OMTEX AD 2

3rd Grade Tamil: Term 3 - Picture Dictionary (Agara Muthali)

3 ஆம் வகுப்பு தமிழ் - பட விளக்க அகரமுதலி

பட விளக்க அகரமுதலி

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : அகரமுதலி

பட விளக்க அகரமுதலி

பனிக்கரடி

இது உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும். இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாட வல்லது. இதனைத் துருவக்கரடி எனவும் கூறுவர்.

பால்

சத்துமிக்க ஓர் உணவு. இதில் கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. உலகளவில் மிகுதியாகப் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.

பிண்ணாக்கு

தேங்காய், எள், கடலை போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை. இது விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.

பீர்க்கங்காய்

நார்ச்சத்துமிக்க காய்களுள் ஒன்று. இதன் தோல், நோயைக் குணப்படுத்தும்.

புறா

முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவைகளுள் ஒன்று. இப்பறவைகள் குச்சிகள், குப்பைகள் கொண்டு கூடு கட்டுகின்றன. இவை, தானிய வகைகளை இரையாக உட்கொள்கின்றன.

பூண்டு

மருத்துவப் பயன்மிக்க ஓர் உணவுப் பொருள். இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கக் கூடியது .

பெங்குயின்

குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும். இது, பறவை இனத்தைச் சார்ந்து இருந்தாலும், பறக்க முடியாது. மனிதர் நடப்பதுபோல இதன் நடை அமைந்திருக்கும். நீரில் நன்றாக நீந்திச் செல்லும்.

பேரிச்சம்பழம்

இது, பனைவகையைச் சார்ந்தது. இது மருத்துவக் குணம் உடையது. இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை நீக்கும்.

பை

இது பொருள்களை எடுத்துச் செல்ல உதவுகிறது. துணி முதலான பொருள்களைக்கொண்டு உருவாக்கப்படுகின்றது. பல வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது.

பொங்கல் விழா

இவ்விழா, தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. உணவுப் பொருள்களை விளைவிக்க உதவுவது இயற்கை. அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இதனைக் கொண்டாடுகின்றனர்.

போர்வாள்

பண்டைக் காலத்தில், மன்னர்கள் பயன்படுத்திய படைக்கருவிகளுள் ஒன்று. போரிடும் காலங்களில், வீரர்கள் இக்கருவியைப் பயன்படுத்துவர்.

பௌவம்

கடலைக் குறிக்கும் ஒரு சொல், பௌவம். பூமியின் பெரும்பகுதி கடலாலேயே சூழப்பட்டுள்ளது. கடல் நீர் உப்புக் கரிக்கும். கடல் நமக்கு மீன், சிப்பி, நண்டு, முத்து, பவளம் முதலான வளங்களைத் தருகிறது.