வகுப்பு 6 - தமிழ்
இரண்டாம் இடைப் பருவத் தேர்வு – 2024
விடைகளுடன்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதுக. (6x1=6)
1. நாம் _________ சொல்படி நடக்க வேண்டும்.
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
3. தவறான சொல்லை வட்டமிடுக.
4. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண _______ தரும்.
5. பிறரிடம் நான் ________ பேசுவேன்.
6. மாணவர்கள் நூல்களை ________ கற்க வேண்டும்.
II. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. (5X2=10)
7. கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால், கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே, மன்னனை விடக் கற்றவரே சிறந்தவர் என்று மூதுரை கூறுகிறது.
8. எதை நம்பி வாழக் கூடாது?
பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது; நம் சொந்த உழைப்பை நம்பியே வாழ வேண்டும்.
9. நாம் எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
இனிய சொற்கள் இருக்கும்போது கடுமையான சொற்களைப் பேசுவது, கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது. எனவே, நாம் இன்சொற்களையே பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.
10. மயங்கொலி எழுத்துகள் யாவை?
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள எழுத்துகள் மயங்கொலி எழுத்துகள் எனப்படும். அவை எட்டு: ந, ன, ண; ல, ள, ழ; ர, ற.
11. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
நாம் இன்சொல் பேசி, பிறருக்கு உதவி செய்து, நேர்மையாக வாழ்ந்தால் பெருமை பெறலாம்.
12. இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடு.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்கள்:
- வண்டு (ண், ட - இன எழுத்துகள்)
- கம்பளம் (ம், ப - இன எழுத்துகள்)
13. கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக. (பல், மண், உண்டு, இல்லை)
- பல் + உண்டு = பல்லுண்டு
- பல் + இல்லை = பல்லில்லை
- மண் + உண்டு = மண்ணுண்டு
- மண் + இல்லை = மண்ணில்லை
14. கலைச்சொல் தருக.
- Tiffen - சிற்றுண்டி
- Lift - மின்தூக்கி
III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க. (2x3=6)
15. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்?
காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுவர். மேலும், தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பர்.
16. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
‘கல்விக்கண் திறந்த காமராசர்’ எனப் போற்றப்படும் அவரின் முக்கிய கல்விப்பணிகள்:
- மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகளைத் திறந்தார்.
- பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
- மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி கல்வி கற்க சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
- பள்ளிகளில் வசதிகளைப் பெருக்க பள்ளிச்சீரமைப்பு மாநாடுகளை நடத்தினார்.
17. இன எழுத்துகள் என்றால் என்ன? எ.கா தருக.
இன எழுத்துகள்: சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை இருக்கும். இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
மெல்லின மெய் எழுத்துகளை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
எடுத்துக்காட்டு:
- ங் - க் : சிங்கம், சங்கு
- ஞ் - ச் : மஞ்சள், பஞ்சு
- ண் - ட் : வண்டு, பண்டம்
- ந் - த் : பந்தல், தந்தம்
- ம் - ப் : கம்பளம், தம்பி
- ன் - ற் : தென்றல், சென்றான்
IV. அடிபிறழாமல் எழுதுக. (1x3=3)
18. “மன்னனும் மாசறக் கற்றோனும்” எனத் தொடங்கும் மூதுரைப் பாடல்.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
- ஔவையார்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
V. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளிக்க. (1x5=5)
19. காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை:
'கருப்புக் காந்தி', 'பெருந்தலைவர்', 'படிக்காத மேதை', 'கல்விக்கண் திறந்தவர்' எனப் பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் காமராசரின் பெருமைகளை இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் இளமையும்:
காமராசர், விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி அம்மையாருக்கு மகனாக 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பிறந்தார். இவர் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்றாலும், தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தார்.
அரசியல் வாழ்க்கை:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றார். நேர்மை, எளிமை, உழைப்பு ஆகியவற்றால் உயர்ந்த அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.
கல்விப்பணிகள்:
முதலமைச்சராக இருந்தபோது, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். மூடப்பட்டிருந்த ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்தார். ஏழை மாணவர்கள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டத்தையும், சீருடைத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால், 'கல்விக்கண் திறந்த காமராசர்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
முடிவுரை:
தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு பாடமாகும். அவர் காட்டிய எளிமை, நேர்மை ஆகிய வழியில் நாமும் நடப்போம்.
20. நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்கு என்னென்ன திட்டங்கள் வகுப்பீர்கள்?
நான் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காகக் கீழ்க்காணும் திட்டங்களை வகுப்பேன்:
- அரசுப் பள்ளிகள் அனைத்தையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்துவேன்.
- அனைத்துப் பள்ளிகளிலும் கணினி, அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்களை அமைப்பேன்.
- மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவேன்.
- மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
- ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நவீன நூலகம் அமைத்து, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பேன்.
- மாணவர்களுக்கு ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கல்வியை அளிப்பேன்.
21. உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்து எழுதுக.
முன்னுரை:
'தமிழர் திருநாள்' என்று போற்றப்படும் பொங்கல் விழா, எங்கள் ஊரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். உழவுக்கும், உழவர்களுக்கும், அவர்களுக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவே பொங்கல்.
போகிப் பண்டிகை:
பொங்கலுக்கு முதல் நாள், 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதற்கேற்ப, வீட்டில் உள்ள தேவையில்லாத பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.
தைப் பொங்கல்:
தை முதல் நாளன்று, அதிகாலையில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிவோம். வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, புதுப் பானையில் புத்தரிசியிட்டு, வெல்லம், முந்திரி சேர்த்துப் பொங்கல் வைப்போம். பொங்கல் பொங்கி வரும்போது, "பொங்கலோ பொங்கல்" என்று ஆரவாரத்துடன் கூறி, சூரியனுக்கு நன்றி தெரிவித்து வழிபாடு செய்வோம்.
மாட்டுப் பொங்கல்:
அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். உழவுக்கு உதவிய மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மாலை அணிவித்து அலங்கரிப்போம். அவற்றுக்குப் பொங்கல் மற்றும் பழங்களைக் கொடுத்து நன்றி செலுத்துவோம். அன்று மாலையில் மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.
முடிவுரை:
இவ்வாறு எங்கள் ஊரில் பொங்கல் விழா, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, இயற்கையோடு இயைந்து, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது.