Comparison of Tamilthai Vaazhthu by Manonmaniam Sundaranar and Pavalareru Perunchithiranar - 5 Mark Question

அன்னை மொழியே: 5 மதிப்பெண் வினா

5 மதிப்பெண் வினா, அன்னை மொழியே

வினா: மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

மேடைப்பேச்சு

தமிழ்த்தாய் வாழ்த்து

மனோன்மணியம் சுந்தரனார், பெருஞ்சித்திரனார் - ஓர் ஒப்பீடு

ஆன்றோர்களே, தமிழ்ச் சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்..!

'இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்' என்கிறது பிங்கலந்தை நிகண்டு. பல மொழிகளைக் கற்ற பாரதியாரும் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்கிறார். தமிழின் இனிமையை, இயல்பைப் பாடாத புலவரில்லை.

அவர்களில் மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு உங்கள் முன் பேச இருக்கிறேன்.

தமிழ்த்தாய் என்பவள் யார்? அவளது ஆட்சி எல்லை, அவளை ஒப்புமைப்படுத்தும் விதம், அவளை வாழ்த்தும் விதம் ஆகியவற்றில் மனோன்மணியம் சுந்தரனாரும் பெருஞ்சித்திரனாரும் சிறிது மாறுபடுகின்றனர்.

தமிழ்த்தாய் என்பவள் யார்?

"நிலம் என்னும் பெண் நீலக்கடலை ஆடையாக அணிந்தவள். இந்தியாவே, அவளது அழகு முகம். தென்னிந்தியாவே, அவளது பிறைபோன்ற நெற்றி. தமிழகமே, அவளது திலகம். அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனை தான் தமிழ்த்தாய் " என்று சுந்தரனார் அடையாளப்படுத்துகிறார்.

"பழமைக்கும் பழமையான காலத்தில் பாண்டியனின் மகளாய்ப் பிறந்தவள் தமிழ்த்தாய்" என்று பெருஞ்சித்திரனார் அடையாளப்படுத்துகிறார்.

ஆட்சி எல்லை:

"தமிழகத்தில் இருந்து கொண்டே, எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும் படி இருப்பவள்" என்று தமிழ்த்தாயின் ஆட்சி எல்லையை மனோன்மணியம் சுட்டுகிறார்.

குமரிக்கடல் சூழ்ந்த நாட்டில் இருந்துகொண்டே, மண்ணுலகை ஆட்சி செலுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் சுட்டுகிறார்.

ஒப்புமைப்படுத்தும் விதம்:

திலகத்தில் இருந்து வரும் வாசனை போல் இருப்பதாக சுந்தரனார் உவமைப்படுத்துகிறார்.

ஆனால், பெருஞ்சித்திரனாரோ, திருக்குறளின் பெருமைக்கு உரியவளாக, பத்துப்பாட்டாக, எட்டுத்தொகையாக, பதினெண்கீழ்க்கணக்காக, சிலப்பதிகாரமாக, மணிமேகலையாக இருப்பதாக உருவகப்படுத்துகிறார்.

வாழ்த்தும் விதம்:

தமிழின் இளமைத் திறத்தை வியந்து, தன்நிலை மறந்து வாழ்த்துகிறார், மனோன்மணியம் சுந்தரனார்.

ஆனால், பெருஞ்சித்திரனாரோ, தமிழின் பழம் பெருமைகளை நினைத்துப்பார்த்து வாழ்த்துகிறார்.

இதுகாறும் எனது பேச்சைக் கேட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்!