மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2: உயிருக்கு வேர்

9 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 2: உயிருக்கு வேர் - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2: உயிருக்கு வேர்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க

பூ மொழி

வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்

கூடத்துச் சன்னலையும்

சமையலறைச் சன்னலையும்

விரிந்த கிளைகளால்

பார்த்துக் கொண்டிருக்கிறது.

கைகளசைத்துக் கால்களுதைத்துக்

கூடத்தில் கிடக்கும் சிசு

மிழற்றுகிறது ஒரு சொல்லை

சமையலறையில்

பணி முனைந்திருக்கிற அம்மா

அச்சொல்லையே நீள வாக்கியங்களாக்கிப்

பதில் அனுப்புகிறாள்

விரல் நீட்டிச் சிசு பேசுகிறது மீண்டும்

அத்தொனியிலேயே அம்மா குழறுகிறாள்

கடவுளுக்கும் புரியாத அவ்வுரையாடலைக் கிரகிக்கக்

கூடத்துச் சன்னலுக்கும்

சமையலறைச் சன்னலுக்குமாய்க்

கிளைகளின் வழியே ஓடி ஓடிக்

கவனிக்கிறது அணில்.

பெருகும் சொற்களும்

அபூர்வ எதிர்வினைகளும்

அதீதக் குழப்பத்திலாழ்த்த

அணில் ஓடிக் களைக்கிறது சன்னல்களுக்கிடையே

அர்த்தங்களை மரம் பூக்களாக மொழிபெயர்த்து

அதன்மீது உதிர்த்திக்கொண்டிருப்பது தெரியாமல்.

- யூமா வாசுகி

அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுக.

  1. Every flower is a Soul blossoming in nature - Gerard De Nerval

    விடை :

    மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.

    பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.

  2. Sunset is still my favourite colour, and rainbow is second - Mattie Stepanek

    விடை :

    மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

    பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.

  3. An early morning walk is a blessing for the whole day - Henry David Thoreau

    விடை :

    மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

    பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.

  4. Just living is not enough .... one must have sunshine, freedom and a little flower - Hans Christian Anderson

    விடை :

    மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

    பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.

பிழை நீக்கி எழுதுக

  1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

    விடை : சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

  2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

    விடை : மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

  3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன:

    விடை : மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

  4. நீலனும் மாலனும் அவசர காலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

    விடை : நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைபேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

  5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

    விடை : சூறாவளியின் போது மேல் மாடியில் தங்காமல் தரைத் தளத்திலேயே தங்கியதால் தப்பித்தனர்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.

  1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

    விடை : நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல நல்லார் சொன்ன அறிவுரை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது.

  2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

    விடை : நெடுஞ்சாலையில் அடிபட்டுக்கிடந்தவரை வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் காப்பாற்றியது தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் எனத் தெரிந்து கொண்டேன்.

  3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

    விடை : அப்பா கூறிய அறிவுரை மூர்க்கத்தனமாகச் செயல்பட்ட என் அண்ணனையும் மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் எனத் திருத்தியது.

  4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது.

    விடை : தேர்வை முடித்துவிட்டு கிரிக்கெட் போட்டிக்குச் செல்லலாம் என்று அப்பா சொன்னதைக் கேட்டு கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது எனப் புரிந்து கொண்டேன்.

வடிவ மாற்றம் செய்க.

நீர்ச்சுழற்சி குறித்த கருத்து விளக்கப்படத்தின் உட்பொருளைப் புரிந்துணர்ந்து பத்தியாக மாற்றி அமைக்க.

