10th Tamil - Half Yearly Exam 2024 - Original Question Paper | Theni District

10th Tamil Half Yearly Exam 2024 Question Paper & Solutions

அரையாண்டுப் பொதுத் தேர்வு - 2024

வகுப்பு: பத்தாம் வகுப்பு (10th Standard) | பாடம்: தமிழ் (Tamil)

மாவட்டம்: தேனி (Theni District) | மதிப்பெண்கள்: 100

10th Tamil Half Yearly Exam 2024 Question Paper
10th Tamil Half Yearly Exam 2024 Question Paper 10th Tamil Half Yearly Exam 2024 Question Paper 10th Tamil Half Yearly Exam 2024 Question Paper 10th Tamil Half Yearly Exam 2024 Question Paper
பகுதி - I (மதிப்பெண்கள்: 15)

i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
  • அ) குலை வகை
  • ஆ) மணி வகை
  • இ) கொழுந்து வகை
  • ஈ) இலை வகை
விடை: ஆ) மணி வகை
2.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
  • அ) துலா
  • ஆ) சீலா
  • இ) குலா
  • ஈ) இலா
விடை: ஈ) இலா
3.
'மாலவன் குன்றம் போனாலென்ன வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' - மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
  • அ) திருப்பதியும் திருத்தணியும்
  • ஆ) திருத்தணியும் திருப்பதியும்
  • இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
  • ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை: அ) திருப்பதியும் திருத்தணியும்
4.
“பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
  • அ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
  • ஆ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
  • இ) கடல் நீர் ஒலித்தல்
  • ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
விடை: ஆ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
5.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
  • அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  • ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
  • இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  • ஈ) அங்கு வறுமை இல்லாததால்
விடை: ஈ) அங்கு வறுமை இல்லாததால்
6.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று __________ வேண்டினார்.
  • அ) கருணையன் எலிசபெத்துக்காக
  • ஆ) எலிசபெத், தமக்காக
  • இ) கருணையன், பூக்களுக்காக
  • ஈ) எலிசபெத், பூமிக்காக
விடை: அ) கருணையன் எலிசபெத்துக்காக
7.
இங்கு நகரப் பேருந்து நிற்குமா என்று வழிப்போக்கர் கேட்பது __________ வினா. அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியது __________ விடை.
  • அ) ஐயவினா, வினா எதிர் வினாதல்
  • ஆ) அறிவினா, மறை விடை
  • இ) கொளல் வினா, இனமொழி விடை
  • ஈ) அறியா வினா, சுட்டு விடை
விடை: ஈ) அறியா வினா, சுட்டு விடை
8.
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல் __________ திணை.
  • அ) வஞ்சித்திணை
  • ஆ) காஞ்சித்திணை
  • இ) வாகைத் திணை
  • ஈ) நொச்சித் திணை
விடை: ஆ) காஞ்சித்திணை
9.
‘கத்துங்குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்’ என்ற பாரதியார் பாடலில் அமைந்துள்ளது
  • அ) பால் வழுவமைதி
  • ஆ) கால வழுவமைதி
  • இ) மரபு வழுவமைதி
  • ஈ) திணை வழுவமைதி
விடை: இ) மரபு வழுவமைதி
10.
கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது
  • அ) கூற்று (1) சரி (2) தவறு
  • ஆ) கூற்று (1) மற்றும் (2) தவறு
  • இ) கூற்று (1) தவறு (2) சரி
  • ஈ) கூற்று (1) மற்றும் (2) சரி
விடை: ஈ) கூற்று (1) மற்றும் (2) சரி
11.
“கானடை” என்பதைப் பிரித்தால் பொருந்தாத தொடரைத் தேர்க.
  • அ) கான் அடை - காட்டைச் சேர்
  • ஆ) கான் நடை - காட்டுக்கு நடத்தல்
  • இ) கால்நடை - காலால் நடத்தல்
  • ஈ) கால் உடை - காலால் உடைத்தல்
விடை: ஈ) கால் உடை - காலால் உடைத்தல்

பாடலைப் படித்து பின் வரும் வினாக்களுக்கு விடை தருக.
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று

12.
இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
  • அ) நீதிவெண்பா
  • ஆ) புறநானூறு
  • இ) வெற்றிவேற்கை
  • ஈ) கொன்றைவேந்தன்
விடை: அ) நீதிவெண்பா

13.
பாடலின் சீர் மோனைச் சொற்கள்
  • அ) அருளை, அருத்துவதும்
  • ஆ) அருளை, அறிவை
  • இ) அகற்றி, அருந்துணையாய்
  • ஈ) அறிவை, அகற்றி
விடை: ஆ) அருளை, அறிவை

