மாணவர்களுக்கான தமிழ் கட்டுரைகள்
(Tamil General Essays for Students)
காலத்தை வெல்லும் கணினி
முன்னுரை:
'அறிவியல் தகவல் வளர்ச்சி உலகத்தை ஒரு சிற்றுராக மாற்றிவிட்டது' என்னும் கூற்று உண்மையே. இதில் கணினியின் பங்கு அளப்பரியது. 20 - ஆம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தோற்றம்:
கணக்கிடுவதற்காக முதலில் எளிதான மணிச்சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர், பிளேஸ் பாஸ்கல் என்ற அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தார். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப கி.பி. 1833 - இல் சார்லஸ் பாப்பேஜ் கணினியை முதலில் வடிவமைத்தார். லேடி லவ்லேஸ் என்பவர் கணிதச் செயல்பாட்டுக்குத் தேவையான கட்டளைகளை வகுத்தார்.
வளர்ச்சி
மின்னியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஹோவர்டு ஐக்கன் என்பார் எண்ணிலக்கக் கணினியைக் கண்டறிந்தார். இதற்கு ஹார்வார்டு மார்க் - 1 எனப் பெயரிட்டார். இன்றைய நிலையில், பல்லூடக வசதி கொண்ட கணினி மடிக்கணினி கையடக்கக் கணினி எனப் பல்வகைக் கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. 'வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு' என்ற குறளுக்கேற்ப தற்போது அமெரிக்காவும் ஜப்பானும் மீத்திறன் கணினியை உருவாக்கப் போட்டியிடுகின்றன.
இணையம்:
இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் ஜான் பாஸ்டல் ஆவார். முதலில், ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினர். பின்னர், குறும்பரப்பு வலைப்பின்னலும் அதனைத் தொடர்ந்து அகன்ற பரப்பு வலைப்பின்னலும் உருவாக்கப்பட்டன. உலகம் முழுமைக்குமான வலைப்பின்னல் இணையம் எனப் பெயர் பெற்றது.
இணையதள வசதி:
இணையதளச் சேவையைப் பயன்படுத்தத் தேவையானவை, கணினி , தொலைபேசி, இணையச் சேவை வழங்குநர், மாற்றி, தொடர்பு மென்பொருள் பிம்பெர்னர் லீ இணையதளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல் எனப் பெயரிட்டார். இதனை வையக விரிவு வலை எனவும் அழைக்கலாம். வீட்டில் இருந்தபடியே உலகத்தைப் பார்க்க, பழக, மகிழ இணையம் உதவுகிறது.
கணினி வழிக் கல்வி:
கணினியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,வானியல், வரலாறு, புவியியல், பொது அறிவு, நடனம், கைவேலைப்பாடு என எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள இயலும். கணினி வழியாக மொழியின் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் தொடங்கி உயர்நிலைத் திறன்களையும் கற்க இயலும். தமிழ் இணையப் பல்கலைக் கழகமும், தமிழம் என்ற இணையதளமும் இவற்றைக் கற்றுத் தருகின்றன.
பயன்படும் துறைகள்:
வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி,மருத்துவம், விண்வெளி, பாதுகாப்பு முதலிய பலவறு துறைகளில் கணினி பயன்படுகிறது. பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. இது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.
உலகம் உள்ளங்கையில்:
“கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” என்கிறார் கணினி வல்லுநர் பில்கேட்ஸ். கணினியும் இணையமும் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொண்டு வந்துள்ளன.
முடிவுரை:
அறிவை விரிவு செய்வதற்கும் உலகத் தொடர்பிற்கும் சிறந்த வாயிலாகத் திகழும் கணினி உண்மையில் 'காலத்தை வென்ற கணினியே'. இக்கணினியை நாமும் கற்று, ஆக்க வேலைக்கு மட்டும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுவோமாக.
காடுகளும் அவற்றின் பயன்களும்
முன்னுரை .
