Tamil Grammar: Auxiliary Verbs (Ilakkanam: Thunaivinaigal) - 9th Std

Tamil Grammar: Auxiliary Verbs (Ilakkanam: Thunaivinaigal) - 9th Std

இலக்கணம்: துணைவினைகள்

இயற்கை - உ

கற்கண்டு

துணைவினைகள்

துணைவினைகள் தலைப்பு

வினைவகைகள்

வினைச்சொற்களை அவற்றின் அமைப்பு, பொருள், சொற்தொடரில் அவை தொழிற்படும் விதம் முதலான அடிப்படை பலவகையாகப் பாகுபடுத்தலாம்.

தனிவினையும் கூட்டுவினையும்

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனிவினை, கூட்டுவினை என இருவகைப்படுத்தலாம்.

தனிவினை

படி படியுங்கள் படிக்கிறார்கள்.

மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். இவற்றில் படி என்னும் வினையடியும் சில ஓட்டுகளும் உள்ளன. படி என்னும் வினையடி , பகாப்பதம் ஆகும். அதை மேலும் பொருள் தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்க முடியாது. இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளை கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.

கூட்டுவினை

ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்.

மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன அவற்றின் வினையடிகள். அவை பகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில் கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.

கூட்டுவினைகள் உருவாகும் மூன்று வகைகள்:

  1. பெயர் + வினை = வினை
    • தந்தி + அடி = தந்தியடி
    • ஆணை + இடு = ஆணையிடு
    • கேள்வி + படு = கேள்விப்படு
  2. வினை + வினை = வினை
    • கண்டு + பிடி = கண்டுபிடி
    • சுட்டி + காட்டு = சுட்டிக்காட்டு
    • சொல்லி + கொடு = சொல்லிக்கொடு
  3. இடை + வினை = வினை
    • முன் + ஏறு = முன்னேறு
    • பின் + பற்று = பின்பற்று
    • கீழ் + இறங்கு = கீழிறங்கு

முதல்வினையும் துணைவினையும்

நான் படம் பார்த்தேன்.
கண்ணன் போவதைப் பார்த்தேன்.

இந்தச் சொற்றொடர்களில், பார் என்னும் வினை, கண்களால் பார்த்தல் என்னும் பொருளைத் தருகிறது. இது பார் என்னும் வினையின் அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள்(LEXICAL MEANING) எனலாம்.

ஓடப் பார்த்தேன்.
எழுதிப் பார்த்தாள்.

இந்தச் சொற்றொடர்களில் ஓடப்பார், எழுதிப்பார் என்பன கூட்டுவினைகள் ஆகும். இவற்றில் இரண்டு உறுப்புகள் உள்ளன. ஓட, எழுதி என்பன முதல் உறுப்புகள். இவை அந்தந்த வினைகளின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன. பார் என்பது இரண்டாவது உறுப்பு. இது இவ்வினையின் அடிப்படைப் பொருளான பார்த்தல் என்னும் பொருளைத் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது.

ஓடப் பார்த்தேன் - இதில் பார் என்பது முயன்றேன் என்னும் முயற்சிப் பொருளைத் தருகிறது.

எழுதிப் பார்த்தாள் - இதில் பார் என்பது சோதித்து அறிதல் என்னும் பொருளைத் தருகிறது.

ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை, முதல் வினை (MAIN VERB) எனப்படும். ஒரு கூட்டு வினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும்.

கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும். துணைவினை, வினையடி வடிவில் இருக்கும். துணைவினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும். தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.

பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு முதலானவை இருவகை வினைகளாகவும் செயல்படுகின்றன.

துணைவினைகளின் பண்புகள்

  1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
  2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.
  3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

தற்காலத் தமிழில் ஆம், ஆயிற்று, இடு, ஒழி, காட்டு, கூடும், கூடாது, கொடு, கொண்டிரு, கொள், செய், தள்ளு, தா, தொலை, படு, பார், பொறு, போ, வை, வந்து, விடு, வேண்டாம், முடியும், முடியாது, இயலும், இயலாது, வேண்டும், உள் போன்ற பல சொற்கள் துணைவினைகளாக வழங்குகின்றன.

துணைவினைகள் பட்டியல் மற்றும் எடுத்துக்காட்டுகள்

தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும். (எ.கா.) கீழே விழப் பார்த்தான். இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை; பார்த்தான் என்பது துணைவினை.

தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது. அதாவது, தமிழில் துணைவினையாக வரும் வேர்ச்சொல் சில தொடர்களில் முதல்வினையாகவும் வரும்.