Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.5 தண்ணீர்
February 14, 2025
Students can download the 9th Tamil Chapter 2.5 தண்ணீர் Questions and Answers, Summary, and Notes. The Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you revise the complete Tamil Nadu State Board New Syllabus, complete homework assignments, and score high marks in board exams.
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 2.5 தண்ணீர்
கற்பவை கற்றபின்
Question 1. உலகில் நீர் இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கற்பனை செய்து உங்கள் கருத்துகளை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
கற்பனைக் கதை
முன்னுரை
‘நீர் இன்று அமையாது உலகு’ என்று அறுதியிட்டுக் கூறினார் திருவள்ளுவர். நம் முன்னோரின் வாழ்க்கைக் களஞ்சியமாம் இலக்கியங்களும் இதையே வலியுறுத்தி வந்தன. இன்று நீர் நெருக்கடி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. நீர் இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை இங்கு சிந்திக்கலாம்.
உலகிலும் உடலிலும் மூன்று பகுதி நீர் உள்ளது. ஆனால், வாழும் மக்களுக்குப் போதியளவு நீர் கிடைக்காமல் போராடும் நிலை உள்ளது. மழையே உணவாகவும், உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதற்கும் பயன்படுகிறது என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார். ஒரு கிலோ அரிசி பெற 2700 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும், பிற பயன்பாடுகள் பெருகப் பெருகவும் வானம் வறண்டு கொண்டே இருக்கிறது. பருவமழை பெய்யாமல் பொய்த்துப் போகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது. வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நிலத்தடி நீர் வற்றிக் கொண்டே இருக்கிறது.
தண்ணீர் விற்பனைக்கே
“தாகத்திற்குத் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை வந்தபோதே, தண்ணீர் மக்களின் தேவைக்கு அல்ல” என்ற நிலை வந்துவிட்டது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் பிற மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. நதிகள் நாடுகளை இணைக்கின்றன. ஆனால், தண்ணீரால் மாநிலங்களை இணைக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
தண்ணீர்ப் போர்
உலகின் பெரும்பாலான மோதல்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் நிகழ்கின்றன. “இனி அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்” என்றாகிவிட்டது. இயற்கையின் பாதகமான சூழ்நிலை மட்டும் இதற்குக் காரணமல்ல. நீர் மேலாண்மையில் நாம் செய்துள்ள பெருந்தவறுகளே இன்றைய நீர் நெருக்கடிக்குக் காரணம் என்று ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஆழ்குழாய்க் கிணறுகளின் சாதனை, நிலத்தடி நீர் ஆதாரங்களை அழித்துவிட்டது.
நிறைவுரை
நீர் மேலாண்மையில் புதிய முன் முயற்சிகளின் வாயிலாகவே நீர் நெருக்கடிக்குத் தீர்வுகளைக் கண்டறிய முடியும். நீர் ஆதாரங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக, அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். இது பொது நியதி.
”கடைசி மரம் வெட்டப்படும் போதும்,
கடைசிச் சொட்டுத் தண்ணீர் காலியாகும் போதும்தான்
தெரியும் இந்த மனித சமூகத்திற்கு,
பணத்தைத் தின்ன முடியாது என்று.”
Question 2. பீங்… பீங்… என்ற சத்தத்துடன் தண்ணீர் வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அம்மா குடங்களுடன் ஓடிச்சென்று வரிசையில் நின்றாள். அப்போது கருமேகங்கள் திரண்டன… கதையைத் தொடர்ந்து எழுதி நிறைவு செய்க.
தண்ணீர் வாகனம் தூசியைக் கிளப்பிக் கொண்டு வேகமாக வந்து நின்றது. கண்ணம்மா, கையில் இரண்டும் கக்கத்தில் இரண்டுமாகக் குடங்களைக் கொண்டு வந்து வரிசையில் போட்டாள். தெருவில் உள்ள இளம் பெண்கள் முதல் பாட்டிகள் வரை அனைவரும் வந்துவிட்டனர்.
வானம் மேகமூட்டத்துடன் கறுத்து நின்றது. ஈரக் காற்றுடன் புயல் அடிப்பது போலச் சுழன்று அடித்தது. வாகனத் தண்ணீரையும் மழைத் தண்ணீரையும் சேர்த்துப் பிடித்தார்கள். சூரப்பட்டி இதுவரையிலும் இப்படிப்பட்ட மழையைக் கண்டதில்லை. காற்று நின்றதால் பேய்மழையாகப் பெய்தது.
