9th Tamil Chapter 2 Guide | Uyirukku Ver Questions and Answers | Samacheer Kalvi

9 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 2: உயிருக்கு வேர் - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2: உயிருக்கு வேர்

கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் இரண்டு: உரைநடை உலகம் - நீரின்றி அமையாது உலகு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி

ஆ) ஆறு

இ) இலஞ்சி

ஈ) புலரி

விடை : ஈ) புலரி

2. பொருத்தமான விடையைத் தேர்க.

அ) நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்

ஆ) நீரின்று அமையாது யாக்கை - ஒளவையார்

இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

i) அ, இ, ஆ

ii) ஆ, இ, அ

iii) ஆ, அ , இ

iv) அ, ஆ, இ

விடை : iv) அ, ஆ, இ

குறுவினா

1. "கூவல்" என்று அழைக்கப்படுவது எது?

விடை : உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு கூவல் என்று பெயர்.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை :

ஆழிக் கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு

இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்

ஊருணி - மக்கள் பருகு நீர் உள்ள நீர்நிலை

கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு

பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

3. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

விடை : மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

சிறுவினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

விடை :

. ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்புகொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.

. அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

. 'குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.

. மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

2. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

விடை :

. குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

. சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.

. குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை.

நெடுவினா

1. நீரின்று அமையாது உலகு - என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக் காட்டுடன் விவரி.

விடை :

முன்னுரை :

'நீர்இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு'

ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. எத்தகைய சிறப்புகளை உடையவர்களுக்கும் நீர் இல்லையேல் ஒழுக்கங்கள் அமையா. எனவே மழையின்றி ஒழுக்கம் நிலை பெறாது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை உழவுக்கு உதவுகிறது :

மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன. “ நிலமும் மரமும் உயிர்களும் நோயின்றி வாழ வேண்டும் என்ற புலவர்களுள் ஒருவரான மாங்குடி மருதனார் கூறியதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்தின் நில அமைப்பு, மண்வளம், வடிவமைக்கப்பட்டிருந்தது, இதில் ஏரிகளும் குளங்களும் பாசனத்திற்கான எளிய வடிவங்களாகப் பயன்பட்டன.

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே:

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்”

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

உலகச் சுகாதார நிறுவனம், “உலகம் விரைவில் குடிநீருக்கான கடும் சிக்கலை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடரும் நிலையை மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டியது உடனடித் தேவையாகும். ஆண்டுதோறும், பெறுகின்ற மழைப்பொழிவை ஆக்கநிலையில் பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு :

உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நிறைவுரை :

உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே. அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்.

''துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை”

என்று கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

கற்பவை கற்றபின்

1. நீரின்று அமையாது உலகு, நீரின்று அமையாது யாக்கை இவ்விரண்டு தொடர்களையும் ஒப்புமைப்படுத்தி வகுப்பில் கலந்துரையாடுக.

விடை :

நீரின்று அமையாது உலகு

இஃது திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.

இஃது திருவள்ளுவர் கூறிய கூற்று.

மழையே பயிர்க்கூட்டமும், உயிர்க்கூட்டமும் மகிழ்ச்சியாக வாழப் பெருந்துணை புரிவதால் “நீரின்று அமையாது உலகம்” என்றார்.

நீரின்று அமையாது யாக்கை

இஃது புறநானூறில் இடம் பெற்றுள்ளது.

இஃது குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ் செழியனுக்குக் கூறியது.

உடல் உணவால் அமைவது உணவு நீர் இன்றி அமையாது - அதனால்தான் “நீரின்று அமையாது யாக்கை" என்றார்.

2. வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது? இதற்கான நீர் எங்கிருந்து வருகிறது? இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தண்ணீர் போதுமானதாக இருக்கும்? என்பவற்றுக்கான தகவல்களைத் திரட்டி ஒப்புடைவு உருவாக்குக.

விடை :

• நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கு ஆதாரமாக இருப்பது நிலத்தடி நீர், அணைகளில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், கிணற்றுநீர் ஆகியவை ஆகும். ஆழ்குழாயில் வரும் நீரின் வேகத்தைப் பொறுத்து அஃது எவ்வளவு நாள் வரும் என கணக்கிடப்படும்.

• அணைகளின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்று கூறுவர். அணைகளில் வெளியேறும் நீர்வரத்து நீரை அடிப்படையாகக் கொண்டும், வானிலை அறிக்கை தெரிவிக்கும் மழையின் போக்கைக் கொண்டும், ஒரு மாதத்திற்கு போதுமானது..... எத்தனை நாட்களுக்கு பிரச்சனையின்றி நீர் வழங்கலாம் போன்றவை முடிவு செய்யப்படும்.

• அதன் அடிப்படையில் மக்களின் குடிநீர், பயன்படுத்தும் நீரின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

இயல் இரண்டு: கவிதைப் பேழை - பட்டமரம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ‘மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வசை

விடை : அ) கீழே

சிறுவினா

1. பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?

விடை :

கவிஞர் தமிழ் ஒளியின் கருத்துகள்:

"தினந்தோறும் மொட்டைக்கிளையோடு நின்று பெருமூச்சு விடும் மரமே!

நம்மை வெட்டும் நாள் ஒன்றுவரும் என்று துன்பப்பட்டாயோ?

