4th Standard Tamil Term 1 Chapter 2 Panai Mara Sirappu Lesson

4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara Sirappu

4 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 இயல் 2

பனைமரச் சிறப்பு

4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara sirappu

பருவம் 1 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - பனைமரச் சிறப்பு | 4th Tamil : Term 1 Chapter 2 : Panai Mara sirappu

2. பனைமரச் சிறப்பு

Panai Mara Sirappu Title Image

மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக் கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தனர். அது என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனர்.

அழகன்: தாத்தா, தாத்தா இது என்ன பழம்?
தாத்தா: இதுவா! இதுதான் பனம்பழம்
வண்ணமயில்: இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா
தாத்தா: ம்...தின்னலாம் வண்ணமயில். மிகச் சுவையாக இருக்கும். சத்து மிக்கது.
அழகன்: இந்தப் பனம்பழத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது தாத்தா..

தேசிய மாநில அளவிலான சமூக, உணர்வுபூர்வமான செய்திகளை இனங்கண்டு அவற்றின் மீது கருத்தாடல் செய்தல்

தாத்தா: சொல்கிறேன் தம்பி! பனம்பழம் பனைமரத்தில் காய்த்துப் பழுக்கும். பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது. அதனால் தான் பனைக்குக் கற்பகத்தரு என்ற பெயரும் உண்டு.
Parts of Palmyra Tree
வண்ணமயில்: ஆகா! பனைமரம் இவ்வளவு சிறப்பானதா? தாத்தா, நான் நுங்கு மட்டுமே உண்டுள்ளேன், இந்தப் பனை மரத்தால் நமக்கு வேறு என்ன பயன்?
தாத்தா: நுங்கும், பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன. பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது. மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.
Uses of Palm Tree
அழகன்: இத்தனை பயன்மிக்கதா பனை?
தாத்தா: ஆமாம், அழகா! அது மட்டுமல்ல நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவியது பனை ஓலைச்சுவடிகள்தாம்.
Palm Leaf Manuscript
வண்ணமயில்: அப்படியா!
தாத்தா: பனைமரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.
அழகன்: அடேங்கப்பா.....! இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்பா?
தாத்தா: பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து நீங்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.
Palm Leaf Toys
வண்ணமயில்: இத்தகு பயன்மிகு பனைமரத்தை இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லையே தாத்தா!
தாத்தா: நன்றாகக் கேட்டாயம்மா, சொல்கிறேன் கேளுங்கள். தமிழக இயற்கை வளத்தின் சான்றாக விளங்கும் பனைமரங்கள் எரிபொருளுக்காக வெட்டப்படுகின்றன. அதனால் அந்த மரத்தைச் சார்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன. "மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை", இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அழகன்: பனைமரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டோம் தாத்தா.
தாத்தா: அறிந்து கொண்டதோடு மட்டும் விட்டு விடாதீர்கள். பனையின் சிறப்பினை உங்களது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.
இருவரும்: கட்டாயமாகக் கூறுவோம் தாத்தா,
தாத்தா: மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே! தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் பயன்மிகு பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும். இதன் சிறப்புணர்ந்து நாம் பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றிப் பாதுகாக்கலாம்.
இருவரும்: அப்படியே செய்வோம்! பனைமரம் காப்போம் பயன்பல பெறுவோம். மிக்க நன்றி தாத்தா!
தாத்தா: மகிழ்ச்சி குழந்தைகளே! சென்று வாருங்கள்.

தமிழக அரசு சின்னங்கள்

அறிந்து கொள்வோம்

Tamil Nadu State Symbols
சின்னம் : திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
பாடல் : நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து
நடனம் : பரத நாட்டியம்
விலங்கு : வரையாடு
பறவை : மரகதப்புறா
மலர் : செங்காந்தள்
மரம் : பனை
விளையாட்டு : கபடி