Sirupanjamoolam by Kariyasaan | 9th Standard Tamil Poem | Samacheer Kalvi

சிறுபஞ்சமூலம் - காரியாசான் | 9 ஆம் வகுப்பு தமிழ்

கவிதைப்பேழை: சிறுபஞ்சமூலம்

காரியாசான்

கவிதைப்பேழை: சிறுபஞ்சமூலம் தலைப்பு

நுழையும்முன்

மனித வாழ்வைச் செழுமையாக்குபவை அறப் பண்புகளே. காலந்தோறும் தமிழில் அறக் கருத்துகளைக் கூறும் இலக்கியங்கள் தோன்றிவருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் என்னும் நூல். வயதுக்கும் அறிவுக்கும் சில நேரங்களில் தொடர்பு இருப்பதில்லை. சாதனைக்கு வயது ஒரு தடையில்லை.

அறிவுடையார் தாமே உணர்வர்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு*.

(பா. எண்: 22)

பூவாது காய்க்கும் மரங்கள் பற்றிய иллюстрация

பாடலின் பொருள்

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்துகொள்வர்.

அணி

பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

சொல்லும் பொருளும்

  • மூவாது - முதுமை அடையாமல்;
  • நாறுவ - முளைப்ப,
  • தாவா - கெடாதிருத்தல்

இலக்கணக் குறிப்பு

  • அறிவார், வல்லார் - வினையாலணையும் பெயர்கள்
  • விதையாமை, உரையாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
  • தாவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

உரையாமை = உரை + ய் + ஆ + மை

உரை – பகுதி; ய் – சந்தி (உடம்படுமெய்); ஆ - எதிர்மறை இடைநிலை; மை - தொழிற்பெயர் விகுதி


காய்க்கும் = காய் + க் + க் + உம்

காய் - பகுதி; க் - சந்தி; க் – எதிர்கால இடைநிலை; உம் – பெயரெச்ச விகுதி

நூல் வெளி

தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம். ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள். அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர். காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர். மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

தெரிந்து தெளிவோம்

சாதனைக்கு வயது தடையன்று

  • 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
  • 11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
  • 15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
  • 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
  • 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.

தெரியுமா?

சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன. அந்நூல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?