நிழலில் அமர. வாசனை தரும் மலர்களையும் இலைகளையும் கூரையாக விரித்த மரமே!

வெம்பிக் கருகிட இந்த நிறம் வர வாடிக் குமைந்தனவோ?

கொடுந்துயர் உற்று கட்டை என்னும் பெயர் பெற்று கொடுந்துயர் பட்டுக் கருகினையோ?

உன் உடையாகிய பட்டை இற்றுப்போய்க் கிழிந்து உன் அழகு முழுதும் இழந்தனையோ?

சீறிவரும் காலப் புயலில் எதிர்க்கக் கலங்கும் ஒரு மனிதன் ஓலமிட்டுக் கரம் நீட்டியதுபோல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய்”.

கற்பவை கற்றபின்

1. விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும் பேசுக.

விடை :

ஏழை விவசாயி : எங்க அப்பா காலத்திலிருந்து நெல் கரும்பு போட்டோம். அப்ப வந்தது. இப்ப... வெண்டை , புடலை கூட வரமாட்டேங்குது.

அழகு (மனை விற்பனையாளர்) : என்ன போட்டு என்ன ஆச்சு? மழையில்லானா என்ன பண்ண முடியும்?

ஏழை விவசாயி : அழகு..... பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்ல, கிணத்துல தண்ணியில்லே!

அழகு : நான் சொல்ற வழிக்கு வரமாட்டங்கிற... வித்து பணத்த பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்கு.

ஏழை விவசாயி : பூமித்தாய விக்கச் சொல்ற... வித்தா அப்பார்ட் மெண்ட் கட்றங்கிறீங்க.. என்ன ஆகப் போதுன்னு எனக்குத் தெரியல!

அழகு : மழையில்ல தண்ணியில் வீடு கட்டி நூறு ஜனங்க பொழக்கட்டுமே! வயல் வரப்ப வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க? வித்தா மகளுக்கு கல்யாணம்; மகனைப் படிக்க வைக்க..... எல்லாம் உன் நன்மைக்கே சொல்றேன்.

ஏழை விவசாயி : பால் தர்ற பசுமாட்ட மடி அறுத்துப் பால் குடிக்கிறதா? விளை நிலத்தைப் பூரா விலை நிலமா ஆக்கிட்டீங்க அழகு.

அழகு : இனி வரப்போற நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?

ஏழை விவசாயி : உங்க மாதிரி ஆளுகளால் தான் கொசு தொந்தரவு நிறைய ஆகிருச்சு. குளங்குட்டையெல்லா பிரிச்சுப் போட்டு வித்தாச்சு தவளை இருந்தா கொசுவப் பிடிக்கும் இப்ப அதுக்கும் வழியில்ல

அழகு : ஒன்னும் வேணாங்க உங்க புள்ளங்க இந்தக் குடிசையில் இருக்குமா? கேட்டுச் சொல்லுங்க........

ஏழை விவசாயி : உனக்குப் பணம் முக்கியம் எனக்குப் பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுறவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுறவன் பணக்காரனாகிறான்.

2. பட்டமரம், புதிதாக முளைவிட்ட குருத்து ஆகிய இரண்டும் பேசிக்கொள்வதாய்க் கற்பனை உரையாடல் நிகழ்த்துக.

விடை :

பட்டமரம் : பேரனே! நலமா? தேடாதே! நான் தான் உன் தாத்தா பட்டமரம்.

குருத்து : ஐயோ, நீங்களா இப்படி ஆகிவிட்டீர்கள்.

பட்டமரம் : ஆமாம் பேராண்டி மனிதர்கள் செயற்கை உரம் , நெகிழியைப் பயன்படுத்தி என்னை இப்படி ஆக்கிவிட்டார்கள். நம்ம வம்சமே பட்டுப்போய் விட்டது. உன்னை மட்டும் காப்பாற்ற முடிந்தது. நீ எப்படியோ பிழைத்துக் கொள்.

குருத்து : தாத்தா கவலைப்படாதீர்கள் நம் வம்சத்தைக் காப்பாற்ற மனிதர்களிடம் புரிய வைக்கிறேன்.

பட்டமரம் : சரிப்பா நான் ஓய்வெடுக்கிறேன் . மனிதர்களுக்கு நன்கு புரியவை.

குருத்து : இதோ செல்கிறேன் தாத்தா.

3. பட்டணத்துப் பறவைகளும் ஊர்ப் பறவைகளும் என்ற தலைப்பில் பறவைகள் கூறுவன போலச் சிறு சிறு கவிதைகள் படைக்க.

விடை :

பட்டணத்துக் காக்கை

ஊரைத் தூய்மை செய்கின்றோம்

உறவைக் கூட்டிப் பகிர்கின்றோம்

கரைந்து தாகம் எடுக்கிறதே!

விரைந்து நீரை வைப்பீரே!

கிராமத்துக் கிளி

தத்திப் பறக்கும் உறவுகளே

கொத்தித் தின்ன வாருங்கள்

பழுத்துத் தொங்கும் பழக்கூட்டம்

கழுத்து வரைக்கும் உண்பீரே!

பட்டணத்துச் சிட்டுக் குருவி

சிட்டுக் குருவிகளின் தினம் கொண்டாடும்

மனிதர்களே!

எங்களை எப்போது போற்றிக் காத்துக் கொள்வீர்கள்

நீங்கள் வைத்திருக்கும் அலைபேசிக் கோபுரம்

எங்கள் பரம்பரையை அழித்து ஒழிக்கும் ஆபரணம்!

கிராமத்துக் குயில்

பூஞ்சோலைகளும் மாஞ்சோலைகளும்

பூத்துக்குலுங்கும் மரங்களும்

நிரம்பியிருக்கும் என நினைத்து

தனிமையில் கூவினேன்.

என்னை விட சோகமாக இருந்தது.......

அந்தக் கிராமம்!

இயல் இரண்டு: கவிதைப் பேழை - பெரியபுராணம்

பாடநூல் வினாக்கள்

குறுவினா

1. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

விடை : பெரியபுராணத்தில் அழகாக திருநாட்டின் சிறப்பு வருணிக்கப்படுகிறது. அந்நாட்டின் நீர் நிலைகள் அன்னங்கள் விளையாடும் அகலமான படித்துறைகளைக் கொண்டன. அதில் எருமைகள் வீழ்ந்து முழ்கும். அதனால் நீர் நிலைகளிலுள்ள வாளைமீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்குமரங்களின் மீது பாயும். இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

நெடுவினா

1. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

விடை :

முன்னுரை : சைவ சமயப் பெரியவர்களான சுந்தரரும் நம்பியாண்டார் நம்பியும் பாடிய சைவ அடியார்களின் வரலாற்றுக் குறிப்புகளின் விரிவான நூலே பெரிய புராணம் ஆகும். இதைப் பாடியவர் சேக்கிழார். ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியவராக அறுபத்து மூவர்சிறப்புகளைப் பாடியிருக்கிறார் “பக்திச்சுவை நுனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று இவரை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டுவார். திருநாட்டுச் சிறப்பை இயற்கை வளத்துடன் விளக்கியிருக்கிறார் சேக்கிழார். அதை உற்று நோக்குவோம்.

காவிரிக் கால்வாய்கள் : காவிரி நீர் மலையிலிருந்து தேன் நிரம்பிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அதை வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளம் தரும் பொருட்டுக் காவிரிநீர் கால்வாய்களில் எங்கும் பரந்து ஓடுகிறது.

உழத்தியரின் கால்களை இடறும் சங்குகள் : நாற்றுகள் செழித்து வளர்ந்து செடிகள் ஆயின. முதல் இலை சுருள் விழுந்ததால் களை பறிக்கும் பருவம் வந்தது. களைகளைந்து செல்லும் உழத்தியர்களின் நூல்களில் முத்துக்களை ஈனும் சங்குகள் இடறின. அதனால் இடைதளர்ந்து வண்டுகள் மொய்க்கும் மலர்களையுடைய கூந்தல் அசையுமாறு வரப்பினைச் சென்று அடைந்தனர்.

சோழநாட்டுச் சிறப்பு : காடுகளில் கரும்புகளும் சோலைகள் எங்கும் மலர் அரும்புகளும் உள்ளன. வயலின் ஓரங்களில் கரியகுவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வயல்களில் சங்குகள் கிடக்கின்றன. நீர்நிலைகளில் அன்னங்கள் உலவுகின்றன. குளங்கள் நிறைந்து கடலைப் போல் காட்சியளிக்கின்றன. நாடு முழுவதும் நீர் நாடு என்று சொல்லத்தக்க அளவில் வளமுடையது திருநாடு.

வாளை மீனும் வானவில்லும் : அன்னங்கள் நீந்தி விளையாடும் நீர்நிலைகளில் எருமைகள் விழுந்து மூழ்கின. அதனால் அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகிலுள்ள பாக்கு மரங்களின் மீது தாவிப் பாயும். இக்காட்சி வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றதாகும். அரிந்த செந்நெல்லின் சூடுகளைப் (நெற்கற்றை) பெரிய போராகக் குவிப்பர். பிடித்த மீன்களையும் குன்றைப் போல் குவித்து வைப்பர். பக்கத்திலேயே தேன் வழியும் மலர்த் தொகுதியை மலைபோல் குவித்து வைப்பர்.

மேகங்கள் தவழும் பொன்மலை : மேலேயிருந்து நெற்கற்றைகளைச் சாயச் செய்து எருமைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் ஏற்றுவர் வலமாக சுற்றிச் சுற்றி மிதக்கும் இத்தோற்றமானது கரிய மேகங்கள் பொன்மலையின் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல் உள்ளது.

மரங்கள் அணிவகுப்பு : நீர்வளம் நிரம்பிய அந்நாட்டின் தென்னை , செருந்தி, நரந்தம் ஒரு பக்கம், அரசமரம், கடம்பமரம், பச்சிலைமரம், குராமரம் வேறு ஒரு பக்கம், பெரிய அடிப்பாகம் உடைய பனை, சந்தனம், நாகம் வஞ்சி, காஞ்சி, கோங்கு முதலிய மரங்கள் அடர்ந்து செழிந்து வளர்ந்துள்ளன. நீர்வளமும், நிலவளமுடைய திருநாடு காவிரிநீர் பாய்வதால் இயற்கைச் சூழல் நிறைந்த நாடாக விளங்குகிறது.

