Uyirvagai Poem from Tholkappiyam: Classification of Life Explained

கவிதைப்பேழை: உயிர்வகை - தொல்காப்பியர்

கவிதைப்பேழை: உயிர்வகை

தொல்காப்பியர்

தொழில்நுட்பம் – கவிதைப் பேழை

உயிர்வகை தலைப்பு

நுழையும்முன்

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல உணர்வுகளின் வாயிலாகவே அறிவு என்பதை நாம் பெறுகிறோம். இதற்குரிய பொறிகளான கண், காது, வாய், மூக்கு, உடல் என்னும் ஐந்து உறுப்புகளில் எது குறைந்தாலும் குறிப்பிட்ட ஓர் அனுபவத்தை இழந்துவிடுவோம். ஆனால், அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப் புலன் அறிவுகள் எல்லாம் இருப்பதில்லை. இதைக் கொண்டு உயிரினங்களைப் புலன்களின் எண்ணிக்கை அடிப்படையில் முன்னோர் பகுத்தனர். ஆறாவது அறிவு மனத்தால் அறியப்படுவது என்பர்.

உற்றறியும் அறிவு - நத்தை

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே 

இரண்டறி வதுவே அதனொடு நாவே 

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே 

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே 

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*

(நூ.எ.1516)

உயிர் வகைப்பாடு அட்டவணை

இலக்கணக்குறிப்பு

  • உணர்ந்தோர் - வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம்

  • நெறிப்படுத்தினர் – நெறிப்படுத்து + இன் + அர்
  • நெறிப்படுத்து – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது. இது எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டுள்ளது. எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது. பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர். இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்.