Showing posts with label திராவிட மொழிக்குடும்பம். Show all posts
Showing posts with label திராவிட மொழிக்குடும்பம். Show all posts

இயல் 1: திராவிட மொழிக்குடும்பம் - 10 ஆம் வகுப்பு தமிழ் உரைநடை | Samacheer Kalvi Guide

உரைநடை: திராவிட மொழிக்குடும்பம்

மொழி - க | உரைநடை உலகம்

உரைநடை தலைப்பு: திராவிட மொழிக்குடும்பம்

நுழையும்முன்

திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.

தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது.

மொழிகளின் தோற்றம் குறித்த விளக்கப்படம்

மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின. உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மொழிகளின் காட்சிச் சாலை

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை,

  1. இந்தோ - ஆசிய மொழிகள்
  2. திராவிட மொழிகள்
  3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  4. சீன - திபெத்திய மொழிகள்

என அழைக்கப்படுகின்றன. பல கிளை மொழிகளும் இங்குப் பேசப்படுவதால் இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ - ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலபட்டர். தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா என்று வந்ததாக விளக்குகின்றார்.

மொழி ஆய்வு

திராவிட மொழிக்குடும்பம் என்னும் பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை என்ற கருத்து அறிஞர் பலரிடையே நிலவிவந்தது. இம்மொழிகளில் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் 18ஆம் நாற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள் கருதினர். அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார். தொடர்ந்து, 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார். இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்தப் பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.

கால்டுவெல்லுக்குப் பின்னர் ஸ்டென்கனோ, கே.வி. சுப்பையா, எல். வி. இராமசுவாமி, பரோ, எமினோ , கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள் திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மொழிக்குடும்பத்திலுள்ள தமிழ், கன்னடம், மலையாளம் முதலானவை தென்திராவிட மொழிகள் எனவும் தெலுங்கு முதலான சில மொழிகள் நடுத்திராவிட மொழிகள் எனவும் பிராகுயி முதலானவை வடதிராவிட மொழிகள் எனவும் பகுக்கப்பட்டுள்ளன.

திராவிட மொழிக் குடும்பங்களின் வகைப்பாடு
பல மொழிகளிலும் உங்கள் பெயரை எழுதி மகிழுங்கள்

மேலுள்ள பட்டியலில் உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.

திராவிடமொழிகளின் பொதுப்பண்புகள்

சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், அடிச்சொல் எனப்படும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

தெரியுமா?

தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.

- கால்டுவெல்

சான்று

அடிச்சொல் திராவிட மொழிகள்

  • கண் - தமிழ்
  • கண்ணு - மலையாளம், கன்னடம்
  • கன்னு - தெலுங்கு, குடகு
  • ஃகன் - குரூக்
  • கெண் - பர்ஜி
  • கொண் - தோடா

திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்று போலவே அமைந்துள்ளன.

  • மூன்று - தமிழ்
  • மூணு - மலையாளம்
  • மூடு - தெலுங்கு
  • மூரு - கன்னடம்
  • மூஜி – துளு

குறில், நெடில் வேறுபாடு

திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில், நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன.

  • அடி – குறில்
  • ஆடி – நெடில்
  • வளி - குறில்
  • வாளி – நெடில்

பால்பாகுபாடு

திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு அமைந்துள்ளது. ஆனால், வடமொழியில் இவ்வாறு அமையவில்லை. உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன. இம்மொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன. ஜெர்மன் மொழியிலும் இத்தகைய தன்மையைக் காணமுடிகிறது. முகத்தின் பகுதிகளான வாய், மூக்கு, கண் ஆகியவை வேறுவேறு பால்களாகச் சுட்டப்படுகின்றன. வாய் - ஆண்பால், மூக்கு - பெண்பால், கண் - பொதுப்பால் எனப் பகுக்கும் நிலை உள்ளது.

