தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக

அந்தப் பிராந்தியம்தான் அந்த நாட்டின் ஆன்மா; இதயப் பகுதி. அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் இரண்டு கோடி மக்கள் குடிநீருக்கு அல்லாடுகிறார்கள். அங்கே இருக்கும் ஆறு, அணை, குளம், குட்டை என நாட்டில் ஒட்டுமொத்தத் தண்ணீர் கையிருப்புமே 10 சதவிகிதத்துக்கும் கீழ் (ஒரு நாட்டின் தண்ணீர் வளம் அந்த அளவுக்குக் குறைவதை 'டெட் வால்யூம்’ என அபாயகரமாகக் குறிப்பிடுவர்). நாடு, கிட்டத்தட்ட பாதிப் பாலைவனம் ஆகிவிட்டது.  வாரத்தில் ஐந்து நாட்களுக்குக் குழாய் களில் தண்ணீர் வராது. இரண்டு நாட்களுக்கு மட்டும் அதிகாலை, நள்ளிரவுகளில் அவ்வப்போது வரும். பிடித்துவைத்து வாரம் முழுக்கக் குடித்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தினால், அபராதம். இதனால் கூரையில் விழும் மழை நீரைக்கூடச் சேமித்துக் குடிக்கிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக, கிட்னி பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு டயாலிசிஸ் செய்வதைக்கூட நிறுத்திவைத்திருக்கிறார்கள். 

தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக இத்தனை தண்ணீர்த் தகராறுகள் அரங்கேறுவது எங்கே தெரியுமா? உலகிலேயே தண்ணீர் வளம் மிக அதிகமாக இருக்கும் பிரேசில் நாட்டில்! அதிலும் குறிப்பாக, சுமார் இரண்டு கோடி பேர் வசிக்கும் பெரிய நகரான சவ் பாலோ நகரில்தான்.

உலகின் அடர்த்தியான, வளமான அமேசான் காடு, உலகின் அதிக அளவு தண்ணீர் பாயும் அமேசான் ஆறு... ஆகியவை இருப்பதும் அதே பிரேசிலில்தான். பக்கத்து நாடுகளில் இருந்து பல ஆறுகள் பிரேசிலில் பாய்ந்து கடக்க, உலகின் மிக அடர்த்தியான நிலத்தடி நீர்வளமும் அந்த நாட்டுக்கே சொந்தம். ஆனால், அங்குதான் தலைவிரித்தாடுகிறது உலகின் மிக மோசமான தண்ணீர் பஞ்சம்... ஏன்?

பதில் வழக்கமானதுதான்... காடுகள் மற்றும் மரங்கள் அழிப்பு. அதன் விளைவே இப்போது பதறவைக்கிறது.

தண்ணீர், காய்கறி, கனிகள், தங்கம், வைரம், நிலக்கரி... என பிரேசிலில் இயற்கை வளங்கள் திக்கெட்டும் குவிந்துகிடக்கின்றன. இதனால், எதையுமே அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியே பழகியவர்கள் சவ் பாலோ நகர மக்கள். அதில் முக்கியமானது... தண்ணீர்!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என நாம் நினைத்திருக்கவே மாட்டோம். அதுபோலத்தான் அந்த நகர மக்களும் குடிநீர்ப் பஞ்சம் வரும் எனக் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. இரண்டுமே இப்போது நடந்துவிட்டன!

அரிசி, பருப்புக்காக ரேஷனில் நிற்பதுபோல தண்ணீரைச் சின்னச் சின்னக் குடுவைகளில் பிடித்துச் செல்ல, அந்த நகர மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அமேசான் காடு, ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் தரும் தண்ணீர் வளம் தவிரவும், மழையாகப் பொழியும் தண்ணீர் அதிகபட்சமாக மறுசுழற்சியாவதும் அங்கேதான். இத்தனை சாதகங்கள் இருந்தும் தண்ணீர் வளத்துக்கு பெரும் பாதகம் ஏற்பட காரணம் என்ன? காடுகளைக் கண்மூடித்தனமாக அழித்ததும் எகிறிக்கொண்டே இருக்கும் மக்கள்தொகையும்தான்  எனச் சொல்லப்பட்டாலும், வேறு பல காரணங்களும் பின்னணியில் ஒளிந்திருக்கின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காட்டை அழித்தது ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தைப் பெருக்குகிறேன் என்றும் காட்டை அபகரிக்கிறார்கள். சோயா, பாதாம் போன்ற பணப் பயிர்களை விளைவித்து, அவற்றின் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க ஊக்குவிக்கிறது அரசாங்கம். மேலும், தண்ணீரை உருவாக்கும், சேமிக்கும் காடுகளை அழித்து, பெருமளவில் தண்ணீரை உறிஞ்சும் பணப்பயிர்களை விளைவிப்பதற்காக, காடுகளின் விஸ்தீரணத்தையும் சரசரவெனக் குறைத்தது. இதுபோக மாட்டு இறைச்சி மற்றும் இரும்பு உற்பத்தி, கரி, வைரம் போன்ற பொருட்களைத் தோண்டும் சுரங்கத் தொழில் பெருக்கம் என பிரேசிலில் நடைபெற்ற ஒவ்வொன்றும் இயற்கையின் அடிமடியிலேயே கை வைத்திருக்கிறது. இதனாலேயே பருவநிலை தாறுமாறாக மாறி, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அளவு குறைந்தது.

இத்தனைக்கும் இந்த அபாயங்களை பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டினார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஆனால், அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. வகைதொகை இல்லாமல் புதுப்புது தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதிலேயே பரபரப்பாக இருந்துவிட்டு, இப்போது சாமானியனின் குடிநீர் தேவையைக் கட்டுப்படுத்த சட்டம் போடுகிறது. இதனால் 'அல்லையன்ஸ் ஃபார் வாட்டர்’ என்ற தன்னார்வ அமைப்பு மூலம் பொதுமக்களே தண்ணீரைச் சேமிக்கும், நிர்வகிக்கும் வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் பிரேசிலின் பொருளாதாரத் தள்ளாட்டம், சர்வதேச அரங்கில் அந்த நாட்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கிறது. பிரேசிலின் இந்த நிலை, மற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு பாடம்.

தற்போது சவ் பாலோவின் சரிபாதி மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கும் கன்டரைரா அணையில் ஐந்து சதவிகிதக் கொள்ளளவுக்கே தண்ணீர் இருக்கிறது. பருவமழை பெய்யாவிட்டால், அடுத்த நான்கைந்து மாதங்களில் அந்தத் தண்ணீரும் மொத்தமாகத் தீர்ந்துவிடும். எனில், அது மூன்றாம் உலக யுத்தத்துக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்கக்கூடும்.

அமேசான் காட்டின் அரியவகை மூலிகைகளை அழித்ததால், என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!
Omtex App. Free For Students.

PDF FILE TO YOUR EMAIL IMMEDIATELY.
PURCHASE NOTES & PAPER SOLUTION.
@ Rs. 50/- each
 ENGLISH  ACCOUNTS  ECONOMICS  ORGANISATION OF COMMERCE & MANAGEMENT  SECRETARIAL PRACTICE  SCIENCE PAPER SOLUTION  HISTORY POLITICAL SCIENCE  GEOGRAPHY ECONOMICS  ALGEBRA PAPER SOLUTION  GEOMETRY PAPER SOLUTION  ALGEBRA