Comprehensive Guide to Tamil Grammar: Thodar Ilakkanam (Sentence Structure)

Comprehensive Guide to Tamil Grammar: Thodar Ilakkanam (Sentence Structure)
மொழி –க கற்கண்டு

இலக்கணம்: தொடர் இலக்கணம்

தொடர் இலக்கணம் அறிமுகம்

எட்வர்டு வந்தான்.

இந்தச் சொற்றொடரில் பெயர்ச்சொல், எட்வர்டு என்பதாகும். இந்தச் சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே எழுவாய் என்கிறோம்.

கனகாம்பரம் பூத்தது.

இந்தச் சொற்றொடரில் வினைச்சொல், பூத்தது. இந்த வினைச்சொல்லே பயனிலை ஆகும். ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம்.

மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்.

இத்தொடரில், சொற்றொடர் எழுவதற்குக் காரணமாக அமைந்த மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும். அவ்வெழுவாயின் பயனிலை சூடினாள் என்பதாகும். எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான கனகாம்பரம் என்பது யாது? அது செயப்படுபொருள் என்று அழைக்கப்படுகிறது. எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே, செயப்படுபொருள் ஆகும்.

ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாகவும் பயனிலை வினை முற்றாகவும் இருக்கும். பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.

படித்தாய்.

இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை. நீ என்னும் எழுவாய் வெளிப்படையாகத் தெரியவில்லை. இதைத் தோன்றா எழுவாய் என்று கூறுகிறோம்.

பயனிலை வகைகள்

நான் வந்தேன்.

இத்தொடரில் வினைமுற்று பயனிலையாக வந்தது. இது வினைப் பயனிலை எனப்படும்.

சொன்னவள் கலா.

இங்கு கலா என்னும் பெயர்ச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது பெயர்ப் பயனிலை எனப்படும்.

விளையாடுபவன் யார்?

இங்கு யார் என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்துள்ளது. இது வினாப் பயனிலை எனப்படும்.

சில இடங்கள் தவிர, ஒரு சொற்றொடரில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் மூன்றும் இந்த வரிசையில்தான் வரவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. தமிழின் தொடர் அமைப்பின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று.

எடுத்துக்காட்டு:

  • நான் பாடத்தைப் படித்தேன் (எழுவாய், செயப்படுபொருள், பயனிலை)
  • பாடத்தை நான் படித்தேன் (செயப்படுபொருள், எழுவாய், பயனிலை)
  • படித்தேன் நான் பாடத்தை (பயனிலை, எழுவாய், செயப்படுபொருள்)
  • நான் படித்தேன் பாடத்தை (எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்)
  • பாடத்தைப் படித்தேன் நான் (செயப்படுபொருள், பயனிலை, எழுவாய் )

நல்ல நூல் ஒன்று படித்தேன்.

இத்தொடரில் நல்ல என்னும் சொல், எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருகிறது. இவ்வாறு அமைவதனைப் பெயரடை என்கிறோம்.

மகிழ்நன் மெல்ல வந்தான்.

இத்தொடரில் மெல்ல என்னும் சொல், வந்தான் என்னும் வினைப் பயனிலைக்கு அடையாக வருகிறது. இதை வினையடை என்கிறோம்.

வினை வகைகள் - தன்வினை, பிறவினை

தன்வினை, பிறவினை விளக்கம்

மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கும் விளையாட்டு, மகிழ்ச்சியின் ஆரவாரம். கண்ணன் முகமதுவை நோக்கி, "பந்தை என்னிடம் உருட்டு" என்று கத்தினான். முகமது பந்தைக் கண்ணனிடம் உருட்டினான். பந்து உருண்டது. கண்ணன் முகமது மூலம் பந்தை உருட்டவைத்தான்.

மேற்கண்ட சூழலில்,

பந்து உருண்டது என்பது தன்வினை.

உருட்டவைத்தான் என்பது பிறவினை.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.

பிறவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.

தன்வினை: அவன் திருந்தினான்

தன்வினை: அவர்கள் நன்றாக படித்தனர்

பிறவினை: அவனைத் திருந்த செய்தான்

பிறவினை: தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்

பிறவினை: பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்.

செய்வினை, செயப்பாட்டுவினை

செய்வினை, செயப்பாட்டுவினை விளக்கம்

அப்பா சொன்னார், "குமுதா, இலையில் உள்ள இட்டிலியை விரைந்து சாப்பிடு. அடுத்துத் தோசை வரப்போகிறது." அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், தோசை வைக்கப்பட்டது.

அப்பா சொன்னார் - செய்வினைத் தொடர்

தோசை வைக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்

இது போலவே, பாட்டுப் பாடுகிறாள் - செய்வினைத் தொடர்

பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்

தெரிந்து தெளிவோம்

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை; செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை என்பதை நினைவில் கொள்க.

'படு' என்னும் துணை வினைச்சொல் செயப்பாட்டு வினைத் தொடரில் சேர்ந்துவிடுகிறது.

'படு' என்பதைப் போல, 'உண், பெறு' முதலான துணைவினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன. அவற்றைப் போலவே, எச்சங்களுடன் சேர்ந்து ஆயிற்று, போயிற்று, போனது' முதலான துணை வினைகள் செயப்பாட்டுவினைகளை உருவாக்குகின்றன.

  • கோவலன் கொலையுண்டான்.
  • ஓவியம் குமரனால் வரையப்பட்டது.
  • வீடு கட்டியாயிற்று.
  • சட்டி உடைந்து போயிற்று.
  • பணம் காணாமல் போனது.

பயன்பாட்டுத் தொடர்கள்

அப்துல் நேற்று வந்தான் - தன்வினைத் தொடர்

அப்துல் நேற்று வருவித்தான் - பிறவினைத் தொடர்

கவிதா உரை படித்தாள் - செய்வினைத் தொடர்

உரை கவிதாவால் படிக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்

குமரன் மழையில் நனைந்தான் - உடன்பாட்டுவினைத் தொடர்

குமரன் மழையில் நனையவில்லை - எதிர்மறைவினைத் தொடர்

என் அண்ணன் நாளை வருவான் - செய்தித் தொடர்

எவ்வளவு உயரமான மரம்! - உணர்ச்சித் தொடர்

உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? - வினாத் தொடர்

பூக்களைப் பறிக்காதீர் - கட்டளைத் தொடர்

இது நாற்காலி - பெயர்ப் பயனிலைத் தொடர்

அவன் மாணவன் - பெயர்ப் பயனிலைத் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பதம்(சொல்) இருவகைப் படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும். பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

  • பகுதி (முதனிலை) - சொல்லின் முதலில் நிற்கும்; பகாப் பதமாக அமையும்; வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும்.
  • விகுதி (இறுதிநிலை) - சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும்.
  • இடைநிலை - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும்.
  • சந்தி - பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும்; பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்.
  • சாரியை - பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்; பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
  • விகாரம் - தனி உறுப்பு அன்று; மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்.

பகுதி:

ஊரன் - ஊர், நடிகன் - நடி, பார்த்தான் - பார், வரைந்தான் - வரை, மடித்தார் - மடி, மகிழ்ந்தாள் – மகிழ்

விகுதி:

விகுதி அட்டவணை

இடைநிலைகள்:

இடைநிலைகள் அட்டவணை

சந்தி:

உறுத்தும் - த் – சந்தி - த், ப், க

பொருந்திய - ய் - உடம்படுமெய் சந்தி – ய்,வ்

சாரியை:

நடந்தனன் - அன் – சாரியை - அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, குன்

எழுத்துப்பேறு

பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும். பெரும்பாலும் 'த்' மட்டுமே வரும். சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப்பேறு.

எடுத்துக்காட்டுகள்

வந்தனன்: வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்

  • வா - பகுதி ('வ' ஆனது விகாரம்)
  • த்(ந்) - சந்தி ('ந்' ஆனது விகாரம்)
  • த் - இறந்தகால இடைநிலை
  • அன் - சாரியை
  • அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

செய்யாதே: செய் + ய் + ஆ + த் + ஏ

  • செய் - பகுதி
  • ய் - சந்தி
  • - எதிர்மறை இடைநிலை
  • த் - எழுத்துப்பேறு
  • - முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

தமிழ் எண்களில் எழுதுக.

பன்னிரண்டு - 12

பதிமூன்று - 13

நாற்பத்து மூன்று - 43

எழுபத்தெட்டு - 78

தொண்ணூறு - 90