நீர்ச்சுழற்சி விளக்கப்படம்

நீர்ச்சுழற்சி

மேற்காணும் படத்தில் உள்ளது போல, வாயு மண்டலத்தில் உள்ள நீர், பனி மற்றும் உறை பனியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, பின் குளிர்ந்த காற்றால் மேகமாகி மழை பொழிந்து நிலத்தை அடைந்து. கடல், ஆறு, நிலத்தடி நீர் இவற்றைப் பெருக்குகிறது. பின்னர் மீண்டும் கடல், ஆறு, தரையில் உள்ள நீர் நிலைகள், நிலத்தடி நீர் ஆகியவை சூரிய ஒளியால் ஆவியாக்கப் படுகிறது. ஆவியான நீர்த்திவலைகள் மேகமாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகி நிலத்தைக் குளிரச் செய்து வளமுடைய தாக்குகிறது. மீண்டும் ....... இதுவே இப்படம் விளக்குடம் நீர்ச் சுழற்சி ஆகும்.

வரவேற்பு மடல் எழுதுக

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

வரவேற்பு மடல்

இடம்: அரசு மேனிலைப் பள்ளி, கொட்டாம்பட்டி.

நாள்: திருவள்ளுவர் ஆண்டு ஹேவிளம்பி வைகாசி 22 ஆம் நாள் : 05.06.2018 - செவ்வாய்க்கிழமை

நேரம்: பிற்பகல் 3.00 மணி

சுற்றுச்சூழலைப்பாதுகாக்கும் பள்ளிகளின் வரிசையில் முதலிடம் பெற்ற கொட்டாம்பட்டி அரசு மேனிலைப் பள்ளியைப் பாராட்டும் விழாவிற்கு வருகை தரும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

பள்ளியை வழி நடத்தி நிர்வாக மேலாண்மை செய்ததோடு பள்ளிக்குள் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களைப் பராமரித்துப் பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வழிகாட்டிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே! ஆசிரியப் பெருமக்களே! பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவரையும் பள்ளிக்குழு மாணவர் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன். இன்று சூன் திங்கள் 5 ஆம் நாள் சுற்றுச் சூழல் தினம். இவற்றிற்கெல்லாம் மேலாக மாவட்டத்திலேயே நம் பள்ளி கிடைத்தற்கரிய விருதினைப் பெற்ற நாளாகும்.

நம் மாவட்டக் கல்வி அலுவலர் மூன்றாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார். இவ் அரசுப்பள்ளி அகன்ற வளாகம் : குடிநீரும் கிடைக்கிறது. நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது. இருக்கின்ற மரங்களுக்கு தண்ணீர் விட்டுப் பசுமை ஆக்குங்கள் பலன் கிடைக்கும் என்றீர்கள்! உங்கள் வாக்கு நிறைவேறியது. எங்கள் கனவு நிகழ்ந்தேறியது. இந்நேரத்தில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பொருள் உதவி செய்தளித்த பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி.

எங்கள் பள்ளி வேளாண்மைப் பிரிவு மாணவர்களின் உதவியும் மாணவர்களின் ஒத்துழைப்பும் அளப்பரியது. மாவட்டக் கல்வி அலுவலர்களின் அரசு நிதியுதவி கிடைத்திட மிகுந்த ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி!

இவண்,

க. அன்பரசன்,

பள்ளிக்குழு மாணவர் தலைவர்,

அரசு மேனிலைப் பள்ளி, கொட்டாம்பட்டி.

நயம் பாராட்டுக.

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் - மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். - கவிமணி

இலக்கிய நயம் பாராட்டுதல்

ஆசிரியர் குறிப்பு : கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, 1876 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள தேரூரில் பிறந்தார். 1901 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆனார். அதன்பின் திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1917 ஆம் ஆண்டிலேயே “மருமக்கள் வழி மான்மியம்” எனும் நகைச்சுவை நூலினை எழுதி வெளியிட்டார். மலரும் மாலையும், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

திரண்ட கருத்து : இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன் . ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மையக்கருத்து : ஆறு மலை உச்சிகளில் இருந்து புறப்பட்டு ஓடைகளில் பொங்கிட ஓடிவந்தேன் என்று ஆற்றின் வரலாற்றை வரிசையாகப் புலப்படுத்துகிறார்.

