4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 8 : விடியும் வேளை
விடியும் வேளை
8. விடியும் வேளை
மன்னவனூர் ஓர் அழகான மலைக்கிராமம், இனிய காலை வேளை, மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் நீர்த்திவலைகள் தெரிந்தன. பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள், வளைந்து நெளிந்து மிதந்தபடிச் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில், சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
பனைஓலை வேய்ந்த குடிசையில், நெற்றியில் வட்டநிலா போலச் சிவப்பாக குங்குமப் பொட்டு வைத்த அம்மா அறிவுமதி, விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள். கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது. கொடியடுப்பில் மஞ்சளாகப் பருப்பு, மணம்மிக்க பூண்டுடன் வெந்து கொண்டிருந்தது.
வதக்கிய பசுமையான பிரண்டைத் துவையலை அம்மியில் அரைத்துக் கொண்டே, அடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்தாள் அறிவுமதி.
மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில், பசுங்கன்றென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர் பிள்ளைகள் இனியனும், இனியாவும். அன்பு பொங்க, தன் பிள்ளைகளை அழைத்தாள் அம்மா. பள்ளிக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர் பிள்ளைகள்.
பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப்பலகையில் அமர்ந்து துளிரான தலைவாழை இலையை விரித்து, நீர் தெளித்து, அதில் சுடச்சுட வரகரிசிச் சோறிட்டு, ஆவிபறக்கும் பருப்புக் கடையலை ஊற்றினாள் அம்மா. துணையாகத் தொட்டுச்சுவைக்கச் சுள்ளென்ற பிரண்டைத் துவையலும் வைத்தாள்.
நாக்கு சப்புக்கொட்ட பிள்ளைகள் விரும்பி உண்டனர். பின்னர், தாயிடம் விடைபெற்றுப் பள்ளிக்குத் துள்ளிக்குதித்து ஓடினர்.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயலில், வேலை செய்து கொண்டிருந்த கணவனுக்கு உணவளிக்க, கலயத்தில் சோறுடன் அம்பென விரைந்தாள் அறிவுமதி. இனிமையான காலைப்பொழுது இப்படியாகக் கழிந்தது.