பருவம் 1 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் - கரிகாலன் கட்டிய கல்லணை | 4th Tamil : Term 1 Chapter 9 : Karihalan kattiya kallanai
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 9 : கரிகாலன் கட்டிய கல்லணை
கரிகாலன் கட்டிய கல்லணை
மணிமொழியும் கனிமொழியும் தங்களது முதல் பருவ விடுமுறையில், திருச்சியிலுள்ள தம் மாமா வீட்டிற்குச் சென்றனர். கல்லணையைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தினை மாமாவிடம் கூறினர். மாமாவும் அதற்கு இசைந்து தம் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு கல்லணைக்குச் செல்கிறார்.
மணிமொழி :
எனக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியைத் தருகிறது மாமா.
கனிமொழி :
எனக்கும் தான். ஏனென்றால் நம்மோடு அத்தையும் கபிலனும் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அத்தை :
நாம் பார்க்கப் போகும் கல்லணையை நெருங்கிவிட்டோம்.
மாமா :
வாருங்கள்! கல்லணையைச் சுற்றிப் பார்ப்போம்.
கனிமொழி :
மாமா, கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
மாமா :
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்தக் கல்லணையைக் கரிகாலன் என்ற மன்னன் கட்டினான்.
மணிமொழி :
கல்லணை கட்டிய கரிகாலனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் மாமா, உங்களுக்குத் தெரிந்த செய்திகளைக் கூறுங்கள்.
அத்தை :
எனக்குத் தெரியும். நான் கூறுகிறேன் கேளுங்கள். சோழ அரசர்களில் சிறப்புமிக்க அரசன் கரிகாலன் ஆவார். இவரது இயற்பெயர் வளவன் என்பதாகும்.
கனிமொழி :
இவரது பெயர் வளவன் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கரிகாலன் என்ற பெயர் எப்படி வந்தது?
மாமா :
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.
மணிமொழி :
ஐ! கல்லணை எவ்வளவு நீளமாகவும், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும் இருக்கிறது. இந்தக் கல்லணையைக் கட்ட கரிகாலன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கூறுங்கள் மாமா.
மாமா :
சரி கூறுகிறேன். எனது ஆசிரியர் எனக்குச் சொன்ன செய்திகளை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழைமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப் பழைமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் கட்டுமானத் திறனுக்குச் சான்றாகும். இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.
மணிமொழி :
ஓ! அப்படியா மாமா.......
மாமா :
ஆம், காவிரியியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும், ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகாலன்.
மணிமொழி :
அப்போதே இரும்புக் கம்பிகள், பைஞ்சுதை (சிமெண்ட்) இருந்தனவா?
மாமா :
இல்லையம்மா, அணை கட்டப்பட்ட முறையைச் சொல்கிறேன் கேள். காவிரி ஆற்றின்மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்தனர். இது பல நூற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் உறுதியோடு நிற்கிறது. கல்லணை தமிழர்களின் கட்டுமானத் திறனைப் பறை சாற்றுவதாக உள்ளது.
கபிலன் :
இதோ, இங்கே பாருங்கள். ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிப்போம் வாருங்கள்.
மாமா :
இவ்வணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, புதுஆறு என நான்காகப் பிரிகிறது. காவிரியாறு பிரியும் இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. இதனால்தான் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் வளமாகின்றன. இது உழவுப் பாசனத்திற்கான மிகப்பெரிய திட்டமாகும்.
அத்தை :
மதிய உணவு கொண்டு வந்துள்ளேன், மரநிழலில் அமர்ந்து அனைவரும் உணவு உண்போம் வாருங்கள்!
கனிமொழி :
கல்லணை, பார்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே கரிகாலனுக்கு நன்றி கூறுவோம்.
மணிமொழி :
கல்லணை உள்ளவரை கரிகாலனின் புகழ் நிலைத்துநிற்கும்.
No comments:
Post a Comment