இயல்பாகத் தோன்றுவதே இயற்கை. அவ்வியற்கை அளித்த செல்வங்களுள் ஒன்று காடு. அது மக்களால் ஆக்கப்படுவது அன்று; மழையால் வளர்ந்தது. மழையை ஆக்கும் ஆற்றலைப் பெற்றது. அக்காட்டைப் பழந்தமிழ் மன்னர்கள் தங்களுடைய நால்வகை இயற்கை அரண்களுள் ஒன்றாகக் கொண்டிருந்தனர். காடும் காடு சார்ந்த இடத்தையும் முல்லை நிலம் என்றனர். ஆகவே, பழங்காலம் முதல் காடு நாட்டிற்கு ஓர் உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு நாட்டின் சிறப்புக்கு - வளத்துக்கு காடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
காடுகள்
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. தமிழில் வனம், கானகம், அடவி, புறவு, பொதும்பு போன்ற பல சொற்களால் இது குறிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் புவி மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் ஏறத்தாழ 30% காடுகளினால் மூடப்பட்டுள்ளது. முன்னர் காடுகள் நிலப்பரப்பின் 50% வரை மூடியிருந்ததாக மதிப்பிட்டுள்ளனர். உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன உயிர்க்கோளத்தில் முக்கியமான அம்சமாக விளங்கும் காடுகள், பல உயிரினங்களுக்குப் புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் வெப்ப மண்டலக் காடுகள், அகன்ற இலைக் காடுகள், வறண்ட காடுகள் எனப் பலவகை உண்டு. அவை இயற்கை அமைப்புக்கும், அங் ஏற்படும் தட்ப வெப்ப நிலைக்கும், மழைக்கும் ஏற்ப அமையும்.
மழை பொழிவுக்கு உதவும் காடு
"கடல் நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாக மாறி வானத்தில் இருக்கும்போது, காடுகளே அவற்றைக் குளிர்ச்சி அடையச் செய்து மழையைப் பெய்விக்கின்றன' என்பது விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை. காடுகளே திரண்டெழுந்த மேகங்களைத் தடுத்து மழையைப் பெய்விக்கின்றன. இதனால், மழைப் பொழிவுக்குக் காடுகளே உதவுகிறது என்பதை அறியலாம்.
காடுகளின் பயன்
பூமியின் உயிர்க்கோளத்தின் மொத்த முதன்மை உற்பத்தித்திறனில் 75% காடுகள் கொண்டிருக்கின்றன, மற்றும் பூமியின் மொத்த உயிரினத்தொகுதியில் 80% ஐ கொண்டிருக்கின்றன. காட்டு நிலங்கள் கால்நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலம் ஆகின்றன. வீடு கட்ட, அடுப்பு எரிக்க, வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உண்டாக்கிக் கொள்ளக் காட்டு மரங்கள் பயன்படுகின்றன. தழைகள் உரமாகின்றன. இலை தழைகள், பூக்கள், செடி கொடிகள், வேர்கள், மரப்பட்டைகள் முதலியன பிணி போக்கி உயிர் காக்கும் சிறந்த மருந்துப் பொருள்களாகப் பயன்படுகின்றன. காடுகளிலிருந்து யானைத் தந்தம், மான் தோல், மான் கொம்பு, தேன், அரக்கு, மெழுகு, பிரம்பு, தோல், தோல் பதனிடும் பொருள்கள் முதலிய விலைமதிக்க இயலாத பொருள்கள் கிடைக்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்துகின்றன. மண் அரிப்பினைத் தடுத்து நிறுத்துகின்றன. தட்ப வெப்ப நிலைகளைச் சமப்படுத்துகின்றன.
காடுகள் அழிய காரணம்
வியாபார நோக்கும், சுயநலமும், பேராசையும் வளர்ந்ததால், பட்ட மரங்களை மட்டும் அல்லாமல், பச்சை மரங்களையும் வெட்டினர். காபி, தேயிலை, ஏலம், திராட்சை, முந்திரி, ஆப்பிள், வாழை, உருளை போன்ற பயிர்களைப் பயிரிடவும் காடுகளை அழித்தனர். ஏழை எளியவர்கள் தம் வயிற்றுப் பிழைப்புக்காகச் சிறுசிறு பகுதிகளை அழித்தனர். புயலும் தீயும் கூடச் சில சமயம் காடுகளை அழித்தன.
