Gopallapurathu Makkal: Annamaiah's Character Analysis | Class 12 Tamil

Gopallapurathu Makkal: Annamaiah's Character Analysis | Class 12 Tamil

8 மதிப்பெண் வினா: கோபல்லபுரத்து மக்கள்

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை 'கோபல்லபுரத்து மக்கள்' கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

கோபல்லபுரத்து மக்கள் - அறிமுகம்

கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் எப்பவும் மனசுக்குள் பசுமையாக இருக்கும். அவர்களது இயல்பான வரவேற்பும் எளிமையான உணவும் மதிய வேக்காட்டில் நடந்துவந்த களைப்பை மறக்கச் செய்யும். பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வு நம் முன் காட்சியாகிறது.

புதியவனின் தோற்றம்

தற்செயலாக, புளிய மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தவனை அன்னமய்யா கண்டான். தாடியும் அழுக்கு ஆடையுடனும் இருந்த அவன் வயோதிகன் போலவும் சந்நியாசி போலவும் இருந்தான். ஆனால், அவன் வாலிபன். நடக்க முடியாமல் உட்கார்ந்து உட்கார்ந்து உடல் வாடிக் களைத்து, நடந்து வந்தவன். அவன் கண்களில் தீட்சண்யம் தெரிந்தது.

அன்னமய்யாவின் அரவணைப்பு

வாலிபன், அன்னமைய்யாவைக் கண்டதும் சிறுபுன்னகை செய்தான்; பேச விருப்பம் இல்லாதவன் போல் இருந்தான்.

அன்னமய்யா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அலுப்புத் தீர்ந்தவுடன் அந்த வாலிபன், குடிக்கத் தண்ணீர் கேட்டான். அன்னமய்யா, "அருகில் அருகு எடுத்துக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து நீச்சுச் தண்ணீர் வாங்கி வரட்டுமா?" என்றான்.

வாலிபன் எழுந்திருக்க ஒத்தாசையாகக் கையை நீட்டினான். தோளைப் பிடித்து நடக்கும்படி வேண்டினான்.

அன்னமய்யா அளித்த ஜீவ ஊற்று

வேப்ப மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த கலயத்துக் கஞ்சியின் நீத்துப் பாகத்தை வடித்துக் கொடுத்தான். வாங்கி உறிஞ்சும்போது வாலிபனின் கண்கள் சொருகின. மிடறு தொண்டை வழியாக இறங்குவதன் சுகத்தை முகம் சொல்லியது. உட்கார்ந்து குடிக்கச் சொன்னான். சோற்றின் மகுளியை வார்த்துக் கொடுத்தான். மடக்கு மடக்காய் ஜீவ ஊற்று உள்ளே இறங்கியது. வேப்பமர நிழலே சொர்க்கமாய், படுத்ததும் தென்றல் காற்று வந்து அயரச் செய்தது. வயிறு நிறையப் பாலைக் குடித்து மடியிலே தூங்கும் குழந்தையின் முகத்தைத் தாய் பார்ப்பது போல அன்னமய்யா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெயர்ப்பொருத்தம்

வாலிபனின் சிறு தூக்கம் முடியும் வரை காத்திருந்தான். எழுந்த வாலிபன், நன்றி கலந்த புன்னகை காட்டினான். அன்னமய்யா வாலிபனிடம், "உங்கள் ஊர்ப்பெயர் என்ன? எங்க இருந்து வர்றீங்க? எங்க போகணும்?" என்று அன்புடன் கேட்டான். அந்த வாலிபன், "நான் ரொம்ப தொலைவில் இருந்து வர்றேன். சொந்தப் பெயர் பரமேஸ்வரன். அதை மறந்து விடு. மணி என்று கூப்பிடு. ஆமாம், உன் பெயர் என்ன?" என்று கேட்டான்.

"அன்னமய்யா"

"அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா. என்னே பெயர்ப் பொருத்தம்!" என்று எண்ணிக் கொண்டான். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே".

வெள்ளந்தி மனிதர்கள்

வாலிபனை, அன்னமய்யாவின் நண்பன் சுப்பையாவின் நஞ்சை நிலத்துக்குக் கூட்டி சென்றான். அங்கு அருகு எடுத்து கொண்டிருந்தவர்கள், சாப்பிட வந்தார்கள். மணியின் கையில் கால் உருண்டைக் கம்மஞ்சோற்றை வைத்தார்கள். நடுவில் குழி பறித்து அதில் துவையலை இட்டார்கள். கம்பஞ்சோற்றை அவர்கள் சாப்பிட்ட வேகம், ஆர்வம், அனுபவிப்பே அது எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதைக் காட்டியது. அரை உருண்டையைச் சாப்பிட்ட மணி மறுபடியும் அயர்ந்து தூங்கி விட்டான்.