துணிந்தவர் வெற்றி கொள்வர்
6. துணிந்தவர் வெற்றி கொள்வர்
மூன்றாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் வகுப்பு ஆசிரியர் ஒரு போட்டியை அறிவித்தார். ஓர் அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையினுள் சென்று பெட்டியினைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என்பதே அப்போட்டியாகும்.
அனைத்து மாணவர்களும் ஆவலுடன் பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்றனர். அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. அதனைக் கண்டவுடன் மாணவர்கள் பலர் தங்களால் அப்பெட்டியினைத் தூக்க இயலாது எனப் போட்டியிலிருந்து விலகி விட்டனர். மேலும் சிலர் பெட்டிக்கு அருகே சென்று பின்னர் தங்களால் பெட்டியைத் தூக்க இயலவில்லை என்றால் மற்றவர்கள் சிரிப்பார்களே என்று நினைத்துப் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனர். கவியரசி என்ற மாணவி மட்டும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எண்ணி, பெட்டியினை நகர்த்திய போது பெட்டி எளிதாக நகர்ந்தது. உடனே, அம்மாணவி பெட்டியினை எளிதாகத் தூக்கினாள்.
கேட்கும் / படிக்கும் கதை, கவிதை / செய்திகள் / ஆகியவற்றைப் புரிந்துகொண்டு தங்கள் கருத்துகளால் வளப்படுத்துதல்
பிற மாணவர்கள் அனைவரும் இதனை வியப்புடன் பார்த்தனர். பின்னர் தயக்கம் விலகி அனைவரும் ஓடிச்சென்று தாங்களும் பெட்டியினை தூக்கிப் பார்த்தனர். பெட்டி தூக்குவதற்குச் சுலபமாக இருந்தது. மாணவ, மாணவிகள் ஆசிரியரிடம் சென்று பெட்டி பெரியதாக இருந்ததால் நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றனர். அதற்கு ஆசிரியர் அது காகிதத்தால் செய்த பெட்டி என்று மாணவர்களிடம் விளக்கினார். மேலும் ஒரு செயலில் இறங்குவதற்குமுன் சிந்திக்க வேண்டும், ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.
நீங்கள் எல்லாரும் தயக்கம் காட்டியதால் வெற்றி பெறவில்லை. தன்னால் முடியும் என்று நம்பி கவியரசி முயன்றதால் வெற்றி பெற்றாள். எனவே அன்புக் குழந்தைகளே,
"தோல்வியின் அடையாளம் தயக்கம்
வெற்றியின் அடையாளம் முயற்சி
துணிந்தவர் தோற்பதில்லை
தயங்கியவர் வென்றதில்லை"
நாம் விதைக்கும் விதைகளில் முயற்சியுடன் மண்ணைப் பிளந்து கொண்டு வருபவையே செடிகளாகின்றன. தயங்கி நிற்பவை தங்கி விடுகின்றன. அதுபோல கவியரசி தயங்காமல் துணிச்சலாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றாள் எனக் ஆசிரியை கூறினார். கவியரசிக்குப் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கினார். கவியரசியும் மகிழ்ச்சியடைந்தாள்.
"முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்."
மொழியோடு விளையாடு
அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழிமுதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும். மாணவர்களை வட்ட வடிவில் அமர வைத்து இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அம்புக்குறியினை வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த மாணவர் கூறவேண்டும். இவ்வாறே அனைத்து மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி மீண்டும் பயன்படுத்தவேண்டும்.
கலையும் கைவண்ணமும்
பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.
எ.கா: உதிர்ந்த இலைகளைக் கொண்டு உருவம் அமைத்தல்.