தொடர் கூட்டல்
2வது கணக்கு : பருவம்-3 அலகு 1 : எண்கள்
பயணம் செய்வோம்
காலணிக் கடை
முகிலன், யாழினி ஆகிய இருவரும் காலணிகள் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றனர். அதே நேரத்தில் அவர்களுடைய நண்பர்கள் சிலரும் காலணிகள் வாங்க வந்தனர். சிறிது நேரத்தில் காலணிகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் முகிலன், யாழினி ஆகிய இருவரும் காலணி வாங்காமலே வீடு திரும்பினர்.
முகிலனும், யாழினியும் காலணியகத்தில் நிகழ்ந்ததை அவர்களுடைய அம்மாவிடம் விளக்கிக் கூறினர். பின்வரும் உரையாடலைக் கவனிக்கவும்.
யாழினி : அம்மா, நான் சிட்டுவைப்
பார்த்தேன். அது 2 தொகுதி காலணிகளை வாங்கிச் சென்றது. (2 + 2 = 4).
அம்மா : ஓ! அப்படியா.
முகிலன் : அம்மா, நான் பூனையாரைச்
சந்தித்தேன். அவர் 3 தொகுதி காலணிகளை வாங்கிச் சென்றார். (4 + 4 + 4 = 12).
அம்மா : அப்படியா.
யாழினி : அம்மா, ஈயார்
வந்து 4 தொகுதிக் காலணிகளை வாங்கினார். (6 + 6 + 6 + 6 = 24)
அம்மா : அடுத்து என்ன நிகழ்ந்தது?
முகிலன் : அம்மா, சிலந்தியார்
5 தொகுதிக் காலணிகளை வாங்கிச் சென்றார். (8 + 8 + 8 + 8 + 8 = 40).
பின்பு இறுதியில் கடையில் ஒருவர் நுழைந்து கடையில் உள்ள அனைத்துக் காலணிகளையும் அணிந்து சென்றுவிட்டார். அவர் யாராக இருக்கும் என்று ஊகிக்கமுடியுமா?
யாழினி : ஆம், அம்மா, இறுதியாக பூரானார்
வந்து கடையில் உள்ள அனைத்துக் காலணிகளையும் வாங்கிச் சென்றுவிட்டார்.
கற்றல்
காய்கறிப் பண்ணை
அகிலனும், அழகியும் தோட்டக் கலையில் ஆர்வம் மிக்கவர்கள். ஓய்வு நேரத்தில் காய்கறித் தோட்டத்தில் 4 வகையான காய்கறிச்செடிகளை வளர்த்தார்கள். அவர்களுடைய தோட்டத்தை நாம் பார்வையிடுவோம்.
பயிற்சி
தொடர் கூட்டலைப் பயன்படுத்தி மொத்த எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவும்.
1. 5 குழுக்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 3 கோழிக்குஞ்சுகள் உள்ளன. மொத்தம் உள்ள கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை யாது?
2. 4 சீப்புகள் உள்ளன. ஒவ்வொரு சீப்பிலும் 6 வாழைப்பழங்கள் உள்ளன. மொத்தம் உள்ள வாழைப்பழங்களின் எண்ணிக்கை யாது?
3. 3 தட்டுகள் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் 10 முட்டைகள் உள்ளன. மொத்தம் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை என்ன?
முயன்று பார்
விடுபட்ட உருவங்களை வரைந்து தொடர் கூட்டல் கூற்றை நிறைவு செய்க.
விடை:
(ii) 2 + 2 + 2 + 2 = 8
(iii) 5 + 5 + 5 = 15
(iv) 6 + 6 + 6 + 6 = 24
கற்றல்
எண்கோடுகளைக் கொண்டு தொடர் கூட்டல் கற்போமா!
0 இலிருந்து 12 வரை மூன்று மூன்றாகத் தாவுதல்
தவளை 3 அலகுகளாக 4 முறை குதித்து 12 ஐ அடையும்.
தவளையானது ஒரு முயற்சியில் 3 அலகு தொலைவைத் தாவி ஓர் இலக்கை அடையும். நான்கு முயற்சிக்குப் பின் தவளையால் தாண்டப்பட்ட தொலைவு 12 அலகுகளாக இருக்கும். அதாவது, 0 + 3 = 3, 3 + 3 = 6, 6 + 3 = 9, 9 + 3 = 12. அதாவது 3 ஐத் தொடர்ந்து 4 முறை கூட்டினால் 12 கிடைக்கும். அதனை 3 + 3 + 3 + 3 = 12 அலகு என எழுதலாம்.
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள தொலைவுகளுக்கு 20 ஐ அடைய தவளை தாவும் நிலைகளை வரைக. தொடர் கூட்டல் கூற்றுகள் மற்றும் தாவல்களின் எண்ணிக்கையை எழுதுக.
(i) ஒருமுறை தாவுதலில் 2 அலகுகள் தொலைவு தாண்டுதல்.
தொடர் கூட்டல் கூற்றுகள்: 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2
தாவல்களின் எண்ணிக்கை: 10
(ii) ஒருமுறை தாவுதலில் 4 அலகுகள் தொலைவு தாண்டுதல்.
தொடர் கூட்டல் கூற்றுகள்: 4 + 4 + 4 + 4 + 4
தாவல்களின் எண்ணிக்கை: 5
(iii) ஒருமுறை தாவுதலில் 5 அலகுகள் தொலைவு தாண்டுதல்.
தொடர் கூட்டல் கூற்றுகள்: 5 + 5 + 5 + 5
தாவல்களின் எண்ணிக்கை: 4
மனக்கணக்கு
1. ஆதித்யா, 6 பை கடலை உருண்டைகளை வாங்கினான். ஒரு பையில் 5 கடலை உருண்டைகள் உள்ளன எனில், அவன் வாங்கிய மொத்தக் கடலை உருண்டைகளின் எண்ணிக்கை என்ன?
2. 10 படகுகள் இருந்தன. ஒவ்வொரு படகிலும் 5 குழந்தைகள் இருந்தனர் எனில், 10 படகுகளில் மொத்தம் உள்ள குழந்தைகள் எத்தனை பேர்?
3. ரஞ்சித் ஒரு பையில் 5 குறிப்பேடுகள் வைத்திருந்தான் எனில், அவன் 6 பைகளில் எத்தனை குறிப்பேடுகள் வைத்திருப்பான்?
4. மகிழினி ஒரு நாளில் 10 சேமித்தாள் எனில், 7 நாட்களில் அவள் எவ்வளவு ரூபாய் சேமிப்பாள்?
5. ஒரு தட்டில் 3 பழங்கள் வீதம் 7 தட்டுகளில் எத்தனை பழங்கள் இருக்கும்?