இரண்டாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் | 3rd Social Science : Term 2 Unit 1 : Historical Places
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்
கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
- (i) தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பட்டியலிடுவர்.
- (ii) படத்தைப் பார்த்து ஊரின் பெயரைக் கூறுவர்.
- (iii) ஒவ்வொரு வரலாற்று இடமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதனை அறிந்துகொள்வர்.
பள்ளிச் சிறுவனான சந்துரு தன் செயல் திட்டப் பணிக்காக பட அட்டைகளும், வண்ண எழுதுகோல்களும் வாங்க எழுதுபொருள்கள் விற்பனையகத்திற்குச் சென்றான்.
சந்துருவுக்கும் கடைக்காரருக்கும் இடையே நிகழும் உரையாடலைக் காண்போம்.
எழுதுபொருள்கள் விற்பனையகம்
சந்துரு: மாமா, உங்களிடம் வண்ண எழுதுகோல்கள் உள்ளனவா?
சந்துரு கடையைச் சுற்றிப் பார்க்கிறான். சுவரில் பல்வேறு வரைபடஅட்டைகள் தொங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறான்.
சந்துரு: மாமா, இவ்வரைபடத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன?
கடைக்காரர்: இந்த வரைபடத்தில் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன.
சந்துரு: வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என்றால் என்ன ?
கடைக்காரர்: பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கட்டடங்கள், சிலைகள் மற்றும் பல கலை பொருள்கள் கொண்டுள்ள இடங்களை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என்கிறோம். அரசாங்கம் அவற்றைக் கவனமாக பாதுகாக்கிறது. எனவே, நம்மால் அவற்றைப் பற்றி அறிய முடிகிறது.
சந்துரு ஒரு வரை படத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.
சந்துரு: நான் என் பெற்றோருடன் மகாபலிபுரத்திற்குச் சென்றிருக்கிறேன். இந்த இடம் சென்னைக்கு அருகில் உள்ளது.
கடைக்காரர்: ஆம். அது நான்கு வகையான கட்டடக் கலைகளைக் (Architecture) கொண்டுள்ளன.
சந்துரு: அப்படியா! அவற்றைக் கட்டியது யார்?
கடைக்காரர்: பல்லவர்கள் அதனைக் கட்டினார்கள்.
சந்துரு: என் அம்மா என்னிடம் அங்குள்ள பல்வேறு
நினைவுச் சின்னங்கள் (Monuments) ஒரே கல்லினால் கட்டப்பட்டுள்ளன என்பதனைக் கூறியுள்ளார்கள்.
கடைக்காரர்: ஆம் மிகவும் சரி.
கடைக்காரர்: கடற்கரைக் கோவில் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்று உனக்குத் தெரியுமா?
கடைக்காரர்: அது வங்காள விரிகுடாவை நோக்கிக் கடற்கரையில் அமைந்துள்ளதால் கடற்கரைக் கோவில் என அழைக்கப்படுகிறது.
சந்துரு: ஓ! அப்படியா ! சாலச் சிறந்தது
நாம் அறிந்து கொள்வோம்
மகாபலிபுரத்தில் உள்ள கோவில்கள் மூன்று தலைமுறை பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன. இவ்வகை கோவில்களைக் கட்டுவதற்கு ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆயின.
செயல்பாடு - நாம் எழுதுவோம்
நீ கண்டு களித்த ஏதேனும் 5 இடங்களின் பெயர்களை எழுதுக. அவற்றுள் ஏதேனும் ஓர் இடத்தின் புகைப்படத்தை ஒட்டுக.
- மகாலிபுரம்
- தஞ்சாவூர்
- கன்னியாகுமரி
- திருநெல்வேலி
- மதுரை
சந்துரு மற்றொரு படத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.
சந்துரு: புனித ஜார்ஜ் கோட்டை எங்குள்ளது?
கடைக்காரர்: சென்னையில்தான் உள்ளது. இது, ஆங்கிலேயர்களால் முதன்முதலாக இந்தியாவில் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
சந்துரு: கோட்டையினுள் என்னவெல்லாம் உள்ளன?
கடைக்காரர்: அருங்காட்சியகமும் (Museum),
தேவாலயமும் கோட்டையினுள் உள்ளன.
தமிழக அரசின் தலைமைச் செயலகமும் கோட்டையினுள் தான் உள்ளது.
சந்துரு: எனக்கு அருங்காட்சியகம் செல்ல மிகவும் பிடிக்கும். நான் நிச்சயமாகக் கோட்டையையும் சென்று பார்ப்பேன்.
கடைக்காரர்: நீ கட்டாயம் சென்று வர வேண்டும்
கடைக்காரர் மற்றொரு படத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடைக்காரர்: இப்படத்தைப் பார். இது யாருடைய உருவச்சிலை என்று உனக்குத் தெரியுமா?
சந்துரு: இது
திருவள்ளுவரின் உருவச்சிலை. அவர்தாம் சிறப்புமிக்க
திருக்குறளை இயற்றினார்.
கடைக்காரர்: ஆம் சரியாகச் சொன்னாய்.
சந்துரு: இந்தச் சிலை எங்கு உள்ளது?
கடைக்காரர்: இது
கன்னியாகுமரியில் உள்ளது.
சந்துரு: இந்தச் சிலை மிகவும் உயரமாக உள்ளது.
கடைக்காரர்: ஆம் இது 133 அடி உயரம் கொண்டது. இது உனக்கு எதை நினைவுபடுத்துகிறது?
சந்துரு: திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
கடைக்காரர்: மிக நன்று. இந்தச் சிலையின் உயரம் திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கையைத்தான் குறிப்பிடுகிறது.
சந்துரு: இச்சிலையை சுற்றியுள்ள கடலின் பெயர் என்ன?
கடைக்காரர்: இச்சிலை அமைந்துள்ள பாறையை அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் வங்காள விரிகுடா ஆகிய மூன்று நீர்ப்பரப்புகள் சூழ்ந்துள்ளன.
சந்துரு: ஆ! இச்சிலை கம்பீரமாக உள்ளது!
செயல்பாடு - நாம் விவாதித்து எழுதுவோம்
நினைவுச் சின்னங்களில் பெயர்கள் மற்றும் ஓவியங்களை மக்கள் கிறுக்கி வைத்துள்ளதைக் கண்டதுண்டா? இது சரி என்று உனக்கு தோன்றுகிறதா? உன் கருத்துகளை எழுதுக.
தவறு. அவ்வாறு செய்யக்கூடாது.
நினைவிடங்கள் மூலம் மக்களின் பண்பாட்டை அறியமுடியும். அவற்றில் ஏதேனும் கிறுக்கினால் அந்த வரலாறை அறிய இயலாது. எனவே, நினைவுச் சின்னங்கள் உள்ள இடங்களில் கிறுக்கக்கூடாது.
சந்துரு மற்றொரு படத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.
சந்துரு: இந்தக் கோவிலின் பெயர் என்ன?
கடைக்காரர்: இதுதான் புகழ் வாய்ந்த
தஞ்சாவூர் பெரிய கோவில். இது
பிரகதீஸ்வரர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது
சந்துரு: இதனைக் கட்டியது யார்?
கடைக்காரர்: இக்கோவிலை
இராஜராஜ சோழன் காட்டினார் இக்கோவிலில் உள்ள
நந்தி ஒரே கல்லினால் ஆனது என்று உனக்குத் தெரியுமா?
கடைக்காரர்: ஆம். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில் கோவிலின் கோபுர நிழல் தரையில் விழுவதில்லை .
சந்துரு: ஆச்சரியமாக உள்ளது. இவற்றைப் பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது. நான் அங்கு சென்று வரப் போகிறேன்.
கடைக்காரர்: ஆமாம், நீ சென்று அவ்விடத்தை காண வேண்டும். நான் சிறுவனாக இருந்த பொழுது அவ்விடத்திற்குச் சென்று வந்துள்ளேன் மீண்டும் அவ்விடத்தைக் காண ஆவலாக உள்ளது.
சிந்தனை செய்
நினைவுச் சின்னம் அல்லது கோவில்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களை நீ கண்டதுண்டா?
செயல்பாடு - நாம் விவாதித்து - எழுதுவோம்
உன் நண்பர்களுடன் விவாதித்து தமிழ்நாட்டில் உள்ள உங்களுக்குப் பிடித்தச் சுற்றுலாத் தலங்கள் பற்றி எழுதுக.
- ❖ கன்னியாகுமரி
- ❖ ஊட்டி
- ❖ மதுரை
- ❖ மகாபலிபுரம்
- ❖ சென்னை
சந்துரு: இந்த வரைபடத்தின் இறுதியில் உள்ள படம் கோட்டை போன்று உள்ளதே.
கடைக்காரர்: ஆம் நீ கூறுவது சரி. இக்கோட்டை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை ஆகும்.
கடைக்காரர்: ஆம். தமிழ்நாட்டில் உள்ள பழங்காலக் கோட்டைகளுள் இதுவும் ஒன்று.
சந்துரு: நான் மலைக்குன்றுகளைக்கூட இப்படத்தில் காண்கிறேன்.' எனக்கு செஞ்சிக்கோட்டை செல்ல விருப்பமாக உள்ளது.
கடைக்காரர்: நாம் அனைவரும் இவ்விடங்களைச் சென்று காண வேண்டும். ஏனெனில், இவற்றிற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு. நாம் இவற்றை எண்ணிப் பெருமை கொள்வோம்.
சந்துரு: நன்று. தமிழ்நாட்டு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள படஅட்டை மற்றும் எழுதுகோல்களைப் பெற்றுக் கொள்.
கடைக்காரர்: நான் இவ்வரைபடங்களை என் வீட்டில் தொங்க விடுவேன். இவற்றைப் பற்றி என் நண்பர்களுடன் உரையாடுவேன். நன்றி, மாமா!
கலைச் சொற்கள்
Architecture: கட்டடக் கலை
Monuments: நினைவுச் சின்னங்கள்
Museum: அருங்காட்சியகம்
மீள்பார்வை
- (i) ஒவ்வொரு நினைவுச் சின்னத்திற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு .
- (ii) மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் பல்லவர்களால் கட்டப்பட்டன.
- (iii) புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட கோட்டை ஆகும்.
- (iv) திருவள்ளுவர் உருவச்சிலை கன்னியாகுமரியில் உள்ளது.
- (v) தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
- (vi) செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.