Showing posts with label 9 ஆம் வகுப்பு தமிழ். Show all posts
Showing posts with label 9 ஆம் வகுப்பு தமிழ். Show all posts

9th Tamil Iyal 5 Mozhi Arivu | Kasadara Mozhidhal Questions and Answers

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம் icon

மொழியை ஆள்வோம்

ஒப்பிட்டுச் சுவைப்போம் :

பாப்பா பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

Child's Song

Run about and play my sweet little Child

And idle not sweet little child;

In game and sport have many mates

And revile not any one child.

Rise at dawn to learn your lesson,

Then sing such airs that are soothing,

To games devote the whole evening,

Get habituated thus, oh child!

மொழிபெயர்க்க.

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was placed very much by Birbal's wit.

விடை :

பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன ? என்று அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

பிழை நீக்கி எழுதுக :

  1. 1. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்

    விடை : மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்

  2. 2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்

    விடை : நல்ல தமிழில் எழுதுவோம்

  3. 3. பவள விழிதான் பரிசு உரியவள்.

    விடை : பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

  4. 4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்

    விடை : துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.

  5. 5. குழலியும் பாடத் தெரியும்

    விடை : குழலிக்கும் பாடத் தெரியும்

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

(எ. கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

  1. 1. அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

    விடை : அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.
    (அல்லது) அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

  2. 2. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

    விடை : சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

  3. 3, பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.

    விடை : பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

  4. 4. கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.

    விடை : கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க :

புத்தகம் படிப்போம்! புதியன அறிவோம்!

புத்தகத் திருவிழா

நாள் : செப்டம்பர் 19 முதல் 28 வரை

இடம் : சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்)

(நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்)

அனைவரும் வாரீர்! அறிவுத்திறம் பெறுவீர்!

விடை :

புத்தகத் திருவிழா

செப் - 18. தஞ்சாவூர்.

தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

அண்ணாவின் வாழ்க்கையில் ...

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்ற அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, "தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா , "நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன் " என்றார்.

  1. 1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?

    விடை : மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர் அறிந்து கொண்டார்.
  2. 2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?

    விடை : முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
  3. 3. அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?

    விடை : சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
  4. 4. பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?

    விடை :
    தான் : பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன்.
    இன் : சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது
    கள் : பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.
  5. 5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:

    விடை : “ பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு”
மொழியோடு விளையாடு icon

மொழியோடு விளையாடு

சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்குக.

மாணவர்கள் - ஆசிரியர் - பாடவேளை - கரும்பலகை - புத்தகம் - எழுதுகோல் - அழிப்பான் - வழிபாட்டுக் கூட்டம் - அறை - கல்லூரி - உயர்நிலை - சீருடை - மடிக்கணினி

எ.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.

விடை :
  1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்.
  2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.
  3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
  4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
  5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
  6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா.
  7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
  8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.
  9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.
  10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.

அகராதியில் காண்க.

(அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)

அரங்கு
- அரங்கம், உள்வீடு
ஒட்பம்
- அறிவு, அழகு, நன்மை, மேன்மை
கான்
- காடு, மணம், வாய்க்கால், இசை
நசை
- ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்
பொருநர்
- படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்.

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர் தண்ணீர்)

  1. நா. காமராசனின் கவிதை நூல்:

    கருப்பு + மலர்கள்
    கருப்பு மலர்கள்
  2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்:

    தண்ணீர் + தண்ணீர்
    தண்ணீர் தண்ணீர்
  3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறு நாவல்:

    கிழவன் + கடல்
    கிழவனும் கடலும்
  4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிற்பியின் கவிதை நூல்:

    கிராமம் + நதி
    ஒரு கிராமத்து நதி
  5. எஸ் இராமகிருஷ்ணனின் சிறார் நாவல்:

    சாக்ரட்டீஸ் + சிவப்பு + நூலகம்
    சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

கல்வி ஒரு படிக்கட்டு

'வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்
அண்ணாந்து பார்த்தேன்
உயரச் செல்ல ஏங்கினேன்
பள்ளியின் படியில் கால் வைத்தேன்
கசடற கற்றேன் உயர்ந்தேன்
பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன
கல்வியே நம்மை உயர்த்தும்
படிக்கட்டு என உணர்ந்தேன் ......

கடிதம் எழுதுக:

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

நாவலூர்,

06.08.18

அனுப்புநர்

மா. இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,

நாவலூர்.

பெறுநர்

மேலாளர் அவர்கள்,

நெய்தல் பதிப்பகம்,

மதுரை - 16.

ஐயா,

பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக

வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

மா. இனியன்.


அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி

மா. இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

நாவலூர்,

வேலூர் மாவட்டம்.

செயல்திட்டம்

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.

மாணவர்களே!

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் மகாத்மா காந்தி, ஈ. வெ. ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி.

இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த, உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

நிற்க அதற்குத் தக icon

நிற்க அதற்குத் தக

எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

எனக்குப் பிடித்தவை
  1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்
  2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.
  3. நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
என் பொறுப்புகள்
  1. பிறரைக் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் இருப்பதும் என் பொறுப்பு.
  2. பள்ளி, வீடு, பொதுச்சுவர்களில் வரையாமல், எழுதாமல் இருப்பதும், பிறரையும் எழுத, வரைய விடாமல் தடுப்பதும் என் பொறுப்பு.
  3. நகைச்சுவைக்காகப் பிறரை புண்படுத்தாது, இகழாது இருப்பது என் பொறுப்பு.

இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.

கலைச்சொல் அறிவோம்

சமூக சீர்திருத்தவாதி (Social reformer)
தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர்.
தன்னார்வலர் (volunteer)
தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர்.
களர் நிலம் (Saline soil)
நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம்.
சொற்றொடர் (Sentence)
ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது.

அறிவை விரிவு செய்

  • ஓய்ந்திருக்கலாகாது - கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி -ஆதிவள்ளியப்பன்)
  • முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்
  • கல்வியில் நாடகம் - பிரளயன்
  • மலாலா - கரும்பலகை யுத்தம்

இணையச் செயல்பாடுகள்

சிதறியதைச் சேகரிப்போமா!

pongutamil app

படிகள்

  1. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி pongutamil என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.
  2. செயலியைத் திறந்தவுடன் மேகங்களுக்கு மத்தியில் பூட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதைத் தெரிவு செய்துகொள்ளவும்.
  3. திரையின் பின் மெலிதாய்த் தோன்றும் படத்தின் மேல் சிதறிக் கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து உண்மையான வடிவத்தை உருவாக்குக.
  4. எடுத்துக்காட்டாகத் தமிழரின் நீர் மேலாண்மையை உணர்த்தும் கல்லணைப் படத்தை ஒன்று சேர்க்க.
pongutamil app screenshot

9th Tamil Grammar: Idaisol and Urisol Explained (Chapter 5)

இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல்

கல்வி – ரு

கற்கண்டு

இடைச்சொல் - உரிச்சொல்

தலைப்பு: இலக்கணம்: இடைச்சொல் - உரிச்சொல்

சுசீலா, அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள். கமீலாவும் சுல்தானும் தொலைக்காட்சி பச் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சுல்தானைவிடக் கமீலா இரண்டு ஆண்டுகள் பெரியவள். ஆனால் உருவத்தில் சுல்தான்தான் அண்ணனைப் போல இருப்பான். சுசீலாவைக் கண்டவுடன் கமீலா மகிழ்ச்சியடைந்தாள்.

சுசீலா அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள்

மேற்கண்ட பகுதியில் இடைச் சொற்களை இனம் காண முடிகிறதா?

இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள்.

பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைச்சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை. ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.

இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.

இடைச்சொல் பலவகையாக அமையும்.

இடைச்சொற்களின் வகைகள்

வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல், கு, இன், அது, கண்

பன்மை விகுதிகள் - கள், மார்

திணை, பால் விகுதிகள் - ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ

கால இடைநிலைகள் - கிறு, கின்று,...

பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் - அ, உ, இ, மல்,...

எதிர்மறை இடைநிலைகள் - ஆ, அல், இல்

தொழிற்பெயர் விகுதிகள் - தல், அம், மை

வியங்கோள் விகுதிகள் - க, இய

சாரியைகள் - அத்து, அற்று, அம்,...

உவம உருபுகள் - போல, மாதிரி

இணைப்பிடைச் சொற்கள் - உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,...

தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் - உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்

சொல்லுருபுகள் - மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை

வினா உருபுகள் – ஆ, ஓ

இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உம்

'உம்' என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் பொருள்களில் வரும்.

மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை. (எதிர்மறை உம்மை )

பாடகர்களும் போற்றும் பாடகர். (உயர்வு சிறப்பு)

ஓகார இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு (உயர்வு, இழிவு), எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது.

தற்காலத்தில் ஓகார இடைச்சொல் பிரிநிலைப் பொருளில் அதிகமாக வருகின்றது. அதைத் தவிர ஐயம், உறுதியாகக் கூறமுடியாமை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை - அதுவும் இல்லை போன்ற பொருள்களிலும் வருகின்றன.

● இன்றைக்கு மழை பெய்யுமோ? (ஐயம்)

● பூங்கொடியோ மலர்க்கொடியோ பேசுங்கள். (இது அல்லது அது)

● பாலுவோ கண்ணனோ பேசாதீர்கள். (இதுவும் இல்லை - அதுவும் இல்லை )

ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகின்றது.

தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் அழுத்தம்) மட்டுமே வருகிறது.

அண்ணல் காந்தி அன்றே சொன்னார்.

நடந்தே வந்தான்.

தான்

'தான்' என்னும் இடைச்சொல்லும் அழுத்தப் பொருளில்தான் வருகின்றது. சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் வருகிறதோ, அதனை முதன்மைப்படுத்துகின்றது. ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.

நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.

நிர்மலா நேற்றுதான் விழாவில் பாடினாள்.

நிர்மலா நேற்று விழாவில்தான் பாடினாள்.

நிர்மலா நேற்று விழாவில் பாடினாள்தான்.

வேறுபாட்டை உணருங்கள்:

நிர்மலாதான் பாடினாள். (தான் - இடைச்சொல்)

நிர்மலா தானும் பாடினாள். (தான் - தற்சுட்டுப் படர்க்கை ஒருமை இடப்பெயர் - பெயர்ச்சொல்)

மட்டும்

இச்சொல் வரையறைப் பொருள் தருகிறது. முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருள்களிலும் வருகிறது.

படிப்பு மட்டும் இருந்தால் போதும். (வரையறைப் பொருள்)

ஆவது

இது பல பொருள்களில் வரும் இடைச்சொல்லாகும்.

● ஐந்து பேராவது வாருங்கள். (குறைந்த அளவு)

● அவனாவது, இவனாவது செய்து முடிக்கவேண்டும். (இது அல்லது அது)

முதலாவது, இரண்டாவது, .... (வரிசைப்படுத்தல்)

கூட

● என்னிடம் ஒரு காசு கூட இல்லை . (குறைந்தபட்சம்)

● தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை . (முற்றுப் பொருள்)

● அவனுக்கு வரையக்கூடத் தெரியும். (எச்சம் தழுவிய கூற்று)

வினாப் பொருளில் வரும் இடைச் சொல்லாகும்.

ஆ என்னும் இடைச் சொல், சொற்றொடரில் எந்தச் சொல்லுடன் இணைந்து வருகிறதோ, அச்சொல் வினாவாகிறது.

புகழேந்தி நேற்று உன்னுடன் பேசினானா?

புகழேந்தி நேற்று உன்னுடனா பேசினான்?

ஆம்

சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கும் பயன்படுகிறது.

உள்ளே வரலாம். (இசைவு)

இனியன் தலைநகர் போகிறானாம். (தகவல்)/செய்தி

பறக்கும் தட்டு நேற்றுப் பறந்ததாம். (வதந்தி)/பொய்மொழி

தெரிந்து தெளிவோம்

அன்று என்பது ஒருமைக்கும்

அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

(எ.கா.) இது பழம் அன்று . இவை பழங்கள் அல்ல.

எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்

எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்

(எ.கா.) எத்தனை நூல்கள் வேண்டும்? எத்துணை பெரிய மரம், எத்துணை ஆண்டு பழைமையானது.

உரிச்சொற்கள்

உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன. உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும். உரிச்சொற்கள் ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை. ஆனால் இவை தனித்து வழங்கப்படுவதில்லை. உரிச் சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

கடி மலர் - மணம் மிக்க மலர்

கடி நகர் - காவல் மிக்க நகர்

கடி விடுதும் - விரைவாக விடுவோம்

கடி நுனி - கூர்மையான நுனி

- ஒரு சொல் பல பொருளுக்கு உரியது

உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வருகின்றன.

உறு பசி; தவச் சிறிது; நனி நன்று - பல சொல் ஒரு பொருள்

உரிச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றிற்கு முன்னால் வந்து பொருள் உணர்த்துகின்றன. மேலும் அவை

1) ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவதும் உண்டு

2) பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவதும் உண்டு

மழ, குழ என்பவற்றிலிருந்து உருவானவை மழலை, குழந்தை போன்ற சொற்கள். உவப்பு (உவகை), பசப்பு (நிறம் மங்குதல்), பயப்பு (பயன்) போன்றவை அப்படியே பயன்படுகின்றன. செழுமை என்பது செழிப்பு, செழித்த, செழிக்கும் எனப் பெயராகவும், வினையாகவும் பயன்படுகிறது. விழுமம் என்பது விழுப்பம், விழுமுதல், விழுமிய எனப் பெயராகவும் வினையாகவும் பயன்படுகிறது. பிற உரிச் சொற்களும் அவ்வாறே தற்காலத்தில் பயன்படுகின்றன.

9th Tamil Iyal 5: Veetirkor Puthakasalai Supplementary | Samacheer Kalvi

துணைப்பாடம்: வீட்டிற்கோர் புத்தகசாலை

விரிவானம்

கல்வி – ரு

துணைப்பாடம்: வீட்டிற்கோர் புத்தகசாலை தலைப்பு

நுழையும்முன்

"நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" என்பார் ஆபிரகாம் லிங்கன். மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்துவது சிரிப்பு மட்டுமன்று, சிந்திப்பதும்தான். சிந்தனையைத் தூண்டுவது கற்றல் மட்டுமன்று, நூல்களும்தான். உலகமெங்கும் பயணம் செல்லும் பட்டறிவை நூலுலகம் தருகிறது. நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும். இசையைப் போன்றே இதயத்தைப் பண்படுத்துவன நூல்களே. ஆதலின் வீட்டிற்கோர் புத்தகசாலை என்றும் தேவை. இதை வலியுறுத்தும் வகையில் அறிஞர் அண்ணாவின் வானொலி உரை இடம்பெறுகிறது.

வீட்டிற்கோர் புத்தகசாலை

உலகிலே எங்கேனும் ஓரிடத்தில் ஏதோ ஓர் காரணத்தால் நேரிடும் ஏதோ ஓர் சம்பவம், உலகின் மற்ற பாகங்களைப் பாதிக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். உலகத் தொடர்பு அதிகரித்துவிட்ட, வளர்ந்துகொண்டே போகும் நாட்களிலே நாம் வாழ்கிறோம்.

நாட்டு நிலை, உலகநிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டுநிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை. மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே. மாநிலம் மதிக்கும் மனவளம் வேண்டும்.

எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்நாட்டில். இது பெருங்கேடு. கல்வி பெற்றவர்கள் அனைவருக்குமாவது மனவளம் இருக்கிறதா?

அவர்களின் வீடுகளாவது நாட்டுக்குச் சிறப்பளிக்கும் நற்பண்புகள் செழிக்கும் பண்ணைகளாக, நாட்டுக்கு வலிவும் வனப்பும் தேடித்தரும் கருத்துகள் மலரும் சோலையாக உள்ளனவா என்றால், இல்லை என்று பெருமூச்சுடன் கூறித்தான் ஆகவேண்டும். உள்ளதை மறைக்காதிருக்க வேண்டுமானல், நாட்டுநிலை கண்டு உலகம் மதிக்கவேண்டுமானால், இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.

வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியத்தை நடைமுறைத் திட்டமாக்கி, சற்றுச் சிரமப்பட்டால், நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும். நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன.

அவர்களின் காலம் அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம்; ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம்; மனவளத்தை அதிகப்படுத்தும் மார்க்கம் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.

தெரியுமா?

2009 ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

இதோ நான் பேசுகிறேன். நீங்கள் கேட்கிறீர்கள். இடையே பலப்பல மைல்கள். இந்த ஒலி கேட்பது அறிவின் துணைகொண்டு. விஞ்ஞானி ஆக்கித் தந்த சாதனம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வதிசயச் சாதனங்கள் இல்லாதிருந்த நாட்கள் நமது முன்னோர்கள் காலம். இவ்வளவு வசதிகள் நமக்கிருக்கிறது. ஏன், மனவளம் இவ்வளவு குறைவாக இருக்கிறது? வீடுகளிலே, மனவளத்தை அதிகரிக்கவோ பாதுகாக்கவோ நாம் முயற்சி செய்வதில்லை; வழிவகை தேடிக் கொள்வதில்லை.

பேரறிஞர் அண்ணா

வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள் இருக்கும். பீரோக்கள் இருக்கும். அவைகளில் வெள்ளித் தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர்ச்செம்பும் இருக்கும். பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும். மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்கு இருக்கும். அப்படிப்பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூடப் புத்தகசாலை இராது.

வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும் போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை-அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.

வீட்டிற்கோர் புத்தகசாலை அமைக்க வேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல, அடிப்படை உண்மைகளாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.

இன்றும் நிலைபெற்றுள்ள பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளுள் சில

  1. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
  2. கத்தியைத் தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும்.
  3. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
  4. சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  5. மக்களின் மதியைக் கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை; தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை; தன்னம்பிக்கை ஊட்டி மதிப்பைப் பெருக்கும் நூல்கள் தேவை.
  6. நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்.
  7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை.
  8. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்.
  9. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

வீடுகளிலே நடைபெறும் விஷேசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு பழக்கத்தைக் கொஞ்சம் வசதியுள்ள வீட்டார் சில காலத்துக்காவது ஏற்படுத்திக்கொண்டால், சுலபத்தில் ஒரு சிறு புத்தகசாலையை அமைத்து விடலாம். உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்.

பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்.

நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தைச் சாமானியரும் அறிந்து வாசிக்கக் கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் மக்கள் முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வசதிக்கும் உதவும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தகவலைத் தெரிவிக்கும் நூல்கள் இருக்க வேண்டும்.

நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக்கொண்டால், நாட்டுக்கு நல்லநிலை ஏற்படும். வீட்டிற்கோர் புத்தகசாலை தேவை. கேட்டினை நீக்கிட, தக்க முறைகளைத் தரும் ஏடுகள் கொண்டதாக இருக்கவேண்டும், வீட்டிலே அமைக்கும் புத்தகசாலை.

நூல் வெளி

வீட்டிற்கோர் புத்தகசாலை என்னும் இப்பகுதி பேரறிஞர் அண்ணாவின் வானொலி உரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். எழுத்தாளரான அண்ணாவைத் தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைத்தனர். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பெஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர். அவரது பல படைப்புகள் திரைப்படங்களாயின. தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன்முதலில் பரப்பியவர் இவரே. 1935இல் சென்னை , பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். ஹோம் ரூல், ஹோம்லேண்ட், நம்நாடு, திராவிடநாடு, மாலைமணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராகவும் குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் இருந்தார். முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்றதும் இருமொழிச் சட்டத்தை உருவாக்கினார். சென்னை மாகாணத்தைத் 'தமிழ்நாடு' என்று மாற்றித் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்

அண்ணாவின் சிறுகதைத் திறன் - ப.373 - முனைவர் பெ. குமார்.

தெரிந்து தெளிவோம்

புகழுக்குரிய நூலகம்

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.

உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமாரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.

கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.

உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.

9th Tamil Iyal 4 O, En Samakala Thozhargale! Book Back Questions and Answers

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

இயல் நான்கு: ஓ, என் சமகாலத் தோழர்களே!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பின்வரும் தொடரைப் படித்து ‘நான் யார்’ என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.

இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.

  • அ) இணையம்
  • ஆ) தமிழ்
  • இ) கணிணி
  • ஈ) ஏவுகணை
விடை: ஆ) தமிழ்

குறுவினா

1. கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.

விடை:

பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.

சிறுவினா

1. 'என் சமகாலத் தோழர்களே " கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

விடை:
  • அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.
  • அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

கற்பவை கற்றபின்

1. அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

விடை:
  1. அ) நீர்நின் றிளகிற் றிதுவேண்டா
    - சீவகசிந்தாமணி (காந்தருவதத்தை இலம்பகம்)

    அறிவியல் செய்தி: மரத்தில் செய்யப்படும் வீணையே இன்னிசை எழுப்ப ஏற்றது. மரத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதில் மோதும் ஒலி அலைகளின் அதிர்வெண்ணும் வேறுபடும். சீவகன், தத்தை கொடுத்த யாழினை ஆராயும் போது, நீரில் இருந்து ஊறிய மரத்தால் செய்யப்பட்ட யாழில், அதிர்வெண் வேறுபட்டு சமச்சீரற்று காணப்படும் என்பதால் “நீர்நின் றிளகிற் றிதுவேண்டா” என்றான்.

  2. ஆ) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஔவையார்
    “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” – கம்பர்

    அறிவியல் செய்தி: அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற இன்றைய அறிவியலை நம் கவிஞர்கள் அன்றே தம் கவிதைகளில் கூறியுள்ளனர். அணுசேர்ப்பும், அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளன.

  3. இ) “அகல்வயல் பொழிந்தும் ........ உறுமிடத் துதவா உவர்நிலம்.......” - புறநானூறு பரணர்
    “பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்

    அறிவியல் செய்தி: எவ்வளவு மழை பொழிந்தாலும் "களர்நிலம்” என அழைக்கப்படும் உவர்நிலம் எதற்கும் உதவாது என்ற மண்ணியல் அறிவியலைக் கூறுகிறது.

    இவ்வாறு நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய கவிதைகள் பல, நமக்கு அறிவியல் செய்திகளைக் கூறுவதாக உள்ளன என்பதை மறுக்க இயலாது.

2. விமானமும் ஏவுகணையும் பேசிக்கொள்வது போல ஓர் உரையாடலைக் குழுவாகச் சேர்ந்து உருவாக்குக.

விடை: விமானமும் - ஏவுகணையும் பேசுவதுபோல உரையாடல்

விமானம் : வணக்கம்! ஏவுகணை அவர்களே!

ஏவுகணை : வணக்கம்! வணக்கம் !

விமானம் : ஐயா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

ஏவுகணை : எனக்கும் மகிழ்ச்சி

விமானம் : என் பெயர் விமானம். நான், மக்களை நாடுவிட்டு நாடு செல்ல உதவும் பொருட்டு வானில் பறப்பேன். அதனால் என்னை வானூர்தி என்றும் அழைப்பர்.

ஏவுகணை : அப்படியா! நான் அதற்கும் மேலே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மேலே சென்று செயற்கைகோள்களை அதனதன் பாதையில் நிறுத்துவேன்.

விமானம் : அப்படியா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதே. என்னை இயக்க விமானி துணை விமானி எல்லாம் இருப்பார்கள். உங்களை இயக்க....

ஏவுகணை : ஆளெல்லாம் இருக்கமாட்டார்கள். ஏவு ஊர்தியில் என்னை நிறுத்தி, இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே எண்நிலை (count down) தொடங்கி கண்காணித்து, குறிப்பிட்ட நேரம் வந்தவுடனே என்னை மிக வேகமாக ஏவி விடுவார்கள். நானே குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுவேன்.

விமானம் : என்னை பூமியில் இருந்து கண்காணிப்பது போல் உங்களையும் கண்காணிப்பார்களா!

ஏவுகணை : ஆம்! என்னையும் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

விமானம் : நன்றி!!

ஏவுகணை : நன்றி!!

3. பாடலில் அமைந்துள்ள தொடைநயங்களை எழுதுக:

கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை .

விடை: தொடைநயங்கள்
  1. கிளிக்கு, கிழக்கு - முதல் எழுத்து ஒன்றிவந்து “மோனை நயம்” உள்ளது.
  2. முளைக்கும் - முளைக்கத்
    இதில், முதல் எழுத்து ஒன்றிவந்து "சீர் மோனை' நயமும்
    இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து "சீர் எதுகை" நயமும் இடம் பெற்றுள்ளது.
  3. தூரமில்லை - பாரமில்லை
    இதில் “மில்லை " என்னும் இறுதி சீர் ஒன்றி வந்து “இயைபுத் தொடை" நயம் அமைந்துள்ளது.

9th Tamil Chapter 3 Ullathin Seer Questions and Answers Part 2 | Samacheer Kalvi

இயல் 3 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் - பகுதி 2

9th Tamil : Chapter 3 : Ullathin Seer

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : உள்ளத்தின் சீர் : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம் - இயல் மூன்று: அகழாய்வுகள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக
1. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று.
  • அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.
  • ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
  • இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
  • ஈ) பட்டி மண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை: இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

குறுவினா
1. தொல்லியல் ஆதாரங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

விடை:

  • தொல்லியல் அகழாய்வு செய்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச்செதுக்கி ஆராய்தல் ஆகும். அகழாய்வு வரலாறு முழுமைபெற உதவுகிறது.
  • அகழாய்வில் கிடைத்த பொருள்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமின்றி நம் வரலாற்றையும் உணர்த்துகின்றன.
சிறுவினா
1. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

விடை:

  • அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பழைய தலைமுறையைப் பற்றித்தெரிந்து என் செய்வது? செல்லிடப்பேசிக்குள்ளே உலகம் சுற்றும் வேளையில் அகழாய்வில் கிடைக்கும் செல்லாக்காசுகள் வந்தென்ன செய்ய முடியும் ? மடிக்கணினி மலைக்கவைக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு மண் ஓடுகள் இறந்தோரைச் சுமந்த மண்தாழிகள் கண்டறிந்து என்ன சாதிக்கமுடியும்? இவ்வாறு இருக்க, அகழாய்வு என்ன செய்ய இருக்கிறது?
  • அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
  • ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
  • நம் முன்னோர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். தமிழர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகளே ஆவணங்களாகத் திகழ்கின்றன.
நெடுவினா
1. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

விடை:

மனிதன் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள தமிழகத்தின் தொன்மையான பகுதிகளைக் கொண்டும் மக்கள் பயன்படுத்திய பழமையான கருவிகளைக் கொண்டும் இசைக் கருவிகளைக் கொண்டும் அறிய முடிகிறது. அவற்றைப் பேணிக் காக்க வேண்டும். இது நம் கடமையாகும்.

பண்பாட்டுக் கூறு - ஏறுதழுவுதல்:

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப் படுத்தப்படுபவை மாடுகள். முல்லை மற்றும் மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாகி உள்ளது ஏறுதழுவுதல். இது தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு. இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. முன்னோர் வழிநின்று இளந்தலைமுறையினர் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று ; காதலும் வீரமும் பழந்தமிழரின் பண்பாட்டுத் தடயங்கள். வீரமும் அன்பும் ஏறுதழுவுதலின் விளைநிலங்களாக விளங்குகிறது என்பதை வளரும் தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பு .

பண்பாட்டுக்கூறு - அகழாய்வு:

அகழாய்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். ஆய்வு என்பது அறிவின் வெளிப்பாடு. நமது முன்னோர்கள் வாழ்ந்து பெற்ற பட்டறிவை வகைப்படுத்தித் தொகுத்துப் பார்ப்பதற்குத் தொல்லியல் ஆய்வே பெருங்கல்வியாக அமைகின்றது. பண்பாட்டு எச்சங்களாகத் திகழும் இவ்வகையான ஆய்வுகளைக் கண்டு பயனடையலாம்.

பண்பாட்டுக்கூறு - திருவிழாக்கள்:

கி. பி. 2 ஆம் நூற்றாண்டோடு தொடர்புடைய புகார்நகரில் கொண்டாடப்பெற்ற இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. கோயில் விழாக்களில் பண்பாட்டுக் கூறுகளாக உள்ள ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதசுரம், பரதம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனப்பல கலைகள் நடந்தேறுகின்றன. விழா நிகழ்ச்சியில் பட்டிமன்றம், தெருக்கூத்து நாடகங்களும் நடைபெறுகின்றன.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகளையும், கலைநிகழ்வுகளையும் பேணிப் பாதுகாத்து இளந்தலைமுறையினருக்கும் இனி வரும் தலைமுறையினருக்கும் காட்டுவது நம் கடமையாகும்.

கற்பவை கற்றபின்

1. இளைஞர்களிடையே பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது குடும்பமா? சமூகமா? - என்னும் தலைப்பில் சொற்போர் நிகழ்த்துக.

விடை:

சொற்போர்

கதாபாத்திரங்கள்

நடுவர் : கபிலன் - தமிழாசிரியர்,

குடும்பமே : அமுதா (மாணவி), சமூகமே : வாணன் (மாணவன்)

நடுவர் : அவையோருக்கு வணக்கம்!

இன்று நம் இலக்கிய மன்ற விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் !

இன்றைய சூழலில் நம் இளைய சமுதாயத்துக்கு பல வாய்ப்புகள், வசதிகள் உலகைப்பற்றி அறிய பல வாயில்கள் உள்ளன, எனினும் பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது எது என ஆராயும் போது ஒரு சொற்போர் நடத்த வேண்டும். மாணவர்களின் சிந்தனைகளை அறிய வேண்டும் என்ற அவா எழுந்தது! அதனால் உருவானதே இத்தலைப்பு. இப்போது குடும்பமே என சொற்போர் நிகழ்த்த வருகிறார்

அமுதா : அனைவருக்கும் இனிய வணக்கம்...

ஐயா! "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பார்கள் "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்பார்கள். பெற்றோர்களே முதல் ஆசான் இவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கூற்றுகள் எல்லாம் அதனை உணர்த்துகிறது. ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வரும் குடும்பச் சூழ்நிலைதான் பண்பாட்டினை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது அல்லவா! “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற கவிஞனின் அடிகளைச் சான்றாக்கி நற்பண்பாட்டினை வளர்ப்பது குடும்பமே.... குடும்பமே... என்று கூறி என் சொற்போரை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்!

நடுவர் : ஆகா! அருமையான கருத்துகள் வாங்க வாணன்ஸ உங்கள் கருத்தை வலியுறுத்துங்கள் பார்க்கலாம்.

வாணன் : சமூகமே

ஐயா! அமுதா எந்த நூற்றாண்டில் இருக்கிறாள் என்றே தெரியவில்லை! நீங்களே சொல்லுங்கள்! ஒரு குழந்தை 3 வயது வரைதான் இப்போதெல்லாம் குடும்ப பராமரிப்பில் இருக்குது! மூணு வயதிலே சமூகத்துக்கு வந்துடுது ஐயா....

