3rd Science Term 2 Unit 1: Food | Samacheer Kalvi Guide

3rd Science Term 2 Unit 1: Food | Samacheer Kalvi Guide

3 ஆம் வகுப்பு அறிவியல்: இரண்டாம் பருவம் அலகு 1 - உணவு

பாடம் தலைப்பு

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

  • உணவில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகளை வகைப்படுத்துதல்
  • சரிவிகித உணவைப் பற்றி அறிதல்
  • ஒரு நாளின் பல்வேறு வேளைகளுக்கான உணவினை வேறுபடுத்தி அறிதல்
  • பல்வேறு இடங்களில் உள்ள உணவுப் பழக்க வழக்கங்களையும் வயதிற்கு ஏற்ற உணவு முறைகளையும் பற்றி அறிதல்
  • பாரம்பரிய உணவை அடையாளம் காணல் மற்றும் வீட்டுத் தோட்டத்தின் நன்மைகளை அறிதல்

ஆயத்தப்படுத்துதல்

பின்வரும் படத்தை உற்றுநோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

உணவுப் பொருள்கள்

அ) தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பொருள்கள் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆ) சத்தான உணவுப் பொருள்கள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இ) குறைந்த அளவே உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

I. உணவிலுள்ள ஊட்டச்சத்துகள்

சிந்திக்க:

நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் உணவு உண்ண வேண்டும்?

சில நேரங்களில் நீங்கள் உணவு உண்ணவில்லையெனில் என்ன நேரிடும்?

ஒவ்வொரு நாளும் நமக்கு பசி ஏற்படுவதால் நாம் உணவை உண்கிறோம். நமக்கு உணவு தேவைப்படுவதை பசி உணர்த்துகிறது.

நமக்கு உணவு ஏன் தேவைப்படுகிறது?

  • நாம் வேலை செய்வதற்கும் விளையாடுவதற்கும் தேவைப்படும் ஆற்றலை உணவு அளிக்கிறது.
  • நம் உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் உணவு அவசியமாகிறது.

நாம் பல்வேறு உணவு வகைகளை உண்கிறோம். அவற்றுள் சிலவற்றை பச்சையாகவும் சிலவற்றை சமைத்தும் உண்கிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. நம் உடலுக்கு கார்போஹைட்ரேட், புரதங்கள், கொழுப்புகள், உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), தாது உப்புகள் போன்ற ஐந்து முக்கிய ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

உலக உணவு தினம் அக்டோபர் 16 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

1. கார்போஹைட்ரேட்

நாம் வேலை செய்யவும் விளையாடவும் பிற செயல்களை மேற்கொள்ளவும் நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அவ்வாற்றலை கார்போஹைட்ரேட்டுகள் அளிக்கின்றன. அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, சர்க்கரைக் கட்டிகள் மற்றும் ரொட்டி போன்றவை கார்போஹைட்ரேட்டுகள் அடங்கிய உணவுப் பொருள்களாகும்.

கார்போஹைட்ரேட் உணவுகள்

2. புரதம்

நம் உடல் திசுக்களின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் புதுப்பித்தலில் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, புரதங்களை உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருள்கள் என்று கூறுகிறோம். எ.கா: மீன், பால், முட்டை, கொட்டைகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள்.

புரத உணவுகள்

3. கொழுப்பு

கொழுப்புகள் நமக்கு ஆற்றலை அளிக்கின்றன. இவை உடலின் ஆற்றலை சேமிப்பவையாக செயல்படுகின்றன. இவை குளிர்காலங்களில் நம் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. உடலில் சேகரமாகும் அதிகப்படியான கொழுப்பு உடல் எடை கூடுவதற்கு அல்லது மிகவும் பருமனாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது. பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், இறைச்சி, எண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்றவை கொழுப்பு அடங்கிய சில உணவுப் பொருள்களாகும்.

கொழுப்பு உணவுகள்

4. உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்)

நாம் நன்றாக வேலை செய்ய நம் உடலுக்கு உயிர்ச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவை நம் உடலை ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. இவை கேரட், ஆரஞ்சு, நெல்லிக்காய், பப்பாளி மற்றும் கீரை வகைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன.

வைட்டமின் உணவுகள்

5. தாது உப்புகள்

தாது உப்புகள் நம் உடலில் இரத்தம், எலும்பு, பல் போன்றவற்றின் உருவாக்கத்தில் உதவி புரிகின்றன. இவை உடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. எ.கா. அத்தி, பேரிக்காய், பூண்டு, வாழைப்பழம் மற்றும் ஆப்பிள்.

