3rd Social Science Term 1 Unit 3 Panchayat - Lesson & Answers

3rd Social Science : Term 1 Unit 3 : Panchayat

முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஊராட்சி மன்றம் | 3rd Social Science : Term 1 Unit 3 : Panchayat

ஊராட்சி மன்றம்

கற்றல் நோக்கங்கள்

  1. ஊராட்சி மன்றம் பற்றி அறிந்து கொள்ளல்
  2. ஊராட்சி மன்றம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ளல்
  3. 'கிராம சபையின் பணிகள் பற்றி தெரிந்து கொள்ளல்
  4. உள்ளாட்சியைப் பற்றி தெரிந்து கொள்ளல்
Classroom Scene

தண்டோரா அறிவிப்பு

"கிராம சபை சுதந்திரத் திருநாளன்று கூட்டப்படுகிறது. அனைத்துக் கிராம மக்களும் கலந்து கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".

Dandora Announcement

(தண்டோரா அறிவிப்பைக் கேட்டு இனியன் வீட்டிற்கு ஓடுகிறான்).

Iniyan
இனியன்: அப்பா, தண்டோரா அறிவிப்பாளர் என்ன கூறினார்?
Father
தந்தை: கிராம சபை கூட்டம் சுதந்திர திருநாளன்று கூட்டப்படும் என்று கூறினார்.
Iniyan
இனியன்: கிராம சபை கூட்டம் என்றால் என்ன? அவர்கள் அக்கூட்டத்தில் என்ன செய்வார்கள்?
Father
தந்தை: மக்கள் கிராமத்தில் ஒன்றாக கூடி ஊராட்சி மன்றப் பணிகளைப் பற்றி விவாதிப்பர்.
Iniyan
இனியன்: அப்படியா! ஊராட்சி மன்றம் என்றால் என்ன?
Panchayat System
Father
தந்தை: நீ கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் ஊராட்சி மன்றத்தைப்பற்றிக் கூறுகிறேன்.

நமது நாடு மிகவும் பெரிய நாடு. இதில் அதிக நகரங்களும் கிராமங்களும் உள்ளன. எனவே ஊராட்சி மன்றங்களும் அதிக அளவில் செயல்படுகின்றன. கிராம ஊராட்சி மன்றம் என்பது பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் (Panchanyat Raj) அடிப்படை 73-வது சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் ஏப்ரல் 1993-ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் பஞ்சாயத்து ராஜ்யத்தின் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை ஆகும். ஒவ்வொரு கிராம ஊராட்சியும் 500 மற்றும் 500க்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும்.
Panchayat Raj Structure
Iniyan
இனியன்: அப்பா கிராம ஊராட்சியில் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருப்பார்கள்?

நாம் அறிந்து கொள்வோம்.!

12,620 கிராம ஊராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

Tamil Nadu Map
Father
தந்தை: தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்(6 லிருந்து 15 வரை) இருப்பார்கள்.
Iniyan
இனியன்: ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
Father
தந்தை: கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பர். அவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

'கிராம சுயராஜ்' என்ற வார்த்தை முதன்முதலில் மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

Mahatma Gandhi

செயல்பாடு - விடையளிப்போம்

1. உங்கள் கிராம பஞ்சாயத்துத் தலைவரின் பெயரை எழுதுங்கள்.

எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவரின் பெயர் திரு. தமிழ்ச்செல்வன்

2. உங்கள் கிராம பஞ்சாயத்தில் எத்தனை வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்?

எங்கள் கிராம பஞ்சாயத்தில் 24 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

Panchayat Office

நாம் அறிந்து கொள்வோம்.

சோழ அரசு 'குடவோலை' முறையின் மூலம் கிராம நிர்வாகத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர் என்பதைக் காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் அறிந்துக் கொள்கின்றோம்.

குடவோலை என்பது நமது பாரம்பரிய தேர்தல் முறை.

Kudavolai System

கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களுக்கு விருப்பமான பெயரை ஓலையில் எழுதுவார்கள். அவ்வோலையைக் குடத்திற்குள் போடுவார்கள். எந்த நபரின் பெயர் அதிக ஓலைகளைக் கொண்டுள்ளதோ அந்த நபரே உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

செயல்பாடு - நாம் எழுதுவோம்

உன் வகுப்பில் வகுப்பு தலைவரைக் குடவோலை முறையின் மூலம் தேர்ந்தெடு.

  • ❖ என்னுடைய வகுப்பில் உள்ள மாணவர்களை அழைத்து தனி தாளில் அவர்கள் தலைவராக்க விரும்பும் மாணவனின் பெயரை எழுதச் சொல்லி ஒரு குடத்தில் போடச் சொல்வேன்.
  • ❖ பின்னர் யார் பெயர் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் எழுதிய தாளில் உள்ளதோ, அவரே வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
Iniyan
இனியன் : அப்பா, இம்மன்ற உறுப்பினர்களின் பணி என்ன?
Father
தந்தை: மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளிப்பது அவர்களின் முக்கிய பணியாகும்.

