Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 2.4 புறநானூறு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.4 புறநானூறு

Students can download the Samacheer Kalvi 9th Tamil Guide for Chapter 2.4, 'புறநானூறு,' which includes questions and answers, a summary, and notes. This guide will help you revise the complete Tamil Nadu State Board new syllabus, complete homework assignments, and score high marks in your board exams.

கற்பவை கற்றபின்

1. பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று அறிந்து எழுதுக.

அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18)

பாடியவர் : குடபுலவியனார்

பாடப்பட்ட அரசன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : முதுமொழிக்காஞ்சி

பொருள் : உணவைக் கொடுத்தவர், உயிரைக் கொடுத்தவர் ஆவார்.

ஆ) உண்பது நாழி, உடுப்பது இரண்டே ! (புறம் – 189)

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக்காஞ்சி

பொருள் : உண்ணப்படும் பொருள் நாழி (உழக்கு) அளவாகும். உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும் இடையில் ஒன்றுமாக இரண்டே ஆகும்.

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192)

பாடியவர் : கனியன் பூங்குன்றனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் : எங்களுக்கு எல்லா ஊர்களும் எம் ஊர்களே ஆகும். எல்லாரும் உறவினர்களே ஆவர்.

ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! (புறம் – 312)

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

பாடியவர் : பொன் முடியார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை

பொருள் : பெற்றெடுத்த மகனை நற்பண்புகள் நிறைந்தவனாக ஆக்குவது தந்தையின் கடமையாகும். அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்.

உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், (புறம் – 183)

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

பாடியவர் : பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் : ஒருவன் தன் ஆசிரியருக்குத் துன்பம் நேர்ந்தபோது உதவி செய்தும், மிகுந்த பொருளைத் தந்தும், அவர்க்குப் பணிவிடை செய்வதை வெறுக்காமலும் கற்பதே சிறந்ததாகும்.

2. “உணவாகும் மழை” என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.

மாணவர்கள் படத்தொகுப்பை உருவாக்க வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை
ஆ) பூவரசுமரம்
இ) வளம்
ஈ) பெரிய

விடை: இ) வளம்

குறுவினா

1. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.

நீர் இன்றி அமையாத உடல், உணவால் உருவாவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார். இதனை, குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.

சிறுவினா

1. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

நிலம் பள்ளமான இடங்களில் எல்லாம் நீர்நிலைகளைப் பெருக்கச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள், மூவகை இன்பத்தையும் பெற்று நிலைத்த புகழையும் பெறுவார்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருந்தாததைத் தேர்ந்தெடு.

அ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே
ஆ) உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
இ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

விடை: ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

2. பொருத்துக.

அ) யாக்கை – i) பழைமை
ஆ) தாட்கு – ii) உடம்பு
இ) வளமை – iii) முயற்சி

விடை: அ) ii, ஆ) iii, இ) i

3. பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..

அ) நற்றிணை
ஆ) ஐங்குறுநூறு
இ) கலித்தொகை
ஈ) புறநானூறு

விடை: ஈ) புறநானூறு

நிரப்புக

  1. நீர் இன்றி அமையாதது உடல்.
  2. உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.
  3. உணவைத் தந்தவர் உயிர் தந்தவர் ஆவர்.
  4. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் புறநானூறு.
  5. தாட்கு என்ற சொல்லின் பொருள் முயற்சி.

குறுவினா

1. ‘புறநானூறு’ குறிப்புத் தருக.

  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • பண்டைய வேந்தர்களின் வெற்றி, வீரம், கொடை குறித்தும், குறுநில மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் ஆகியோரின் பெருமைகளைக் கூறும் நூல்.
  • பண்டைய கால மக்களின் புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நூல்.
  • பண்டைய தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • மன்னர்கள், பெண்பாற் புலவர்கள் போன்ற பலராலும் பாடப்பெற்றது.

2. “பொதுவியல் திணை’ – விளக்குக.

வெட்சி முதலான புறத்திணைகள் அனைத்துக்கும் பொதுவான செய்திகளையும், முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.

3. முதுமொழிக் காஞ்சித் துறையை விளக்குக.

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களின் உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சித் துறை ஆகும்.

4. மூவகை இன்பங்களாகக் குடபுலவியனார் கூறுவன யாவை?

  • இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் கிடைக்கும் இன்பம்.
  • உலகையே வெல்லும் ஒப்பற்ற தனி ஆட்சி.
  • வாடாத புகழ்மாலை.

இவையே அவர் குறிப்பிடும் மூவகை இன்பங்கள் ஆகும்.

பாடலின் பொருள்

விண்ணை முட்டும், உறுதியான மதிலைக் கொண்ட, வளம் பொருந்திய பழைமையான ஊரின் தலைவனே! வலிமை மிக்க வேந்தனே! நீ இம்மையில் மட்டுமல்லாது, மறுமை இன்பத்தை அடையவும், உலகை வெல்லும் விருப்பம் நிறைவேறவும், நிலையான புகழைப் பெறவும் விரும்பினால், நான் கூறுவனவற்றைக் கேட்பாயாக.

உலகில் உள்ள ஆற்றல், செல்வம், நல்லாட்சி, புகழ் என யாவற்றையும் மிகுதியாகக் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல், உணவால் அமைவதாகும்; உணவையே முதன்மையாக உடையது. எனவே, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் சேர்ந்ததே. நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார்.

நெல் முதலிய தானியங்களை விதைத்துவிட்டு, அவை விளைவதற்கு வானம் மழை பொழியாவிட்டால், அந்நிலத்தை ஆளும் அரசனின் முயற்சியும் செயலும் சிறிதும் உதவாது. யார் ஆண்டாலும் பேரும் புகழும், மக்கள் இன்பமும் கிட்டாது. அதனால், நான் கூறும் மொழிகளை இகழாது கடைப்பிடிப்பாயாக. நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்வாயாக. அவ்வாறு நிலத்துடன் நீரை நீ ஒன்றுசேர்த்தால்,

  • மறுமை இன்பத்தை அடைவாய்.
  • உலகு முழுவதையும் வென்று தனி ஆட்சி அமைப்பாய்.
  • வாடாத நிலையான புகழ் மாலையைப் பெறுவாய்.

இந்த மூவகை இன்பங்களையும் பெற்று இவ்வுலகில் சிறப்பாக வாழலாம் என்ற தத்துவத்தைப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் கூறுகிறார்.

சொல்லும் பொருளும்

  • யாக்கை – உடம்பு
  • புணரியோர் – தந்தவர்
  • புன்புலம் – புல்லிய நிலம்
  • தாட்கு – முயற்சி, ஆளுமை
  • தள்ளாதோர் இவண் தள்ளா தோரே – குறைவில்லாமல் நீர்நிலைகளை அமைப்பவர்கள், குறைவில்லாத புகழுடையவர்களாக விளங்குவார்கள்.

இலக்கணக் குறிப்பு

  • மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள்
  • நிறுத்தல் – தொழிற்பெயர்
  • அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள்
  • அடுபோர் – வினைத்தொகை
  • கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்

1. நிறுத்தல் = நிறு + த் + தல்

  • நிறு – பகுதி
  • த் – இறந்தகால இடைநிலை
  • தல் – தொழிற்பெயர் விகுதி

2. கொடுத்தோர் = கொடு + த் + த் + ஓர்

  • கொடு – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி