3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 3 : தாவரங்கள்
தாவரங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ தாவர பாகங்களை இனம் கண்டறிதல் ❖ தாவர பாகங்களின் பணிகளைப் புரிந்து கொள்ளல் ❖ வாழிடங்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தி அறிதல்
கற்றல் நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:
(i) தாவர பாகங்களை இனம் கண்டறிதல்
(ii) தாவர பாகங்களின் பணிகளைப் புரிந்து கொள்ளல்
(iii) வாழிடங்களின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தி அறிதல்
ஆயத்தப்படுத்துதல்
இடம் மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, தாவரத்தின் பாகங்களைக் கண்டறிந்து எடுத்து எழுதுக.
(டுண்த, ர்வே, லைஇ, னிக, லர்ம, தைவி)
1. தாவரங்கள் இயற்கையின் கொடை
ஒவ்வொரு தாவரமும் பல பாகங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய பணிகளைச் செய்கின்றன. ஒரு தாவரத்தின் அடிப்படை பாகங்களாக வேர், தண்டு, இலை, மலர், கனி மற்றும் விதை ஆகியவை காணப்படுகின்றன. இப்பாடத்தில் தாவரத்தின் பல்வேறு பாகங்களையும் அவற்றின் பணிகளையும் பற்றி பார்ப்போமா!
வேர்
வேர் என்பது தாவர பாகங்களுள் ஒன்று. இது தரைக்குக் கீழாக வளரும். வேர்கள் வடிவம் மற்றும் அளவில் வேறுபட்டுக் காணப்படும். வேர்கள் பொதுவாக சூரிய ஒளிக்கு எதிர்த்திசையிலும், மண்ணினுள் கீழ்நோக்கியும் வளரும். இது ஆணி வேர் மற்றும் சல்லி வேர் என இரண்டு வகைப்படும்.
ஆணி வேர்
ஆணி வேரில் தடிமனான ஒரு முதன்மை வேர் காணப்படும். இது முளை வேரிலிருந்து வளர்ந்து, மண்ணில் மிக அதிக ஆழம் வரைச் செல்லும். முதன்மை வேரிலிருந்து பல மெல்லிய வேர்கள் வளர்கின்றன. கேரட், பீட்ரூட், நூல்கோல் (நூக்கல்), மா மற்றும் வேம்பு போன்ற தாவரங்களில் இவ்வகை வேர்கள் காணப்படுகின்றன.
சல்லி வேர்
வெவ்வேறு அளவிலான, மெல்லிய, மொத்தமாக ஒன்று சேர்ந்து கொத்தாக தண்டிற்குக் கீழாக வளரும் வேர்கள் சல்லி வேர்கள் எனப்படும். இவை மண்ணில் அதிக ஆழத்திற்குச் செல்லாது. புல், நெல், கோதுமை மற்றும் வெங்காயம் போன்ற தாவரங்களில் இவ்வகை வேர்கள் காணப்படுகின்றன.
வேரின் பணிகள்
ஊன்றுதல்: தாவரம் மண்ணில் ஊன்றி நிற்க வேர்கள் உதவுகின்றன. வேர்கள் இல்லாத நிலையில் தாவரங்களால் நிலைத்து நிற்க முடியாது.
உறிஞ்சுதல்: வேர்கள் தாவரத்திற்குத் தேவையான நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுகின்றன.
சேமித்தல்: சில தாவரங்களின் வேர்கள் உணவினைச் சேமிக்கின்றன. எ.கா. கேரட், முள்ளங்கி, பீட்ரூட்.
ஆணி வேர் மற்றும் சல்லி வேர்களுக்கு இடையேயான வேறுபாடுகள்
ஆணி வேர்
(i) தடித்த முதன்மை வேர், மண்ணில் அதிக ஆழம் வரை செல்லும்.
(ii) முதன்மை வேர்கள் முளை வேரிலிருந்து (நிலையானது) தோன்றுகின்றன.
(iii) இவை நீண்ட ஆணி போன்ற வடிவத்தில் காணப்படும். எ.கா. புளியமரம், கொய்யா.
சல்லி வேர்
(i) முதன்மை வேர் காணப்படாது. வேர்கள் மண்ணில் அதிக ஆழம் வரை செல்லாது.
(ii) சல்லி வேர்கள் தண்டின் அடிப்பகுதியில் வளர்கின்றன (முளைவேர்கள் குறுகிய காலத்தில் அழிந்துவிடும்).
(iii) இவை கொத்தாகக் காணப்படும். (எ.கா. மக்காச்சோளம், கரும்பு).
உங்களுக்குத் தெரியுமா?
அவிசினியா என்ற தாவரத்தின் வேர்கள் மண்ணிற்கு மேலே காணப்படும்.
செய்து பார்ப்போமா!
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். இவற்றுள் ஒரு செடியின் வேர்ப்பகுதியை வெட்டி நீக்கியபின், மீண்டும் அதைத் தொட்டியில் நடவும். இரண்டு செடிகளுக்கும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீர் ஊற்றி வரவும். பின் என்ன நிகழ்கிறது என உற்றுநோக்கு. வேர் இல்லாத காரணத்தால் வேர் வெட்டிய செடி வதங்கி காணப்படுகிறது.
இந்த செயல்பாட்டின் மூலம் வேரானது ______________ மற்றும் _____________ மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது என்பது உறுதியாகிறது.
செய்து பார்ப்போமா!
இரண்டு தேங்காய் ஓடுகளில் மண்ணை நிரப்பிக் கொள்ளவும். ஒன்றில் பச்சைப்பயறையும் மற்றொன்றில் நெல் விதைகளையும் போடவும். விதைகள் இடப்பட்ட தேங்காய் ஓடுகளை சூரிய ஒளிபடும்படி நீர் ஊற்றி வைக்கவும். ஒரு வாரத்திற்குப்பின் அதில் வளர்ந்துள்ள தாவரத்தைக் கையால் பிடுங்கி அவற்றின் வேரின் பண்பை ஆராய்ந்து அறிக.
எழுதுவோமா!
சரியா, தவறா எனக் கண்டுபிடி.
1. வேர்கள் மண்ணிற்கு அடியில் வளரும். (சரி)
2. சல்லி வேரில் முதன்மை வேர் காணப்படும். (தவறு)
3. வேர்கள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன. (சரி)
4. உருளைக்கிழங்கு தனது வேரில் உணவை சேமிக்கிறது. (தவறு)
5. புற்களில் சல்லி வேர்கள் காணப்படுகின்றன. (சரி)
தண்டு
தண்டுத் தொகுப்பின் முக்கியப்பகுதி தண்டு ஆகும். தண்டு சூரிய ஒளியை நோக்கி வளரும். இளம் தண்டு பச்சை நிறத்தில் காணப்படும். கிளைகள், இலைகள், மொட்டு, மலர் மற்றும் கனி போன்றவை தண்டிலிருந்து வளர்கின்றன.
கொத்துமல்லி, புதினா போன்ற செடிகளில் தண்டானது மிகவும் மெலிந்து காணப்படும். அரச மரம், ஆலமரம் போன்றவற்றில் தண்டானது தடித்து, வலிமையானதாகக் காணப்படும். இவற்றிற்கு மரத்தண்டு (Tree trunk) என்று பெயர். மரங்கள் வளர வளர தண்டின் பருமன் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
தண்டின் பணிகள்
(i) முழுத்தாவரத்தையும் தாங்கி நிற்கும் ஆதாரமாக தண்டு உள்ளது.
(ii) இது இலையிலிருந்து உணவையும், வேரிலிருந்து நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
(iii) சில தாவரங்களின் தண்டுகள் அதிகப்படியான உணவுப் பொருள்களை தன்னுள் சேமித்து வைக்கின்றன. எ.கா. உருளைக்கிழங்கு, வெங்காயம்.
இலைகள்
தண்டிலிருந்து இலைகள் வளர்கின்றன. இவை மெல்லியதாகவும், தட்டையாகவும், பசுமை நிறத்திலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு தாவரத்தின் இலைகளும் வேறுபட்ட வடிவம், அளவு மற்றும் நிறத்தில் காணப்படுகின்றன. சில இலைகள் தங்களுக்கே உரித்தான வாசனைகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
இலையின் பணிகள்
(i) தாவரங்கள் இலைகளின் மூலமாக தமக்குத் தேவையான உணவை நீர், கார்பன் டைஆக்சைடு, சூரிய ஒளி மற்றும் பச்சையம் ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கின்றன. இந்நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். ஆதலால் இலைகளைத் தாவரங்களின் சமையலறை என அழைக்கலாம்.
(ii) தாவரங்களின் இலைகளிலுள்ள மிகச்சிறிய துளைகளின் வழியாக நீரானது நீராவியாக வெளியேறுகிறது. இந்நிகழ்விற்கு நீராவிப்போக்கு என்று பெயர். இது தாவரங்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
(iii) சில தாவரங்களின் இலைகள் உண்ணக்கூடியவை மற்றும் சத்துகள் நிறைந்தவை. எ.கா. கீரைகள், முட்டைக்கோசு.
விளையாடுவோமா!
கொத்துமல்லி, புதினா, தைலமரம், புளியமரம், நெல்லி, வேம்பு மற்றும் துளசி போன்ற தாவரங்களின் இலைகளைச் சேகரிக்கவும். பிறகு இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் கண்களை சிறு துணி கொண்டு மென்மையாகக் கட்டவும். ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு இலையைக் கொடுத்து அதனைத் தொட்டோ அல்லது முகர்ந்தோ அது என்ன இலை என்று கண்டுப்பிடிக்க செய்ய வேண்டும். யார் அதிக இலைகளைக் கண்டுபிடிக்கின்றனர் எனக் கண்டறியவும்.
எந்த முறையில் அதிக இலைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது? தொடுதல் / நுகர்தல் ----------------.
எழுதுவோமா!
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. சூரிய ஒளியை நோக்கி தண்டு வளரும்.
2. இலைகள் தண்டிலிருந்து தோன்றுகின்றன.
3. தாவரங்களில் உணவைத் தயாரிக்கும் பசுமையான பகுதிக்கு இலை என்று பெயர்.
4. முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் தாவர பாகம் தண்டு.
5. வேர் உணவு மற்றும் நீரினை தாவரங்களின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
மலர்கள்
தாவரத்தின் மிக அழகான பகுதி மலராகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவம், அளவு, நிறம் மற்றும் மணம் கொண்டவை. மலர்கள் மொட்டிலிருந்து வளர்கின்றன. மிருதுவான, பிரகாசமான நிறம் கொண்ட மலரின் பகுதி அல்லி வட்டம் எனப்படும். அல்லி வட்டத்திற்குக் கீழ் காணப்படும் பச்சை நிற மலரின் பகுதிக்கு புல்லி வட்டம் என்று பெயர். மேலும் மகரந்தம், சூலகம் என்ற இரண்டு பாகங்கள் மலரின் மையப்பகுதியில் காணப்படுகின்றன.
மலரின் பணிகள்
(i) மலர்கள் கனியாக மாற்றமடைகின்றன.
(ii) தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவிபுரிகின்றன.
கனிகள் மற்றும் விதைகள்
சதைப்பற்றுடன் காணப்படும் தாவரப்பகுதி கனி ஆகும். கனிகள் மலர்களிலிருந்து உருவாகின்றன. பெரும்பாலான கனிகளில் விதைகள் காணப்படுகின்றன.
(i) சில கனிகள் ஒரே ஒரு விதையைக் கொண்டு காணப்படும். எ.கா. சீமை வாதுமை (ஆப்ரிகாட்), மா, தேங்காய், பீச்.
(ii) சில கனிகள் பல விதைகளைக் கொண்டு காணப்படும். எ.கா. பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு.
(iii) சில கனிகள் விதைகள் இல்லாமலும் காணப்படும். எ.கா. அன்னாசி, வாழை.
விதைகள் புதிய தாவரங்கள் உருவாகக் காரணமாக இருக்கின்றன.
பொருத்துவோமா!
