கடிதம் - புகார்க் கடிதம்
கேள்வி
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
மாதிரிப் புகார்க் கடிதம்
அனுப்புநர்
அ. கபிலர்,
6, ஔவையார் தெரு,
சங்கரலிங்கபுரம்,
விருதுநகர் (மாவட்டம்).
பெறுநர்
உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப்பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்...
வணக்கம். நான் நேற்று (22.09.2020) விருதுநகர் - மதுரை நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள முல்லை உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். கோழி பிரியாணி ஒன்று வாங்கினேன். சாப்பிடும்போது குழம்பில் மிகுதியான வேதிப்பொருட்களும் நிறமிகளும் கலந்து இருப்பதையும், கோழிக்கால் துண்டில் புழு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
உணவு விடுதி உரிமையாளரிடம், இதுகுறித்து முறையிட்டபோது "உன்னால் முடிந்ததைப் பார்" என்று மிரட்டினார். விலைப்பட்டியலில் கோழிப் பிரியாணி விலை ரூபாய் 120 என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால், என்னிடம் 180 ரூபாய் கேட்டார்.
தரமற்ற உணவு வழங்கியும், விலை கூடுதலாக வசூலித்தும் வரும் முல்லை உணவு விடுதி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். புழுவுடன் கூடிய கோழிக்கால் துண்டின் புகைப்படத்தையும், 180 ரூபாய்க்கான உணவு கட்டணச் சீட்டின் ஒளிப்பட நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
நன்றி!
இப்படிக்கு,
உண்மையுள்ள,
அ. கபிலர்.
இடம்: சங்கரலிங்கபுரம்
நாள்: 23.09.2020
உறைமேல் முகவரி:
பெறுநர்
உயர்திரு. உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவு பாதுகாப்பு ஆணையர் அலுவலகம்,
சென்னை.