📜 பத்தாம் வகுப்பு தமிழ் - பொதுக்கட்டுரைகள் & துணைப்பாடக் கட்டுரைகள் 10th Tamil - Pothu Katturaigal

பத்தாம் வகுப்பு தமிழ் - கட்டுரைகள்

பத்தாம் வகுப்பு தமிழ் - பொதுக்கட்டுரைகள் & துணைப்பாடக் கட்டுரைகள்

பொதுக்கட்டுரைகள்

1. தமிழகத் தவப்புதல்வர்

தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர்

முன்னுரை:

படிப்பால் உயர்ந்தோர், உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும், கல்விக்கண் திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா?

பிறப்பும் இளமையும்:

விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மாள் தம்பதியரின் குமாரனாக 15-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்:

சுதந்திரப்போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார். 1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று, ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின் முழுநேர ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.

தூய்மையும் எளிமையும்:

பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட காமராசர், "இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே. இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக்கூட வாங்கிவைத்திராத உத்தமராக, எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர்.

மக்கள் பணியே மகத்தான பணி:

1954 இல் முதல்வராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள் அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் உழைத்தார். காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.

முடிவுரை:

'கல்விக் கண் திறந்த காமராசர்' எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன். மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.

2. இயற்கையைப் போற்று

விசும்பின் துளியும் பசும்புல் தலையும் - காற்று மாசு - பசுமையைக் காப்போம் - மரம் நமக்கு வரம் - மழை நீர் உயிர் நீர்.

முன்னுரை:

நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு. வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது” - என்கிறார் வள்ளுவர். வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன. அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர், காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம். 'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி'. ஆகையால், பசியின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும், நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப்படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.

3. உழவெனும் உன்னதம்

உழவே தமிழர் பண்பாட்டு மகுடம் - உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் - சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்

முன்னுரை:

தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில் புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

உழவுத் தொழிலும் உழவர்களும்:

உழவுத்தொழில் உழுதல், சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல், களை யெடுத்தல், பாதுகாத்தல், அறுவடை செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது.

தமிழர் வாழ்வில் உழவு:

பழந்தமிழகத்தில் மக்களின் தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது. உழவும் உழவு சார்ந்த தொழில்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில் மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில் அந்நிலங்களில் வரகு, சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர்.

இலக்கியங்களில் உழவுத் தொழில்:

உழவர்கள் உழுத உழவினை 'நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம். 'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது புறநானூறு. 'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.

உழவின் சிறப்பு:

உழவு அனைத்துத் தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும். 'உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம்.

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்:

உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம் வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும்.

முடிவுரை:

'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார் மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம் அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம்.

துணைப்பாடக் கட்டுரைகள்

1. ஒரு பக்க அளவில் உரையாடல்

சூழல்: வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடுதல். (உறவினர் மகள் கயல்விழி ஆங்கில நாளிதழ் படித்துக் கொண்டிருக்கிறாள்)