தாது உப்பு உணவுகள்

எழுதுவோமா!

உணவு வகைப்படுத்துதல்

ஆற்றல் அளிக்கும் உணவுப் பொருள்கள்:

1. அரிசி, 2. கோதுமை, 3. உருளைக்கிழங்கு, 4. ரொட்டி

உடலைப் பாதுகாக்கும் உணவுப் பொருள்கள்:

1. கீரை வகைகள், 2. ஆரஞ்சு, 3. நெல்லிக்காய்

உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுப் பொருள்கள்:

1. மீன், 2. முட்டை, 3. கொட்டைகள், 4. முளை கட்டிய தானியங்கள்

எச்சரிக்கையாய் இரு!

பெரும்பாலான குழந்தைகள் பர்கர், பீட்ஸா, சாக்லேட் போன்ற உடலுக்குத் தீமை தரும் உணவுப் பொருள்களை விரும்பி உண்பர். இவை குழந்தைகளின் உடல் எடையை வெகுவாக அதிகரிக்கும். எனவே இந்த உணவுப் பொருள்களைத் தவிர்த்து, சத்தான உணவுப் பொருள்களான முளைகட்டிய தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிக் கலவைகள் போன்றவற்றை உண்ண வேண்டும்.

நிரப்புவோமா!

அ. பின்வரும் உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் யாவை?

  1. சாதத்தில் கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்து காணப்படுகிறது.
  2. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு ஊட்டச்சத்து காணப்படுகிறது.
  3. முட்டையில் புரதம் ஊட்டச்சத்து காணப்படுகிறது.
  4. அத்திப் பழத்தில் மினரல் ஊட்டச்சத்து காணப்படுகிறது.
  5. கேரட்டில் விட்டமீன்கள் ஊட்டச்சத்து காணப்படுகிறது.

ஆ. பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.

ஊட்டச்சத்து அட்டவணை

II. சரிவிகித உணவு

நாம் உண்ணும் உணவில் அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான அளவில் கலந்திருந்தால் அதை சரிவிகித உணவு என்கிறோம். இதில் நார்ச்சத்தும் நீரும் அடங்கும். இது நம் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவு மற்றும் அவற்றின் மூலங்கள் உணவுக் கூம்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். மிகக்குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் உணவுக் கூம்பின் மேற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. சரிவிகித உணவிற்கான உணவுக் கூம்பு இங்கே காட்டப்பட்டுள்ளது.

உணவுக் கூம்பு

நம் உடலால் உறிஞ்ச இயலாத நார்ப்பொருளை செரிக்கப்படாத நார்க்கழிவு (Roughage) என்கிறோம். இது அவரை குடும்பத் தாவரங்கள், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் காணப்படுகிறது.

பால் ஒரு முழுமையான சரிவிகித உணவு ஆகும்.

தெரிந்து கொள்வோம்

• கேரட்டில் வைட்டமின்-A காணப்படுகிறது.

• தவிட்டில் வைட்டமின்-B காணப்படுகிறது.

• நெல்லிக்காயில் வைட்டமின்-C காணப்படுகிறது.

• பாலில் வைட்டமின்-D காணப்படுகிறது.

• சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின்-E காணப்படுகிறது.

• முட்டைக் கோஸில் வைட்டமின்-K காணப்படுகிறது.

கண்டறிவோமா!

இடம் மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, வார்த்தைகளைக் கண்டறிந்து கட்டத்தில் வட்டமிடுக. (ஒரு வார்த்தை உங்களுக்காக காட்டப்பட்டுள்ளது)

வார்த்தை விளையாட்டு
விடைகளைக் காண்க

றிய்காக - காய்கறி

உர்சயிச்த்து – உயிர்ச்சத்து

கப்தாஉபுள்து - தாதுஉப்புகள்

ல்பா - பால்

ர்நீ - நீர்

ய்நெ - நெய்

சிரிஅ - அரிசி

ட்முடை - முட்டை

ன்மீ - மீன்

III. ஒரு நாளுக்கான உணவு

ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில் நாம் உட்கொள்ளும் உணவே ஒரு நாளுக்கான உணவு ஆகும். நாம் ஒவ்வொரு நாளும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் உணவை உட்கொள்கிறோம்.

