உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

கலைத் திருவிழா அனுபவம் - ஒரு கட்டுரை

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

கலைத் திருவிழா

முன்னுரை:

எங்கள் ஊரான திருநெல்வேலியில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் கலைத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு வ.உ.சி. மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு நான் சென்று வந்த அனுபவத்தை இக்கட்டுரையில் காண்போம்.

கலைகளின் சங்கமம்:

நம் தமிழ்நாட்டில் பல சிறப்பான நாட்டுப்புறக் கலைகள் உள்ளன. அவற்றில் பல இன்று மறைந்து வருகின்றன. அவற்றைப் பாதுகாக்கவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு இந்த விழாவை நடத்துகிறது. இங்கு, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தென் மாவட்டங்களின் சிறப்பான வில்லுப்பாட்டு, போன்ற பல கலைகள் நடைபெற்றன. அவற்றைக் நேரடியாகக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அரங்குகள் அமைப்பு:

விழா நடைபெறும் திடலின் நுழைவு வாயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் கோபுரத்தின் வடிவத்தில் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றதும், பல மேடைகளில் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தைப் போலவே ஒரு அரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. அது பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருந்தது.

கலை நிகழ்ச்சிகள்:

தமிழ்நாட்டின் கலைகள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநில கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது வெவ்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

விளையாட்டு அரங்குகள்:

குழந்தைகளைக் கவரும் வகையில் இராட்சச ராட்டினம், சிறிய தொடர்வண்டி, மேஜிக் ஷோ போன்ற பல விளையாட்டு அரங்குகள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

நுழைவுக் கட்டணம்:

கலைத் திருவிழாவிற்குள் செல்ல சிறிய நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால், காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

முடிவுரை:

இந்தக் கலைத் திருவிழாவிற்குச் சென்றது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக இல்லாமல், நமது பாரம்பரியக் கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும் உதவியது. இது போன்ற விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.