The Art of Translation: An Essay on Enriching the Classical Tamil Language

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

நடுப்பக்கக் கட்டுரை

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் -அறிவியல் கருத்துகள் - பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில், வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

முன்னுரை

ஒரு மொழியில் ஏற்படும் புதுமைகளை வேற்று மொழிக்கு கொண்டு வரும் அரிய பெரிய கலையே 'மொழிபெயர்ப்புக்கலை' ஆகும். மொழிபெயர்ப்புச் செய்யப்படும் பொழுது மூல மொழி சார்ந்துள்ள சமுதாயப் பின்னணியை எண்ணிப் பார்ப்பது அவசியமானது.

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்... சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
என்ற பாரதியின் கருத்துகள் மொழிபெயர்ப்பின் இலக்குக்கு வழிகாட்டுகின்றன.

தமிழின் இலக்கியவளம்

வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து நெறியோடு வாழ்ந்த தமிழரின் சங்க இலக்கியங்கள், அறக்கருத்துக்களை வலியுறுத்தும் பதினெண்-கீழ்க்கணக்கு-நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்திப் பாடல்கள், சிற்றிலக்கிய வடிவங்கள், மரபுக்கவிதைகள், சந்தப் பாடல்கள், புதுக் கவிதைகள், புதினங்கள் எனத் தமிழின் இலக்கிய வளத்திற்கு சான்றுகள் பலவாகும்.

மேலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம், பெருங்கதை, கொங்குவேளிர் மாக்கதை, சீவக சிந்தாமணி, நளவெண்பா, தண்டியலங்காரம், வில்லிபாரதம் போன்றவையும் இவற்றுள் அடங்கும்.

கல்வி மொழி

மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டவரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்; வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்; நாடு, இன, மொழி எல்லைகளைக் கடந்து ஓருலகத்தன்மையைப் பெற முடியும். வெளிநாட்டு தூதரகங்கள் தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி போன்றவற்றைத் தத்தம் மொழிகளில் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களும் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் ஆங்கில நூல்களும், ஆங்கிலம் வழியாகப் பிற ஐரோப்பிய மொழி நூல்களும் அறிமுகமாயின. மொழிபெயர்ப்பு இல்லை என்றால் ஷேக்ஸ்பியரோ, கம்பரோ, தாகூரோ உருவாகியிருக்க முடியாது.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டதன் விளைவு, பல நாடகமேடை அமைப்புகள் உருவாகின. மேலைநாட்டு இலக்கியச் சார்புதான் நமது தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளான புதினம், சிறுகதை போன்ற வடிவங்களுக்குப் படிநிலையாகும். வால்ட் விட்மனின் 'புல்லின் இதழ்கள்' ஏற்படுத்திய கவிதைத் தாக்கம் தமிழ்ப்புதுக்கவிதை மாளிகைக்கு அடிக்கல் நாட்டியது. ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகள் நமது ஹைக்கூக்கவிதை வளர்ச்சிக்கு வித்திட்டது. மொழிபெயர்ப்பு மூலம் இலக்கியத் திறனாய்வு முறைகளை ஆங்கிலத்திலிருந்து பெற்றுள்ளோம்.

அறிவியல் கருத்துகள்

தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடிஸ், கலிலியோ போன்ற அறிஞர்பெருமக்களின் கண்டுபிடிப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றபின் அறிவியல் வளர்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. மரத்திலிருந்து கனிந்த பழம் விழுவதையும் பழத்திற்காக எறிந்த கல் நிலத்தை சென்றடைவதையும் கண்டுகளித்த மக்கள், நியூட்டனின் இயற்பியல் விதிக்குப் பின்னர்தான் அது 'புவியீர்ப்பு சக்தி' என்பதை அறிந்தனர்.

பிறதுறைக் கருத்துகள்

இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில் உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கின்ற ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகிறது. இதனால் புதுவகையான சிந்தனை மொழிக் கூறுகள் பரவுகின்றன.

தமிழுக்குச் செழுமை

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது. அதிலிருந்து நல்லனவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதன்மூலம் நம் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது. உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப் படைப்புகளையும் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. நல்ல மொழிபெயர்ப்பாளன் சில விதி மீறல்களைச் செய்வான். இதன் மூலம் புதிய இலக்கண விதிகளின் தேவையை உருவாக்குவான். இதன் மூலம் மொழியில் புதுக்கூறுகள் உருவாகி, மொழிவளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

முடிவுரை

பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும், அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. இலக்கியம் என்பது தன் அனுபவத்தை எழுதுவது என்றாலும் அது கலைச் சிறப்புடையதாக இருக்கும் போது அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையிடுகிறது. மொழி வேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது. எனவே, செம்மொழித் தமிழுக்கு மொழிபெயர்ப்புகலையானது வளம் சேர்க்கும் என்பது திண்ணம்.