Showing posts with label உரைநடை உலகம். Show all posts
Showing posts with label உரைநடை உலகம். Show all posts

8 Mark Question: Essay on Hospitality (Virunthu Potruthum) | Tamil Prose

8 மதிப்பெண் வினா, உரைநடை உலகம், விருந்து போற்றுதும்

8 மதிப்பெண் வினா

உங்கள் இல்லத்திற்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.

வரவேற்றேன்

எங்கள் ஊர்ப் பொங்கல் விழாவிற்கு என் மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன்; அவர் வருகைக்காக வாயிலில் விழி வைத்துக் காத்திருந்தேன்; மதியவேளை வந்தது; அவரும் வந்தார். "வாங்க மாமா" என்று வாய் நிறைய அழைத்தேன்; முகம் மலர்ந்தேன்; கைபிடித்து உள்ளே கூட்டிச் சென்றேன்; ஆற அமர நாற்காலி தந்தேன்; தாகம் தீரத் தண்ணீர் தந்தேன்; வியர்வை நீங்க விசிறி போட்டேன்; உள்ளம் மகிழ்ந்து உறவுகளை விசாரித்தேன்; ஓய்வெடுக்க அறையைக் காட்டினேன்.

விருந்து உண்டோம்

சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், வாழையிலையில் சாம்பார், ரசம், அப்பளம், பாயாசம், அவித்த முட்டை, மாங்காய் ஊறுகாய், முருங்கைக் கீரை, மோர் மணக்க மணக்க, மாமா முகம் அறிந்து விருந்து வைத்தேன்; கை அலம்பக் குவளைத் தண்ணீரும் கை துடைக்கத் துண்டும் கொணர்ந்தேன்.

உலா வந்தோம்

பின்னர், ஊர் நந்தவனத்திற்குச் சென்றோம்; காலார நடந்தோம்; களிப்புடன் பேசினோம்; பூ மரம் செடி கொடிகளைக் கண்டோம்; களித்தோம்; மாலை வேளை வந்தது. தோட்டத்துக் கிணற்றில் துள்ளிக் குதித்தோம்; நீரில் மூழ்கிமூழ்கி நீந்தினோம்; கிணற்று மீனைத் தொட்டுப் பிடித்து மகிழ்ந்தோம்; நாங்கள் பேசும் நகைச்சுவை கேட்டு மீன்கள் வந்து கிச்சுகிச்சு மூட்டின. இரண்டே எட்டில் செவ்விளநீர் மரத்தில் ஏறினேன். ஆளுக்கு இரண்டாய் அருந்தினோம்; கொய்யாப்பழம் கடித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம்.

கோவிலுக்குச் சென்றோம்

நான் எடுத்து வைத்திருந்த வெள்ளை சட்டையையும் வேட்டியையும் மாமாவுக்குப் பரிசளித்தேன். மாமா வாங்கித்தந்த புத்தாடை அணிந்து, ஊர்க்கோவிலை நோக்கி நடந்தோம். வாயில்தோறும் மஞ்சளும், தெருதோறும் தோரணமும் வாழையும் கமுகும் வாஞ்சையுடன் வரவேற்றன. கோயிலைச் சுற்றி வகைவகையாய் நிழல் மரங்கள்; மரங்கள்தோறும் வண்ண ஒளி விளக்குகள். அதைப் பிரதிபலிக்கும் பெரியகுளம்; ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம்; அதை உடைக்கும் மங்கள வாத்தியம். வண்ண வண்ணப் பொங்கல்பானைகள். பெண்கள் குலவையுடன் பொங்கலிடும் காட்சி. வண்ண வண்ண வானவேடிக்கை. வகைவகையாய் ராட்டினங்கள்.

இரவு விருந்து

சாம்பாரில் மிதக்கும் இட்லியைச் சட்னியில் தொட்டு உண்டோம்; ஆடல் பாடல் கண்டு களித்தோம்; அது, விருந்தினும் விருந்தாய் அமைந்தது. கண்ணயர்ந்து தூங்கிப் போனோம்.

விடியல் வந்தது

பொழுது புலர்ந்தது; பறவைகள் பாடின; கதிரவன் கை நீட்டினான். அயர்ந்து தூங்கிய மாமாவை எழுப்பினேன். முகம் அலம்பக் குவளைத் தண்ணீரும் பல் துலக்க ஆல விழுதும் அன்புடன் அளித்தேன். தோட்டத்திற்குச் சென்றோம்; காலைக் கடனை முடித்தோம்; கிணற்றில் குளித்தோம்; மரத்தில் ஏறி மாவும் பலாவும் பறித்தோம்; வீடு திரும்பினோம்.

பிரிய மனமில்லை

தலைவாழை இலையில் பச்சைநெல் சோறும் நாட்டுக்கோழி குழம்பும் பொறித்த மீனும் அன்பு குழையக் குழையப் பரிமாறினேன். உண்டு மகிழ்ந்த மாமா, நன்றி கூறிப் புறப்பட்டார். ஊர் எல்லைவரை வந்து, மாம்பழ மூட்டையுடன் வழியனுப்பி வைத்தேன். இருவரும் பிரிய மனமின்றிப் பிரிந்தோம். நாங்கள் இருவரும் சுற்றிப் பார்த்து ரசித்த இடங்கள் கண்களுக்குள் நடனமாடின.