திராவிட மொழிகளில் ஆண்பால், பெண்பால் என்ற பகுப்பு உயர்திணை ஒருமையில் காணப்படுகிறது. அஃறிணைப் பொருள்களையும் ஆண், பெண் என்று பால் அடிப்படையில் பகுத்தாலும் அவற்றிற்கெனப் பால்காட்டும் விகுதிகள் இல்லை. தனிச்சொற்களாலேயே ஆண், பெண் என்ற பகுப்பை உணர்த்தினர். (எ.கா. கடுவன் - மந்தி; களிறு - பிடி)

வினைச்சொற்கள்

ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டு:

வந்தான் - உயர்திணை ஆண்பால் படர்க்கை ஒருமை

இவ்வியல்புக்கு மாறாக மலையாள மொழி மட்டுமே அமைந்துள்ளது. அம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பால் காட்டும் விகுதிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு திராவிட மொழிகள் சில பொதுப்பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கென்று சில சிறப்புக் கூறுகளும் தனித்தன்மைகளும் உள்ளன.

திராவிட மொழி பண்புகள் விளக்கப்படம்

சில திராவிடமொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள்

திராவிட மொழிகளின் இலக்கிய இலக்கணங்கள் அட்டவணை

தமிழின் தனித்தன்மைகள்

  1. தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழியாகும்.
  2. இலங்கை , மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.
  3. ஏனைய திராவிட மொழிகளை விடவும் தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கணவளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
  4. திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும்.
  5. தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.
  6. ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.
  7. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  8. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

தெரியுமா?

மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

தமிழ் மொழி இடம்பெற்றுள்ள வெளிநாட்டு பணத்தாள்கள்

திராவிட மொழிக்குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந் துணையாக அமைந்துள்ளது.

தமிழ் மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது.

📘 Samacheer Kalvi, 9th Tamil Guide, Chapter 1.1, திராவிட மொழிக்குடும்பம், Dravida Mozhi Kudumbam, Thiraavida Mozhi Kudumbam

Samacheer Kalvi 9th Tamil Guide
Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம்

A Complete Guide with Questions and Answers

Students can download and use this comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 1.1, "திராவிட மொழிக்குடும்பம்," featuring all questions and answers, a summary, and notes. This resource helps in revising the complete Tamilnadu State Board New Syllabus, completing homework, and scoring high marks in exams.

கற்பவை கற்றபின்

1. உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கண்டறிக.

விடை:

  • அன்பரசன் – அன்புக்கு அரசன்
  • புகழினியன் – புகழுக்கு இனியன்
  • அருள்செல்வி – அருள் நிறைந்த செல்வி
  • மங்கையர்க்கரசி – மங்கையர்களில் அரசி
  • அருள்வளவன் – அருளுடைய வளவன்

2. பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.

விடை:

  • தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது 'வேர்ச்சொல்' எனப்படும்.
  • ஒரு சொல் தோன்றுவதற்கு அடியாக இருப்பது 'அடிச்சொல்' எனப்படும்.
  • ஒரு சொல்லின் முதலாக அமைவது 'முதல்நிலை' எனப்படும். இலக்கண நூலார் இதனை 'பகுதி' என்று கூறுவர்.

எடுத்துக்காட்டு:

  • செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.
  • வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருகிறோம், வருவோம்.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

விடை: நான் பேசும் மொழியான தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்திராவிட மொழிகளுள் ஒன்றாகும்.

சிறுவினா

1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

விடை:

  • திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவியுள்ள நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • மலையாளம்: மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறிக கிளவிகள் இல்லை. தனிச் சொற்களைக் கொண்டே ஆண், பெண் வேறுபாட்டை அறிய முடியும்.
  • தமிழ்: தமிழ்மொழி, பல திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன. இதுவே இதன் தனிச்சிறப்பு.

2. 'மூன்று' என்னும் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

விடை: திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் பெரும்பாலும் ஒன்று போலவே அமைந்துள்ளன. 'மூன்று' என்னும் தமிழ் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமைகிறது.