கற்பவை கற்றபின்

1. மூச்சு விடும் மரம், புரட்டிப் போட்ட புயல், இசை பாடும் பறவைகள், பனித்துளியில் தெரியும் பனை, என் இனிய கனவு போன்ற தலைப்புகளில் பள்ளி இலக்கிய மன்றத்தில் கவிதை படிக்க.

விடை :

பள்ளி இலக்கிய மன்றத்தில் கவிதை படித்தல்

மூச்சு விடும் மரம்

கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் எனக்கே மூச்சுத் திணறல்......... சுற்றுச்சூழலை சமனிலைப்படுத்தும் எனக்கே திணறினால் மக்கள்... ஐயோ ...... விழித்துக் கொள்ளுங்கள் மானிடரே....!

புரட்டிப் போட்ட புயல்

அட்லாண்டிக் கடலின் மிகப் பெரும் சூறாவளி 'வில்மா' அமெரிக்கப் புயல் கத்ரினா நியூ ஆர்லியன்சைப் புரட்டிப் போட்ட 'ரீடா', 'ஆல்பா' தமிழகத்தை கலக்கிய கஜா புயலின் சீற்றம் கனமழை ........ இயற்கையைச் சீண்டாதீர்கள்! அது திருப்பி அடித்தால் தாங்க முடியாது ஒருசெடியாவது நடுங்கள்!!

இசைபாடும் பறவைகள்

பழமுதிர்ச் சோலை, பசுமை நிறைந்த மரங்கள், மரங்கள் தோறும் பறவைகள், பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்!! பேசும் பறவைகள் பாடும் ராகங்கள் பறவைகளின் மொழிகளை மொழிபெயர்க்க முடியுமா?

பனித் துளியில் தெரியும் பனை

தமிழனின் அறிவியல் சிந்தனை கலிலியோ சிந்தனையுடன் கலந்து போகிறது. கபிலரும் கலிலியோவும் இணைந்தனர். ஒளியைக் கோட்டமடையச் செய்து தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அண்மையில் காட்டலாம் என்றார் கலிலி. தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் என்றார் கபிலர்.

என் இனிய கனவு

அன்றிரவு ஆழ்ந்த நித்திரையில் விரிந்த கனவுகள் போதுமான மழை அகன்ற ஆறு குளங்களில் நீர் வரத்து எங்குப் பார்த்தாலும் வானத்தைத் தவிர அனைத்தும் பச்சை பூமியைக் கழுவிவிட்டது போல் பளிச் சென்ற பார்வை எல்லோரும் இன்புற்றிருக்க கனவு ஒன்று கண்டேன்.

2. கவிதையின் விவரிப்பை உரைநடையில் எழுதுக.

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்

கானலின் நீரோ? - வெறுங்காட்சிப் பிழைதானோ?

போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே

போனதனால் நானும் ஓர் கனவோ? - இந்த

ஞாலமும் பொய்தானோ? - பாரதியார்

விடை :

பாடல் கருத்து: வானகமே, வானில் தோன்றும் சூரியன் வெளிப்படுத்தும் இளவெளிலே, மரக்கூட்டங்களே, நீங்கள் கானல் நீர் அல்ல ....... கடவுளின் படைப்புகள். நீங்கள் வெறும் காட்சிப் பிழைகள் இல்லை . உண்மை வடிவம். ஆனால் வாழ்வின் கனவுகள் கனவைப் போலவே ........ அழிந்து போனதால் நானும் அழிந்துபோகும் கனவா ....... இந்த நிலவுலகமும் பொய்யாகுமோ?

இயல் இரண்டு: கவிதைப் பேழை - புறநானூறு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை ஆ) பூவரசுமரம் இ) வளம் ஈ) பெரிய

விடை : இ) வளம்

குறுவினா

1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்பு தருக.

விடை : நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். இதைக் குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புறநானூற்றுப் பாடலில் இதைத் தெரிவிக்கிறார்.

சிறுவினா

1. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

விடை : நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

கற்பவை கற்றபின்

1. பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று அறிந்து எழுதுக.

விடை :

அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் - 18)

பாடியவர் : குடபுலவியனார்

பாடப்பட்ட அரசன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : முதுமொழிக்காஞ்சி

பொருள் : உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர்.

ஆ) உண்பது நாழி, உடுப்பது இரண்டே ! (புறம் - 189)

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக்காஞ்சி

பொருள் : உண்ணப்படும் பொருள் நாழி (உழக்கு) அளவாகும். உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும் இடையிலே ஒன்றுமாக இரண்டேயாகும்.

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் - 192)

பாடியவர் : கனியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் : எங்களுக்கு எல்லா ஊர்களும் எம்ஊர்களாகும். எல்லாரும் உறவினர்களே ஆவர்.

ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! (புறம் - 312) நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

பாடியவர் : பொன் முடியார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை

பொருள் : பெற்ற வளர்த்த மகனை நற்பண்புகள் நிறைந்தவனாக ஆக்குவது தந்தையின் கடமை. நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமை.

உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், (புறம் - 183) பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

பாடியவர் : பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் : ஒருவன் தன் ஆசிரியர்க்குத் துன்பம் நேர்ந்த விடத்து அவர்க்கு உதவி செய்தும், மிக்க பொருளைத் தந்தும் அவர்க்கு வழிபாடு செய்யும் தன்மையை வெறுக்காமலும் கற்பது நலம்.

2. “உணவாகும் மழை” என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.

