4th Std Tamil Term 2 Chapter 7 Thirukural Kathaigal Questions Answers

4th Standard Tamil Term 2 Chapter 7 Thirukural Kathaigal
பருவம் 2 இயல் 7 | 4 ஆம் வகுப்பு தமிழ் - திருக்குறள் கதைகள்
4th Tamil : Term 2 Chapter 7 : Thirukural kathaigal

7. திருக்குறள் கதைகள்

Thirukural Kathaigal Intro
பொறுமையும் பொறுப்பும்

தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், புகழ்பெற்ற அறிவியலறிஞர். இவர், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக்கண்டுபிடித்தார்.

Edison Story

நண்பர்களுக்கும், மற்ற அறிவியலறிஞர்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினார். அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தார். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.

எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார். உதவியாளர், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினார். அதனை மீண்டும் அதே உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச் செய்தார்.

"மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவரிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? 'என்று சிலர் எடிசனிடம் கேட்டனர். அதற்கு எடிசன், உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளரின் மனத்தைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவரிடமே கொடுக்கும்போது, தமது பொறுப்பை உணர்ந்து கவனமுடன் பணிபுரிவார். அதனால்தான் அப்படிச் செய்தேன்" என்றார்.

எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர்.

குறள்

நிறையுடைமை நீங்காமை வேண்டின்
பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்.

பொறையுடைமை, குறள்.154
விளக்கம்

நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

மெய்ப்பொருள் காண்போம்

மாட்டுவண்டி ஒன்றில், தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார் ஒருவர். வழியில், குறுக்குப்பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.

Cart Story

"தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?" என்று கேட்டார் வண்டிக்காரர். "ஓவருமே என்றான் சிறுவன்.

"போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?"

*மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்".

"வேகமாகச் சென்றால்..."

"அரை மணி நேரம் ஆகும்".

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டுக் குதிரை வண்டிக்காரருக்குக் கோபம், "என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?" என்று கேட்டார்.

போய்த்தான் பாருங்களேன்" என்று சிறுவன் சொன்னதும், அவர் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றார்.

சிறிது தூரம் போனதுமே சாலையில் அங்கங்கே கற்கள் நிறைந்து இருந்தன. அதனால், வண்டி தடுமாறிக் தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியைத் தூக்கி நிறுத்திக் கீழே சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரருக்குச் சிறுவன் சொன்னதன் பொருள் புரிந்தது.

குறள்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

அறிவுடைமை, குறள். 423
விளக்கம்

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

குற்றமும் குறையும்

கதிரவனிடம் வேண்டாத குணமொன்று இருந்தது, அதாவது, எப்போது பார்த்தாலும் யாரைப் பற்றியாவது எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான். அதனால், அவனைப் பார்த்தாலே போதும். எல்லா நண்பர்களும் ஓடத் தொடங்கிவிடுவர். தமிழ் அழகன் ஒருவன்தான் இப்போது அவனுடன் பேசுகிறான். வேறு எவரும் பேசுவதில்லை. அன்று தமிழ் அழகன் நான்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டான் கதிரவன். ஆர்வத்துடன் அவர்கள் அருகில் வந்தான்.

Kathiravan Story

கதிரவனைப் பார்த்ததும் எல்லாரும் ஒதுங்கிச் செல்ல, தமிழ் அழகன் மட்டுமே தனியாக நின்றான். கதிரவனின் முகம் வாடியது.

"என்ன கதிர்? ஏன், என்னவோ போல் இருக்கிறாய்?" என்று கேட்டான் தமிழ் அழகன்.

'ஆமாம் தமிழ். என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடிப்போறாங்களே...." என்றான் கதிரவன்.

'எல்லாம் யாரால? உன்னாலதானே!' என்றான் தமிழ் அழகன்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்? பிறர்கிட்ட உள்ள குற்றம் குறையைத்தானே பேசினேன்" என்றான் கதிரவன்,

கதிர், குற்றம்குறை யார்கிட்டேதான் இல்லை. உன்னோட குறை என்னன்னு உனக்குத் தெரியுமா? நீ பிறரைப் புறம் பேசறதுதான் உன்னோட குறை, உன்னோட நாக்கை அடக்கு. எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க' என்றான் தமிழ் அழகன் .

கதிரவன் தன்னைத் திருத்திக் கொண்டான். எல்லாரும் அவனுடன் மெள்ள மெள்ளப் பேசத் தொடங்கினர்.

குறள்

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

அடக்கமுடைமை, குறள்.127
விளக்கம்

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால், சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

அழகு

கந்தனின் உருவமே, "கோபம் கோபம் கோபம்" என்றாகிப் போனது, கந்தனை யாராவது விசாரித்தால், 'எப்பவும் கோபத்தோடே 'உர்'ருன்னு அலைவானே அவனைத்தானே கேட்கிறீங்க" என்று மாணவர்கள் எளிதாகச் சொல்லிவிடுவர். அதனால், அவனிடம் நெருங்கிப் பழகவும் மாணவர்கள் பயந்தனர்.

Kanthan Anger Story

கந்தன் ஒருநாள் அவன் நண்பனான நன்மாறனிடம் பேசிக் கொண்டிருந்தான். "நீயெல்லாம் சும்மா ஜம்முனு அழகா இருக்கியே! நான் மட்டும் ஏன் முகமெல்லாம் கறுத்துப்போய் இப்படி இருக்கேன்" என்றான்.

நன்மாறன் சிரித்தான். "நீ தினமும் உன்னோட முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறியா?" என்று கேட்டான்.

"தினமும் பார்க்கிறேன்"

"இன்னும் உனக்குக் காரணம் புரியலையா?"

"புரியலை"

"கந்தா, நெருப்பில் வாடிய பூக்கள் தம்மோட அழகை எல்லாம் இழக்கும், அதுபோலத்தான் உன்கிட்ட மாறாம இருக்கிற கோபத்தால உன் முகம் அழகையெல்லாம் இழந்திருக்கு. பொடி வைத்தாற்போல் சொன்னான் நன்மாறன்.

நன்மாறன் சொன்னதில் உண்மை இருக்கவே,

தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தத் தொடங்கினான் கந்தன், ஒரு மாத காலம் கடுமையான விரதம்போல் காத்தான். அன்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அஃது எத்துணை அழகாக இருந்தது தெரியுமா?

குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

- வெகுளாமை, குறள். 305
விளக்கம்

ஒருவன் தன்னைத் தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.