வெண்மதி: என்ன கயல்விழி! தமிழ் நாளிதழ் படிக்கிறாயா?
கயல்விழி: நாளிதழ் தான். ஆனால், தமிழ் நாளிதழ் இல்லை.
வெண்மதி: ஏன் தமிழ் படிக்கத் தெரியாதா அல்லது படிக்க விருப்பம் இல்லையா?
கயல்விழி: அப்படி ஒன்றும் இல்லை! நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். தமிழ் படிக்க விருப்பம் உள்ளது. ஆனால், படிக்கத் தெரியாது.
வெண்மதி: மிகவும் எளிமையான மொழி. தமிழைப் பேசுவது எவ்வளவு எளிமையோ, அதேபோன்று படிப்பதும் மிகவும் எளிமையானது.
கயல்விழி: அப்படியா?
வெண்மதி: தமிழைப் படிக்கக் கற்பதற்கு உரைநடை மிகவும் துணை புரியும்.
கயல்விழி: உரைநடை என்றால் என்ன என்று எனக்குக் கூற முடியுமா?
வெண்மதி: நீங்களும் நானும் பேசிக்கொண்டிருப்பதன் பெயர் உரையாடல். இதையே எழுதினால் உரைநடை.
கயல்விழி: ஆகா, அருமை!
வெண்மதி: அதுமட்டுமல்லாமல், உரைநடை மிகவும் சுவையுடையது. அதில், பல சுவைமிக்க நயங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
கயல்விழி: அதைப் பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன்!!
வெண்மதி: உரைநடை வளர்ச்சி அளவிடற்கரியது. சிறுகதை, புதினம், கட்டுரை போன்றவை உரைநடை வடிவங்களே ஆகும். மேலும் நம் உணர்வுகளை வெளிப்படுத்தக் கருவியாக உள்ளது உரைநடை.
கயல்விழி: செய்யுளில் உள்ளது போன்று உரைநடையில் இலக்கிய நயம் உள்ளதா?
வெண்மதி: உள்ளது. உரையாசிரியர்கள் பலர் எதுகை மோனை சொற்களைப் பயன்படுத்தி உரை எழுதியுள்ளனர்.
கயல்விழி: உரைநடைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள் என்னென்ன? என்று கூறுங்களேன்.
வெண்மதி: உவமை, ஒன்பான் சுவை, நயங்கள், எடுத்துக்காட்டுகள், பழமொழிகள் போன்றன உரைநடையின் அணிகலன்கள் ஆகும்.
கயல்விழி: வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்றோர் உரைநடைக்குச் சேவையாற்றியுள்ளதை நான் அறிவேன்.
வெண்மதி: மிகச் சரியாகச் சொன்னாய். இருவருமே தமிழின் இனிமையைக் கற்றுணர்ந்து உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர்கள் ஆவர்.
கயல்விழி: தமிழ்மொழி அறியாதவர்களே தமிழைக் கற்று நூல்கள் இயற்றும் போது, எனக்கு தமிழ் பேசத் தெரியும். கற்பது கடினம் இல்லை. இன்றே எனக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு. நானும் கற்கிறேன்.
வெண்மதி: மிக்க மகிழ்ச்சி! கற்றுத் தருகிறேன்.
கயல்விழி: மிக்க நன்றி வெண்மதி!!

2. புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வர்ணனைகளும், அடுக்குத் தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

முன்னுரை:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும் ஒன்று. நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர் இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்.

விடாது பெய்த மழை:

கடுமையான வெயில் மறைந்து, இமை நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் மழை பெய்தது. கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள கயிறுகளை இறுக்கிக் கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இடி முழக்கம், மின்னல் ஒளி, அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் கப்பலையும் உலுக்கியது.

தள்ளாடிய கப்பல் (தொங்கான்):

மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று கலந்தது. பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான், "ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்" என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான். இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின. கப்பல் தள்ளாடியது. மலைத்தொடர் போன்ற அலைகள் தாக்கின.

பயணிகளின் தவிப்பு:

மாலுமிகள் நீரை இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். கப்பலின் இருபுறமும் தேயிலைப் பெட்டிகளும், புகையிலைச் சிப்பங்களும் மிதந்தன. பாண்டியன் கடலைச் பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட நேரம் தொடர்ந்தது. கப்பல் தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். அதற்குக் கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையைப் பார்க்கலாம், இனி பயமில்லை என்றார்.

கரையைக் காணுதல்:

ஐந்தாம் நாள் வானோடு வானாய், கடலோடு கடலாய் மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன. அடுத்த நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூரக் கப்பல்கள் கரை முழுவதும் நின்றிருந்தன.

முடிவுரை:

சுமத்ரா பயணிகள் துடுப்புப் படகில் இறங்கிப்போய் நடை பாலத்தில் ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச் சென்று பயண அனுமதிச் சீட்டினை நீட்டினர். "தமிழரோ?" என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார். "ஆம் மஸ்தான்" என்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளைச் சில வினாடிகள் நோட்டமிட்ட அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார்.

கட்டுரைகள் தொகுப்பு


For more educational resources, visit www.omtexclasses.com