காலப் பயணம்: வரமா? சாபமா?
காலத்தின் எச்சரிக்கை
கால இயந்திரம் என்பது மனிதக் கற்பனையின் உச்சம்; ஆனால், அதுவே மனிதகுலத்தின் அழிவுக்கும் காரணமாகலாம். அதன் சக்தி அளப்பரியது; ஆனால், அதைவிடவும் அளப்பரியது அது சுமந்துவரும் ஆபத்து. காலத்தின் ஓட்டத்தில் ஒரு சிறு கல்லை எறிந்தாலும், அது எதிர்காலத்தில் ஒரு பெரும் புயலையே உருவாக்கக்கூடும். இதை உணர்த்தும் ஒரு சிறு உதாரணத்தைக் காண்போம்.
கதிர் என்ற ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு ஒரு கால இயந்திரம் கிடைத்ததாகக் கற்பனை செய்துகொள்வோம். தன் தாத்தாவையும் பாட்டியையும் இழந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில், அந்த இயந்திரம் அவனுக்கு ஒரு வரமாகத் தோன்றியது. அவர்களை மீண்டும் பார்க்க, அதுவும் அவர்களின் இளமைக்காலத்தில் சந்திக்க அவன் பேரார்வம் கொண்டான். கால இயந்திரத்தை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செலுத்தினான்.
அவன் தற்போது வசிக்கும் வீடு, அவனது தாத்தா பாட்டியின் பூர்வீக வீடுதான். எனவே, அந்தப் பழைய காலத்து வீட்டில்தான் அவர்களும் வாழ்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் அங்குச் சென்றான். மறைந்திருந்து தன் தாத்தாவையும் பாட்டியையும் ஆவலுடன் கவனித்தான். அவனது பாட்டி, உறங்கச் செல்வதற்கு முன், ஒரு குவளைப் பாலுடன் வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த தாத்தாவிடம் அதைக் கொடுத்தார். "பாருங்கள், எனக்கு நேரமாகிறது; நான் தூங்கப் போகிறேன். நீங்களும் அதிக நேரம் கண்விழிக்காமல் சீக்கிரம் வந்து படுத்துக்கொள்ளுங்கள்," என்று அன்புடன் கூறிவிட்டு, படுக்கையறையை நோக்கிச் சென்றார்.
தன் தாத்தாவையும் பாட்டியையும் இளமைப் பொலிவுடன் கண்டதும் கதிர் பெருமகிழ்ச்சியடைந்தான். அவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! ஏனென்றால், அவனது தாத்தா பார்ப்பதற்கு அச்சாக அவனைப்போலவே இருந்தார்; அல்லது, கதிர் தான் தன் தாத்தாவைப்போலவே இருக்கிறான் என்று சொல்லலாம். தாத்தாவும், பாட்டியின் பேச்சைக் கேட்டு, செய்தித்தாளை மடித்து அருகே வைத்துவிட்டுப், பாட்டி கொடுத்த பாலை அருந்திவிட்டுப் படுக்கையறையை நோக்கி நடக்க முற்பட்டார்.
அந்த நொடியில்தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. எதிர்பாராத விதமாக, கதிரின் காலில் ஏதோ இடறியதுபோலிருக்க, அவன் தன்னையறியாமல், "அம்மா!" என்று கத்திவிட்டான்.
அவன் கத்திய அடுத்த கணமே, அவன் அந்த உலகிலிருந்து மறைந்துபோனான்! ஆம், கதிர் என்ற அந்த இளைஞன் இந்த உலகில் பிறக்கவேயில்லை என்றாகிவிட்டது!
இது எவ்வாறு நிகழ்ந்தது? இதைத்தான் 'பட்டாம்பூச்சி விளைவு' (Butterfly Effect) என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அன்று கதிர் குறுக்கிடாமல் இருந்திருந்தால், அவனது தாத்தா இயல்பாகப் படுக்கையறைக்குச் சென்றிருப்பார். அப்போது, பாட்டியுடன் அவர் இணைந்திருக்கும் அந்தச் சரியான தருணத்தில், கோடிக்கணக்கான உயிரணுக்களில் ஒன்று கதிரின் தந்தையை உருவாக்கி, அது கதிரின் பாட்டியின் கருமுட்டையில் சரியான முறையில் சென்றடைந்திருக்கும்.
ஆனால், கதிர் எழுப்பிய அந்தச் சிறு ஒலி, அந்தச் சிறிய குறுக்கீடு, அன்று அவர்களுக்குள் நிகழ வேண்டியதை மாற்றிவிட்டது. ஆம், அந்த ஒலி எங்கிருந்து வந்ததென்ற தேடலில் தாத்தா படுக்கையறைக்குச் செல்லாமல், வாசலை நோக்கி நடந்து, வீட்டிற்கு வெளியே வந்தார். ஆனால், அங்கு யாரும் இல்லை. இருந்தாலும் தன் குரலைப்போலவே இருந்ததே என்ற எண்ணத்தில் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரின் உடலில் பல ஆயிரக்கணக்கான உயிரணுக்கள் புதிதாக உற்பத்தியாயின. இதில் கதிரின் தந்தையின் உயிரணு பின்தங்கியது. இதன் பொருள், பாட்டியுடனான அந்த முக்கியமான நிகழ்வு சற்றே தாமதமாகவோ அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ நடந்திருக்கலாம். அப்படியானால், கண்டிப்பாகக் கதிரின் தந்தை பிறந்திருக்கமாட்டார். அவருக்குப் பதிலாக, வேறு ஏதோ ஓர் உயிரணு வென்று, ஒருவேளை ஒரு பெண் குழந்தை கூடப் பிறந்திருக்கலாம். அவர்களின் வம்சாவளியினர்தான் இப்போது அந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
கதிர் செய்த அந்தச் சிறிய மாற்றம், அவன் மட்டுமல்ல, அவன் தந்தையும் இந்த உலகில் பிறக்காமல் போனதற்குக் காரணமாயிற்று. எனவேதான், காலச்சக்கரத்தில் நாம் செய்யும் ஒரு மிகச்சிறிய மாற்றம், ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு ஏற்படுத்தும் தாக்கத்தைப்போல, பிற்காலத்தில் மிகப்பெரிய, கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
காலம் எனும் பிரபஞ்ச ஆற்றலின் இந்த விசித்திரமான, அதே சமயம் அபாயகரமான தன்மையைப் பற்றி ஓரளவு புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இனி, இதேபோன்றதொரு காலப் பயணத்தின் சிக்கலில் சிக்கும் ஒருவனின் கதைக்குள் செல்வோம்.