கட்டாயமாக ஊராட்சி மன்றத்தால் செயல்படுத்தப்படும் பணிகள்

  1. மின்சாரம் வழங்குவது மற்றும் தெருவிளக்குகளைப் பராமரித்தல்.
  2. பொது கிணறு பராமரித்தல்.
  3. குடிநீர் வழங்குவது.
  4. சாலைகள் போடுவது மற்றும் பராமரித்தல்.
  5. கழிவுநீர் கால்வாய்களை ஏற்படுத்துதல்.
  6. சிறிய பாலங்களைக் கட்டுதல்.
  7. தொடக்கப்பள்ளி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்.
  8. சுகாதார வசதிகளை அளித்தல்.
Iniyan
இனியன் : அப்பா, அவர்கள் அதிகமாகப் பணிகளைப் புரிகின்றனர். அதற்கு அதிக பணம் தேவைப்படும் அல்லவா?
Panchayat Funds
Father
தந்தை: ஆம், மத்திய மற்றும் மாநில அரசாங்கம் கிராம ஊராட்சிக்குத் தேவையான நிதியை வழங்கும். அவர்கள் அப்பணத்தை கிராம வளர்ச்சிக்காக பயன்படுத்துவர். நாம் ஊராட்சி மன்றத்திற்கு வரி செலுத்துகிறோம். வரி வசூலிப்பது கிராம ஊராட்சி மன்றத்தின் முக்கிய பணியாகும்.

அவர்கள் சில விருப்பப் பணிகளை மேற்கொள்வர்:

  1. சாலைகளின் ஓரங்களில் மரம் நடுதல்.
  2. பொது அங்காடிகளை அமைத்தல்.
  3. பூங்காக்கள் ஏற்படுத்துதல்.
  4. தங்கும் விடுதிகள் உருவாக்குதல்.
  5. விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்.
  6. நூலகங்களை உருவாக்குதல்.
  7. முதியோர்களுக்கான கல்வி நிலையங்களை ஏற்படுத்துதல்.
  8. கிராம விழாக்களைக் கொண்டாடுதல்.
  9. கிராமத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்.

சிந்தனை செய்

1. உனது கிராமத்தில் நூலகம் உள்ளதா?

எனது கிராமத்தில் நூலகம் இல்லை

2. உனது கிராமத்தில் பூங்கா உள்ளதா?

ஆம். சிறிய பூங்கா ஒன்று உண்டு.

3. உனது கிராமத்தில் விளையாட்டு மைதானம் உள்ளதா?

ஆம், சிறிய விளையாட்டு மைதானம் உள்ளது.

சிறந்த பஞ்சாயத்து விருது பெற்ற கிராமம் - வியக்க வைக்கும் கிராமம்

கோயம்புத்தூரில் உள்ள ஓடந்துறை ஊராட்சியில் 850 வீடுகள் இலவசமாக கட்டித்தரப்பட்டுள்ளன. அவ்வூராட்சி அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்த கிராமம் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றுள்ளது:

  1. நிர்மல் புஷ்கர் விருது
  2. பாரத ரத்னா ராஜிவ்காந்தி சுற்றுச்சூழல் விருது

உனது கிராமம் ஏதாவது விருது வாங்கியுள்ளதா?

Clean Village
Iniyan
இனியன்: அப்பா, நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு நீங்கள் செல்வீர்களா?
Father
தந்தை: கண்டிப்பாக நான் செல்வேன். கிராம சபை கூட்டத்தில் பங்கு பெறுவது முக்கியம். கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கான பணிகளைப் பற்றி விவாதிப்போம்.

நாம் அறிந்து கொள்வோம்.

கிராம சபை மக்களாட்சியின் அடிப்படையாக விளங்குகிறது.

கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூட்டவேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள்:

ஜனவரி 26  |  ஆகஸ்ட் 15  |  மே 1  |  அக்டோபர் 2

Gram Sabha

கிராம சபையின் பணிகள்

  1. வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல்.
  2. கிராம வரவு-செலவுகளைக் கண்காணித்தல்.
  3. மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்தல்.

நகராட்சி

கிராம ஊராட்சி போன்றே நகராட்சியும் செயல்படுகிறது. நகராட்சி 5,000 முதல் 30,000 வரை மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. நகர மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும். நகரத்திலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நகரமன்றத்தின் பணி ஆகும்.

மீள்பார்வை

  • * ஊராட்சி மன்றம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை அளிக்கிறது.
  • * பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்பது மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை.
  • * வரி வசூலிப்பது ஊராட்சி மன்றத்தின் முக்கிய பணியாகும்.
  • * கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூடவேண்டும்.
  • * கிராம ஊராட்சிப் போன்றே நகராட்சியும் செயல்படுகிறது.