காவியாவும் சூரியாவும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் காலை 8.00 மணிக்கு பள்ளி செல்வதற்கு முன்பு, காலை உணவை உண்பார்கள். பொதுவாக அவர்களின் அம்மா இட்டலி, தோசை, முட்டையுடன் கூடிய ரொட்டி, கேழ்வரகுக் கூழ், இடியாப்பம், பூரி, ஆப்பம் மற்றும் பொங்கல் போன்ற உணவு வகைகளை காலை உணவாகத் தயாரித்து அளிப்பார்.

காலை உணவு

மதிய உணவு இடைவேளைக்காக 12.40 மணிக்கு, பள்ளி மணி ஒலிக்கிறது. காவியாவும் சூரியாவும் தங்கள் நண்பர்களுடன் மதிய உணவு உண்பதற்காக கைகளைக் கழுவி சாப்பிட அமர்ந்தார்கள். அப்போது அனைவரும் தரையில் துண்டை விரித்து, அதன்மேல் தட்டை வைத்து, அதில் தாங்கள் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சோறு, பழக்கலவை, கீரைகள், சாம்பார் சோறு, பிரியாணி, தக்காளி சோறு, காய்கறிக்கலவை, தயிர் சோறு, புளி சோறு மற்றும் தானியங்கள் போன்றவற்றை பகிர்ந்து உண்ணத் தொடங்கினார்கள்.

மதிய உணவு

காவியாவும் சூரியாவும் தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு உண்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் சப்பாத்தி, பால், பழங்கள் மற்றும் சில நாள்களில் இட்டலி, தோசை அல்லது சோறு போன்றவற்றை உண்பர்.

பதிலளிப்போமா!

படங்களில் உள்ள பல்வேறு செயல்களை உற்றுநோக்கி, கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

பல்வேறு செயல்கள்

1. எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவை? 2, 4 மற்றும் 5.

2. எந்தெந்த செயல்கள் உடல் நலத்திற்கு ஏற்றவையல்ல? 1 மற்றும் 3.

உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன் குறைந்தது 20 வினாடிகள் உங்கள் கைகளைக் கழுவுவதற்கு நீங்கள் செலவிட வேண்டும். இதற்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ பாடலை இரண்டு முறை பாடும் நேரம் சரியானதாக இருக்கும். இதனை நீங்கள் கைகழுவும்போது முயற்சித்துப் பாருங்களேன்.

IV. பல்வேறு இடங்களில் காணப்படும் உணவுப் பழக்க வழக்கங்கள்

ஒரு இடத்தில் உள்ள காலநிலை, பண்பாடு மற்றும் அங்கு கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பொறுத்து அங்குள்ள மக்களின் உணவுப் பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக, கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அளவில் கடல் உணவை உண்கிறார்கள். வெவ்வேறு பண்பாடு மற்றும் கலாச்சாரம் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடு நமது இந்தியா.

தென்னிந்திய உணவு

தென்னிந்திய உணவு

தென்னிந்தியர்கள் அவர்களின் உணவுக்காக அரிசி, பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளனர். அவர்கள் இட்டலி, சாம்பார், கொழுக்கட்டை மற்றும் பாயாசம் போன்றவற்றை உணவுக்காக தயாரித்து உண்கிறார்கள்.

வட இந்திய உணவு

வட இந்திய உணவு

வட இந்தியர்கள் அவர்களின் உணவுக்காக கோதுமை, வெங்காயம், பால் மற்றும் வெல்லம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளனர். எனவே, அவர்கள் சப்பாத்தி, பரோட்டா மற்றும் லஸ்ஸி போன்ற உணவைத் தயாரித்து உண்கிறார்கள்.

பல்வேறு வயதினருக்கான உணவுப் பழக்கங்கள்

ஒரு நபருக்குத் தேவையான உணவின் அளவு அவரது வயதைப் பொறுத்து அமைகிறது. இத்தேவையானது ஒருவரது வயது மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து மாறுபடுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின்போது அதிக அளவு ஆற்றல் தேவைப்படும். குழந்தைகள் பல்வேறு வகையான உணவை உண்ண வேண்டும். வயதிற்கேற்ற நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக பின்வரும் உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.

பல்வேறு வயதினருக்கான உணவு

குழந்தைகள்: பால், தேன், பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், முட்டை, முளைகட்டிய தானியங்கள் மற்றும் மீன்.

வளரிளம் பருவத்தினர்: அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்கள், கடல் உணவுகள், கீரைகள், பால் மற்றும் பால் பொருள்கள்.