எதுகை நயம் : சீர்தோறும் அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும். எதுகை நயத்தை இனிமையாகப் பாடுகிறார் கவிமணி. சான்று :

கல்லும் ... எல்லை

ஏறாத ........ ஊறாத

மோனை நயம் : சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :

ஏறாத - ஏறி

ஊறாத - ஊற்றிலும் உட்புகுந்தேன்

ஓடைகள் - ஓடி வந்தேன்.

சொல் நயம் : ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்' என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்

குதித்து வந்தேன்

கடந்து வந்தேன்

தவழ்ந்து வந்தேன்

ஏறி வந்தேன்

நிரப்பி வந்தேன்

உட்புகுந்தேன்

ஓடி வந்தேன்.

ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது.

இயைபு : இச்செய்யுளின் ஈற்றடிகளில் 'தேன் தேன்' என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

நிறைவுரை : கரைபுரண்டு ஓடிவரும் ஆற்றின் வெள்ளப் பெருக்கை அழகிய கவியுள்ளத்தோடு நம் கண் முன்னே விரியச் செய்துவிடுகிறார், கவிமணி.

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக

எ.கா : ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை / ஓரம்

அ) கடையெழுவள்ளல்கள் - கடை / எழு / வள்ளல்

ஆ) எடுப்பார் கைப்பிள்ளை - எடுப்பார் / கை / பிள்ளை

இ) தமிழ்விடு தூது - தமிழ் / விடு / தூது

ஈ) பாய்மரக்கப்பல் - பாய் / மரம் / கப்பல்

உ) எட்டுக்கால்பூச்சி - எட்டு / கால் / பூச்சி

அகராதியில் காண்க

கந்தி - கந்தகம், கழுகு, தவப்பெண், வாசம்
நெடில் - நெட்டெழுத்து, மூங்கில்
பாலி - அணை, ஆலமரம், எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கறை
மகி - பூமி, பசு
கம்புள் - கம்பங்கோழி, சங்கு, வானம்பாடி
கைச்சாத்து - கையெழுத்து, பொருள்பட்டி

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக.

எ.கா : அரிசி போடுகிறேன்.

புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

  1. மழை பெய்தது.

    மாலையில் மழை பெய்தது.

    நேற்றுக் மாலையில் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது.

    நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்தது.

  2. வானவில்லைப் பார்த்தேன்.

    மாலையில் வானவில்லைப் பார்த்தேன் .

    மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.

    நான் மாலையில் மழை பெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.

    நான் மாலையில் மழை பெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

    நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

    நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

  3. குழந்தை சிரித்தது.

    தொட்டிலில் குழந்தை சிரித்தது.

    தொட்டியில் அழுத குழந்தை சிரித்தது.

    அம்மாவைப் பார்த்தது அழுத குழந்தை சிரித்தது.

    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து சிரித்தது.

    அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து சிரித்தது.

    அழுத குழந்தை தொட்டிலை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

  4. எறும்புகள் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகப் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகக் கல்லில் போகின்றன.

    எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள் போகின்றன.

    சர்க்கரையை நோக்கி வரிசையாகப் போகின்றன.

    அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

  5. படம் வரைந்தான்.

    படம் வரைந்தான்.

    அவன் அழகாக வரைந்தான்.

    விலங்குகளின் படங்களை வரைந்தான்.

    இயற்கையைப் படம் வரைந்தான்.

    இயற்கை மரங்களைப் படமாக வரைந்தான்.

    பறக்கும் பறவைகளைப் படமாக வரைந்தான்.

வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக.

முதல்வினைகள் - பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

வினையெச்சம் உதாரணம்

1. எழுதிப் பார்த்தேன்

2. தடுக்கப் பார்த்தேன்

3. கொடுத்துப் பார்த்தேன்

4. ஓடப் பார்த்தேன்

வினையெச்சம் உதாரணம்

1. எழுதிக் கொடுத்தார்

2. படிக்கக் கொடுத்தார்

3. வாங்கிக் கொடுத்தார்

4. பார்த்துக் கொடுத்தார்

வினையெச்சம் உதாரணம்

1. பார்த்து நடந்தான்

2. கேட்டு நடந்தான்

3. வாங்கி நடந்தான்

4. சிரித்து நடந்தான்

வினையெச்சம் உதாரணம்

1. வந்து சேர்ந்தார்

2. போய்ச் சேர்ந்தார்

3. நடந்து சேர்ந்தார்

4. ஓய்ந்து சேர்ந்தார்

வினையெச்சம் உதாரணம்

1. பார்த்து அமைத்தோம்

2. கண்டு அமைத்தோம்

3. கேட்டு அமைத்தோம்

4. சேர்த்து அமைத்தோம்

வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக.

