துணைப்பாடம்: வீட்டிற்கோர் புத்தகசாலை
விரிவானம்
கல்வி – ரு
நுழையும்முன்
"நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" என்பார் ஆபிரகாம் லிங்கன். மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு மட்டுமன்று, சிந்திப்பதும்தான். சிந்தனையைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும்தான். உலகமெங்கும் பயணம் செல்லும் பட்டறிவை நூலுலகம் தருகிறது. நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும். இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே. ஆதலின் வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை. இதை வலியுறுத்தும் வகையில் அறிஞர் அண்ணாவின் வானொலி உரை இடம்பெறுகிறது.
உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம், உலகின் மற்ற பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட, வளர்ந்துகொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம்.
நாட்டு நிலை, உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டுநிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை. மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே. மாநிலம் மதிக்கும் மனவளம் வேண்டும்.
எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்நாட்டில். இது பெருங்கேடு. கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மனவளம் இருக்கிறதா?
அவர்களின் வீடுகளாவது நாட்டுக்குச் சிறப்பளிக்கும் நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக, நாட்டுக்கு வலிவும் வனப்பும் தேடித்தரும் கருத்துகள் மலரும் சோலையாக உள்ளனவா என்றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும். உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானல், நாட்டுநிலை கண்டு உலகம் மதிக்கவேண்டுமானால், இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால், நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும். நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன.
அவர்களின் காலம் அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்; ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்; மனவளத்தை அதிகப்படுத்தும் மார்க்கம் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.
தெரியுமா?
2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
இதோ நான் பேசுகிறேன். நீங்கள் கேட்கிறீர்கள். இடையே பலப்பல மைல்கள். இந்த ஒலி கேட்பது அறிவின் துணைகொண்டு. விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வதிசயச் சாதனங்கள் இல்லாதிருந்த நாட்கள் நமது முன்னோர்கள் காலம். இவ்வளவு வசதிகள் நமக்கிருக்கிறது. ஏன், மனவளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது? வீடுகளிலே, மனவளத்தை அதிகரிக்கவோ பாதுகாக்கவோ நாம் முயற்சி செய்வதில்லை; வழிவகை தேடிக் கொள்வதில்லை.
வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் இருக்கும். பீரோக்கள் இருக்கும். அவைகளில் வெள்ளித் தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர்ச்செம்பும் இருக்கும். பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும். மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூடப் புத்தகசாலை இராது.
வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும் போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை-அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.
வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல, அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
இன்றும் நிலைபெற்றுள்ள பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளுள் சில
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
- கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
- எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
- சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
- மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
- நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
- இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
- இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
- நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக்கொண்டால், சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்து விடலாம். உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்.
பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்.
நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தைச் சாமானியரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல்கள் இருக்க வேண்டும்.
நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக்கொண்டால், நாட்டுக்கு நல்லநிலை ஏற்படும். வீட்டிற்கோர் புத்தகசாலை தேவை. கேட்டினை நீக்கிட, தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்கவேண்டும், வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை.
நூல் வெளி
வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். எழுத்தாளரான அண்ணாவைத் தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைத்தனர். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பெஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர். அவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின. தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே. 1935இல் சென்னை , பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ஹோம் ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார். முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார். சென்னை மாகாணத்தைத் 'தமிழ்நாடு' என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்
அண்ணாவின் சிறுகதைத் திறன் - ப.373 - முனைவர் பெ. குமார்.
தெரிந்து தெளிவோம்
புகழுக்குரிய நூலகம்
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.