இலைகளோடு அவற்றின் கனிகளை இணைக்கவும்.
விடை:
(i) மா இலை - மாம்பழம்
(ii) தென்னை ஓலை - தேங்காய்
(iii) வாழை இலை - வாழைப்பழம்
IV. தாவரங்களின் வாழிடம்
பூமியின் அனைத்து இடங்களிலும் (நீரிலும் நிலத்திலும்) தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப சில சிறப்புப் பண்புகளைக் கொண்டு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.
தாவரங்களின் இயற்கையான இருப்பிடமே வாழிடம் எனப்படும். தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூழ்நிலையுடன் ஒத்திசைந்து வாழ்கின்றன. இதனையே தகவமைப்பு என்கிறோம்.
நில வாழ்த் தாவரங்கள்
நில வாழிடங்களான பாலைவனம், சமவெளி, மலை, காடு போன்ற நிலப்பரப்பில் வாழும் / வளரும் தாவரங்கள் நில வாழ்த் தாவரங்கள் எனப்படும். இத்தாவரங்கள் பெற்றுள்ள தகவமைப்புகளை இப்பகுதியில் காணலாம்.
வறண்ட நிலத் தாவரங்கள்
வெப்பம் மிகுந்த, வறண்ட, மணல் நிறைந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் வறண்ட நிலத் தாவரங்கள் அல்லது பாலைவனத் தாவரங்கள் அல்லது வறள் நிலத் தாவரங்கள் எனப்படும். பாலைவனத்தில் மழை குறைவாகவும், வெப்பம் அதிகமாகவும் இருக்கும். இந்த வறண்ட சூழ்நிலைக்கேற்ப இத்தாவரங்கள் பெற்றுள்ள சில தகவமைப்புகள் பின்வருமாறு:
(i) நீர் இழப்பைக் குறைக்க இலைகள் முட்களாக மாறியுள்ளன.
(ii) தண்டு பச்சை நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படும். தண்டானது உணவைத் தயாரித்தல் மற்றும் நீரைச் சேமித்தல் ஆகிய பணிகளைப் புரிகிறது.
(iii) வறண்ட நிலத் தாவரங்களில் வேரானது நீளமாகக் காணப்படும். அவை மண்ணில் அதிக ஆழம் வரை செல்லும். எ.கா. சப்பாத்திக்கள்ளி, பேரிச்சை, கற்றாழை.
மலை வாழ் தாவரங்கள்
மலைகளில் வாழும் தாவரங்கள் மிகவும் குளிர்ந்த மற்றும் உறைந்த சூழலில் வளர்கின்றன. இங்கு குளிர்ந்த காற்று வீசும். குளிர்ந்த சூழலில் வாழும் இத்தாவரங்கள் பெற்றுள்ள சில தகவமைப்புகள் பின்வருமாறு:
(i) இத்தாவரங்கள் கூம்பு வடிவத்தில் வளரும். இது தாவரத்தின் மீது விழும் பனித்துளி கீழே விழுந்துவிடுவதற்கு உதவியாக உள்ளது.
(ii) ஊசி போன்ற இலைகள் மூலம் பனியிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளுகின்றன.
(iii) இத்தாவரங்களில் இலைகள் எளிதில் உதிராது.
(iv) மலர்களுக்குப் பதிலாக கூம்புகள் காணப்படுகின்றன. இக்கூம்புகள் கடுமையான குளிரில் விதைகளைப் பாதுகாக்கின்றன. எ.கா. பைன் தாவரம்
சமவெளியில் வாழும் தாவரங்கள்
(i) சமவெளிகளில் வாழும் தாவரங்கள் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவை.
(ii) இத்தாவரங்கள் கோடை காலங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக குளிர்காலங்களிலேயே இலைகளை உதிர்க்கின்றன.
(iii) இத்தாவரங்கள் தட்டையான, பெரிய இலைகளைக் கொண்டவை.
(iv) இவை பருத்த, தடிமனான கட்டையைக் கொண்டவை. எ.கா. மாமரம், ஆலமரம், தேக்கு.
உங்களுக்குத் தெரியுமா?
ஆலமரம், அரச மரம், புளியமரம் போன்றவை நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழும்.
கடலோரத் தாவரங்கள்
(i) இம்மரங்கள் மிகவும் உயரமானவை மற்றும் நேரானவை.
(ii) இதன் இலைகள் ஓலை (பரந்த இலை) என்று அழைக்கப்படுகின்றன.
(iii) இந்த இலைகள் பார்ப்பதற்கு இறகு போன்று காணப்படுவதால் வேகமான காற்றிலிருந்து மரத்தைப் பாதுகாக்கின்றன.
(iv) இத்தாவரங்கள் உவர்(உப்பு) நிலத்தில் வளரும் தன்மை கொண்டவை. எ.கா. தென்னை மரம்.
இணைப்போமா!
தாவரங்களை அவற்றின் வாழிடத்துடன் பொருத்துக.
விடை:
(i) சப்பாத்திக்கள்ளி - பாலைவனம்
(ii) தாமரை - குளம்
(iii) பைன் மரம் - மலை
V. நீர் வாழ்த் தாவரங்கள்
நீர் நிலைகளான ஏரி, குளம் போன்றவற்றில் வளரும் தாவரங்கள் நீர் வாழ்த் தாவரங்கள் எனப்படும். இவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. நீரில் மிதக்கும் தாவரங்கள்
2. வேரூன்றி நீரில் மிதக்கும் தாவரங்கள்
3. நீரில் மூழ்கி வாழும் தாவரங்கள்
1. நீரில் மிதக்கும் தாவரங்கள்
(i) இத்தகைய தாவரங்கள் நீரின் மேற்பரப்பிலேயே காணப்படுகின்றன.
(ii) காற்று நிரம்பிய பஞ்சு போன்ற உடல் அமைப்பைப் பெற்றுள்ளதால் இத்தாவரங்கள் நீரில் மிதக்கின்றன.
(iii) இத்தாவரங்களின் வேர்கள் குறைந்த அளவிலேயே வளர்ச்சி பெற்று காணப்படும். எ.கா. ஆகாயத் தாமரை, பிஸ்டியா.
2. வேரூன்றி நீரில் மிதக்கும் தாவரங்கள்
(i) இத்தாவரங்கள் நீர் நிலைகளின் அடியில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மிதந்து காணப்படுகின்றன.
(ii) இத்தாவரங்களின் தண்டில் காற்றறைகள் காணப்படுவதால் இவை நீரில் மிதக்கின்றன.
(iii) இத்தாவரங்களின் இலைகள் பெரியதாகவும், அவற்றின் மேற்பரப்பில் மெழுகு போன்ற படலம் படிந்தும் காணப்படும். இவை நீர் இலைகளின் மீது ஒட்டாமலும், இலைகள் நீரில் மூழ்காமலும் இருக்க உதவுகின்றன. எ.கா. அல்லி, தாமரை.
3. நீரில் மூழ்கி வாழும் தாவரங்கள்
(i) இவ்வகைத் தாவரங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி வளர்கின்றன.
(ii) தாவரத்தின் தண்டுகள் மெல்லியதாகவும், இலைகள் மிகவும் சிறியதாகவும் காணப்படுகின்றன.
(iii) இவ்விலைகளின் மேற்புறத்தில் இலைத்துளைகள் காணப்படாது.
(iv) இத்தாவரங்கள் தண்டுகள் மூலம் சுவாசிக்கின்றன. எ.கா. வாலிஸ்னேரியா, ஹைட்ரில்லா.
முயற்சி செய்வோமா!
இ. சரியா, தவறா என எழுதுக
1. வேரூன்றி மிதக்கும் தாவரங்கள் நீர்நிலைகளில் காணப்படுகின்றன. விடை : சரி
2. தாமரையின் இலைகள் நீரில் மூழ்கிக் காணப்படும். விடை : தவறு
3. தாமரை பெரும்பாலும் குளங்களில் காணப்படும். விடை : சரி
4. ஆகாயத் தாமரையில் பஞ்சு போன்ற காற்றறைகள் இருப்பதால் நீரில் மிதக்கிறது. விடை : சரி