Felicitation Speech for National Service Scheme (NSS) Camp | வாழ்த்துரை

Felicitation Speech for National Service Scheme (NSS) Camp | வாழ்த்துரை

கேள்வி: உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

வாழ்த்துரை

இடம்: சங்கரலிங்கபுரம்

நாள்: 24.09.2020

இப்போது, இங்கு நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்கு வருகை தந்திருக்கும், கல்விக் காவலர், கல்வித்தேரின் அச்சாணி, உயர்திரு.மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே! மாணவர் நலனே முதன்மையானது எனக் கருதி, அயராது பாடுபடும் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே! சீரிய பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அவர்களே! நாட்டு நலப்பணி திட்டத்தில் பங்கேற்று சேவை செய்ய இருக்கும் அன்பு மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவை" என்று விவேகானந்தர் கூறுவார். வள்ளலார், அன்னை தெரசா, மகாத்மா காந்தி எனச் சான்றோர் பலர் மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளனர். அந்த வரிசையில் உங்களை, நீங்கள் மக்கள் பணிக்காக அர்ப்பணித்துள்ளமை போற்றுதலுக்குரியது.

'எனக்காக அல்ல; உனக்காக' என்ற உன்னதமான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள உங்களுக்கு, என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவப் பருவத்திலேயே இது போன்ற சேவை அமைப்புகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வது, எதிர்கால வாழ்வைச் செம்மைப்படுத்த உதவும். நீங்கள் செய்யும் சேவையினால் தன்னம்பிக்கை வளரும்; மனவலிமை மேம்படும்; மகிழ்ச்சியும் மனநிறைவும் கிட்டும்.

உயர்ந்த சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி அதிகமாகச் சிந்திப்பீர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு திகழ்வீர்கள். பிரச்சினைகளைத் தீர்க்கும் பேராற்றலைப் பெறுவீர்கள். பத்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். புதிய, வளமான உலகம் உங்களைப் போன்ற சமூக சேவையாளர்கள் கைகளில்தான் உள்ளது. உங்களது நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சிறப்புற நடைபெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!