வயது முதிர்ந்தோர்: நார்ச்சத்து உணவுகள், குறைந்த அளவு கொழுப்புத் தன்மை கொண்ட பால் பொருள்கள், குறைந்த அளவு உப்பு கொண்ட உணவுப் பொருள்கள், கேழ்வரகு, தினை , கம்பு.

விடையளிப்போமா!

தமிழ்நாட்டின் சில முக்கிய உணவு வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு ஏற்ற உணவு வகைகளை எடுத்து எழுதுக.

(அல்வா, முறுக்கு, பலாப்பழம், வாசனை பொருள்கள், கடலை மிட்டாய், மாம்பழம், தேனீர் )

  1. மணப்பாறை : ___________
  2. நீலகிரி : ___________
  3. பண்ருட்டி : ___________
  4. கொல்லிமலை : ___________
  5. திருநெல்வேலி : ___________
  6. கோவில்பட்டி : ___________
  7. சேலம் : ___________
விடைகளைக் காண்க
  1. மணப்பாறை : முறுக்கு
  2. நீலகிரி : தேனீர்
  3. பண்ருட்டி : பலாப்பழம்
  4. கொல்லிமலை : வாசனை பொருள்கள்
  5. திருநெல்வேலி : அல்வா
  6. கோவில்பட்டி : கடலை மிட்டாய்
  7. சேலம் : மாம்பழம்

கலந்துரையாடுவோமா!

படங்களை உற்றுநோக்கு. இதில் யாருக்கு அதிக சத்தான உணவு தேவைப்படுகிறது. ஏன்?

மன உழைப்பு vs உடல் உழைப்பு

ஆ-வுக்குச் சத்தான உணவு தேவைப்படுகிறது.

காரணம்: அ-வுக்கு மன உழைப்பு (மூளை சார்ந்தது). ஆனால் ஆ-வுக்கு உடல் உழைப்பு. எனவே சத்தான உணவு தேவைப்படுகிறது.

V. பாரம்பரிய உணவு

நம்முடைய முன்னோர்கள் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டு நலமாக வாழ்ந்து வந்தனர். கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு மற்றும் கம்பு போன்றவை இயற்கையில் கிடைக்கும் சில உணவுப் பொருள்கள் ஆகும்.

பாரம்பரிய தானியங்கள்

கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு வகைகள்: கேழ்வரகுக் களி, தோசை, அடை, சேமியா மற்றும் ரொட்டி.

கேழ்வரகு உணவுகள்

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் கேழ்வரகை சாப்பிடுவீர்களா? அனைத்து வகை தானியங்களுள் பொது கேழ்வரகே உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகச் சிறந்ததாகும்.

வீட்டுத் தோட்டம்

சமையலுக்குப் பயன்படும் பொருள்களை வீட்டில் உள்ள சிறிய இடங்களில் பயிரிடுவதையே வீட்டுத் தோட்டம் அல்லது சமையலறைத் தோட்டம் அல்லது சத்தான தோட்டம் என்கிறோம். எ.கா. தக்காளி, கத்தரி, புடலங்காய், அவரை, வெண்டைக்காய் போன்ற காய்கறிகள், வாழைப்பழம், எலுமிச்சை போன்ற பழங்கள் மற்றும் சில செடி வகைகள்.

வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம்

  • இது மிக எளிமையான முறை ஆகும்.
  • வீணாகும் நீர் இதனால் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
  • பணத்தை சேமிக்கலாம்.
  • காய்கறிகள் தரமானதாகவும் நல்ல சத்தானதாகவும் இருக்கும்.

நாம் செய்வோமா!

அ. கீழ்க்காணும் வட்டங்களில் பாரம்பரிய உணவிற்கு 'பச்சை' வண்ணமும் நவீன கால உணவிற்கு 'சிவப்பு’ வண்ணமும் தீட்டுக.

பாரம்பரிய மற்றும் நவீன கால உணவு
பாரம்பரிய உணவு (பச்சை)

கேழ்வரகுக் கூழ், தினை, கேழ்வரகுக் களி, சாமை சோறு, கம்பு, கேழ்வரகு அடை

நவீன கால உணவு (சிவப்பு)

பீட்சா, பரோட்டா, நூடுல்ஸ், பர்கர், பிரியாணி, வறுவல்


ஆ. நீர் புட்டி / தேங்காய் ஓட்டினைப் (கொட்டாங்குச்சி) பயன்படுத்தி உனது வகுப்பறையில் சிறிய தோட்டம் ஒன்றை அமைக்கவும்.

சிறிய தோட்டம்