை வளர்க்க பெருந்துணை புரிகின்றன. நான் அண்மையில் என் நண்பர்களுடன் மதுரையில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அது குறித்துச் சில செய்திகளைக் கூறுகிறேன், கேளுங்கள்.

தமுக்கம் மைதானம்

தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மைதானமாக பதினான்காம் நூற்றாண்டில் மன்னர் விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு, மதுரை நாயக்கர் வம்சத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டு சண்டைகள் போன்ற விளையாட்டுகளும் சிலம்பு சண்டை, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பட்டன.

அரசுப் பொருட்காட்சி

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரைத் தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெறும். மாலை வேளையில் பல வண்ண விளக்குகளால் மைதானமே ஜொலிக்கும். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

பல்துறை அரங்குகள்

அரசு ஏற்பாடு செய்திருந்த பொருட்காட்சி ஆதலால், உள்ளே நுழைந்ததும் அரசு சார்புடைய காவல்துறை, சுற்றுலாத் துறை, பொதுப்பணித் துறை, அற நிலையத் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, விளம்பரத் துறை, போக்குவரத்துத் துறை, மின்துறை, அறிவியல் துறை எனப் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயம், கைத்தறி, மீன் வளர்ப்பு முதலான துறை சார்ந்த அரங்குகளும் இருந்தன. அவற்றில் நமக்குத் தேவையான விளக்கமளிக்கப் பொறுப்புடைய பலர் காத்திருந்தது சிறப்பாக இருந்தது. நான் பல வினாக்களை வினவி, என் ஐயங்களைப் போக்கிக் கொண்டேன்.

பல்வேறு கடைகள்

சிறுவர்களுக்கான பொம்மைகள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்கும் கடைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள் எனப் பல்வேறு கடைகள் அங்கே காணப்பட்டன.

கேளிக்கை அரங்குகள்

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டன. மீன் கண்காட்சிக் கூடம் கண்களைக் கவர்வதாக இருந்தது. பல்வேறு வகையான இராட்டினங்களில் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைவரும் சுற்றி மகிழ்ந்தனர்.

உணவு அரங்குகள்

குடும்பம் குடும்பமாக வந்திருந்த சிலர், அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு உணவு அரங்கங்களில் கூடிநின்று, பல்வேறு வகையான தின்பண்டங்களை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். அங்குக் குடிப்பதற்குப் பல்வேறு வகையான சாறுகள் வழங்கப்பட்டன. பனிக்கூழ் வகைகள் எல்லோரையும் கவர்ந்தன. 'ஆவின்' பால் நிறுவனம் அமைத்திருந்த அரங்கில் எண்ணற்ற மக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சுவையுடைய பண்டங்களை வாங்கிச் சுவைத்தனர்.

முடிவுரை

பொருட்காட்சி என்பது வெறும் பொருள்களை மட்டும் காண உதவவில்லை. அது பல்வேறு துறை அறிவையும் பெற உதவுவதாக அமைந்துள்ளது. எனவே, அடுத்த முறை நண்பர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினேன்.