14.
அருந்துணையாய் - இச்சொல்லைப் பிரித்தால்
  • அ) அருந்துணை + யாய்
  • ஆ) அருந்து + துணையாய்
  • இ) அருமை + துணையாய்
  • ஈ) அரு + துணையாய்
விடை: இ) அருமை + துணையாய்

15.
உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது
  • அ) அன்பு
  • ஆ) கல்வி
  • இ) மயக்கம்
  • ஈ) செல்வம்
விடை: ஆ) கல்வி
பகுதி - II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி. (வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்)

16.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ) செயற்கை நுண்ணறிவுக் கருவியான வாட்சன் சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

விடை: செயற்கை நுண்ணறிவுக் கருவியான வாட்சன் எதனைப் பயன்படுத்தி நோயை கண்டுபிடித்தது? (அல்லது) வாட்சன் சில நிமிடங்களில் எதனைக் கண்டுபிடித்தது?

ஆ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

விடை: உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
17.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
விடை:
• வாருங்கள்!
• அமருங்கள்!
• நலமாக இருக்கிறீர்களா?
• தண்ணீர் அருந்துங்கள்!
• சாப்பிட்டுச் செல்லுங்கள்!
18.
குறிப்பு வரைக : அவையம்
விடை: அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. இம்மன்றங்கள் 'அவையம்' என்று அழைக்கப்பட்டன. இதனை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
19.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
விடை: மருத்துவத்தில் மருந்துடன் மருத்துவர் நோயாளியிடம் காட்டும் அன்பும், "நோய் குணமாகிவிடும்" என்று அளிக்கும் நம்பிக்கையும் நோயைக் குணப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
20.
“காய்மணியாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” உவமை உணர்த்தும் கருத்து யாது?
விடை: இளம் பயிர் நெல்மணியாக வளர்வதற்கு முன்னரே வெயிலில் காய்ந்து வாடுவதைப் போல, தானும் (கருணையன்) தன் தாயின் இறப்பால் வாடுவதாகக் கூறுகிறார். இது இளமையில் ஏற்படும் துயரத்தை உணர்த்துகிறது.
21.
“உலகு” என முடியும் திருக்குறளை எழுதுக
விடை:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

22.
பாவின் வகைகளையும் அதன் ஓசைகளையும் எழுதுக.
விடை:
1. வெண்பா - செப்பலோசை
2. ஆசிரியப்பா - அகவலோசை
3. கலிப்பா - துள்ளலோசை
4. வஞ்சிப்பா - தூங்கலோசை
23.
தொழிற்பெயருக்கும், வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டினைக் கூறு.
விடை:
தொழிற்பெயர்:
1. வினையை உணர்த்தும்.
2. காலம் காட்டாது.
(எ.கா: பாடுதல்)

வினையாலணையும் பெயர்:
1. தொழில் செய்யும் கருத்தாவை உணர்த்தும்.
2. காலம் காட்டும்.
(எ.கா: பாடியவன்)
24.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களை பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
சிறு - சீறு
விடை: சிறு பாம்பு சீறியது.
25.
கலைச்சொல் தருக:
அ) Screenplay - திரைக்கதை
ஆ) Folk literature - நாட்டுப்புற இலக்கியம்
26.
பொருத்தமான நிறுத்தற்குறியிடுக.
எதற்காக எழுதுகிறேன் என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால் நான் கண்டிக்கப்படவும் திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்
விடை: "எதற்காக எழுதுகிறேன்?" என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால், நான் கண்டிக்கப்படவும் திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன்.
27.
தொகைச் சொற்களை விரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக.
அ) முப்பால் - அறம், பொருள், இன்பம் (௩)
ஆ) ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை (௫)
28.
பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்
விடை: அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்
அமர் - பகுதி
த் - சந்தி (ந் ஆனது விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
பகுதி - III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு - 1

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளி.

29.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
விடை:
ஆம், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை மேம்படுத்துகின்றன:
1. மருத்துவம்: செயற்கை உறுப்புகள், நவீன சிகிச்சைகள் மூலம் ஆயுட்காலம் கூடியுள்ளது.
2. தகவல் தொடர்பு: இணையம் மற்றும் கைப்பேசி மூலம் உலகம் சுருங்கிவிட்டது.
3. போக்குவரத்து: விரைவான பயணங்கள் சாத்தியமாகியுள்ளன.
அதே சமயம், சுற்றுச்சூழல் மாசு, சோம்பேறித்தனம் போன்ற தீமைகளும் உள்ளன. இவற்றைத் தவிர்த்து நன்மைகளைப் பயன்படுத்தினால் மனித வாழ்வு மேம்படும்.
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ‘மலைபடுகடாம்’ 583 அடிகளைக் கொண்ட இது கூத்தராற்றுப்படை எனவும் அழைக்கப்படுகிறது. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதன் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாய்ந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

i) மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது?
விடை: 583 அடிகள்.
ii) மலைபடுகடாமின் மற்றொரு பெயர் என்ன?
விடை: கூத்தராற்றுப்படை.
iii) மலைபடுகடாம் என இந்நூல் அழைக்கப்படக் காரணம் என்ன?
விடை: மலையை யானையாக உருவகம் செய்து, அதில் எழும் ஓசைகளை யானையின் மதம் (கடாம்) என்று விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
31.
மொழிபெயர்ப்பின் பயன்கள் ஐந்தினைக் கூறு:
விடை:
1. பிற மொழி இலக்கியங்களை அறிய உதவுகிறது.
2. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியலைத் தாய்மொழியில் கற்க முடிகிறது.
3. உலக நாடுகளுக்கிடையேயான உறவை வளர்க்கிறது.
4. பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
5. மொழியின் வளம் பெருகுகிறது.

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. (34-வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்)

32.
தமிழன்னை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
விடை:
1. அன்னை மொழியாக விளங்குதல்.
2. பழமைக்கும் பழமையாய்த் திகழ்தல்.
3. பாண்டியன் மகளாய்த் திகழ்தல்.
4. திருக்குறளின் பெருமைக்குரியவளாய் இருத்தல்.
5. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கிய வளங்களைக் கொண்டிருத்தல்.
33.
இரண்டாம் இராசராச சோழன் எவ்வாறெல்லாம் இருந்ததாக மெய்க்கீர்த்தி கூறுகிறது?
விடை:
1. யானைகள் மட்டுமே பிணிக்கப்பட்டன; மக்கள் பிணிக்கப்படவில்லை.
2. சிலம்புகள் மட்டுமே புலம்பின; மக்கள் புலம்பவில்லை.
3. ஓடைகள் மட்டுமே கலக்கமடைந்தன; மக்கள் கலக்கமடையவில்லை.
4. மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டன; மக்கள் வடுபடவில்லை.
இவ்வாறு நாட்டில் வறுமையோ, துன்பமோ, பகையோ இல்லை என மெய்க்கீர்த்தி கூறுகிறது.
34.
அ) ‘நவமணி’ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) ‘விருந்தினனாக’ எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
ஆ) காசிக்காண்டம் பாடல்:
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்தற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின்செல்வதாதல்
பரிந்து நன்முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

பிரிவு - 3

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

35.
விடை வகைகளைக் கூறி ஏதேனும் இரண்டு வகை விடைகளை உதாரணத்துடன் விளக்கு.
விடை:
விடை 8 வகைப்படும். (சுட்டு, மறை, நேர், ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி).

1. சுட்டு விடை: ஒன்றைச் சுட்டிக் கூறி விடையளித்தல்.
எ.கா: சென்னைக்கு வழி யாது? "இது" என்று சுட்டிக் காட்டுதல்.

2. மறை விடை: மறுத்துக் கூறுதல்.
எ.கா: கடைக்குப் போவாயா? "போகமாட்டேன்" எனல்.
36.
நிரல்நிறையணியைச் சான்றுடன் விளக்கு.
விடை:
விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.

சான்று:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."

பொருத்தம்: இக்குறளில் அன்பு, அறன் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பு, பயன் ஆகிய சொற்களோடு முறையே இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது.
37.
அலகிட்டு வாய்பாடு தருக: அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
சீர் அசை வாய்பாடு
அஞ்சும் நேர் நேர் தேமா
அறியான் நிரை நேர் புளிமா
அமைவிலன் நிரை நிரை கருவிளம்
ஈகலான் நேர் நிரை கூவிளம்
பகுதி - IV (மதிப்பெண்கள்: 25)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

38.
அ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)
ஆ) கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
விடை குறிப்பு (அ):
குலேச பாண்டியன் அவையில் இடைக்காடனார் கவிதை பாடினார். மன்னன் அவரை அவமதித்தான். மனம் வருந்திய இடைக்காடனார் சிவபெருமானிடம் முறையிட்டார். இறைவன் அவர் பொருட்டு, கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி வடதிருஆலவாயில் சென்று தங்கினார். மன்னன் தன் பிழையை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோரினான். இறைவன் மீண்டும் கோவிலுக்குத் திரும்பினார். இது இறைவன் புலவருக்கு அளித்த மரியாதையைக் காட்டுகிறது.
39.
அ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)
ஆ) ‘மரம் இயற்கையின் வரம்’ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
விடை குறிப்பு (ஆ):
இடம்: மதுரை
தேதி: 20.12.2024

அன்புள்ள நண்பா,
வணக்கம். நலம். நலமறிய ஆவல். அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உன் எழுத்தாற்றலும், சூழலியல் மீதான அக்கறையும் உன்னை மென்மேலும் உயரச் செய்யும். தொடர்ந்து எழுது. வாழ்த்துகள்.

இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
(பெயர்).

உறைமேல் முகவரி:
பெறுநர்,
(நண்பன் பெயர்),
சென்னை.
40.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Digital Classroom Scene
விடை:
வெட்டிய மரத்தின் மீதமர்ந்து
மரம் வளர்க்கும் கல்வி
"மரம் சாய்ந்தால், மனிதனும் சாய்வான்.
என் மூச்சின்றி, உன் வாழ்வில்லை.
விழித்திடு மனிதா,
உன் சந்ததியின் மூச்சைக் காத்திடு."
41.
ரவி தன் தந்தை முருகனிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான்... படிவத்தை நிரப்புக.
நூலக உறுப்பினர் படிவம்
பெயர்: ரவி
தந்தை பெயர்: முருகன்
பிறந்த தேதி: --.--.----
முகவரி: 14, பாரதி தெரு, ஜமால் புரம், ஊசூர், வேலூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: ----------
உறுப்பினர் கட்டணம்: ரூ. 500
இடம்: வேலூர்
தேதி: --.--.----

(கையொப்பம்)
ரவி
42.
அ) கல்வெட்டுகள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க : If you talk to a man in a language, he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes into his heart. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going.
விடை (ஆ):
ஒருவனுக்குப் புரியும் மொழியில் நீ பேசினால், அது அவன் அறிவை எட்டும். ஆனால் அவனது தாய்மொழியில் பேசினால், அது அவன் இதயத்தைத் தொடும். மொழியே ஒரு கலாச்சாரத்தின் வரைபடம். அது மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும், எங்கு செல்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.

43.
அ) பன்முகக் கலைஞர் :
போராட்டக் கலைஞர் - பேச்சக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ் கலைஞர் - கவிதைக் கலைஞர் ஆகிய தலைப்புகள் கொண்டு ஒரு கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.
விடை குறிப்பு (அ):
முன்னுரை: கலைஞர் கருணாநிதி அவர்களின் பன்முகத்தன்மையை விளக்குதல்.
போராட்டக் கலைஞர்: சிறுவயது முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், சமூக நீதிப் போராட்டங்களில் பங்கு.
பேச்சக் கலைஞர்: அடுக்குமொழி வசனங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர்.
நாடக/திரைக் கலைஞர்: பராசக்தி போன்ற படங்களுக்கு வசனம் எழுதி திரையுலகில் புரட்சி செய்தவர்.
இயற்றமிழ்/கவிதை: சங்கத் தமிழ், குறளோவியம் போன்ற நூல்கள் மற்றும் கவிதைகள் படைத்தவர்.
முடிவுரை: அரசியலிலும் கலையிலும் ஒரு சேரப் பயணித்த வரலாற்று நாயகர்.
44.
அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனிதநேயத்தை விவரிக்கவும்.
(அல்லது)
ஆ) அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
விடை குறிப்பு (அ):
இராமானுசர், தன் குருவான திருக்கோட்டியூர் நம்பியிடம் "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தைக் கற்றார். இம்மந்திரத்தை மற்றவர்களுக்குச் சொன்னால் தனக்கு நரகம் கிடைக்கும் என்று தெரிந்தும், "நான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்" என்ற உயரிய நோக்கில் கோபுரத்தின் மீதேறி அனைவருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். இது அவரின் உயர்ந்த மனிதநேயத்தைக் காட்டுகிறது.
45.
அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்கு சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
(அல்லது)
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை - விண்வெளியில் தமிழரின் அறிவு - கல்பனா சாவ்லா - விண்வெளிப் பயணம் - பெருமைகள் - முடிவு - விண்ணியலில் வருங்காலத்தில் செய்ய வேண்டியவை - முடிவுரை.
விடை குறிப்பு (ஆ):
முன்னுரை: விண்வெளித் துறையில் தமிழர்களின் மற்றும் இந்தியர்களின் சாதனைகள்.
கல்பனா சாவ்லா: ஹரியானாவில் பிறந்து விண்வெளி வீராங்கனையாக உயர்ந்தவர். கொலம்பியா விண்கலத்தில் பயணித்து ஆய்வு செய்தார்.
விண்வெளிப் பயணம்: பல மணி நேரம் விண்வெளியில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். பூமிக்குத் திரும்பும் போது விபத்தில் காலமானார்.
பெருமைகள்: இந்தியப் பெண்களுக்கு ஒரு உந்துசக்தியாகத் திகழ்ந்தார்.
வருங்காலம்: விண்வெளித் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
முடிவுரை: கல்பனா சாவ்லாவின் கனவை நனவாக்குவோம்.