Ettuthokai Noolgal with Etymology | Sangam Literature Explained | Iyal 1 Karpavai Katrapin

இயல் 1, கற்பவை கற்றபின் - எட்டுத்தொகை நூல்கள் பெயர்க்காரணத்துடன்

இயல் 1, கற்பவை கற்றபின்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை.

இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

எட்டுதொகை நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது; 'நல்' என்னும் அடைமொழி பெற்ற நூல்; நானூறு அகத்திணைப் பாடல்களைக் கொண்டது; பன்னாடு தந்த மாறன் வழுதியால் தொகுக்கப்பட்டது.

குறுந்தொகை

குறைந்த அடிகள் கொண்டதால் குறுந்தொகை எனப்படுகிறது; 'நல்ல' என்னும் அடைமொழி பெற்றது; உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்; நானூறு பாடல்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ. அகம் பற்றியது.

ஐங்குறுநூறு

குறுகிய அடிகளால் திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐநூறு பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐங்குறுநூறு எனப்படுகிறது; ஆசிரியப்பாவால் ஆனது; மருதத் திணை முதலில் வைக்கப்பட்டுள்ளது; தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

பதிற்றுப்பத்து

சேரமன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிப் பத்துப்பத்துப் பாடல்களாக நூறு பாடல்களைக் கொண்டதால் 'பதிற்றுப்பத்து' எனப்படுகிறது. முதல் பத்தும் பத்தாவது பத்தும் கிடைக்கவில்லை. புறம் பற்றியது.

பரிபாடல்

பரிபோல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூலாதலால் 'பரிபாடல்' எனப்படுகிறது. 'ஓங்கு' என்னும் அடைமொழி பெற்றது. இருபத்தைந்து அடி முதல் நானூறு அடி வரையுள்ள எழுபது பாடல்களைக் கொண்டது. திருமால், முருகன், கொற்றவை, வையை, மதுரை பற்றி அகமும் புறமும் கலந்த பாடல்களால் ஆனது.

கலித்தொகை

கலிப்பாவால் பாடப்பட்டதால் 'கலித்தொகை' எனப்படுகிறது; 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்னும் அடைமொழி பெற்றது. நூற்றைம்பது பாடல்களைக் கொண்டது; ஐந்திணைப் பாடல்களால் ஆனது.

அகநானூறு

அகம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது; நெடுந்தொகை எனப்படுகிறது; தொகுத்தவர் உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதி.

புறநானூறு

புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. பழந்தமிழரின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது.