Speech on Student Life and Patriotism (Manava Paruvamum Nattupatrum)

Speech on Student Life and Patriotism (Manava Paruvamum Nattupatrum)

மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்: 8 மதிப்பெண் மேடை உரை

வினா (Question)

நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மேடை உரை: மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்

இங்கே கூடியிருக்கும் ஆன்றோர்களே! தமிழ்ச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். இப்போது உங்களிடத்திலே 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

மாணவப் பருவம் என்பது பசுமையான நிகழ்வுகளைத் தாங்கி நிற்கும் நந்தவனம் ஆகும். அத்தகைய பருவத்தில் விதைக்கப்படும் கருத்துக்கள் 'பசுமரத்தாணி போல' பதியும். ஆதலால், இளமைப் பருவத்திலேயே ஒருமைப்பாட்டுணர்வும் நாட்டுப்பற்றும் ஊட்டப்பட வேண்டும்.

நாட்டு விழாக்கள்

உயர்ந்த இலட்சியங்களான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் பேணவும், தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் நாம் நாட்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம். சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா, காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம் ஆகியவற்றைத் தேசிய விழாக்களாக நாம் கொண்டாடி வருகின்றோம். சுதந்திரத்திற்காகத் தமது இன்னுயிரை ஈந்த தலைவர்களை நினைவு கூறவும், தேசபக்தியை வளர்த்துக் கொள்ளவும், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தம்மை அர்ப்பணிக்கவும் நாட்டு விழாக்கள் துணைபுரிகின்றன.

விடுதலைப் போராட்ட வரலாறு

நமது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது. வணிகம் செய்யும் பொருட்டு இந்தியாவிற்குள் நுழைந்த ஆங்கிலேயர் அங்காங்கே வணிகத் தளங்களை நிறுவினர். அவற்றை நிர்வாகம் செய்யும் பொருட்டு, தங்களுக்கென்று நிர்வாக அமைப்பையும் இராணுவத்தையும் அமைத்துக்கொண்டனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப்போல, உள்நாட்டில் எழுந்த உட்பூசல்களில் தலையிட்டு, வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும், பின்னர் படிப்படியாக ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்றனர்.

நீதிமுறையற்ற வரிவசூல் முறைகளால் பாதிக்கப்பட்ட பாளையக்காரர்கள் கிளர்ச்சி செய்தனர். வெல்லெஸ்லியின் துணைப்படைத்திட்டத்தாலும் டல்கௌசியின் வாரிசு இழப்புக் கொள்கையாலும் ஆட்சியை இழந்த மன்னர்களும், இராணுவச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர்களும் முதல் இந்திய சுதந்திரப் போரில் கலந்து கொண்டனர். ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் படித்த இந்தியர்கள் படிப்படியாக அரசியல் சமத்துவம் வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக மற்றும் சமயச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் பெருமையை வெளிக்கொண்டு வந்தன.

1885இல் உருவான இந்தியத்தேசியக் காங்கிரஸ் எனும் பேரியக்கம் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களை அமைதி வழியில்நின்று நடத்தி வெற்றி கண்டது. கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்குத் தன்னாட்சி வழங்கப் பரிந்துரை செய்தது. கேபினட் தூதுக்குழு இந்தியாவிற்குத் தனி அரசியலமைப்புக்குழு அமைக்க பரிந்துரை செய்தது. இறுதியாக, மவுண்ட்பேட்டன் திட்டப்படி சுதந்திர இந்தியா உருவானது.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

இன்றைய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள். அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் சமூகத்தொண்டு புரிபவர்களாகவும் மலர வேண்டும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து இளமைப் பருவத்திலேயே சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, பசுமைப்படை, செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றில் சேர்ந்து பல்வகைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும். சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்குபெற வேண்டும்.

எழுத்தறிவற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல், பேரிடர், திருவிழாக்கள் ஆகியவற்றில் காவல்துறைக்கு உதவியாக இருக்க வேண்டும். நலிவடைந்தோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

தேசியச் சின்னங்களை மதிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும். மூத்தோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

"பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே" என்கிறார் பாரதியார். பெற்ற தாயைப்போல பிறந்த பொன்னாட்டைப் பேணிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்று கூறி, பேச வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!