அலகு 3 : அமைப்புகள்
ஆசிரியருக்கான குறிப்பு : ஆசிரியர் பாடலைப் பாடக் குழந்தைகளை ஊக்குவித்தல் வேண்டும். குழந்தைகளுடன் சேர்ந்து ஆசிரியர் பாடலைச் செய்கைகளோடு பாட வேண்டும்.
ஒலிகளில் அமைப்புகள்
பயணம் செய்வோம்
போகும் வழியெல்லாம் ...
மாட்டு வண்டியின் சத்தம்
கட முட கட கட முட கட கட முட கட
மாட்டு வண்டியின் சத்தம் கட முட கட
போகும் வழியெல்லாம் ....
குதிரை வண்டியின் சத்தம்
டக் டக் டிக் டக் டக் டிக் டக் டக் டிக்
குதிரை வண்டியின் சத்தம் டக் டக் டிக்
போகும் வழியெல்லாம் ....
மிதிவண்டி மணிச் சத்தம்
ட்ரிங் கிளிங் ட்ரிங் ட்ரிங் கிளிங் ட்ரிங் ட்ரிங் கிளிங் ட்ரிங்
மிதிவண்டி மணிச் சத்தம் ட்ரிங் கிளிங் ட்ரிங்
போகும் வழியெல்லாம் ....
மோட்டார் வண்டியின் சத்தம்
டப்டப்டுப் டப்டப்டுப் டப்டப்டுப்
மோட்டார் வண்டியின் சத்தம் டப்டப்டுப்
போகும் வழியெல்லாம் ..
தொடர் வண்டியின் சத்தம்
சிக்கு புக்கு சிக் சிக்கு புக்கு சிக் சிக்கு புக்கு சிக்
தொடர் வண்டியின் சத்தம் சிக்கு புக்கு சிக்
போகும் வழியெல்லாம் ......
கலைச் சொற்கள் : ஒலிகள், மிதிவண்டி, தொடர் வண்டி
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் பாடலைப் பாடக் குழந்தைகளை ஊக்குவித்தல் வேண்டும். குழந்தைகளுடன் சேர்ந்து ஆசிரியர் பாடலைச் செய்கைகளோடு பாட வேண்டும்.
கற்றல்
ஒலி அமைப்புகளை உற்று நோக்கி மீண்டும் செய்க.
மேலே உள்ளவாறு பல வழிகளில் ஒலி அமைப்புகளை உருவாக்கலாம்.
செய்து பார்
வேறுபட்ட எண்ணிக்கையில் கை தட்டுதல், மேசை தட்டுதல், சொடுக்குதல் வழியாக ஒலி அமைப்புகளை நீங்களே உருவாக்குங்கள்.
கூடுதலாக அறிவோம்
இசை என்பது ஓர் ஒழுங்கமைவில் பல்வேறு இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலி அமைப்புகளே ஆகும்.
செயல்பாடு
பாத்திரங்களைக் கொண்டு ஒலி அமைப்புகளை உருவாக்குதல்
வழிமுறை :
* குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரிக்கவும்.
* முதல் குழுவில் உள்ள குழந்தைகள் தட்டையும், கரண்டியையும் இரண்டாம் குழுவில் உள்ள குழந்தைகள் டிபன் பாக்சையும், கரண்டியையும் எடுத்துக்கொள்ளவும்.
* ஆசிரியர் 1, 3 எனக் கூறினால், முதல் குழு ஒரு முறையும் இரண்டாம் குழு மூன்று முறையும் பாத்திரத்தைக் கரண்டியால் தட்டி ஒலி எழுப்ப வேண்டும். இவ்வாறு ஆசிரியர் அடுத்த இரு எண்களைக் கூறும் வரை இது போலத் தொடரலாம்.
முயன்று பார்
என் சொந்த இசை
அருகாமையில் கிடைக்கும் பொம்மைகள், குச்சிகள் ஆகியவற்றைக்கொண்டு உங்களுக்கான ஒலி அமைப்புகளை உருவாக்குக.
மகிழ்ச்சி நேரம்
நமக்குச் சொந்தமான இசைக்கருவியைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைக் கொண்டு நாமே உருவாக்குவோம்.
படி 1
ஒரு டின், பலூன், கத்தரிக்கோல் இரப்பர் பேண்ட் மற்றும் 2 குச்சிகளை எடுத்துக்கொள்வோம்.
படி 2
பலூனைப் படத்தில் உள்ளவாறு வெட்டவும்
படி 3
டின்னின் மீது பலூனைப் பொருத்தவும்.
படி 4
உங்களுக்குப் பிடித்தமான ஒலி அமைப்பை உருவாக்கி நண்பர்களுடன் பகிரவும்.