மரம் நடுதலின் தேவை
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம். ஆனால் ஆளுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. பணம் சேமிப்பதும் சொத்து சேர்த்து வைப்பது மட்டும் நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை அல்ல. நாம் வாழும் இந்த பூமியை சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வளம் மிக்கதாகவும் அவர்களுக்கு கையளிக்க வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது மரம் வளர்ப்பதும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு அறிய வைப்பதும் ஆகும்.வனத்துறையினர் ஒவ்வோர் ஆண்டும் ஜூலைத் திங்கள் முதல் வாரத்தில், மரம் நடு விழாவைக் கொண்டாடி வருகின்றனர். பற்பல இடங்களில் மரங்களை வைத்து வளர்த்து வருகின்றனர். 'சமுதாய நலக் காடுகளையும் அமைத்து வருகின்றனர். சட்டத்தின் மூலமாகக் காட்டின் அழிவைத் தடுத்துக் காப்பாற்றி வருகின்றார்கள்.
முடிவுரை
நாட்டு வளம் காட்டு வளத்தில் அடங்கியுள்ளது. அக்காட்டினால் நாம் நன்மை அடைகின்றோம். ஆதலால் 'நல்ல காடு வளர்ப்போம்' என்ற கவி பாரதியின் வாக்குப்படி காடுகளை வளர்த்துக் கண்போல் காப்பது நம் கடமையாகும்.
மாணவரும் சமூகத் தொண்டும்
முன்னுரை:
'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்று அறியேம் பராபரமே'என்பது தாயுமானார் வாக்கு. தனக்காக மட்டும் இன்றிப் பிறருக்காகவும் பாடுபடுவதே. எல்லாரும் இன்புற்றிருப்பதற்கு உரிய வழியாகும். இந்த நல்லுணர்வு இளமைப் பருவத்திலேயே மாணவர் இதயத்தில் ஊட்டப்பட வேண்டும்.
மாணவர் கடமை :
எதிர்கால இந்தியா மாணவர் கைகளில் தான் உள்ளது என்றார் பண்டித நேரு. ஆகவே அவர்களுக்கு வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் பயன் தராது. நாடு எனக்கு என்ன செய்தது? என்று எண்ணுவதை விடுத்து நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்று எண்ணினால் சமூகத் தொண்டு ஆர்வம் தானாகவே முகிழ்க்கும்.
பெற்றோர்பேணல்:
பெற்றோரை மதிப்பது மாணவரின் முதல் கடமை. நமக்காக உழைத்து உழைத்து உருக்குலைந்த பெற்றோரை இன்று முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் வன்கொடுமை நாடெங்கும் பரவிக் கிடக்கிறது. பெற்றோரைப் பேணாதவன் நாட்டு நலனில் எவ்வாறு அக்கறை காட்ட இயலும்?
கல்வித் தொண்டு:
கல்வியில் பின்தங்கியுள்ள நம் இந்தியத் திருநாடு கற்றவர் மிக்க நாடாக மாற வேண்டுமானால் ஒரு மாணவன் ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தால் போதும். ஐம்பது விழுக்காடாக உள்ள நம் நாட்டுக் கற்றோர் அளவு விரைவில் நூறு விழுக்காடாக உயர்ந்து விடும். இதற்கு உதவ அறிவொளி இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுத் தொண்டு:
மாணவர்கள் தொண்டாற்றுவதற்கு என்றே பள்ளிகளில் மாணவர் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய இளைஞர் படை போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஏதேனும் ஒன்றையேனும் தேர்ந்தெடுத்துப் பழகி தொண்டில் முன் நிற்க முயல வேண்டும்.
மொழி வளர்ச்சி
தாய்மொழிவளர்ச்சியில் மாணவருடைய பங்கு முக்கியமானதாகும். ஆங்காங்கே தமிழ் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அங்கே முத்தமிழும் முழங்குமாறு செய்ய வேண்டும். பட்டி மன்றங்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், இலக்கிய வகுப்புகள் முதலியன நடத்தி மக்கள் இதயத்தே தமிழார்வத்தையும் தமிழறிவையும் வளர்க்க முன் வர வேண்டும்.