தன் ஆசிரியரைப் பார்க்கிறது. தன் சக மாணவ, மாணவியரை பார்க்கிறார்கள். வண்டி ஓட்டும் ஓட்டுநர் முதல் ஆயா வரை அந்த குழந்தைக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

வளர்கிறான்... சமூகத்தின் பல செய்தி சாளரங்கள் திறக்கின்றன. தன்னையும் அறியாமல் அவற்றை ஆராய்கிறான்; நன்மை தீமை அறிகிறான்; அவன் மன வலிமையைப் பொறுத்து பண்பாட்டைக் காப்பவனாகவோ அல்லது மீறுபவனாகவோ மாறுகிறான். எனவே சமூகமே பெரும்பங்கு வகிக்கிறது. நன்றி வணக்கம்!

நடுவர் : இருவருடைய உரையைக் கேட்கும் போது, பண்பாட்டைக் கற்றுக் கொடுப்பது குடும்பமாக இருந்தாலும் அதனை வளர்த்தெடுக்கும் பங்கு சமூகத்தையே சார்ந்தது... நன்றி வணக்கம்!

2. தொல்லியல் துறை சார்ந்த அலுவலர் ஒருவரிடம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வினாப்பட்டியலை உருவாக்குக.

விடை:

ஐயா, வணக்கம்!

  • தமிழகத்தில் தொன்மையான பகுதிகள் என்று எப்படி வரையறைப்படுத்துவது?
  • கீழடி ஆய்வு எந்த வரலாற்றை அல்லது பின்புலத்தை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது என்பது பற்றி விளக்கிச் சொல்லுங்களேன்.
  • ஐயா! இந்த பிராமி எழுத்துகள் என்பது எந்த மொழிக்குரியது?
  • ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மட்டும் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றன. ஏன் அங்குமட்டும் இது போன்ற தடயங்கள் அதிகமாக உள்ளன என்பதற்கு காரணங்கள் ஏதேனும் உண்டா ?
  • அறிவியல் மக்களுக்காகவே' என்ற கொள்கையை சற்று விளக்கிச் சொல்லுங்களேன்.
  • மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் இறப்புத் தடயங்கள் ஏதேனும் கிடைத்துள்ளதா?
  • அகழாய்வு செய்யக் கூடிய இடங்களில் பெரும்பாலும் இறப்புப் பற்றிய தடயங்கள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன என்று சொல்கிறார்கள் இதற்கான காரணத்தை விளக்கிச் சொல்ல முடியுமா?.
  • கடலுக்குள் ஆய்வுகள் இதுவரை செய்யப்பட்டிருக்கின்றனவா? பூம்புகார் நகர கடல் பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வு போல் இன்றைய காலக்கட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டனவா? அப்படியானால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது என்னென்ன தடயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

இதுவரையிலும் தாங்கள் கூறிய அகழாய்வு பற்றிய செய்திகள் பயனுறு வகையில் அமைந்திருந்தன.

மிக்க நன்றி!

3. உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடத்தைப் பார்வையிட்டுக் குறிப்பு எழுதுக.

விடை:

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தொன்மையான இடம் : வளவூர் குறிப்புகள்:

எங்கள் ஊருக்கு அருகில் 150 ஆண்டுகளுக்கு முன் கடல் கோளால் கொள்ளப்பட்ட வளவூர் என்ற ஊரை அகழாய்வு செய்தனர். நான் அங்கு சென்று பார்த்த போது மிகவும் வியந்து போனேன்.

அக்கால மன்னன் கட்டிய அரண்மனைப் பகுதி தெரிந்தது. மக்கள் வழிப்பட்ட தெய்வத்திருமேனி வியப்பிற்குரியதாய் அரிதான உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது. அக்கால போர்வீரர்கள் பயன்படுத்திய ஆயுதம் சிதைந்துபோன நிலையில் கிடைத்தது மக்களின் உடை, வாழ்விடம், பயன்படுத்திய அணிமணிகள் ஆடம்பரமாய் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருந்தன. பிறநாடுகளுடன் கடல் வாணிகம் மேற்கொண்டதற்கான சான்றுகளும் இருந்தன. நம் முன்னோர்களின் கடந்த காலத்தை எண்ணி வியந்தேன்.

Eru Thazhuvuthal: Exploring the Ancient Tamil Tradition of Bull Embracing

உரைநடை: ஏறு தழுவுதல்

பண்பாடு - ங | உரைநடை உலகம்

ஏறு தழுவுதல் தலைப்பு

நுழையும்முன்

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுபவை மாடுகள். முல்லை, மருத நிலங்களில் கால் கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல், தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு; இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இது, நூற்றாண்டுகள் பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது.

ஏறு தழுவுதல் ஓவியம்

பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு. இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்ககாலத் தமிழர்கள். இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.

இலக்கியங்களில் ஏறு தழுவுதல்

சங்க இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைநில ஆயர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, அவர்களின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

எழுந்தது துகள்,

ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு,

கலங்கினர் பலர்

(கலி - 102: அடி 21-24)

என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. காளைகளின் பாய்ச்சல் பற்றியும் கலித்தொகை கூறுகிறது.

திமில் பெருத்த காளைகள் பல, காலாலே தரையைக் கிளறி, புழுதியை எழுப்பின. சில நிலத்தை நொறுக்கின; சில தம்முள் முரண்பட்டு ஒன்றோடொன்று எதிர்த்துக் கொண்டன; சில மண்டியிட்டுப் பாய்ந்தன. இந்தக் காளைகள் மிடுக்குடனும் வீரத்துடனும் போருக்குச் செல்லும் மருத நிலத்துப் போர் வீரர்களை நிகர்த்தனவாக இருந்தன. இதனை,

நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை.

மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்

துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்

மள்ளர் வனப்பு ஒத்தன

(கலி- 106: 7-10)

என்று கலித்தொகை விவரிக்கிறது.

கலித்தொகை தவிர, சிலப்பதிகாரம் முதலான இலக்கியங்களிலும் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

ஏறு தழுவுதல் பற்றிப் பிற்காலச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பள்ளு இலக்கியத்திலும் குறிப்புகள் உள்ளன. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.

தொல்சான்றுகள்

ஏறு தழுவுதல் குறித்த பல நடுகற்கள், புடைப்புச் சிற்பங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுன்னன. சேலம் மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடிப் பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு என்பது அந்நடுகல் பொறிப்பு. கருவந்துறை என்னும் ஊரில் எருதோடு போராடி இறந்துபட்டவனாகிய சங்கன் என்பவனுக்கு அவனுடைய மகன் பெரிய பயல் எடுத்த நடுகல் என்பது இதன் பொருள்.

ஏறு தழுவுதல் நடுகல்

தெரிந்து தெளிவோம்

எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கரிக்கையூரில் காணப்படுகிறது. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவு என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது.

கரிக்கையூர் பாறை ஓவியம்

சிந்துவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது. இம்மக்கள் காளையைத் தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம். சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக ஐராவதம் மகாதேவன் தெரிவித்துள்ளார்.

சிந்துவெளி காளை முத்திரை

பண்பாட்டு அடையாளம்

ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன. தமிழக உழவர்கள் தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவன்று மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங் கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர், பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர்.

இதன் தொடர்ச்சியாக, வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்துகிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.

ஏறு தழுவுதல், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்

மேலைநாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

ஸ்பெயின் காளைச் சண்டை

சில நாட்டு விளையாட்டுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை கொல்லப்படுதலும் உண்டு. மேலைநாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

தமிழகத்தில் நடை பெறும் ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவர்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். எவராலும் அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே, காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

நம் கடமை

தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது.

பண்டைய வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும். நம் முன்னோரின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

9th Tamil Iyal 1 Kavidhaippezhai | Tamiloviyam | 9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 கவிதைப்பேழை தமிழோவியம்

கவிதைப்பேழை: தமிழோவியம்

ஈரோடு தமிழன்பன்

கவிதைப்பேழை தமிழோவியம் தலைப்பு

நுழையும்முன்

என்றென்றும் நிலைபெற்ற தமிழே! தோற்றத்தில் தொன்மையும் நீதான்! தொழில்நுட்பத்தை ஏற்ற புதுமையும் நீதான்! அறியும் இலக்கணம் தந்ததும் நீதான்! அரிய இலக்கணம் கொண்டதும் நீதான்! காலந்தோறும் உன்னைப் புதுப்பித்துக் கொண்டு கணினித் தமிழாய் வலம் வருகிறாய்! ஆதிமுதல் எல்லாமுமாய் இலங்குகிற உன்னைத் தமிழோவியமாகக் கண்டு மகிழ்கிறோம்!

தமிழோவியம்

தமிழோவியம் கவிதை வரிகள்

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள் - உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

காலம் பிறக்கும் முன்....

ஏனிவ் விருட்டெனக் கேட்டுவரும் - நீதி ஏந்திய தீபமாய்ப் பாட்டுவரும்

மானிட மேன்மையைச் சாதித்திடக் - குறள் மட்டுமே போதுமே ஓதி, நட...

காலம் பிறக்கும் முன்....

எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே

சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச் சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே...

காலம் பிறக்கும் முன்...

விரலை மடக்கியவன் இசையில்லை - எழில் வீணையில் என்று சொல்வதுபோல்

குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்!

இலக்கணக்குறிப்பு

  • எத்தனை எத்தனை, விட்டு விட்டு - அடுக்குத் தொடர்கள்
  • ஏந்தி - வினையெச்சம்
  • காலமும் - முற்றும்மை

பகுபத உறுப்பிலக்கணம்

வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய்

வளர் - பகுதி

ப் - சந்தி

ப் - எதிர்கால இடைநிலை

ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

ஈரோடு தமிழன்பன் எழுதிய 'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது. இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒருகுழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு தமிழன்பன் புதுக்கவிதை, சிறுகதை முதலான பல வடிவங்களிலும் படைப்புகளை வெளியிட்டுள்ளார். ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார். இவரது வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்கு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 'தமிழன்பன் கவிதைகள் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல். இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தெரிந்து தெளிவோம்

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்
- பிங்கல நிகண்டு

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
- பாரதியார்

தெரியுமா?

உலகத் தாய்மொழி நாள்: பிப்ரவரி 21

தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள்: இலங்கை, சிங்கப்பூர்