வினையடி - வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு.

எ.கா : வினையடி – வை

வினையடி உதாரணம்

விடை

வினையடி அட்டவணை

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

எறும்புகள் காட்சி

மூவறிவுடைய எறும்பே

ஆறு அறிவுடையவனுக்கு

அறிவு புகட்டுகிறாய்!

உன் எடையைக் காட்டிலும்

எட்டு மடங்கு எடையைத் தூக்கிச் செல்கிறாயே!

நீ ஊர்ந்து செல்லச் செல்ல

கல் கூடத் தேயுமாமே?

மனிதப் பண்புகளின் மகத்துவத்தை

உன்னிடத்தில் இருந்து தெரிந்து கொண்டோம்.

செயல்திட்டம்

கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பில் உள்ள காணொலியைக் கண்டு அது குறித்த உங்கள் கருத்துகளை இருபக்க அளவில் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள் ....

  • அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
  • ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் பொருள்கள் மீது நாட்டம் இருந்தும் அவற்றைத் தொரியாமல் எடுக்கும் ஒழுங்கற்ற செயலைச் செய்யமாட்டேன்.
  • இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்.
  • ஈ) வெற்றுக் காகிதங்களைச் சுருட்டி வகுப்பறைக்குள்ளும் பள்ளி வளாகத்திலும் போடமாட்டேன்.
  • உ) பள்ளி வளாகத்துக்குள்ளிருக்கும் மரங்களுக்கு ஊறு விளைவிக்க மாட்டேன்.
  • ஊ) ஆசிரியர்களிடத்தும் பெற்றோர்களிடத்தும் மதிப்புடன் நடந்து கொள்வேன்.

கலைச்சொல் அறிவோம்

குமிழிக் கல் - Conical Stone
நீர் மேலாண்மை - Water Management
பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology
வெப்ப மண்டலம் - Tropical Zone

அறிவை விரிவு செய்

  1. அழகின் சிரிப்பு - பாவேந்தர் பாரதிதாசன்
  2. தண்ணீர் தண்ணீர் - கோமல் சுவாமிநாதன்
  3. தண்ணீர் தேசம் - வைரமுத்து
  4. வாய்க்கால் மீன்கள் - வெ. இறையன்பு
  5. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன்

மறைநீர் (Virtual Water)

கண்ணுக்குத் தெரியாமல் நாம் இரண்டு வகையில் நீரைப் பயன்படுத்துகிறோம். முதல் வகை நாம் பயன்படுத்தும் பொருள்கள் வழியாக; இரண்டாவது வகை நாம் உண்ணும் உணவின் வழியாக. புலப்படாத் தண்ணீர் என்பது உணவுப் பொருள்களின் உற்பத்தி குறித்தும் அதனை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட தண்ணீர்த் தேவை குறித்தும் பேசுவது ஆகும். ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய 822லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1780லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 2500 லிட்டர் தண்ணீரும் ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய 18,900 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நீர்வளத்தைப் பாதுகாக்க நாட்டின் மேல்புற நீர்வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் குறித்து அக்கறை கொள்ளவேண்டும். நீர் அதிகம் தேவைப்படும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதைத் தவிர்த்து, தேவைக்கேற்ப இறக்குமதி செய்துகொள்ள வேண்டும். இதனால் நாட்டின் நிலத்தடி நீரும் ஆற்று நீரும் சேமிக்கப்படும்.

(மா. அமரேசன்--கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும்)