பிற தொண்டுகள்:
அரசாங்கத்தின் திட்டங்களை அறியாமை மிகுந்த மக்களுக்கு விளக்கிக் கூறி அவர்களை நாட்டு நலனில் நாட்டமுள்ளவர்களாக மாற்ற வேண்டும். சிறு சேமிப்பு, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் வாங்குதல், நோய் தடுக்கும் முறைகள், குடும்ப நலத் திட்டம், சட்டங்களை மதித்தல், சாதி வேறுபாடு பாராட்டாமை, வரதட்சணை மறுத்தல் முதலியன பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும்.
அரசியலும் மாணவரும் :
அரசியல் செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அரசியலில் சேர்ந்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்ட நிலையாக முடிந்து விடும். அத்தகைய மாணவர்களைத் திசை திருப்புவது அறிவறிந்த மாணாக்கரின் கடமையாகும்.
முடிவுரை:
வருங்கால அரசியல் தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும். அறிஞர்களாகவும், தொண்டர்களாகவும் விளங்க இருக்கும் மாணவர்களாகிய நாம் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக்கோள் கொண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்பட வாழ்வோமாக.'அன்பர்பணி செய்யஎன்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும்'
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
முன்னுரை:
அறிவியலும் தொழில் நுட்பமும் உச்சத்தில் இருக்கும் இன்றையகாலத்தில், சுற்றுச்சூழல் மாசும் உச்சத்தில் உள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காற்று மாசு அளவுகடந்து சென்று சிவப்பு எச்சரிக்கை விடும் நிலைக்கு சென்றது. 21-ஆம் நூற்றாண்டில் உலகம் தனது இயற்கை அழகை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. சுற்றுச் சூழல் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு:
மனிதன் பண ஆசை கொண்டு இயற்கையைச் சீரழிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. எங்கும் குப்பையும் கழிவுநீரும் நச்சுப் புகையும் நிறைந்து வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது காடுகளெல்லாம் கட்டிடமாவதால் காற்றும் நிலமும் நீரும் நஞ்சாக மாறி வருகின்றன.
காற்று மாசு:
பெருகி வரும் வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியிடும் நச்சுப் புகையால் காற்று மாசடைந்து வருகிறது. மேலும் நெகிழி, ரப்பர் போன்ற பொருள்களை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. காற்று மாசடைவாதால், காற்றின் வெப்ப அளவு உயர்கிறது. இது ஓசோன் படலத்தை பாதிக்கிறது. ஓசோன் படலம் ஓட்டையாவதால் புறஊதாகதிர் தாக்கம் அதிகமாகிறது.
நீர் மாசு:
"நீரின்றி அமையாது உலகு" என்கிறார் வள்ளுவர். ஆனால், தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சக் கழிவுநீர் ஆறு, குளங்களில் கலப்பதால் நீர் மாசடைகிறது. இதனால் பாலாறு பாழாறு ஆகிவிட்டது. மேலும் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளால் நிலத்தடி நீரும் மாசடைகிறது.
நிலம் மாசு:
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சக் கழிவுநீரும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளும் மண்ணை மாசுபடுத்துகின்றன. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நெகிழிப் பைகள் மண் வளத்தைக் கெடுக்கின்றன.
ஒலி மாசு:
அளவிற்கு அதிகமான பேரோசையே இரைச்சல் எனப்படுகிறது. அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைகள், வாகனங்கள், ஒலி பெருக்கிகள் உண்டாக்கும் இரைச்சல் ஆகியவற்றால் ஒலி மாசு உண்டாகிறது. இது நமது மன அமைதியையும் நலத்தையும் பெரிதும் பாதிக்கிறது.
சூழலைக் காக்கும் முறைகள்:
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கலந்த நீர் மற்றும் புகையைச் சுத்திகரித்தபின் வெளியேற்ற வேண்டும். இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பைகளை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். விழாக்களில் பயன்படுத்தும்ஒலிப்பெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மட்கும் குப்பைகளை உரமாகப் பயன்படுத்தலாம்.