மூன்று என்ற எண்ணுப்பெயர் திராவிட மொழிகளில்

நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

முன்னுரை:
திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் இதன் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்:
சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் (அடிச்சொல்) ஆகும். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

சான்று (அடிச்சொல்):

அடிச்சொல் ஒப்பீடு

திராவிட மொழிகளின் எண்ணுப்பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.

சான்று (எண்ணுப்பெயர்):

எண்ணுப்பெயர் ஒப்பீடு

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைவாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ், பல திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், 'ஒலி இடம்பெயர்தல்' என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் கூடப் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றுள்ளன.

நிறைவுரை:
திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இந்திய மொழிக் குடும்ப வகைகள் எத்தனை?

  • அ) 8
  • ஆ) 18
  • இ) 6
  • ஈ) 4
விடை: ஈ) 4

2. பொருந்தாததைத் தேர்ந்தெடு.

  • அ) மூன்று – தமிழ்
  • ஆ) மூணு – மலையாளம்
  • இ) மூடு – தெலுங்கு
  • ஈ) மூரு – துளு
விடை: ஈ) மூரு – துளு

3. பொருத்துக.

  • அ) தெலுங்கு – i) பாரதம்
  • ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
  • இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
  • ஈ) கன்னடம் – iv) இராமசரிதம்
சரியான விடை: 2) அ-i, ஆ-iv, இ-iii, ஈ-ii

4. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல் அறிஞர் யார்?

  • அ) மாக்சுமுல்லர்
  • ஆ) எமினோ
  • இ) கால்டுவெல்
  • ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
விடை: ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்

5. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எதற்கும் மேற்பட்டது?

  • அ) 1200
  • ஆ) 1300
  • இ) 800
  • ஈ) 1000
விடை: ஆ) 1300

6. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் யார்?

  • அ) கமில் சுவலபில்
  • ஆ) கால்டுவெல்
  • இ) ஹோக்கன்
  • ஈ) ஆந்திரனோவ்
விடை: இ) ஹோக்கன்

7. ‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் யார்?

  • அ) கால்டுவெல்
  • ஆ) மாக்ஸ்முல்லர்
  • இ) ஸ்டென்கனோ
  • ஈ) ஹோக்கன்
விடை: ஈ) ஹோக்கன்

நிரப்புக

8. மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை?

விடை: நான்கு

9. ‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலையாகத் திகழ்கிறது’ என்றவர் யார்?

விடை: ச. அகத்தியலிங்கம்

10. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

விடை: கால்டுவெல்

11. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

விடை: குமரிலப்பட்டர்

12. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?

விடை: 28

13. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

விடை: தொல்காப்பியம்

14. ‘லீலாதிலகம்’ எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?

விடை: மலையாளம்

குறுவினா (கூடுதல்)

1. மொழிக்குடும்பம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

விடை: உலகத்திலுள்ள மொழிகள் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

2. திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றிருப்பதை விளக்கு.

விடை: சொற்களின் இன்றியமையாப் பகுதி அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் எனப்படும். திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொற்களைப் பெற்றுள்ளன. சான்றாக, 'கண்' என்ற தமிழ்ச் சொல் பிற திராவிட மொழிகளிலும் சிறு மாற்றங்களுடன் காணப்படுகிறது.

கண் என்ற அடிச்சொல் ஒப்பீடு

3. தென்திராவிட மொழிகள் யாவை?

விடை: தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா ஆகியவை தென்திராவிட மொழிகள் ஆகும்.

சிறுவினா (கூடுதல்)

1. தமிழின் தனித்தன்மைகள் யாவை?

விடை:

  • தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ்மொழி.
  • இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது.
  • தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது.
  • திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைவாகக் காணப்படும் மொழி தமிழ்.
  • பல திராவிட மொழிகளின் தாய்மொழியாகத் திகழ்கிறது.
  • ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்றது.
  • இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
  • பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கிறது.