A Comparative Study: Streets of Maruvurpakkam in Silapathikaram vs. Modern Markets

A Comparative Study: Streets of Maruvurpakkam in Silapathikaram vs. Modern Markets

5 மதிப்பெண் வினா சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்க வீதிகளும் இக்கால அங்காடிகளும்- ஓர் ஒப்பீடு

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

அட்டவணையாக்கப்பட்ட விடையினைக் காண

இங்கு தொடுக

புகார் நகர மருவூர்ப் பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, நறுமணப் புகைப் பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருந்தனர்.

இன்றைய சந்தை வீதிகளில் சாந்துப்பொட்டு என்ற பெயரில் மிகவும் அரிதாக வண்ணக்குழம்பு விற்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் ஒட்டும் வண்ணப் பொட்டுகளை வைத்துக் கொள்கிறார்கள். சுண்ணப்பொடிகள் சிறிய சிறிய பொட்டலங்களாக பல வண்ணங்களில் உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கின்றன. குளிர்ந்த மணச்சாந்து பெரும்பாலும் சமய வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் கோவில்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது. மாலை நேரங்களில் பெரும்பாலான அங்காடிகளில் சாம்பிராணிப்புகை காட்டப்படுகிறது. கிராமங்களில் இன்றும் சாம்பிராணி போடும் வழக்கம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஆண்களும் பெண்களும் புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கை வாசனைத் திரவியங்களையே பயன்படுத்துகின்றனர். அச்சில் வார்க்கப்பட்ட சாம்பிராணி சிறிய பொட்டலங்களாக உள்ளூர்க்கடைகளிலும் செயற்கை வாசனைத் திரவியங்கள் பெரிய கடைகளிலும் கிடைக்கின்றன.

மருவூர்ப் பாக்கத்தில் பட்டு, முடி, பருத்திநூல் கொண்டு நெசவு நெய்யும் நெசவாளர் வாழும் வீதிகள் இருந்தன.

இன்றும் பட்டு, பருத்தி நூல் கொண்டு கைத்தறி நெசவு செய்யும் ஊர்கள் மிகக்குறைவாக அளவில் உள்ளன. அதிக அளவிலான விசைத்தறி ஆலைகள் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன.

மருவூர்ப்பாக்க வணிக வீதிகளில் பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, மணி போன்றவை அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும். ஆனால், இன்றோ துணிக்கடைகளில் பட்டு ஆடைகளுக்குத் தனிப்பிரிவே இருக்கிறது. பெரிய அளவிலான நகைக்கடைகளில் தங்கம், பிளாட்டினம், நவரத்தினக் கற்கள் மிகுந்த காவலோடு விற்கப்படுகின்றன.

மருவூர்ப்பாக்கக் கூல வீதிகளில் எட்டு வகையான தானியங்களும் குவிந்து கிடக்கும். இன்றோ, பல்பொருள் அங்காடிகளில் பல வகையான தானியங்கள் பொட்டலங்களாக விற்கப்படுகின்றன; குவிந்து கிடப்பதில்லை.

மருவூர்ப்பாக்கத்தில் பிட்டு வணிகர், அப்பம் சுடுபவர், கள் விற்கும் வலைச்சியர், மீன் விற்கும் பரதவர், உப்பு விற்கும் உமணர், வெற்றிலை விற்பவர், ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருட்களை விற்பவர், எண்ணெய் வணிகர் எனப் பலரும் வாழும் வீதிகளும் இருந்தன.

இன்று, தெருவோரத் துரித உணவுப்பண்டங்கள் விற்கும் கடைகளும் குளிர்சாதன வசதி நிறைந்த உயர்தரமான நட்சத்திரத் தகுதி பெற்ற உணவகங்களும் இருக்கின்றன. மது விற்கும் கடைகளும் மீன் விற்கும் கடைகளும் இருக்கின்றன. உள்ளூர் அங்காடிகளில் உப்பு, வெற்றிலை, ஏலம், வெற்றிலை, எண்ணெய் ஆகியவை கிடைக்கின்றன.

வெண்கலம் மற்றும் செப்புப்பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மட்பாண்டப் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள், பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையல்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் வாழும் வீதிகள் இருந்தன.

இயந்திரமயமான இக்காலத்தில் எல்லா விதமான தொழில்களையும் செய்யும் தொழிற்சாலைகள் வந்துவிட்டன. ஓவியங்கள் அச்சில் வெளிவருகின்றன. நவீன தொழில் நுட்பத்தால், சிற்பங்கள் முப்பரிணாம வடிவில் அச்சு வார்ப்புகளாக உருவாக்கப்படுகின்றன. விதவிதமான பொம்மைகளுக்கென்றே தனிக் கடைகள் வந்துவிட்டன. நகைக் கடைகள், துணிக்கடைகள், தையல் கடைகள், பொம்மைக் கடைகள், மரக்கடைகள், பாத்திரக் கடைகள் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக வீதிகள் வந்துவிட்டன.

மருவூர்ப்பாக்கத்தில் பெரும்பாணர் வசிக்கும் வீதிகளும், கைத் தொழில் செய்வோர் வாழும் வீதிகளும், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் வீதிகளும் இருந்தன. கூத்து கலைகள் அருகி வரும் இக்காலத்தில் ஒரு சில ஊர்களில் இசைக்கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். கைத் தொழில் புரிவோர் பல ஊர்களிலும் பரவலாக வாழ்கின்றனர். நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஏவல் புரிவோர், பணியாளர்களாக மாற்றம் அடைந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக மின்னணு வணிகம் வளர்ந்து கொண்டே வருகிறது.