விடை :

Rain and forest

மழையால் காடுகள் மற்றும் மலைப்பகுதிகள் செழிக்கின்றன. காய்கள், கனிகள் அவற்றால் பெருகுகின்றன.

Greens and pulses

ஊட்டச்சத்து மிக்க கீரைகள், பயிறு மற்றும் பருப்பு வகைகள் மழையால் நன்கு வளர்ந்து, நீண்ட நாள் நலத்துடன் வாழ நல்லுணவைத் தருகின்றன.

Healthy food

நோயற்ற வாழ்வு வாழ அறுசுவை உணவு அவசியம். அதனை அளிப்பது மழையே!

இயல் இரண்டு: விரிவானம் - தண்ணீர்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1. 'தண்ணீர்' கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

தண்ணீர் - கந்தர்வன்

முன்னுரை : “நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். "சாசனம்", "ஒவ்வொரு கல்லாய் '', "கொம்பன் " முதலிய வரிசையில் "தண்ணீர்" சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை : தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அவ்ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப்பகை, புயல் வந்தால் 3 நாட்கள் வெள்ளக்காடாய் இருக்கும் நான்காவது நாள் தண்ணீரற்ற நிலமாய் மாறி விடும். பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே 'தண்ணீர்' கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் செல்வர். ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து இரயில் பெட்டிக்குள் ஏறினர்.

இந்திராவின் கனவு : அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள். இந்திரா தண்ணீர் பிடித்தல் :

பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள், சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா என்று சலித்துக் கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை .

இன்ஜினின் ஊதல் ஒலி வந்தது அம்மா, சொட்டுத் தண்ணியில்லை என்று முனகியதே ஞாபகம் வந்தது. இன்னும் பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே : சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்த இந்திராவின் தந்தையிடம் இந்திரா வரவில்லை இரயில் போயிருச்சு என்று சொல்லப்பட்டது.

எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை. குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் : “எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோ” என அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள்.

தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! தந்தை கேட்டார். பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த. இந்திரா சொன்னாள் பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய.

கதை உணர்த்தும் கருப்பொருள் : இச்சிறுகதை "நீரின்றி அமையாது உலகு" என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21-ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் 'கந்தர்வன்’ எழுதியுள்ளார். சிற்றூரின் தேவைகள் இன்றளவும் நிறைவு செய்யப்படுவதில்லை.”

முடிவுரை : “உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம், “நீர் மேலாண்மையை கட்டமைப்போம் மழைநீர் சேகரிப்போம்”.

"கடைசி மரம் வெட்டப்படும் போதும் கடைசிச் சொட்டு தண்ணீர் காலியாகும் போது தான் தெரியும் இந்த மனித சமூகத்திற்குப் பணத்தைத் திங்கமுடியாது என்று'

கற்பவை கற்றபின்

1. உலகில் நீர் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கற்பனை செய்து உங்கள் கருத்துகளை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

கற்பனைக் கதை

முன்னுரை: 'நீர் இன்று அமையாது உலகு' என்று அறுதியிட்டுக் கூறினார் திருவள்ளுவர். நம்முன்னோரின் வாழ்க்கைக் களஞ்சியமாம் இலக்கியங்களும் இதையே வலியுறுத்தி வந்தன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நீர் இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இங்கு சிந்திக்கலாம்.

உலகிலும் உடலிலும் மூன்று பகுதிநீர் உள்ளது. ஆனால் வாழும் மக்களுக்குப் போதியளவு நீர் கிடைக்காமல் போராடும் நிலையுள்ளது. மழையே உணவாகும் உணவுப்பொருட்களை விளைவித்துத் தருவதற்கும் பயன்படுகிறது என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஒரு கிலோ அரிசி பெற 2700 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகள் பயன்பாடுகள் பெருகப் பெருக வானம் வறண்டு கொண்டே இருக்கிறது. பருவ மழை பெய்யாமல் பொய்த்துப் போகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலத்தடி நீர் வற்றிக் கொண்டு இருக்கிறது.

தண்ணீர் விற்பனைக்கே : "தாகத்திற்குத் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை வந்தபோதே தண்ணீர் மக்களின் தேவைக்கல்ல” என்ற நிலை வந்துவிட்டது, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய பிற மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. நாடுகளை நதிகள் இணைக்கின்றன. ஆனால் தண்ணீரால் மாநிலங்களை இணைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.

தண்ணீர்ப் போர் : உலகின் பெரும்பாலான மோதல்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் நிகழ்கின்றன. "இனி அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்" என்றாகிவிட்டது. இயற்கையின் பாதகமான சூழ்நிலை மட்டும் இதற்குக் காரணமல்ல. நீர் மேலாண்மையில் நாம் செய்துள்ள பெருந்தவறுகளே இன்றைய நீர் நெருக்கடிக்குக் காரணம் என்று ஐ.நா வின் வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஆழ்குழாய்க் கிணறுகளின் சாதனை நிலத்தடி நீர் ஆதாரங்களை அழித்துவிட்டது.

நிறைவுரை : நீர் மேலாண்மையில் நீ புதிய முன் முயற்சிகளின் வாயிலாகவே நீர் நெருக்கடிக்குத் தீர்வுகளைக் கண்டறிய முடியும். நிர் ஆதாரங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். இது பொது நியதி.

