Thirukkural Explained: 9th Tamil, Chapter 3 (Valviyal) - Samacheer Kalvi

Thirukkural Explained: 9th Tamil, Chapter 3 (Valviyal) - Samacheer Kalvi

வாழ்வியல்: திருக்குறள்

பண்பாடு – ங
வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
- திருவள்ளுவர்

வாழ்வியல்: திருக்குறள்

பொறையுடைமை (13)

1.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது.

அணி - உவமையணி

2.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

பிறர் தனக்குத் தரக்கூடாத துன்பத்தைத் தந்தாலும் மனம் நொந்து அறம் அல்லாத செயல்களைச் செய்யாமலிருப்பதே நன்றாம்.

3.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.*

செருக்கினால் துன்பம் தந்தவரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்.

தீவினை அச்சம் (21)

4.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

தீயவை தீயவற்றையே தருதலால் தீயைவிடக் கொடியதாகக் கருதி அவற்றைச் செய்ய அஞ்சவேண்டும்.

5.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம் நினைக்கும்.

கேள்வி (42)

6.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.

செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம். அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது.

அணி - சொற்பொருள் பின்வருநிலையணி

7.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.*

எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும்.

8.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப் பேசுவது அரிது.

9.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர் இறந்தால்தான் என்ன! இருந்தால்தான் என்ன!

தெரிந்துதெளிதல் (51)

10.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானதைக் கொண்டு அவரைப்பற்றி முடிவு செய்க.

அணி - சொற்பொருள் பின்வருநிலையணி

11.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும்.

அணி - ஏகதேச உருவக அணி

12.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்வதும் அவ்வாறு தேர்வு செய்தபின் அவரைப்பற்றி ஐயப்படுதலும் தீராத துன்பம் தரும்.

ஒற்றாடல் (59)

13.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஒற்றர் ஒருவர் சொன்ன செய்தியை மற்றோர் ஒற்றரால் அறிந்து முடிவு செய்க!

வினைத்தூய்மை (66)

14.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.*

வாழ்வில் உயர நினைப்பவர் புகழைக் கெடுக்கும் செயல்களைப் புறம் தள்ளவேண்டும்.

15.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

தாயின் பசியைக் கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே.

16.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று.

தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் பச்சைக் களி மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது.

அணி - உவமையணி

பழைமை (81)

17.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

நட்பின் உரிமையில் தம்மைக் கேட்காமலேயே ஒரு செயலைச் செய்தாலும் நட்பு பாராட்டுவோர் விருப்பத்தோடு அச்செயலுக்கு உடன்படுவர்.

தீ நட்பு (82)

18.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும் இனிமை தராது.

பேதைமை (84)

19.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

தகாத செயலுக்கு வெட்கப்படாமை, தக்கவற்றை நாடாமை, பிறரிடம் அன்பு இல்லாமை, ஏதொன்றையும் பாதுகாக்காமை ஆகியவை பேதையின் செயல்கள்.

20.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

படித்தும் படித்ததை உணர்ந்தும் உணர்ந்ததை மற்றவருக்குக் கூறியும் தான் அதன்படி செயல்படாத பேதையைப் போலப் பேதை யாருமில்லை!

நூல் வெளி

உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்களிப்பாக அமைந்த நூல், திருக்குறள். இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப் பொதுமறை இந்நூல். இது முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலைப் போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.

பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.