முடிவுரை:
நிலம்,நீர்,காற்று ஆகிய மூன்றையும் மாசுபடாமல் காப்பது நம் வாழ்க்கையைக் காப்பது போன்று ஆகும். எனவே சுற்றுச்சூழலை பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இனியாவது சூழலைக் காத்து இயற்கையோடு இணைந்து வாழ முயல்வோமாக. "ஐம்பூதங்கள் வீணாகாமல் மிச்சமாக்குவோம் - நமஎதிர்காலத் தலைமுறையின் அச்சம் போக்குவோம்"
மழை நீர் சேமிப்பு
முன்னுரை :
உலகில் உள்ள எல்லா உயிர்களும் வாழ்வதற்கு மழை இன்றியமையாததாகிறது. மழைநீரை சேமிக்க தவறியதால் இன்று நாம் லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பல மணி நேரம் தினமும் செலவிட நேருகிறது, அதனால் இன்றைய காலகட்டத்தில் மழை நீர் சேமிப்பு மிகவும் அவசியமானது,
மழைநீர் சேமிப்பு :
நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். பூமியானது 72 சதவீதம் நீர் நீர் நிறைந்திருந்தாலும் நன்னீர் என்பது ஒரு சதவீதம் அளவே உள்ளது. அந்த ஒரு சதவீத்த நன்னீரும் மனிதனால் மாசடைந்து வருகிறது. மூன்றாம் உலகப் போர் ஒன்று வருமானால் அது தண்ணீராலேதான் வரும் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலும் தண்ணீர் தட்டுபாடானது பெருகி வருகிறது. இப்படியே சென்றால் மனிதன் உப்புக் கடலின் நடுவே தாகத்திலே உயிரிழக்க வேண்டியது வரும். இவற்றைத் தடுக்க வேண்டும் என்றால் மழைநீரை வீணாக்காமல் வீடுகளிலும் கட்டடம் இருக்கின்ற பகுதிகளிலும் மழைநீர் சேமிக்கும் தொட்டிகளை அமைத்து சேகரிக்க வேண்டும். வீணாகும் மழைநீரினை மடை மாற்றி நிலத்திற்குள் அனுப்புகின்ற பொழுது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மனிதர்களுக்கு அது பயனளிக்கும்
தொட்டி அமைக்கும் முறை :
மழை நீரை சேமிப்பதற்கு முதலில் மண் வகையை ஆராய வேண்டும். மணற்பாங்கான நிலமாக இருந்தால் சுமார் மூன்று அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கூழாங்கற்களால் அல்லது செங்கல், ஜல்லி கொண்டு நிரப்ப வேண்டும். அதிக தண்ணீர் சேமிக்க வேண்டுமெனில் தொட்டியை அகலமாகவும், ஆழமாகவும் அமைக்க வேண்டும். செம்மண் கரிசல்மண் போன்றவை தண்ணீரை சற்று குறைவான வேகத்தில் உறிஞ்சும் தன்மையுடையவைகள், எனவே இம்மாதிரியான மணலில் சற்று அகமான மற்றும் ஆழமான தொட்டியை அமைப்பதே சிறந்ததாகும்.
சேமிக்கத் தவறினால்
நாம் மழை நீரை வீணாக்குவதால்,நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு வருவதோடு மட்டுமல்லாமல், நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையத் தொடங்குகிறது. இதன் விளைவாக. பல இடங்களில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும், நீர்வளம் குறைவதால் நிலத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. நிலமும் இறுக்கத்தன்மையை இழந்து வறண்டு அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட வழிவகுக்கிறது.
கடமை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொத்துக்களை சேமித்து வைப்பது போல் மழைநீரையும் சேமித்து வைக்க வேண்டும். அதில் அவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கவில்லையென்றால் பாதிக்கப்படுவது பிள்ளைகளே ! எனவே மிக சரியான முறையில் மழை நீர் தொட்டியை அமைக்க வேண்டும்.
முடிவுரை:
"மாரியல்லாது காரியம் இல்லை" என்ற கருத்தை மனதில் கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் மக்கள் தங்கள் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கில் மழைபெய்யும்போது அதை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக மழைநீரின் பெருமைகளையும் அதை சேமிக்கும் முறைகளையும் அறிய வேண்டியதே ஒரு நல்ல குடிமகனின் கடமையாகும்.
கட்டுரைகள் தொகுப்பு
For more 10th Tamil - Pothu Katturaigal, visit
தமிழகத் தவப்புதல்வர்இயற்கையைப் போற்று
உழவெனும் உன்னதம்
புயலிலே ஒரு தோணி