Kannadasan's 'Kaatre Vaa' Poem Appreciation | 5 Mark Question | 10th Tamil

கண்ணதாசனின் 'காற்றே வா' பாடல் பாராட்டுரை | 5 மதிப்பெண் வினா

கவிதைப்பேழை

காற்றே வா

5 மதிப்பெண் வினா

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே- வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே- வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே.

-கண்ணதாசனின் இந்தப் பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

பாராட்டுரை

கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பெருங்கவிஞர்களுள் ஒருவர். அவரது "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" என்னும் பாடல், கவிதை நயம் மிகுந்தது.

குழந்தைக்கு வாழ்த்துப் பாடுகிறார் கண்ணதாசன். குழந்தையை எவ்வாறெல்லாம் வாழ்த்துகிறார் என்பதைக் காண்போம்.


"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே"

குழந்தையை மலர்ந்தும் மலராத பாதி மலராக உவமைப்படுத்துகிறார். குழந்தையின் முகம் மலர்ந்து இருக்கிறது; இன்னும் மலர வேண்டியதும் இருக்கிறது; மலர்ந்துகொண்டும் இருக்கிறது.

பூவின் மலர்ந்தும் மலராத நிலை 'போது'. அதைத்தான் 'பாதி மலர்' என்கிறார் கண்ணதாசன். பூவானது முழுமையாக மலர்ந்து விட்டால், அது எப்போது வாடுமோ? என்ற அச்சம் இருக்கும். பூவானது மொட்டாக இருந்துவிட்டால், அது எப்போது மலரும்? என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் பூவானது மலர்ந்து கொண்டே இருந்தால் மகிழ்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையின் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சியையே காண விரும்பிய கண்ணதாசனின் கவிநயம் போற்றுதலுக்குரியது.


"வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே"

குழந்தையை விடிந்தும் விடியாத காலைப் பொழுதாகவும் கலை அன்னமாகவும் உருவகப்படுத்தியுள்ளார்.

காலைப்பொழுது அனைவருக்குமே மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அதிலும் விடிந்தும் விடியாத காலைப்பொழுது அனைவருக்குமே புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கக்கூடியது. அப்படிப்பட்ட காலைப் பொழுதாக குழந்தையை உருவகப்படுத்தி உள்ளார்.

பறவைகளில் பிரகாசமான வெண்மை நிறம் படைத்தது அன்னப்பறவையாகும். வெண்மை நிறம் உள்ளத் தூய்மையைப் புலப்படுத்தும். அப்படிப்பட்ட அழகு மிக்க அன்னப் பறவையாக குழந்தையை உருவகப்படுத்திப் பாடியுள்ளமை உவகை தருகிறது.


"நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே"

தென்பாண்டி நாட்டிலே, தண்பொருநை நதியிலே, நறுமணமிக்க மலர்களும் நோய்தீர்க்கும் மூலிகைகளும் தோய்ந்து ஓடும். அதில் கலந்து, கரைந்து, எழுந்து, நீந்திக் குளித்து விளையாடுகிறது இளந்தென்றல். பின்னர், அங்குள்ள பல்வகை நறுமணமிக்க மலர்கள் தாங்கிய கொடிகளில் தலையைத் துவட்டி, தலைசீவி, அழகுபடுத்தி, நடந்துவருகிறது இளந்தென்றல். அந்தத் தென்றலாகக் குழந்தையை உருவகப்படுத்திப் பாடுகிறார், கண்ணதாசன்.

நதியில் குளித்தால் மட்டும் போதுமா? தலைசீவ வேண்டாமா? என எண்ணிய கண்ணதாசன் கொடியில் தலைசீவி நடந்து வருவதாகக் கற்பனை நயம் தோன்றக் கவிபாடியமை போற்றுதற்குரியது.


"வளர்பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே".

பொதிகை மலையில் தவம் செய்து, தமிழ் மொழியைத் தோற்றுவித்து, அதற்கு இலக்கணம் எழுதியவர் அகத்தியர். அந்த அழகிய தமிழ், பாண்டியரின் மதுரை மாநகரில், தமிழ் மன்றத்தில் புகழ் பெற்று வளர்ந்தது. அத்தகைய அழகு தமிழாகக் குழந்தையை உருவகப்படுத்திப் பாடியுள்ளார்.


முரண்சுவை

மலர்ந்தும் × மலராத,

விடிந்தும் × விடியாத

ஆகிய சொற்களில் முரண் சுவை தளும்புகிறது.

இயைபு நயம்

வளரும் விழி வண்ணமே, விளைந்த கலை அன்னமே என்னும் தொடர்களில் இயைபு நயம் மிளிர்கிறது.

கற்பனை நயம்

தென்றல் என்றாவது தலை சீவியதை நீங்கள் கண்டதுண்டா? தென்றல் என்றாவது நடந்து வந்ததை நீங்கள் கண்டதுண்டா? எல்லாம் கண்ணதாசனின் கற்பனை நயங்கள்.

மோனை-எதுகை

லர்ந்தும் லராத, விடிந்தும் விடியாத ஆகிய சீர்களில் மோனை எதுகை நயங்கள் மிளிரக் காணலாம்.


'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள். இந்தப் பாடல், கண்ணதாசனின் கவிதைத் திறத்துக்கு ஒரு சிறந்த சான்றாகும்.