OMTEX AD 2

4th Std Tamil Term 2 Chapter 3 Yanaikum Panaikum Saree Lesson

4th Standard Tamil Term 2 Chapter 3 - Yanaikum Panaikum Saree

பருவம் 2 இயல் 3 | 4 ஆம் வகுப்பு தமிழ் - யானைக்கும் பானைக்கும் சரி | 4th Tamil : Term 2 Chapter 3 : Yanaikum panaikum saree

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : யானைக்கும் பானைக்கும் சரி

3. யானைக்கும் பானைக்கும் சரி

Yanaikum Panaikum Saree Title Image

மரியாதை இராமன் விசித்திரமான வழக்கொன்றை ஒருமுறை எதிர்கொள்ள நேர்ந்தது. உழவர் ஒருவரின் மீது, அரபு வணிகர் ஒருவர் தொடுத்த வழக்குத்தான் அது.

அரபு வணிகர், மரியாதை இராமனிடம் "ஐயா, இந்த உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக என் யானையை இரவல் கேட்டார். நானும் கொடுத்தேன். ஊர்வலத்தின்போது, யானை இறந்துவிட்டது. அந்த யானையைத் திருப்பித் தரச் சொல்லுங்கள்" என்று கூறினார்.

Merchant complaining to Raman

உழவரோ, "ஐயா, அந்த யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?" என்று வருத்தத்துடன் கூறினார்.

Farmer explaining to Raman

உழவர் கூறியதிலிருந்து உண்மையை உணர்ந்துகொண்ட மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, "நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். பின்னர், உழவரை மட்டும் தனியே அழைத்து, நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டா. உங்களை அழைத்து வருவதற்கு அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். அவர் வரும்போது, உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்"என்று சொல்லி அனுப்பினார்.

Pots breaking behind door

உழவரும் மரியாதை இராமன் கூறியதைப்போலவே வீட்டின் கதவுக்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தார். அவரை அழைத்து வருவதற்காக வந்த வணிகர், ஆத்திரத்துடன் அவர் வீட்டுக் கதவைத் தட்ட, கதவு வேகமாகத் திறந்துகொள்ள, கதவின் பின்னால் அடுக்கி வைத்திருந்த பானைகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கின. அப்போது, வீட்டுக்குள்ளிருந்து வந்த உழவர்," வணிகரே, என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? எங்கள் வீட்டில் காலங்காலமாகப் போற்றி வைத்திருந்த பழம்பானைகள் இவை. இவற்றையெல்லாம் உடைத்துவிட்டீரே, உம்மைச் சும்மா விடப்போவதில்லை. எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்" என்று கூக்குரலிட்டார். செய்வதறியாது திகைத்தார் வணிகர். இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.

உழவரின் வீட்டில் நடந்ததைக் கூறினார் வணிகர். அதனைக் கேட்ட மரியாதை இராமன், "ஐயா, வணிகரே! நீரோ இறந்துபோன உம்முடைய அருமையான யானையை உயிருடன் திருப்பித் தரவேண்டும் என்கிறீர். உழவரோ, உடைந்துபோன தம் பழைய பானைகளைத் திருப்பித் தரவேண்டும் என்கிறார். ஆதலால், நீங்கள் உடைத்த பானைகளைத் திருப்பித் தந்துவிட்டால், உழவரும் இறந்துபோன உம்முடைய யானையைத் திருப்பித் தந்துவிடுவார்" எனத் தீர்ப்பு அளித்தார். அவர் கூறியதைக் கேட்ட வணிகர், "ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்னால் பழைய பானைகளைத் தரமுடியாது" என்றார். உடனே, மரியாதைராமன், "ஐயா, வணிகரே, உம்மாலேயே திருப்பித் தரமுடியாது என்றால் உழவரால் மட்டும் எப்படித் திருப்பித் தரமுடியும்? ஆதலால், யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது" என்று தீர்ப்பளித்தார்.

நீதி: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

No comments:

Post a Comment