2. பீங் ... பீங் .... என்ற சத்தத்துடன் தண்ணீர் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அம்மா குடங்களுடன் ஓடிச்சென்று வரிசையில் நின்றாள். அப்போது கருமேகங்கள் திரண்டன... கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.

தண்ணீர் வாகனம் தூசியைக் கிளப்பிக் கொண்டு வேகமாக வந்து நின்றது. கண்ணம்மா, கையில் ரெண்டும் கக்கத்தில் ரெண்டும் கொண்டு வந்து வரிசையில் போட்டாங்க. தெருவில் உள்ள வயசுப் பொண்ணிலிருந்து பாட்டிவரையிலும் வந்தாச்சு.

வானம் மேகம் மூட்டத்துடன் கருத்து நின்றது. ஈரக் காற்றுடன் புயல் அடிப்பதுபோல சுழன்று அடித்தது. வாகனத் தண்ணியும் மழைத்தண்ணியும் சேர்த்துப் பிடித்தார்கள். சூரப்பட்டி இதுவரையிலும் இப்படிப்பட்ட மழையைக் கண்டதில்லை. காற்று நின்றதனால் பேய்மழையாகப் பெய்தது.

எல்லோரும் காளியம்மன் கோவிலுக்கள் நின்று பேசிய பேச்செல்லாம் சத்தியம் செய்தது போல இருந்தது. "ஆற்றில் மணல் அள்ளியதால் எவ்வளவு மழைபெய்தாலும் தண்ணீ தேங்குவதில்லை” இது ஆப்பக்கடை அன்னம் ஊருக்கு வர்ற வழியிலே இருந்த மரங்களை எல்லாம் ரோட்டுக்காக வெட்டியாச்சு.

மணியகாரர் கருப்பணன் ஆற்றுப்படுகையில் என்னென்னமோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் .......... என்ன சனியனோ ஊரத் தொடச்சிட்டாங்க.

அரசு மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி மாலதி மரங்களை நிறைய நடணும். என்ன மரங்கன்னு கேளுங்க... பூவரசு , மகிழம், ஆலம், அரசு, மாமரம், வேம்பு இது பூரா பூமியின் வெப்பத்தைப் பெரிதும் குறைக்குமாம். எங்க சயின்ஸ் டீச்சர் சொன்னாங்க.....

இந்த மரம் நடுற நல்ல காரியத்தை உடனடியா தொடங்குங்க பூஜை போட்டுறலாம்.

இயல் இரண்டு: கற்கண்டு - துணைவினைகள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருத்தமான விடையை எடுத்து எழுதுக. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ......... அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் .....

அ) வந்தான், வருகிறான்

ஆ) வந்துவிட்டான், வரவில்லை

இ) வந்தான், வருவான்

ஈ) வருவான், வரமாட்டான்

விடை : ஆ) வந்துவிட்டான், வரவில்லை

கற்பவை கற்றபின்

1. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) வேறுபடுத்துவது மொழியாகும்.

ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) பெற்றிருக்கின்றன.

இ) காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்.

ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) தேடிக் கொண்டிருக்கிறேன்.

2. கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.

அ) வேண்டும் - ஆசிரியர் கூறும் அறிவுரையைக் கேட்க வேண்டும்.

ஆ) பார் - தந்தை சொன்னது சரியா தவறா எண்ணிப்பார்.

இ) உள் - மனதில் உள்ளதைச் சொல்க.

ஈ) வா - நேரில் வா பேசிக்கொள்வோம்.

உ) விடு - தீய பழக்கங்களை விட்டு விடு.

3. பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணை வினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணை வினைகளை இட்டு எழுதுக.
(மார்னிங் எழுந்து, பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்.)

Diagram showing conversion of words

. காலையில் எழுந்துவிட்டாள்.

. பல் துலக்கி முடித்தாள்.

. சீருடை அணிந்து கொண்டாள்.

. பள்ளிக்குப் புறப்பட்டும் போனாள்.

4. சிந்தனை வினா

அ) வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளின் பங்கு குறித்துச் சிந்தித்து எழுதுக.

விடை:

ஆ) சந்தையில் காய்கறிகளை வாங்கும்போது உங்களுக்கும் கடைக்காரருக்கும் நடக்கும் உரையாடலைத் துணைவினைகளைப் பயன்படுத்தி எழுதுக.

கடைக்காரர் : வாங்க ..... நாலுநாளா வரல.

நான் : திருச்சி போயிருந்தேன்.

கடைக்காரர் : போனவாரம் அம்மா வந்திருந்தாங்க.

நான் : வெங்காயம் என்ன விலை?

கடைக்காரர் : 50 ரூபா.

நான் : வேணாம். நேற்று சந்தைக்குப் போய் 5 கிலோ வாங்கிப் போட்டேன். அடுத்த வாரம் வாங்கிக்கிறேன்.

கடைக்காரர் : நீங்க 280 ரூபாய்க்கு வாங்கியிருக்கீங்க. (பணம் பெற்றுக் கொண்டவுடன்)

(2000 ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்டு)

நான் : பக்கத்துக் கடையிலே வாங்கிக் கொடுங்க.

கடைக்காரர் : இருங்க, வாங்கி வரச்சொல்கிறேன்.

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க

பூ மொழி

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்

கூடத்துச் சன்னலையும்

சமையலறைச் சன்னலையும்

விரிந்த கிளைகளால்

பார்த்துக் கொண்டிருக்கிறது.

கைகளசைத்துக் கால்களுதைத்துக்

கூடத்தில் கிடக்கும் சிசு

மிழற்றுகிறது ஒரு சொல்லை

சமையலறையில்

பணி முனைந்திருக்கிற அம்மா

அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்

பதில் அனுப்புகிறாள்

விரல் நீட்டிச் சிசு பேசுகிறது மீண்டும்

அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள்

கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்

கூடத்துச் சன்னலுக்கும்

சமையலறைச் சன்னலுக்குமாய்க்

கிளைகளின் வழியே ஓடி ஓடிக்

கவனிக்கிறது அணில்.

பெருகும் சொற்களும்

அபூர்வ எதிர்வினைகளும்

அதீதக் குழப்பத்திலாழ்த்த

அணில் ஓடிக் களைக்கிறது சன்னல்களுக்கிடையே

அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து

அதன்மீது உதிர்த்திக்கொண்டிருப்பது தெரியாமல்.

- யூமா வாசுகி

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.

  1. Every flower is a Soul blossoming in nature - Gerard De Nerval

    விடை :

    மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.

    பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

  2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

    விடை :

    மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

    பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.

  3. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau

    விடை :

    மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

    பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.

  4. Just living is not enough .... one must have sunshine, freedom and a little flower - Hans Christian Anderson

    விடை :

    மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

    பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.

பிழை நீக்கி எழுதுக

  1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

    விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

  2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

    விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

  3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன:

    விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

  4. நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

    விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

  5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

    விடை : சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

  1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

    விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.

  2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

    விடை : நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.

  3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

    விடை : அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.

  4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

    விடை : தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன்.

வடிவ மாற்றம் செய்க.

நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க.

நீர்ச்சுழற்சி விளக்கப்படம்

நீர்ச்சுழற்சி

மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழை பொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும் ....... இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

வரவேற்பு மடல் எழுதுக

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

வரவேற்பு மடல்

இடம்: அரசு மேனிலைப் பள்ளி, கொட்டாம்பட்டி.

நாள்: திருவள்ளுவர் ஆண்டு ஹேவிளம்பி வைகாசி 22 ஆம் நாள் : 05.06.2018 - செவ்வாய்க்கிழமை

நேரம்: பிற்பகல் 3.00 மணி

சுற்றுச்சூழலைப்பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற கொட்டாம்பட்டி அரசு மேனிலைப் பள்ளியைப் பாராட்டும் விழாவிற்கு வருகை தரும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

பள்ளியை வழி நடத்தி நிர்வாக மேலாண்மை செய்ததோடு பள்ளிக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைப் பராமரித்துப் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வழிகாட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவரையும் பள்ளிக்குழு மாணவர் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன். இன்று சூன் திங்கள் 5 ஆம் நாள் சுற்றுச் சூழல் தினம். இவற்றிற்கெல்லாம் மேலாக மாவட்டத்திலேயே நம் பள்ளி கிடைத்தற்கரிய விருதினைப் பெற்ற நாளாகும்.

நம் மாவட்டக் கல்வி அலுவலர் மூன்றாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார். இவ் அரசுப்பள்ளி அகன்ற வளாகம் : குடிநீரும் கிடைக்கிறது. நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. இருக்கின்ற மரங்களுக்கு தண்ணீர் விட்டுப் பசுமை ஆக்குங்கள் பலன் கிடைக்கும் என்றீர்கள்! உங்கள் வாக்கு நிறைவேறியது. எங்கள் கனவு நிகழ்ந்தேறியது. இந்நேரத்தில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பொருள் உதவி செய்தளித்த பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி.

எங்கள் பள்ளி வேளாண்மைப் பிரிவு மாணவர்களின் உதவியும் மாணவர்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது. மாவட்டக் கல்வி அலுவலர்களின் அரசு நிதியுதவி கிடைத்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி!

இவண்,

க. அன்பரசன்,

பள்ளிக்குழு மாணவர் தலைவர்,

அரசு மேனிலைப் பள்ளி, கொட்டாம்பட்டி.

நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். - கவிமணி

இலக்கிய நயம் பாராட்டுதல்

ஆசிரியர் குறிப்பு : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

திரண்ட கருத்து : இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன் . ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மையக்கருத்து : ஆறு மலை உச்சிகளில் இருந்து புறப்பட்டு ஓடைகளில் பொங்கிட ஓடிவந்தேன் என்று ஆற்றின் வரலாற்றை வரிசையாகப் புலப்படுத்துகிறார்.

எதுகை நயம் : சீர்தோறும் அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும். எதுகை நயத்தை இனிமையாகப் பாடுகிறார் கவிமணி. சான்று :

கல்லும் ... எல்லை

ஏறாத ........ ஊறாத

மோனை நயம் : சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :

ஏறாத - ஏறி

ஊறாத - ஊற்றிலும் உட்புகுந்தேன்

ஓடைகள் - ஓடி வந்தேன்.

சொல் நயம் : ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்

குதித்து வந்தேன்

கடந்து வந்தேன்

தவழ்ந்து வந்தேன்

ஏறி வந்தேன்

நிரப்பி வந்தேன்

உட்புகுந்தேன்

ஓடி வந்தேன்.

ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது.

இயைபு : இச்செய்யுளின் ஈற்றடிகளில் 'தேன் தேன்' என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

நிறைவுரை : கரைபுரண்டு ஓடிவரும் ஆற்றின் வெள்ளப் பெருக்கை அழகிய கவியுள்ளத்தோடு நம் கண் முன்னே விரியச் செய்துவிடுகிறார், கவிமணி.

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக

எ.கா : ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை / ஓரம்

அ) கடையெழுவள்ளல்கள் - கடை / எழு / வள்ளல்

ஆ) எடுப்பார் கைப்பிள்ளை - எடுப்பார் / கை / பிள்ளை

இ) தமிழ்விடு தூது - தமிழ் / விடு / தூது

ஈ) பாய்மரக்கப்பல் - பாய் / மரம் / கப்பல்

உ) எட்டுக்கால்பூச்சி - எட்டு / கால் / பூச்சி

அகராதியில் காண்க

கந்தி - கந்தகம், கழுகு, தவப்பெண், வாசம்
நெடில் - நெட்டெழுத்து, மூங்கில்
பாலி - அணை, ஆலமரம், எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கறை
மகி - பூமி, பசு
கம்புள் - கம்பங்கோழி, சங்கு, வானம்பாடி
கைச்சாத்து - கையெழுத்து, பொருள்பட்டி

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

எ.கா : அரிசி போடுகிறேன்.

புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

  1. மழை பெய்தது.

    மாலையில் மழை பெய்தது.

    நேற்றுக் மாலையில் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.

  2. வானவில்லைப் பார்த்தேன்.

    மாலையில் வானவில்லைப் பார்த்தேன் .

    மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.

    நான் மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.

    நான் மாலையில் மழை பெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

    நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

    நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

  3. குழந்தை சிரித்தது.

    தொட்டிலில் குழந்தை சிரித்தது.

    தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.

    அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.

    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.

    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.

    அழுத குழந்தை தொட்டிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

  4. எறும்புகள் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகப் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன.

    சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.

    அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

  5. படம் வரைந்தான்.

    படம் வரைந்தான்.

    அவன் அழகாக வரைந்தான்.

    விலங்குகளின் படங்களை வரைந்தான்.

    இயற்கையைப் படம் வரைந்தான்.

    இயற்கை மரங்களைப் படமாக வரைந்தான்.

    பறக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.

வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள் - பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

வினையெச்சம் உதாரணம்

1. எழுதிப் பார்த்தேன்

2. தடுக்கப் பார்த்தேன்

3. கொடுத்துப் பார்த்தேன்

4. ஓடப் பார்த்தேன்

வினையெச்சம் உதாரணம்

1. எழுதிக் கொடுத்தார்

2. படிக்கக் கொடுத்தார்

3. வாங்கிக் கொடுத்தார்

4. பார்த்துக் கொடுத்தார்

வினையெச்சம் உதாரணம்

1. பார்த்து நடந்தான்

2. கேட்டு நடந்தான்

3. வாங்கி நடந்தான்

4. சிரித்து நடந்தான்

வினையெச்சம் உதாரணம்

1. வந்து சேர்ந்தார்

2. போய்ச் சேர்ந்தார்

3. நடந்து சேர்ந்தார்

4. ஓய்ந்து சேர்ந்தார்

வினையெச்சம் உதாரணம்

1. பார்த்து அமைத்தோம்

2. கண்டு அமைத்தோம்

3. கேட்டு அமைத்தோம்

4. சேர்த்து அமைத்தோம்

வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.

வினையடி - வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

எ.கா : வினையடி – வை

வினையடி உதாரணம்

விடை

வினையடி அட்டவணை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

எறும்புகள் காட்சி

மூவறிவுடைய எறும்பே

ஆறு அறிவுடையவனுக்கு

அறிவு புகட்டுகிறாய்!

உன் எடையைக் காட்டிலும்

எட்டு மடங்கு எடையைத் தூக்கிச் செல்கிறாயே!

நீ ஊர்ந்து செல்லச் செல்ல

கல் கூடத் தேயுமாமே?

மனிதப் பண்புகளின் மகத்துவத்தை

உன்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்டோம்.

செயல்திட்டம்

கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பில் உள்ள காணொலியைக் கண்டு அது குறித்த உங்கள் கருத்துகளை இருபக்க அளவில் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் ....

  • அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
  • ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
  • இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
  • ஈ) வெற்றுக் காகிதங்களைச் சுருட்டி வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திலும் போடமாட்டேன்.
  • உ) பள்ளி வளாகத்துக்குள்ளிருக்கும் மரங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்.
  • ஊ) ஆசிரியர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் மதிப்புடன் நடந்து கொள்வேன்.

கலைச்சொல் அறிவோம்

குமிழிக் கல் - Conical Stone
நீர் மேலாண்மை - Water Management
பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
வெப்ப மண்டலம் - Tropical Zone

அறிவை விரிவு செய்

  1. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
  2. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்
  3. தண்ணீர் தேசம் - வைரமுத்து
  4. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு
  5. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்

மறைநீர் (Virtual Water)

கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம். முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. புலப்படாத் தண்ணீர் என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும். ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.

(மா. அமரேசன்--கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)