எல்லோரும் காளியம்மன் கோவிலுக்குள் நின்று பேசிய பேச்செல்லாம் சத்தியம் செய்தது போல இருந்தது. “ஆற்றில் மணல் அள்ளியதால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதில்லை,” இது ஆப்பக்கடை அன்னம். “ஊருக்கு வரும் வழியிலே இருந்த மரங்களை எல்லாம் ரோட்டுக்காக வெட்டிவிட்டார்கள்.”
மணியகாரர் கருப்பணன், “ஆற்றுப்படுகையில் என்னென்னமோ மீத்தேன், ஹைட்ரோகார்பன்... என்ன சனியனோ, ஊரைத் துடைத்துவிட்டார்கள்” என்றார்.
அரசு மேனிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி மாலதி, “மரங்களை நிறைய நட வேண்டும். என்ன மரங்கள் என்று கேளுங்கள்... பூவரசு, மகிழம், ஆலம், அரசு, மாமரம், வேம்பு. இவையெல்லாம் பூமியின் வெப்பத்தைப் பெரிதும் குறைக்குமாம். எங்கள் அறிவியல் ஆசிரியர் சொன்னார்.”
“இந்த மரம் நடும் நல்ல காரியத்தை உடனடியாகத் தொடங்குங்கள், பூஜை போட்டுவிடலாம்.”
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1. ‘தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
தண்ணீர் – கந்தர்வன்
முன்னுரை
“நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள், சமூக அவலங்கள் மற்றும் மானுடப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொரு கல்லாய்”, “கொம்பன்” முதலியவை வரிசையில், “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக்காட்டும் கதையாக உள்ளது.
குடிநீரற்ற ஊரின் நிலை
தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அந்த ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப் பகை. புயல் வந்தால் மூன்று நாட்கள் வெள்ளக்காடாக இருக்கும்; நான்காவது நாள் தண்ணீரற்ற நிலமாய் மாறிவிடும். பெண்கள் தலையிலும் இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று, ஊறி ஊறி வரும் நீரை எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.
பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறிவிட்டது. எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன.
எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு. கிணற்று நீரிலேயே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டுவரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம்பெற்றுள்ள ஊரின் நிலை.
ரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும்
இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் ரயில் அமைந்தது. ரயில் 3 கிலோமீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் ரயில் நிலையம் செல்வர்.
அந்த ரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும், முறைத்தும் முந்திக்கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த ரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து ரயில் பெட்டிக்குள் ஏறினர்.
இந்திராவின் கனவு
அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்தத் தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலைநீட்டக் கூடாது என்றும் கனவு கண்டுகொண்டே ரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.
இந்திரா தண்ணீர் பிடித்தல்
பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேகமாக அரைச் செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றினாள். “சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா?” என்று சலித்துக்கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை.
இன்ஜினின் ஊதல் ஒலி வந்தது. “அம்மா, சொட்டுத் தண்ணியில்லை” என்று முனகியது நினைவுக்கு வந்தது. இன்னும் பிடித்துக்கொண்டே இருந்தாள். ரயில் நகர்ந்தது.
இந்திரா எங்கே?
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக்கொண்டிருந்த இந்திராவின் தந்தையிடம், “இந்திரா வரவில்லை, ரயில் போயிருச்சு” என்று சொல்லப்பட்டது. எல்லோரும் பதற்றத்துடன் அண்ணன் வீடு, தம்பி வீடு எனத் தேடி, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி ரயில் நிலையம் சென்றபோது, இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ, எறும்புகூட இல்லை. குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடங்கள் எல்லாம் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.
தாயின் துயரம்
“என் பிள்ளை தண்ணி பிடிக்கப் போய் எந்த ஊர்த் தண்டவாளத்தில் விழுந்து கிடக்கிறாளோ” என அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலேயே ஓட ஆரம்பித்தாள்.
தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் தெரிந்தது. “அதோ இந்திரா!” தந்தை கேட்டார், “பய புள்ளை, இத்தனை மைல் இந்தத் தண்ணியையுமா சுமந்துகிட்டு வந்தாய்?” இந்திரா சொன்னாள், “பின்னே! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்வது?”
கதை உணர்த்தும் கருப்பொருள்
இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக்கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதையும் படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’ எழுதியுள்ளார்.
“சிற்றூரின் தேவைகள் இன்றளவும்
நிறைவு செய்யப்படுவதில்லை.”
முடிவுரை
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீரின் தேவையை, அது இல்லாத ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்! மழைநீர் சேகரிப்போம்!”